நாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டாமா?

in பகுத்தறிவுவாதம்

நாஸ்திகர்கள் இறைவனையும் மறுமையையும் மறுத்துக்கூற பிரதான காரணம் என்ன? அவர்களின் அந்த எண்ணம் சரியா? அவர்கள் எண்ணப்படி தங்கள் திட்டத்தில் வெற்றி அடைந்தார்களா? என்று பார்ப்போம். ஒரே தாய்க்கும் தகப்பனுக்கும் பிறந்த இந்த உலக மக்களிடம் இன்று எண்ணற்ற மதங்களையும், பிரிவுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் விரோத குரோத மனப்பான்மைகளையும் பார்க்கிறோம். ஒரு சாரார் இன்னொரு சாரார் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக மக்களின் ஜனத்தொகையில் குறைந்த விகிதாச்சாரத்தில் உள்ளவர்கள் பெரும்பான்மை மக்களை ஆட்டிப்படைக்கின்றனர். சமத்துவ சகோதரத்துவ சீரானதொரு வாழ்க்கையை மனித சமுதாயத்தில் பார்க்க முடியவில்லை.

மனித சமுதாயத்தின் பெரும்தொகையினரை தீண்டத்தகாதவர்கள் என மதத்தின் பெயராலேயே ஒதுக்கி வைத்து, கொடுமைகள் பல இழைக்கப்பட்டு வருகின்றன. நாய்க்கிருக்கும் அந்தஸ்து கூட இந்த மனிதர்களுக்கு இல்லை என்ற கொடுமையை பார்க்கிறோம். ஆக இப்படி சமுதாயத்தில் காணப்படும் அத்தனை கொடுமைகளுக்கும் இறைவனையும், மறுமையையும் நம்புவதே காரணமாக இருக்கிறது. இறைவனையும், மறுமையையும் சொல்லியே பெரும்பான்மை மக்களை சிறுபான்மை மக்கள் ஏமாற்றுகின்றனர். அந்த மயக்கம் காரணமாகவே பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்குக் கட்டுபடுகின்றனர். எனவே இறைவனும், மறுமையும் இல்லை. மரணத்தோடு மனித வாழ்க்கை முடிவுற்றுவிடுகின்றது என்று நிலை நாட்டி விட்டால், இப்படிப்பட்ட கொடுமைகள் அனைத்தையும் அழித்து விடலாம். ஓர் உன்னத சமுதாயத்தை உருவாக்கி விடலாம் என்பது நாஸ்திகர்களின் எண்ணமாகும்.

நாஸ்திகர்கள் கூறக்கூடிய கொடுமைகள் அனைத்தும் சமுதாயத்தில் இடம் பெற்றுள்ளன என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம். அதை அனைத்தையும் அகற்றி ஏற்றத் தாழ்வுகளை அகற்றி சமத்துவ சகோதரத்துவ சமுதாயத்தை அவர்கள் கொடுக்கும் திட்டம்தான் மிகவும் தவறான ஒரு திட்டமாகும். ஆபத்தான திட்டமாகும். அவர்களின் திட்டம் குறிப்பாக தமிழகத்தில் எப்படிப்பட்ட நிலையை உண்டாக்கி இருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம். நாட்டில் மலிந்து காணப்படும் கெடுதிகளுக்கு, இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே மார்க்கத்தை நேர்வழியை மதங்களாக்கி மக்களை பல பிரிவினர்களாக்கி அதன் மூலம் அற்ப உலக ஆதாயம் அடைந்து வரும் புரோகிதரர்கள் எந்த அளவு பொறுப்பாளர்களாக இருக்கிறார்களோ அதே அளவு அதில் எவ்வித குறையுமின்றி நாஸ்திகர்களும் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பதை நாஸ்திகர்கள் உணரவேண்டும்.

கள் குடிப்பது கூடாது; குடி குடியைக் கெடுக்கும்; இது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. மக்களை இந்த உண்மையை உணரவைத்து அவர்களை குடியை விடச் செய்வதே அறிவுடையவர்கள் செய்யும் நல்ல முயற்சிகள். தென்னை மரத்திலிருந்துதானே கள் வருகின்றது, தென்னை மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டால், கள் குடி ஒழிந்துவிடும் என்று தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்துபவனை அறிவாளி என்று சொல்ல மாட்டார்கள். மாறாக, தென்னை மரத்தைக் கொண்டு மக்கள் பெறும் நல்ல பலன்களை மக்கள் இழக்க நேரிடும் என்பதே உண்மையாகும். குடிகாரன் தென்னை மரத்திலிருந்து கள் குடிக்கவில்லை என்பதற்காக குடியை விடப்போவதில்லை. ஸ்பிரிட்டைக் காய்ச்சி குடிக்க ஆரம்பிப்பான். அவனுக்கு வேண்டியது போதை. அந்தப் போதையை எப்படியெல்லாம் பெற்றுக்கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் பெற்றுக் கொள்ள முயல்வான். குடியை விடமாட்டான். இதே போல் மூட்டைப் பூச்சித் தொல்லைத் தாங்கமுடியவில்லை என்பதற்காக வீட்டைக் கொளுத்தி விட்டு காட்டில் போய் அவதிப்படமாட்டான். அறிவுள்ள மனிதன் வீட்டிலிருந்தே கொண்டே மூட்டைப்பூச்சித் தொல்லையைப் போக்க உரிய வழியையே பார்ப்பான்.

இப்படிப்பட்ட ஒரு அறிவற்ற முயற்சிதான், இறைவனின் பெயரால் சிறு சாரார் பெரும் சாராரை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதற்காக இறைவனே இல்லை என்று நிலைநாட்டச் செய்யப்படும் முயற்சியுமாகும். கள்ளுக்கு பயந்து தென்னையை வெட்டி வீழ்த்தியதால், தென்னயிலிருந்து பெறப்படும் பயன்களை மனிதன் இழப்பதுபோல் சமூகத்தில் சிறு தொகையினர் மக்களை ஏமாற்றுகின்றனர் என்ற காரணத்தால் இறைவன் இல்லை என்று சொல்வது சமுதாயத்தில் பெரும்பான்மையினர் இறை நம்பிக்கையின் மூலம் அடையும் பெரும் பலன்களை இழக்கச் செய்வதாகும்.

நாஸ்திகர்கள் பிரதானமான ஒரு விஷயத்தை சிந்திக்கத் தவறி விடுகின்றனர். மக்களுக்கு அத்தியவாசியமாகத் தேவைப்படும் காரியங்களிலேயே அவற்றைப் பெற்றுத் தருவதாகச் சொல்லிக்கொண்டு ஒரு சாரார் அதன் மூலம் பிழைப்பு நடத்துவர் அவசியம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு இந்த இடைத்தரகர்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர். அவர்களின் தில்லுமுல்லுகளும் அதிகரிக்கின்றன. இந்த இடைத்தரகர்களின் தில்லுமுல்லுகளை ஒழிப்பதற்கு வழி, மனிதனுக்கு அத்தியாவசிமானவற்றை அவசியமில்லாமல் ஆக்கிக் கொள்வது என்று நாஸ்திகர்கள் சொன்னால் அதை எந்த அறிவாளியும் ஏற்றுக்கொள்ள முடியுமா? எளிதாக விளங்க உதாரணம் ஒன்றைச் சொல்கிறோம்.

மனிதனுடைய வாழ்க்கைக்கு உணவு பிரதானமானதாக இருக்கிறது. உணவில் பிரதானமாக நாம் அரிசியைப் பயன்படுத்துகிறோம். ஆகவே அரிசி நமக்கு அத்தியாவசியமான ஒரு பொருளாக இருக்கிறது. இந்த அரிசி நமக்கு கிடைக்க செய்ய அரிசி வியாபாரிகள் என்ற இடத்தரகர்கள் உண்டாகி விடுகிறார்கள். இந்தத் தரகர்களின் எண்ணிக்கை அரிசியை இவர்களிடமிருந்து வாங்கிச் சாப்பிடும் மக்கள் தொகையைவிட மிகக்குறைந்த எண்ணிக்கையினரே. இவர்கள் முறையாக அரிசியைப் பெற்று ஒரு நியாயமான ஆதாயத்தோடு கலப்படம் எதுவும் செய்யாமல் மக்களுக்கு கொடுத்தால் இது உண்மையில் ஒரு சேவையாகும். ஆனால் இந்த நாட்டில் நடைமுறையில் என்ன நடக்கிறது?

மக்களின் அத்தியாவசிய தேவையை அறிந்துகொண்ட அந்தத் தர்கர்கள் அந்த அரிசியில் மண்ணையும், கல்லையும் கலந்து அரிசி என்று விற்கிறார்கள். அதாவது மக்களின் அவசியத் தேவையை துஷ்பிரயோகம் செய்து கல்லையும் மண்ணையும் அரிசியாக்கி காசாக்குகிறார்கள். இந்த ஈனச் செயலை மனிதாபிமானமுள்ள எந்த மனிதனும் செய்ய மாட்டான். இந்த ஈனச் செயலுக்குரிய கொடிய தண்டனையை மறுமையில், தான் பெற்றே தீரவேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையுள்ள எவனும் செய்ய மாட்டான். மனித உருவத்தில் வாழும் மிருகங்கள் மட்டுமே இந்தச் செயலை செய்ய முடியும்.

இங்கு நாஸ்திகர்கள் நமக்கு அரிசி தேவையிருப்பதால்தானே இந்த ஈனர்களுக்கு கல்லையும் மண்ணையும் அரிசியாக்கி காசாக்கும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. எனவே மக்களே யாரும் அரிசி வாங்காதீர்கள், அரிசியை சமைத்து சாப்பிடாதீர்கள் என்று போதிக்க வருவார்களா? அப்படி அவர்கள் வந்தால் அவர்களை யாரும் அறிவாளிகளாக ஏற்றுக்கொள்வார்களா? இப்போது மனிதன் உபயோகிக்கும் பெரும்பாலும் எல்லா உணவுப் பொருள்களிலும் கலப்படங்கள் பெருத்து விட்டதை அறிகிறோம். கலப்படம் செய்ய முடியாத உணவுப் பொருள்கள் மட்டுமே தப்பியுள்ளன. அதிலும் நாஸ்திகர்கள் மக்களிடையே இருந்த இறை நம்பிக்கையை போக்கியபின் இந்த உணவுப் பொருள் கலப்படங்கள் அதிகமாகிவிட்டன.

கல்வியில் பெயரால் நடக்கும் அக்கிரமங்கள்

அடுத்து மனிதன் கல்வியறிவை அடைய விரும்புகிறான். மக்களுக்கு கல்வியை போதிக்கிறோம் என்று ஒரு சாரார் கிளம்புகிறார்கள். உண்மையில் இதனை ஒரு சேவையாகக் கருதி அவர்கள் செய்வார்களானால் அது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால் நாட்டின் இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது?

சாதாரண L.K.G யிலிருந்து கல்வியின் பெயரால் எத்தனை துறைகள் இருக்கின்றனவோ அத்தனையிலும் அநியாயங்கள், லஞ்ச லாவன்யங்கள், தில்லுமுல்லுகள், மோசடிகள் சொல்லித்தீராது, எழுதித் தீராது. நாஸ்திகர்களுக்கும் இவை அனைத்தும் நன்றாகவே தெரியும். கல்வியின் பெயரால் ஒரு சிறுவர்க்கம் சமுதாயத்தையே ஏய்த்துப் பிழைக்கின்றனர். எனவே இந்த சமுதாயத்திற்கு கல்வியே தேவையில்லை, கல்வியற்ற ஆதிகால மக்களை போல் வாழ்க்கை நடத்துவோம் என்று எந்த நாஸ்திகர்களூம் சொல்லமாட்டார்கள். இப்படி மனித சமுதாயத்திற்கு, மனித வாழ்விற்கு அத்தியாவசியமான அனைத்துத் துறைகளிலும் இடைத்தரகர்களாக ஒரு சிறு வர்க்கம் புகுந்துகொண்டு முழு சமுதாயத்தையும் ஏமாற்றி வருகின்றனர்.

மனிதனுக்கு தேவை என்று வந்துவிட்டால் அந்த தேவையின் அளவை அனுசரித்து ஒரு சிறுவர்க்கம் அதை துஷ்பிரயோகம் செய்து அவர்கள் பிழைப்பு நடத்துவது தவிர்க்க முடியாததாகவே மனித வாழ்க்கையில் அமைந்து விடுகிறது. மனிதன் இவ்வுழகில் வாழ்வதாக இருந்தால் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டே ஆகவேண்டும். தேவைகள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது. தேவைகளைத் துறந்து வாழ் என்று மனிதனுக்கு உபதேசம் செய்பவன் அறிவாளியாக இருக்க முடியாது. மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் இப்படிப்பட்ட மோசடிகள், தில்லுமுல்லுகள், ஏமாற்று நடத்தும் துறைகள் மனித வாழ்வுக்கு அவசியமில்லை என்று கூறத்துணியாத நாஸ்திகர்கள், மனித சமுதாயத்தின் அடிப்படை நம்பிக்கையான இறை நம்பிக்கை மட்டும் அவசியமில்லை என்று கூறத்துணிவதேன்?

மனித வாழ்க்கையின் வெற்றியே அந்த இறை நம்பிக்கையின் அடிப்படியிலேயே இருக்கிறது. மனித வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் காணப்படும் சீர்கேடுகள், சீராக இறை நம்பிக்கையும், மறுமை நம்பிக்கையும் மிகமிக அத்தியாவசியமாக இருக்கின்றன. அதன் காரணமாக அவற்றின் அத்தியாவசியத்திற்கு ஏற்றால் போல் அந்த துறையில் ஒரு சாரார் புகுந்து தங்களின் அற்ப உலக ஆதாயத்திற்காக அரிசியின் பெயரால், அரிசியில் கல்லையும் மண்ணையும் கலப்பது போல் சத்திய மார்க்கத்தில், சத்திய மார்க்கத்தின் பெயரால் அசத்திய மதங்களைக் கலக்கத்தான் செய்வார்கள்.

அரிசியில் கல்லிருந்தால் அதிலுள்ள கல்லை அகற்ற முயற்சிக்க வேண்டுமேயல்லாமல், அரிசியை சாக்கடையில் கொட்ட துணியக்கூடாது. அதே போல் சத்திய மார்க்கத்தில் கலக்கப்பட்டுள்ள அசத்திய மதங்களை அகற்ற பாடுபட வேண்டுமேயல்லாது, சத்திய மார்க்கத்தையும் அழித்துவிட முற்படக் கூடாது. இது மனித சமுதாயத்திற்கு பயங்கர நஷ்டத்தையும் அழிவையும் வீழ்ச்சியையுமே ஏற்படுத்தும். இதை நாஸ்திகர்கள் நிதானமாக சிந்தித்து விளங்க முற்பட வேண்டும்.

K.M.H

Comments on this entry are closed.

Previous post:

Next post: