தூய்மையானவர்களைத் தவிர….

in அல்குர்ஆன்

குர்ஆனை ஒளுவில்லாமல் தொடுவது கூடுமா அல்லது கூடாதா என்பதில் பலர் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இதனை நாம் சற்று கவனமாக ஆராய்வோம்.

    அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.     

    “நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது. “தூய்மையானவர்களைத் தவிர (வெறெவரும்) இதனைத் தொடமாட்டார்கள்” (அல்குர்ஆன் 56:78,79)

    நபி(ஸல்) அவர்கள் யமன் வாசிகளுக்கு எழுதிய கடிதமொன்றில் ‘குர்ஆனைப் தூய்மையானவர்களைத் தவிர மற்றெவரும் தொடமாட்டார்’ என்று எழுதியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூபக்ருபின் முஹம்மதுபின் அம்ரு பின் ஹஜ்மு (ரலி) நூல்கள்: நஸயீ, பைஹகீ, தாரகுத்னி

    மேற்காணும் ஆயத்தில் இதனைத் தொடமாட்டார்கள் எனும் வாசகம் இருக்கிறது. இதனை என்று சொல்லப்பட்டிருப்பது “பாதுகாக்கப்பட்ட ஏட்டை” என்பதுதான் பொருள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும் கூறுகிறார்கள்.

    அடுத்து நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தில் ‘குர்ஆனைப் பரிசுத்தமானவரின்றி மற்றெவரும் தொடமாட்டார்’ என்று எழுதியிருப்பதால்  நபி (ஸல்) அவர்களே பாதுகாக்கப்பட்ட ஏட்டை என்று பொருட்கொள்ளாது குர்ஆனை என்று தானே பொருள் கொண்டிருக்கிறார்கள் எனலாம். அப்படி என்றால் அவர்கள் தொடவேண்டாம் என்று கூறாது “தொடமாட்டார்” என்றுதானே சொல்லியிருக்கிறார்கள். அவ்வாறிருக்க தொடமாட்டார் என்னும் வார்த்தைக்கு தொட வேண்டாம் என்று பொருட்கொள்வது எங்கனம் பொருந்தும்?

    அவ்வாறே ஒரு வாதத்திற்காக அதை ஏற்றுக்கொண்டாலும், அவர்களின் அந்த வாசகம் குர்ஆனைப் தூய்மையானவர்தான் தொடவேண்டும் என்பதைப் பொதுவாகக் காட்டுகிறதே தவிர ஒளுவில்லாதவர் அதைத் தொடக்கூடாது என்று குறிப்பிட்டுக் காட்டுவதாக அது அமைந்திருக்கவில்லை.

    ஏனெனில் தூய்மையானவர் என்ற வார்த்தை பல கருத்துக்களைக் கொண்ட பொதுச் சொல்லாக அமைந்திருக்கிறது. அதற்கு [1] ஒளு செய்து சுத்தமானவர் [2] கையை மட்டும் களுவி சுத்தமானவர் [3] குளித்து சுத்தமானவர் [4] ஷிர்க் [இணைவைத்தல்] என்னும் அசுத்தத்தை அகற்றி முஸ்லிம் என்ற வகையில் சுத்தமானவர் என்றெல்லாம் பல்வேறு கருத்துக்கள் கொள்ள இடமிருப்பதால் ஒளு செய்து தூய்மையானவர் என்று மட்டும் பொருள் கொள்வதற்கு தக்க ஆதாரம் குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ இருந்தாக வேண்டும். அவ்வாறிருப்பதாக தெரியவில்லை. அல்லாஹ்வும், ரசூலும் பொதுவாக சொல்லியிருக்கும் ஒரு வார்த்தைக்கு அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அதற்கு குறிப்பிட்டு விளக்கம் தராதிருக்கும்பொழுது , தக்க ஆதாரமின்றி அதற்கு இதுதான் விளக்கம் என்று குறிப்பிட்டுச் சொல்வதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது?

    ஆகவே மேற்காணும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் ஒளுவில்லாது குர்ஆனைத் தொட்டால், அவ்வாறு அவர் தொடுவதைத் தடுப்பதற்கு மார்க்க ரீதியாக நம்மிடம் எவ்வித ஆதாரமும் கிடையாது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

Comments on this entry are closed.

Previous post:

Next post: