நபிவழி நபி அவர்கள் காலத்தில் தொகுக்கப்பட்டதா?

Post image for நபிவழி நபி அவர்கள் காலத்தில் தொகுக்கப்பட்டதா?

in இஸ்லாம்

நபி அவர்களும் நபித்தோழர்களும் அல்லாஹ்வின் பரிசுத்த வேதமான அல்குர்ஆனுக்கு அளவிட முடியாத மதிப்பும் மரியாதையும் கொடுத்ததின் காரணத்தினால் தான் அதை அவர்கள் தங்கள் நெஞ்சங்களில் மனனம் செய்து பாதுகாத்தது மட்டுமின்றி மரம், மட்டைகள், தோல், கற்கள் முதலியவற்றில் எழுதிப் பாதுகாத்து வந்தனர். நபி அவர்கள் இவ்வுலகைப் பிரியும்போது குர்ஆன் அதனுடைய அமைப்பிலேயே பாதுகாக்கப்பட்டிருந்தது. ஒரே முஸ்ஹப் (நூல்) வடிவில் கொண்டு வருவது மட்டுமே எஞ்சியிருந்தது.

ஆனால் நபிவழி அப்படியல்ல. அது நபி அவர்கள் காலத்திலே குர்ஆன் பாதுகாக்கப்பட்டது போன்று எழுதிப் பாதுகாக்கப்படவில்லை. அது எழுதப்படாததற்கு பல காரணங்கள் உள்ளன. நபி அவர்கள் நபித்துவத்திற்குப் பிறகு இருபத்தி மூன்று வருடங்கள் வாழ்ந்தார்கள். இந்த கால கட்டத்தில் நடந்த அவர்களுடைய சொல் செயல் பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் மரம், மட்டைகள், தோல்களில் எழுதிப் பாதுகாப்பது மிகக் கடினமாக இருந்தது. அதை எழுதுவதற்கு ஏராளமான எழுதப் படிக்கத் தெரிந்த நபித்தோழர்கள் தேவைப்பட்டார்கள். ஆனால் நபி அவர்கள் காலத்தில் எழுதப்படிக்கத் தெரிந்த நபித்தோழர்கள் மிக மிகக் குறைவானவர்களே இருந்தனர். அதே நேரத்தில் குர்ஆன் அல்லாஹ்வுடைய வேதமாகவும், இஸ்லாத்தின் முதல் மூல கிரந்தமாகவும், தெய்வீக அழியா அற்புதமாகவும் இருந்தமையால் எழுதப் படிக்க தெரிந்த நபித்தோழர்கள் குர்ஆனை எழுதுவதில் தங்களை முழுக்க முழுக்க ஈடுபடுத்தினார்கள். எனவே அவர்களுக்கு பின்னால் வந்தவர்கள் எவ்வித சிரமுமின்றி குர்ஆனின் ஒரு எழுத்துக்கூட சிதையாத வண்ணம் பாதுகாப்பான முறையில் அதைப் பெற்றுக்கொள்ள வாய்பாக அமைந்தது.

மேலும் அரபியர்களிடையில் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் குறைவாக இருந்தாலும் மிக அதிகமான மனன சக்தியுடையவர்களாக இருந்தார்கள். குர்ஆன் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கப்பட்டதின் காரணத்தால் நபித்தோழர்கள் அவ்வப்போது இறங்கும் வசனங்களை மனனம் செய்வதற்கு மிக எளிதாக இருந்தது.

ஆனால் சுன்னத் என்ற நபிவழி நபி அவர்களின் முழு வாழ்க்கையின் சொல் செயல் அங்கீகாரத்தைக் கொண்டதாகும். அவை குர்ஆனை விட அதிகமாக இருந்தது. குர்ஆன் எழுதப்பட்டது போன்று நபிவழியும் எழுதப்பட்டிருந்தால் அதை மனனம் செய்வது நபித்தோழர்கள் மீது மிக சிரமமாக இருப்பதுடன், குர்ஆனோடு நபிமொழியும் கலந்து வேறுபடுத்தி அறிய முடியாத ஒரு சூழ்நிலை பின்னர் ஏற்பட்டு விடக்கூடும். இஸ்லாத்தின் எதிரிகள் அதை ஆயுதமாகப் பயன்படுத்தி, குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற அச்சத்தின் காரனத்தினால் தான் நபிவழியை நபித்தோழர்கள் எழுதித் தொகுக்கவில்லை. இதுபோன்ற காரணங்களுக்காகவே ஆரம்பக் கட்டத்தில் நபி அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

“நான் சொல்வதில் குர்ஆன் அல்லாத எதையும் நீங்கள் எழுதாதீர்கள். குர்ஆன் அல்லாத எதையாவது, யாராவது எழுதியிருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும்” நூல்: முஸ்லிம்

இவ்வாறு நபி அவர்கள் சொல்லியிருப்பதன் நோக்கம் குர்ஆனை ஒரு தொகுப்பு வடிவில் பாதுகாப்பது போன்று என் சொல், செயல்களை நீங்கள் எழுத வேண்டாம் என்பதுதான். கிருஸ்தவர்கள் இறைவனால் அருளப்பட்ட இஞ்சீல் வேதத்தோடு நபி ஈஸா(அலை) அவர்களுடைய போதனைகளையும் (இன்னும் பொய்களை) கலந்து பிரிக்க முடியாதவாறு ஆக்கிவிட்டதைப் போன்று தனது உம்மத்தினரும் அவ்வாறு செய்துவிடக்கூடாது என்று அஞ்சியே அவர்களுடைய சொல், செயல்களை எழுதுவதை தடை செய்தார்கள் என்றாலும் ஒரு சில சந்தர்ப்பங்களில் மிக அவசியம் ஏற்படும்போது குர்ஆன் அல்லாத சில விஷயங்களை எழுத நபி அனுமதித்திருக்கிறார்கள்.

அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: மக்கா வெற்றியின்போது ‘பனீலைது’ என்ற வம்சத்தைச் சார்ந்த ஒரு மனிதரை ‘குஸாஆ’ என்ற வம்சத்தார் கொன்றுவிட்டனர். இந்தச் செய்தி நபி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டபோது தனது ஒட்டகத்தின் மீது ஏறி பின்வருமாறு ஒரு பிரசங்கம் நிகழ்த்தினார்கள். மக்காவின் உள்ளே கொலை நடப்பதை அல்லாஹ் தடைசெய்துள்ளான். மக்காவாசிகள் மீது அல்லாஹ்வின் தூதரும், உண்மை மூஃமின்களும் அதிகாரம் செலுத்தக்கூடியவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். எனக்கு முன்னால் இருந்த யாருக்கும், எனக்கு பின்னால் உள்ள யாருக்கும் மக்காவின் உள்ளே போர் புரிவதற்கு ஆகுமாக்கப்படவில்லை. எனக்கு ஒரு சிறிது நேரம் அங்கே போர் செய்வதர்கு அனுமதிக்கப்பட்டது. அறிந்துகொள்ளுங்கள் இப்போது எனக்கும் விலக்கப்பட்டு விட்டது.

மக்காவிலிருந்து செடி கொடிகளை எடுப்பதும், தவறிப்போன பொருட்களை அதற்குச் சொந்தக்காரர்கள் அல்லாதவர்கள் எடுப்பதும் விலக்கப்பட்டுள்ளது. யாரவது ஒருவன் அங்கு கொல்லப்பட்டால் அவனுக்குறிய ஈட்டுத்தொகையை (கொல்லப்பட்டவனுக்குறிய நிகர்தொகை) கொல்லப்பட்டவனின் சொந்தக்காரருக்குக் கொடுக்க வேண்டும். அல்லது கொன்றவை கொல்லப்பட்டவனின் சொந்தக்காரரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்கள். அப்போது எமன் நாட்டைச் சார்ந்த ‘அபூஷாஹ்’ என்ற ஒருவர் “யாரசூரல்லாஹ் இதை எனக்கு எழுதி தாருங்கள்” என்று சொன்னார். அப்போது, “அபூஷாவிற்கு எழுதி கொடுங்கள்” என்று ஸஹாபாக்களைப் பார்த்து சொன்னார்கள். நூல்:புகாரி

இவ்வாறே நபி அவர்கள் பல நாட்டு மன்னர்களுக்கும் அரேபியாவிலுள்ள தலைவர்களுக்கும் கடிதங்கள் எழுதி இஸ்லாத்தின்பால் அழைத்துள்ளார்கள். ஆக மிகக் குறைவாக ஒரு சில விஷயங்கள் நபி வழியிலிருந்து எழுதப்பட்டாலும் குர்ஆன் எழுதப்பட்டது போன்று நபிவழி எழுதிப் பாதுகாக்கப்படவில்லை.
 தொடரும்…

S.கமாலுத்தீன் மதனி

Comments on this entry are closed.

Previous post:

Next post: