நோன்பு

Post image for நோன்பு

in நோன்பு,ஜகாத்

அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் சிறப்புமிக்க ரமளான் மாதத்தை அடைந்து நோன்பு நோற்றிருக்கும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் என்றும் நிலவட்டுமாக! இந்த ரமளான் மாதம் நம் உள்ளங்களை தூய்மைப் படுத்தக்கூடியதாகவும், சிறு சிறு தவறுகளையும்கூட களைந்து உண்மையான/முழுமையான‌ இஸ்லாமியர்களாக வாழ நம்மை தயார் படுத்தக்கூடியதாகவும் உள்ளது. அது எப்போது..? ரமளானில் நோற்கும் நோன்பின் நோக்கத்தை சரியான முறையில் நாம் நிறைவேற்றும்போது! அப்படியானால் நோன்பின் நோக்கத்தை நாம் எவ்வாறு நிறைவேற்றுவது? முதலில் நோன்பின் நோக்கம் இதுதான் என்று நாம் அறிந்துக் கொண்டால்தான் அதன் நோக்கத்தை நாம் நிறைவேற்ற‌ இயலும்.

நோன்பின் நோக்கம் என்பது ஏழைகளின் பசியை அறிந்துக் கொள்வதற்காக என சிலர் (அறியாமையில்) கூறுவதுபோல் இஸ்லாம் நமக்கு எங்குமே கூறவில்லை. அப்படி கூறியிருந்தால் பசியின் கொடுமையை வாழ்நாளெல்லாம் உணர்ந்த, தினமும் பட்டினியால் வாடும் ஏழைந்த நோன்பை இஸ்லாம் கடமையாக்கி இருக்காது. பசியை உணர்ந்திருக்கும் செல்வந்தர்களாக இருந்தாலும், அத‌ன் கொடுமை அறியாமல் பழகிய வசதி படைத்தவர்க‌ளுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கும். ஆனால் அன்றாடங்காய்ச்சிகளாக இருந்தாலும், அடுத்தவர்களின் கையை எதிர்ப்பார்த்து வாழும் பரம ஏழைகளாகவே இருந்தாலும்கூட ரமளானில் நோன்பு நோற்பதை இஸ்லாம் கடமையாக்கி இருக்கிறது. அது ஏன்? அதுபோல் இஸ்லாமிய நோன்பு முறையினால் உடல் ஆரோக்கியம் பேணப்படும் என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறினாலும் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு அதுவும் ஒரு காரணம் என இஸ்லாம் குறிப்பிடவில்லை. இப்படியிருக்க ரமளானின் ஒரு மாதகாலம் முழுவ‌தும் ஏழை/ பணக்காரன் பாகுபாடின்றி நோன்பு நோற்கவேண்டும் என்ற இஸ்லாத்தின் கட்டளைக்கு என்னதான் நோக்கமாக இருக்கும்?



“நம்பிக்கைக் கொண்டவர்களே! நீங்கள் இறைவனை அஞ்சி (பயபக்தியுடன்) நடந்துக் கொள்வதற்காக, உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப் பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது”. (அல்குர்ஆன் 2:183) என்று அல்லாஹ்தஆலா கூறுகிறான்.

அதாவது மனிதன் மறுமையின் வெற்றியை அடைய இறையச்சத்துடன் வாழவேண்டும். அந்த இறையச்சத்திற்கான ஒரு ஆன்மீகப் பயிற்சியை நோன்பு நோற்பதின் மூலம் நாம் பெறுகிறோம். உதாரணமாக நாம் ஹலாலான முறையில் உழைத்து, சம்பாதித்த பொருட்களிலிருந்தோ, நமக்கு உரிமையான மற்ற‌ ஹலாலான பொருட்களிலிருந்தோ உண்பது நமக்கு அனுமதியளிக்கப்பட்டதாக இருந்தாலும், அந்த உணவை ரமலானின் பகல் நேரத்தில் உண்ணாமல் தவிர்த்துக் கொள்கிறோம். காரணம் அது அல்லாஹ்வின் கட்டளை! நம்முடைய‌ வீட்டில், சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை என்ற நிலையில் நம்மைத் தவிர யாருமில்லாமல் நாம் தனித்து இருந்தாலும், அங்கு அறுசுவை உணவுகளும் கண் முன்னால் தயார் செய்து வைக்கப்பட்டு இருந்தாலும், அந்த நேரத்தில் பசியோ, தாகமோ, அவற்றை உண்ணவேண்டும் என்ற ஆவலோ ஏற்பட்டாலும் ‘சாப்பிடக் கூடாது’ என்ற அல்லாஹ்வின் கட்டளையினால் நாம் அவற்றை சாப்பிடுவதில்லை.  யாருமே பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது ஒரு கவளம் உணவாக‌ இருந்தாலும், ஒரு மிடறு தண்ணீராக இருந்தாலும் அது அல்லாஹ்வுக்கு தெரியும்! அவன் நம்மைப் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உள்ளச்ச‌ம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதாலும், அல்லாஹ்தஆலா இட்ட கட்டளையை மீறினால் மறுமையில் தண்டனைக்குரியவர்களாக ஆகிவிடுவோம் என்ற இறையச்சமும் நம் உணவையே நாம் சாப்பிடுவதை விட்டும் நம்மை தடுக்கிறது.

ஆக நாம் சாப்பிடுவதை யாருமே பார்க்க முடியாத சூழலிலும் இறைவன் பார்க்கிறான் என்ற ஒரே காரணத்திற்காக நமக்குச் சொந்தமான, * ஹலாலான உணவை ரமளானின் பகல் நேரங்களில் ஒதுக்கி வைக்கும் நாம், ரமளான் அல்லாத மாதங்களில் இஸ்லாம் தடுத்துள்ள * ஹராமான தீய‌ காரியங்களில் ஈடுபட வாய்ப்பு கிடைத்தாலும், அல்லாஹ் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அச்சம் நமக்குள் ஏற்பட்டு அதிலிருந்து விலகி வாழ்கிறோமே, அதுதான் ரமளான் மாதத்தில் நாம் பெற்ற அந்த ஆன்மீகப் பயிற்சி! அதை நம் வாழ்நாள் முழுதும் கடைபிடிக்கும்போது நோன்பின் நோக்கத்தை நாம் நிறைவேற்றியவர்களாக ஆகிவிடுவோம். (இன்ஷா அல்லாஹ்!) 

ஆனால் அநேக மக்கள், இஸ்லாம் தடுத்துள்ள‌ தீய காரியங்கள் என்று சொன்னால் இணைவைத்தல், வட்டி, விபச்சாரம்,  கொலை, கொள்ளை, மது அருந்துதல் போன்ற பெரும் பாவங்கள் மட்டும்தான் என்று சிறிய ஒரு வட்டத்திற்குள் அடக்கி வைத்திருப்பதால், மற்ற தவறுகளை தவறென்று நினைத்து அஞ்சாமல் அலட்சியப் படுத்தப்படுவதால் நோன்பு வைத்தாலும் அதன் பலனை அடைய முடியாத நஷ்டவாளிகளாக ஆகும் நிலையில் மக்கள் உள்ளனர். (அல்லாஹ் காப்பாற்றுவானாக!) இப்படிப்பட்ட‌ நிலையை விட்டும் தவிர்ந்துக் கொண்டவர்களாக நம்முடைய ரமளான் நோன்பை நன்மை தர‌க்கூடியதாக‌ நாம் நிறைவேற்றி வருகிறோமா? அல்லது நோன்பைப் பாழாக்கும் விஷயங்கள் இன்ன இன்னவை என இஸ்லாம் பட்டியலிடுவதை சரியான முறையில் அறிந்து அவற்றைத் தவிர்ந்துக் கொள்ளாமல் வெறும் பட்டினி கிடப்பதைப்போல நன்மையற்ற நோன்பு நோற்கிறோமா? என்பதை நாம் ஒவ்வொருவரும் இந்த ரமளானிலே சுய பரிசோதனை செய்துக் கொள்ளவேண்டும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“யார் பொய்யான பேச்சுகளையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதிலோ, தாகித்திருப்பதிலோ அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை”
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்: புகாரி, திர்மிதி, இப்னுமாஜா

மற்ற எத்தனையோ தவறுகள் தடுக்கப்பட்டதாக இருப்பினும் ‘பொய் சொல்வதை’ப் பற்றி இங்கே நபிகள்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டு சொல்கிறார்கள். அப்படியானால் புறம் பேசுவது, கோள் சொல்வது, இல்லாததை கற்பனையாக‌ இட்டுக் கட்டுவது, வீணான பொழுது போக்குகள், அருவறுக்கத்தக்க ஆபாசமான‌ பேச்சுகள், தீமைகளுக்கு துணை போவது, மோசடி செய்வது, வாக்குறுதி மீறுவது என அத்தனையும் செய்யலாமென்று அர்த்தமாகிவிடாது. ஒரு மனிதனால் தவறென்றே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் சர்வ சாதாரணமாக செய்கின்ற‌, அல்லது தவறென்று தெரிந்தும் அதை அலட்சியப் படுத்தக்கூடியதாக இருக்கக்கூடிய, அடிக்கடி நிகழும் ஒரு தவறுதான் பொய் சொல்வதாகும் என்பதால்தான், தடுக்கப்பட்ட விஷயங்களில் ‘பொய்’யை முக்கியப்படுத்தி நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆக குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ள ‘பொய்’ என்ற இந்த ஒன்றைப் போலவே, அலட்சியமாகக் கருதப்படும் மேற்சொன்ன மற்ற அத்தனை தவறுகளும் நாம் நோற்கும் நோன்பினை நன்மை இல்லாமல் பாழாக்கிவிடும் என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். அவ்வளவு ஏன்.. நாம் நோன்பு நோற்றிருக்கும்போது நம்முடன் யாரும் வீண் வம்புக்கு வந்தால் கூட அவர்களுடன் நாமும் பதில் வம்புக்குப் போகக்கூடாது என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு வலியுறுத்தியுள்ளார்கள் என்றால், எந்தளவுக்கு பேணுதலாக நம்முடைய நோன்பின் நன்மையைப் பெறவேண்டியுள்ளது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது யாரேனும் சண்டைக்கு வந்தால், (அல்லது) யாரேனும் திட்டினால் “நான் நோன்பாளி” என்று கூறிவிடுங்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்: புகாரி (1893, 1903)

ஆகவே, நோன்பாளிகளே! அல்லாஹ்வின் அருளால் நமக்குக் கிடைத்திருக்கும் இந்த ரமளான் நோன்பின் முழு பயனையும் அடைய‌ பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மட்டும் போதாது. நாம் நோன்பு நோற்பதுடன் அலட்சியமாகக் கருதிக் கொண்டிருக்கும் ஆபத்தான பாவங்களை விட்டு நாம் தவிர்ந்துக் கொள்ளவேண்டும். நோன்பின் மூலம் எடுக்கப்படும் இந்தப் பயிற்சி மற்ற 11 மாதங்களிலும் நம்மிடம் சிறந்தவொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.  நோன்பின் மூலம் நாம் பொய் சொல்வதிலிருந்தும் அதுபோன்ற மற்ற‌ தீய நடவடிக்கையிலிருந்தும் விலகிக் கொள்ளவில்லை என்றால் அது நோன்பே அல்ல, வெறும் பட்டினிதான் என்பதை நினைவில் கொள்வோமாக! அதுபோன்றதொரு நிலையை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!
 

payanikkumpaathai.blogspot.com


 

Comments on this entry are closed.

Previous post:

Next post: