நபி வழியைப் பின்பற்றுவதன் அவசியம்

Post image for நபி வழியைப் பின்பற்றுவதன் அவசியம்

in இஸ்லாம்

 நபி வழி என்றால் என்ன?
நபிவழி எப்போது தொகுக்கப்பட்டது? எப்படித் தொகுக்கப்பட்டது? என்ற வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், நபிவழி என்றால் என்ன? நபி வழியைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் என்ன? நபி வழியைப் பின்பற்றாதவருக்குரிய தண்டனை என்ன? என்பதை முதலில் பார்ப்போம்.

நபி வழிக்கு அரபியில் ”சுன்னத்” என்று சொல்லப்படும். இந்தச் சொல்லிற்கு அகராதியில் பொதுவாக ”வழி” என்று பொருள் இருந்தாலும், இஸ்லாமிய பழக்கத்தில் அது நபி வழிக்குத்தான் பயன் படுத்தப்படுகிறது. அதாவது நபி அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம் ஆகியவைகளுக்கு ”சுன்னத்” என்று சொல்லப்படுகிறது. இவைகளுக்கு ”ஹதீஸ்” என்று ஒரு மறு பெயர் சொல்லப்படுவதுண்டு, என்றாலும் ‘சுன்னத்’ என்ற சொல்லிற்கும், ‘ஹதீஸ்’ என்ற சொல்லிற்குமிடையில் சிறு வேறுபாட்டை நம்மால் காண முடிகிறது.

உதாரணமாக ”தனக்கென எதை விரும்புகிறானோ, அதை தனது சகோதரனுக்கும் விரும்பாதது வரை ஒருவன் உண்மை விசுவாசியாகமாட்டான்” என்று நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

நபி அவர்கள் ”சொன்னதாக” அவர்களைப் பற்றி அறிவிக்கப்பtடுள்ள இந்தச் செய்திக்கு ”ஹதீஸ்” என்று சொல்லப்படும். இந்தச் செய்தி மூலமாக நமக்குக் கிடைக்கின்ற விஷயம் இருக்கிறதே அது ”சுன்னத்” அதாவது தனக்கென விரும்பும் ஒன்றை தனது சகோதரனுக்கும் ஒருவன் விரும்பும்போது நபி அவர்களின் “சுன்னத்தை” செயல் வடிவில் பின்பற்றியவனாக ஆகிவிடுகின்றான்.

இதுதான் ”ஹதீஸ்” என்ற சொல்லுக்கும் ”சுன்னத்” என்ற சொல்லுக்குமிடையிலுள்ள ஒரு சிறு வேறுபாடு. இவ்விரு சொல்லும் ஒரே பொருளைத்தான் குறிக்கும் என்று சொல்லிக் கொண்டாலும், நன்கு சிந்தித்துப் பார்த்தால் அவ்விரு சொற்களுக்குமிடையில் சிறு வேறுபாடு இருப்பதை உணர முடியும்.

நபி வழியைப் பின்பற்றுவதன் அவசியம்
சஹாபாக்கள் (நபித்தோழர்கள்) ஷரீயத் சட்ட விளக்கங்களை திருக்குர்ஆனிலிருந்து பெற்றுக்கொள்வார்கள். அதன் விளக்கங்களை நபி அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். குர்ஆனை பொறுத்தவரையில் அதிலுள்ள பல வசனங்கள் சுருக்கமானவையாக இருக்கின்றன. உதாரணமாக தொழுகையை எடுத்துக்கொள்வோம், குர்ஆனில் தொழுமாறு சொல்லப்பட்டுள்ளது. ஆனால் எப்படித் தொழவேண்டும், எந்தெந்த நேரங்களில் தொழ வேண்டுமென்ற விரிவான விளக்கம் அதில் இல்லை. இதுபோன்ற விரிவான, தெளிவான விளக்கங்களை நபித்தோழர்கள் நபி அவர்களிடமிருந்து நேரடியாகப் பெற்றுத் தெரிந்து கொண்டார்கள். இவ்வாறே அவர்கள் மத்தியில் எழும் பல்வேறு பிரச்சனைகளுக்குரிய சட்டங்களைக் குர்ஆனிலிருந்து பெற முடியாதபோது அவற்றின் விளக்கங்களை நபி அவர்கள் விளக்கிக் கூறவேண்டிய அவசியம் ஏற்பட்டது. காரணம் குர்ஆனை மக்களுக்கு விளக்கிக் கொடுப்பதற்காகவே நபி அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.

(நபியே) மனிதர்களுக்காக அருளப்பட்ட வேதத்தை அவர்கள் சிந்தித்து உணர வேண்டுமென்பதற்காக, தெளிவாக அவர்களுக்கு விளக்கிக் கொடுப்பதற்கே வேதத்தை நாம் உம்மீது அருளினோம். (அல்குர்ஆன், 16:44)

(நபியே) மேலும் அவர்கள் எந்த விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டார்களோ, அதை நீர் தெளிவாக்குவதற்காகவே உம்மீது இவ்வேதத்தை இறக்கினோம். (அல்குர்ஆன் 16:64)

தமது ஒவ்வொரு மார்க்கப் பிரச்சனைக்கும், நபி அவர்களை தீர்ப்பு வழங்கக் கூடியவர்களாக ஆக்கிக் கொள்ளாதவரை நாம் ஒருபோதும் உண்மை விசுவாசிகளாக ஆக முடியாது என்பதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான்.

(நபியே) உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில் அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். (அல்குர்ஆன் 4:65)

மார்க்க சம்பந்தமான எந்தப் பிரச்சனையானாலும் அதனை நபி அவர்கள் அல்லாஹ்வின் பெயரிலேயே மக்களுக்கு அறிவிக்கிறார்களே தவிர சுயமாக எதையும் அவர்கள் சொல்வதில்லை.

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான், அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி வைத்தான். அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார். இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார். மேலும் அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர். (அல்குர்ஆன் 3:164)

இவ்வசனத்தின் ஞானம் (ஹிக்மத்) என்று சொல்லப்பட்டிருப்பது ”சுன்னத்” என்னும் நபி வழியேயாகும் என குர்ஆன் விளக்கவுரையாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதை வலியுறுத்தும் வகையில் ஒரு ஹதீஸில் ”நான் வேதமும் கொடுக்கப்பட்டுள்ளேன், அதைப்போன்று ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளேன்” என்று நபி அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

அதைப்போன்று ஒன்று என்பதின் பொருள் ”சுன்னத்” என்னும் நபி வழியான குர்ஆனின் விளக்கமாகும் என அனைத்து ஹதீஸ் விரிவுரையாளர்களும் கருத்து கொண்டுள்ளனர்.

”உங்களிடம் ஹதீஸ் வருமானால் அதை குர்ஆனோடு ஒப்பிட்டு சரி பாருங்கள். குர்ஆனுக்கு ஒத்திருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். குர்ஆனுக்கு மாற்றமாக இருக்குமானால் அதை விட்டு விடுங்கள்” என்று ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது புனையப்பட்ட தவறான ஹதீஸாகும். இதற்கு ஹதீஸ் நூல்கள் எதிலும் ஆதாரமில்லை. (ஷரஹ் சுனன் அபூதாவூத்)

நபி வழியை முற்றிலும் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல வசனங்கள் உள்ளன அவற்றில் சில:

(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்59:7)

அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)

நபி வழியை புறக்கணிப்பவனின் கதி
நபிவழியைப் பின்பற்றாதவனுக்குரிய தண்டனையை அல்லாஹ் பின்வரும் வசங்களில் தெளிவுபடுத்துகிறான்.

எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63)

”அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் வழிப்படுங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 3:32)

”அல்லாஹ்வின் மீதும், (இத்)தூதர் மீதும் நாங்கள் ஈமான் கொண்டோம்; (அவர்களுக்குக்) கீழ்படிகிறோம்” என்று சொல்லுகிறார்கள். (ஆனால் அதன்) பின்னர் அவர்களிலிருந்து ஒரு பிரிவார் புறக்கணித்து விடுகின்றனர் எனவே, இவர்கள் (உண்மையில்) முஃமின்கள் அல்லர். (அல்குர்ஆன் 24:47)

மேற்கூறப்பட்ட வசனங்கள் நபிவழியை பின்பற்றுவதின் அவசியத்தையும், பின்பற்றாதவனுக்கு தண்டனையையும் மிகத்தெளிவாக விளக்குகின்றன.

இந்த அடிப்படையில் சஹாபாக்கள் தங்களுக்கு ஏற்படுகின்ற எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணுவதற்காகவும், குர்ஆனின் சட்ட திட்டங்களுக்குரிய தெளிவைப் பெறுவதற்காகவும் நபி அவர்களை நாடவேண்டிய அவசியம் இருந்தது. அப்பொழுதெல்லாம் சஹாபாக்கள் நபி அவர்களிடத்தில் சென்று, தங்கள் பிரச்னைக்குரிய தீர்ப்பைப் பெற்று, அப்படியே அதைக் கடைபிடித்தும் வந்தார்கள். வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல்கள் இவை அனைத்திலும் நபி வழியை அப்படியே கடைபிடித்தார்கள்.

“என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்” என்று நபி அவர்கள் கட்டளையிட்டார்கள். நூல்: புகாரி

நான் எவ்வாறு ஹஜ் கடமையை நிறைவேற்ற கண்டீர்களோ அப்படியே நீங்களும் செய்யவேண்டும் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) அதற்கொப்ப நபித்தோழர்களும் அப்படியே செயல்பட்டார்கள். சில சந்தர்ப்பங்களில் நபிவழியைப் பின்பற்றத் தயங்கிய சில தோழர்களிடம் நபி அவர்கள் கோபம் அடைந்திருக்கிறார்கள்.

ஒரு சஹாபி தன் மனைவியை நபி அவர்களிடம் அனுப்பி நோன்பாளி தனது மனைவியை முத்தமிடுவதன் சட்டத்தைப்பற்றி கேட்டு வரும்படி அனுப்பி வைத்தார். அப்பெண்மணி நபி அவர்களது மனைவி உம்முஸலமா (ரழி)யிடம் சென்று கேட்டபோது, நபி அவர்கள் நோன்பு நோற்றிருக்கையில் தங்கள் மனைவியை முத்தமிடுவார்கள் என்று சொன்னார்கள். இதை அப்பெண்மணி தனது கணவனிடத்தில் சொன்னபோது “நான் ரசூலுல்லாஹ்வைப் போன்றல்ல. அல்லாஹ் தனது ரசூலுக்கு அவன் நாடியதை ஹலாலாக்கிக் கொடுப்பான்” என்று சொன்னார். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்ததும் கோபமடைந்தவர்களாக “உங்களையெல்லாம் விட நான் அல்லாஹ்வை மிக அஞ்சக்கூடியவனும் உங்களையெல்லாம் விட அவனது சட்டங்களை அதிகம் தெரிந்தவனுமாக இருக்கிறேன்” என்று சொன்னார்கள். (முஸ்லிம்)
தொடரும்…

S.கமாலுத்தீன் மதனி

{ 2 comments }

yaseer April 20, 2012 at 2:07 am

alhumdulillah..

Chand basha April 20, 2012 at 11:04 pm

Yes, ofcourse allah’s messanger well know fear of allah

Comments on this entry are closed.

Previous post:

Next post: