பிரிவுகளால் விளையும் விபரீதங்கள்

in பிரிவும் பிளவும்

 (இறைத்தூதர் நுஹுக்கு எதை அவன் அறிவுறுத்தினானோ-அதையே (அந்த இஸ்லாத்தையே) உங்களுக்கும் (அந்த அல்லாஹ்) மார்க் கமாக்கியிருக்கின்றான்.  (நபியே!) நாம் உமக்கு வஹியாக அறிவித்ததும் (இறைத்தூதர்கள்) இமாஹீம், மூஸா ஈஸா ஆகியோருக்கும் (இறைக் கட்டளயாக) அறிவுறுத்தியதும், (இஸ்லாம்) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதிலிருந்து நீங்கள் பிரிந்துவிடாதீர்கள் என்பதுதான்.
 
 இணை வைப்போரை எதன்(இஸ்லாத்தின்) பக்கம் அழைக்கிறீர்களோ-அது அவர்களுக்குப் பெரும் சுமையாக இருக்கிறது. தனக்கு விருப்பம் உள்ளவர்களை அல்லாஹ் நேர்வழிக்குரியவர்களாய் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். அவனை முன்னோக்கி வருவோர்க்கு தன்னிடம் வரும் நேர்வழியை அவன் காண்பிக்கின்றான். அல்குர்ஆன்: 42:13.
 
 பிரிவுகளின் விபரீதங்கள்:
கடந்த 1000 ஆண்டுகளாய் முஸ்லிம்கள் பிரிவிலும், பிளவிலும் சிக்கித் தவிக்கிறார்கள். பிரிவுகள் பெயரால் மார்க்க மோசடிகள், பிரிவுகள் பெயரால் மார்க்க மீறல்கள் பிரிவுகள் பெயரால் மாபாதகங்கள் பிரிவுகள் பெயரால் வழிகேடுகள்…. பிரிவுளால் முஸ்லிம்களுக்குள் மோதல்கள், பொருள் இழப்புக்கள், உயிர் சேதங்கள், பிரிவுகளால் உலக அளவில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துன்பங்களையும், துயரங்களையும் அளவிட இயலாது சொல்லியும் மாளாது எழுத்திலும் வடிக்க முடியாது. எனினும் பிரிவுகள் துவங்கியதிலிருந்து இன்றளவும் பிரிவின் பிடியிலிருந்து எந்த மனிதனும், குறிப்பாய் எந்த முஸ்லிமும் விடுபட்டதாய் தெரியவில்லை.
 
 ஒற்றுமை வீழ்த்தப்பட்டுவிட்டது. பிரிவுகள் கொழுத்து வருகின்றன. ஒற்றுமை ஏற்பட வழியே இல்லையா? மானுட ஒற்றுமை சாத்தியமே இல்லாததா?- மனிதநேய விரும்பிகளின் ஏக்கம் விரிந்து செல்கிறது. இதுகாலம் ஒற்றுமை ஏற்பட யாரும் எந்த முயற்சியும் செய்யவில்லை. வேதனைக்குரிய கசப்பான உண்மை. பிரிவுகள் பெயரால் நேர்வழி வழிகேடாகவும், வழிகேடு நேர்வழியாகவும் சித்தரிக்கப்படுகின்றன. விட்டில்களாய் பிரிவுகளில் விழுந்து விடுகிறார்கள். முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
 
 பிரிவுகளின் நிரந்தர முற்றுப்புள்ளி இஸ்லாம். இஸ்லாத்தின் உன்னத இலட்சியம் மானுட ஒற்றுமை. முஸ்லிம்கள் மட்டுமின்றி மானுடத்தை ஒன்றிணைக்கும் இறையருளிய வாழ்க்கை நெறி, வாழும் நெறியே இஸ்லாம். இதை இன்றளவும் முஸ்லிம்கள் சரியாக உணரவும் இல்லை. முஸ்லிம்களுக்கு உணர்த்தப்படவும் இல்லை. பிரிவுகளின் விபரீத விளைவுகளையும், கேடுகளையும் மற்ற மனிதர்களுக்கு உண ர்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் மிக்கோரே முஸ்லிம்கள் – என்ன செய்கிறார்கள்?
 
 ஏதேனும் ஒரு பிரிவைச் சார்ந்து இருப்பதே சாலச் சிறந்தது என்ற தவறான முடிவில் இருக்கிறார்கள். இன்றைய முஸ்லிம்கள் பிரிவுகளால் விளையும் விபரீதங்களைக் கண்ணாரக் கண்டும், சுயமே அனுபவித்தும் பிரிவுகளின் உடும்புப் பிடியிலிருந்து யாரும் விடுபடவில்லை. விடுபட முயல்வோரும் ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவுக்குத் தாவி விடுகிறார்கள். பிரிவுகளின் கொடூரப் பிடியிலிருந்து யாராலும் முற்றாக விடுபட முடியவில்லை.
 
 பிரிவுத் தாவல்:
அரசியல்வாதிகள் அடிக்கடி கட்சி மாறிக் கொண்டிருப்பது போல் ஒரு பிரிவில் அதிருப்தி ஏற்படும்போது அடுத்த பிரிவுக்கு மாறிவிடுகிறார்கள். இவர்கள் அரசியல்வாதிகளையும் தோற்கடித்து வருகிறார்கள். ஆம்! அந்த அரசியல்வாதிகளைக் காட்டிலும் துரிதமாய் அதிவேகமாய்.
 
  ஒரு பிரிவிலிருந்து வேறொரு பிரிவுக்கு
 
  ஒரு அணியிலிருந்து இன்னொரு அணிக்கு
 
  ஒரு அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்புக்கு
 
  ஒரு இயக்கம் விட்டு அடுத்த இயக்கத்துக்கு
 
  ஒரு ஜமாஅத்தை விடுத்து அடுத்த ஜமாஅத்திற்கு என
 
  பிரிதல், பிரித்தல்
 
 பிளவுபடல், பிளவு படுத்துதல்
 
 வெகு விமரிசையாக அரங்கேறி வருகிறது. பிரிவுகளால் உலக அளவில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துன்பங்களையும், துயரங்களையும் சொல்லியும் மாளாது எழுதினும் ஓயாது.
 
 இதனால் முஸ்லிம்கள் மாற்றார்களின் இழி சொல்லிலிருந்தும், பழி சொல்லிலிருந்தும் தப்பமுடியவில்லை. தவறிழைக்கும் முஸ்லிம்களுக்கு இது தேவைதான். இருந்தும் முஸ்லிம்களுக்கு இன்னும் ரோஷம் பிறக்கவில்லை. இழித்தலும் பழித்தலும் முஸ்லிம்களோடு நிற்கவில்லை. முஸ்லிம்கள் மீது பாய்ந்து வரும் கண்டனங்களும், விமர்சனங்களும் அதைவிட வேகமாய் இஸ்லாத்தின் மீது பாய்ந்து வருகிறதே! முஸ்லிம்கள் செய்யும் தவறுக்கு இஸ்லாம் பலியாக்கப்படுகிறதே! முஸ்லிம் பொதுமக்களே! இஸ்லாத்தின் மீது இத்தகைய பழி சுமத்தப்பட்டுள்ளது? கவனித்தீர்களா? இதுபோன்ற பழிகளுக்கும், இஸ்லாத்துக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? நிச்சயம் இல்லை.
 
 எனதருமை முஸ்லிம் பொதுமக்களே! சிந்திக்க வேண்டாமா? இஸ்லாத்திற்கு நற் பெயரைத் தேடித்தர வேண்டிய முஸ்லிம்கள் பிரிவினைவாதிகளாய் மாறியதால், அவப்பெயரை அள்ளி, அள்ளி குவித்துக் கொண்டிருக்கிறீர்கள். பிரிவினைவாதிகளால் வரிந்து திணிக்கப்பட்ட பிரிவினை இஸ்லாத்துக்கு இழுக்கைத் தேடித்தருகிறது என்றால்…..பிரிவினைவாதிகளே! இஸ்லாத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள களங்கம் சாதரணமானதா? இதுபோன்ற பழிக்கும் இஸ்லாத்துக்கும் ஏதேனும் தொடர்புண்டா?
 
 பிரிவுகளின் எதிர்வினை:
பிரிவுக்கும் பிளவுக்கும் முற்றுப்புள்ளியான இஸ்லாம் பிரிவினைவாதிகளின் தவறுக்கு எவ்வாறு பொறுப்பேற்கும்? பிரிவினைவாதிகள் உங்களால் ஏற்பட்ட பழியை நீங்கள் தான் துடைத்தெறிய வேண்டும். நீங்கள் ஏற்றிருக்கும் இறையருளிய வாழ்க்கை நெறி இஸ்லாத்துக்கு நீங்கள் நற்பெயரைத் தேடித் தராவிட்டாலும் பரவாயில்லை. அவப்பெயரைத் தேடித்தராமல் இருக்க வேண்டும். அப்போது தான் பிரிவினைவாதிகளான போலி முஸ்லிம்கள் உண்மை முஸ்லிம்களாய் உயர்வடைய முடியும்.
 
 அறிஞர்கள், தத்துவ ஞானிகள் உதிர்த்த தத்துவங்கள், சித்தார்த்தங்கள் எதுவும் மானுடத்தை ஒன்றுபடுத்தவில்லை ஒன்றுபடுத்தவும் முடியாது. மாறாக மனிதர்களைப் பிரிவுகளாக்கின. பிரிவுகளாக்கியும் வருகின்றன குழுக்களாகவும், அணிகளாகவும் பிரித்தன பிரித்தும் வருகின்றன.
 
 பிரிவுகளாலும், பிளவுகளாலும் விளையும் அத்துணை விபரீதங்களையும், மாபாதகங்க ளையும் மனிதர்கள் சந்தித்தார்கள்ள சந்தித்தும் வருகிறார்கள். (பிரிவுகளில் சிக்கி பிரிந்து கிடக்கும் இன்றைய முஸ்லிம்களும் இதிலிருந்து விடுபடவில்லை விடுபடவும் முடிய வில்லை)
 
 மானுட அமைதி, மானுட ஒருமைப்பாடு, மானுட சமத்துவம் பிரிவுகளாலும் அணிகளாலும் அடித்துச் செல்லப்படுகின்றன. பிரிவினைத்துயர் மனிதர்களை வாட்டியெடுத்து வருகிறது பிரிவுகளின் உடும்பு பிடியிலிருந்து விடுபடும் வழியறியாது மனிதர்கள் தவித்தார்கள் தவிக்கிறார்கள். நபித்துவத்துக்கு முன் அரபகத்தின் நிலை மட்டுமல்ல உலக மக்கள் அனைவரும் அணிகளாகவும், குழுக்களாக்களாகவும் பிளவு பட்டிருந்தார்கள். மனிதர்கள்-மதம், நாடு, மொழி, இனம், நிறம், குலம்… இத்யாதி-இத்யாதி-என பிரிவிலும், பிளவிலும் அணிகளாகவும், குழுக்களாகவும் பிளக்கப்பட்டிருந்தார்கள்
 
 இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அனைத்தின் படைப்பாளன்-வல்லவன் அல்லாஹ் இஸ்லாத்தை நிறைவு செய்ய நாடினான். நபி(ஸல்) அவர்களை இறுதி இறைத் தூதராக தெரிவு செய்தான். நபி(ஸல்) அவர்களுக்கு அல்குர்ஆன் இறுதி நெறிநூலாய்; அருளப்பட்டது.
  
 இணைப்புப் பாலம்:
 அனைத்து இறைத்தூதர்களுக்கும் அல்லாஹ் இஸ்லாத்தை மார்க்கமாக்கினான். இறைதூதர்கள் அனைவரும் இஸ்லாத்தோடு எப்படி ஐக்கியமானார்கள்? என்பதை அல்லாஹ் அல்குர்ஆனில் பதிவு செய்துள்ளான். இஸ்லாத்தை நிலைநிறுத்துவதே ஒற்றுமை. இஸ்லாத்தை நிலை நாட்டாமல் இருப்பதும் பிரிவுதான். இஸ்லாத்தை நிலைநாட்டுவதிலிருந்து பிரிந்துவிடக் கூடாதென்று அல்லாஹ் எல்லா இறைத்தூதர்களுக்கும் கட்டளையிட்டான். (இறைத்தூதர்) நூஹுக்கு எதை அவன் அறிவுறுத்தினானோ அதையே அந்த இஸ்லாத்தையே உங்களுக்கும் மார்க்கமாக்கியிருக்கிறான்.
 
 (நபியே!) நாம் உமக்கு வஹியாக அறிவித்ததும், (இறைத்தூதர்கள்) இப்றாஹீம், மூஸா, ஈஸா (ஆகியோர்க்கும் இறைக்கட்டளையாக) அறிவுறுத்தியதும், இஸ்லாம் மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள். அதிலிருந்து நீங்கள் பிரிந்து விடாதீர்கள் என்பதுதான்….. (அல்குர்ஆன் 42:13)
 
 இஸ்லாத்தோடு ஐக்கியமாவதும், இஸ்லாத்தை நிலைநாட்டுவதும் யாருக்கு பளுவாக இருக்கும்? அல்லாஹ்வே அதையும் தெளிவுபடுத்துகிறான்.
 
 இணை வைப்போரை (இஸ்லாத்தின்) பக்கம் அழைக்கிறீர்களோ அது அவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது.(அல்குர்ஆன் 42:;13)
 
 இஸ்லாத்தோடு ஐக்கியமாகி, இஸ்லாத்தை நிலைநாட்ட தனக்கு விருப்பமுள்ளவர்களை அல்லாஹ் அவன் நேர்வழிக்குரியவர்களாய் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.
 
 அவனை முன்னோக்கி வருவோர்க்கு தன்னிடம் வரும் நேர்வழியை அவன் காண்பிக்கின்றான். (அல்குர்ஆன் 42:13)
 
 இஸ்லாத்தோடு ஐக்கியமாகாமல் இஸ்லாத்தை நிலைநாட்ட எவ்வித முயற்சியும் செய்யாத பெயர்தாங்கி முஸ்லிம்கள் 42:13-ல் இடம்பெற்றுள்ள மேற்கண்ட இறையுரையிலிருந்து அவசியம் படிப்பினைப் பெறக் கடமைப்பட்டுள்ளார்கள்.
 
 

 முஹிப்புல் இஸ்லாம்

{ 2 comments }

omar abdullah May 17, 2014 at 6:22 pm

2:256 لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انفِصَامَ لَهَا ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
3:103 وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் – உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் – நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை – வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
4:115 وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَىٰ وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّىٰ وَنُصْلِهِ جَهَنَّمَ ۖ وَسَاءَتْ مَصِيرًا
4:115. எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.

MUHAMMAD MAHIBAL May 19, 2014 at 2:52 am

முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கற்று தமது வாழ்வில் அவற்றை கடைப்பிடிப்பதோடு ஏனையோருக்கும் அதனை தமது முன்மாதிரியான வாழ்வு மூலம் எத்திவைக்க கடமைப்பட்டவர்கள்.

இன்னும், ஒற்றுமை பற்றி அல்லாஹ் இவ்விதம் நம்மைக் கட்டளையிடுகின்றான்.

3:103 وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் – உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் – நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை – வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். -www.tamililquran.com

Comments on this entry are closed.

Previous post:

Next post: