மகான் அப்துல் காதிர் (ரஹ்) அவர்களின் நினைவு மாதமாக முஸ்லிம்கள்
ஜீலான் நகரில் அபூஸாலிஹ் எனும் பெரியாருக்கும் பாத்திமா எனும் அம்மை- யாருக்கும் புதல்வனாக ஹிஜ்ரி 47 – ம் ஆண்டு ரமழான் முதல் தேதியில் அப்துல் காதிர் (ரஹ்) அவர்கள் பிறந்தார்கள்.
இவரின் மறைவு ஹிஜ்ரி 561-ம் ஆண்டு ரபியுல் ஆகிர் மாதமாகும். இவர் இல்லறத்தை ஏற்று 27 ஆண் பிள்ளைகளையும், 22 பெண் பிள்ளைகளையும் பெற்றார்கள். துறவறம் மேற்கொண்டதில்லை.
இவர்கள் தமது காலமெல்லாம் ஏகத்துவத்தை நிலை நிறுத்தும் அறப்போருக்குத் தம்மை அற்பணித்தவர். இவரின் மறைவு சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். துக்க தினமான நாளில் கூடு இழுத்து கும்மாளமிட்டுத்திரியும் இவர்களை உருவாக்கிய கைக்கூலிகள் யார்? இறந்த தினத்தை சந்தோசமாக கொண்டாடும் இவர்களின் அறிவீனம் தான் என்ன?
குர்ஆன் ஹதீஸ் மட்டுமே சான்றாகக் கொண்டு செயல்பட்ட இவர்களின் போதனைகள் ஒவ்வொன்றும் தத்துவ முத்துக்கள்! இவர்களின் நூல்கள் பிரசித்து பெற்றவை. ஃபத்ஹுர் ரப்பானி, குன்யத்துத்தாலிபீன், புதூஹுல்கைப் இவைகள் ஏகத்துவத்தின் அற்புத கருவூலங்களாகும். இவையன்றி, மற்ற பல நூல்கள் அன்னாரை அவமதிக்கும் படைப்புகளே.
குர்ஆன்- ஹதீஸை மாற்ற – திரிக்க – திணிக்க முடியவில்லை. ஆகவே, மகான்களின் பேரால் தமது ஆதாயத்திற்காக மகான்களைப் பகடையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். சில அரபி அரை குறை பண்டிதர்கள், இவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகளைப் போல் வேறு எவருக்கும் கிடையாது. அவைகளில் சில………
எல்லா நபிமார்களுடன் ஆபத்து காலங்களில் அவர்களுடன் இருந்ததாகவும் ஏன் அல்லாஹ்வின் அருகில் தொட்டிலில் படுத்திருந்ததாகவும், நபியவர்களின் மிஃராஜ் பயணத்தின் போது அவர்களை தம் தோள் கொடுத்து தூக்கிவிட்டவர்கள் என்றும், அவர் பிறந்த போது அன்றைய நாளில் பிறந்த குழந்தைகள் யாவும் நோன்பு நோற்றன என்றும் அவர்கள் அனைவரும் முடிவில் ‘வலீ’ (இறைநேசர்) ஆக மாறினர் என்றும்; அவர்கள் பள்ளிக்குச் செல்லும் போது அனைத்து வானவர்களும் வலீ வருகிறார் வழிவிட்டு நில்லுங்கள்! என்று கூறுவார்கள் என்றும்; கோழியை தின்று விட்டு எலும்புத் துண்டுகளை வைத்து கோழியை உயிரூட்டினார்கள் என்றும், பிரசங்கத்தில் ஒரு பாம்பு இவர்களின் பயானை ஆர்வமுடன் கேட்க அவர் தோளில் தொற்றிக்கொண்டு அவருடன் பேசும் என்றும்; கபரஸ்தானில் உள்ள மைய்யத்துக்கள் இவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டு சவக்குழியில் இருந்து வெழி வந்தன என்றும்; உயிரை பறிக்கும் ‘மலக்குல் மவ்த்’ பறித்த உயிர்களை, அவரை அறைந்து வெளியே மீட்டார்கள் என்றும், பல நூற்றாண்டுகளாக கடலில் மூழ்கிக் கிடந்த கப்பலையும், பிணங்களையும் மீட்டார்கள் என்றும் இவரின் மீது புனையப்பட்ட பகுத்தறிவுக்கப்பாற்பட்ட அபத்தமான கற்பனை கதைகள் ஏராளம்! ஏராளம்!!
மக்களை விட்டு விலகி – கம்பளி உடை தரித்து- உலகை, மணவாழ்க்கையை வெறுத்து துறவறம் கொள்வது நபிவழியா? நபி (ஸல்) அவர்களும் ஆட்சியாளர்களாக- குடும்பத் தலைவராக இருந்து ஆத்மீகத்தையும் ஆன்மீகத்தையும் போதித்ததைத் தானே இம்மகானும் செய்தார்கள்.
பின்னால் வந்தவர்கள் தான் இஸ்லாத்திற்குப் புறம்பான கட்டுக் கதைகளைப் புனைந்தார்கள். துறவுக் கொள்கையை தெளித்த துறவிகள், அவ்லியாக்கள் ஆனார்கள். இதனை அறியா மக்கள் குர்ஆனையும்- ஹதீஸையும் புறமாக ஒதுக்கிவிட்டு குர்ஆனை மையத்துக்காக மட்டும் பயன்படுத்தி விட்டு, இக்கதைகளை கவிதைகளாக பாட ஆரம்பித்தனர்.இஸ்லாத்தின் ஆணிவேரை அழித்திட இதுவே முதல் மூல காரணமாயிற்று.
குறைபாடு அபாயம் முதலியவற்றிலிருந்து பாதுகாப்பான நிலை குர்ஆன் – ஹதீஸ் ஆகிய இவ்விரண்டில் மட்டுமே உள்ளது. இவை அல்லாதவைகளில் நாசம் தான் உண்டு. இந்த இரண்டை மட்டும் கொண்டுதான் ஒரு அடியான் இறை நேசன் எனும் அரிய உயர் பதவியை அடைய முடியும்! (36 வது சொற்பொழிவு நூல் புதூஹுல் கைப்)
அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்களை இருட்டில் இருந்து கொண்டு 1000 முறை ‘யா முஹ்யித்தீன்’ என்று கூப்பாடு போட்டால் தம்முன் தோன்றுவார்கள் என்று நம்புகின்றனர். இப்படிக் கூற அனுமதி தந்தது யார்?
தோழர்களே! உங்களுக்கும் உங்கள் இரட்சகனுக்குமிடையே தரகர்கள் வேண்டாம் ஏனெனில், நமக்கும் நம் இரட்சகனுக்குமிடயில் இந்தத் தரகர்கள் உபயோகமற்றவர்கள். அந்த மெய்யான ஹக்கு தஆலா ஒருவனே சகல அதிகாரங்களையும் செல்வங்களையும் முழுவதுமாகத் தன் கைவசத்தில் வைத்துக் கொண்டிருப்பவன்! (36 வது சொற்பொழிவு நூல் ஃபத்ஹுர் ரப்பானீ)
உமக்கேற்படும் எத்துன்பத்தையும் அல்லாஹ்வையன்றி மற்றவர்களிடம் முறையிட வேண்டாம் என்று கூறி அதற்கு ஆதாரமாக அல்குர்ஆன் 10:107 வது வசனத்தையும் ஓதிக் காட்டுகின்றனர் (நூல் ஃபத்ஹுர் ரப்பானீ)
தமது போதனைகளுக்குச் சான்றாக அவர்கள் குர்ஆன்-ஹதீஸை மட்டுமே ஏற்று தம் வாழ்க்கையிலும், அவ்வாறே வாழ்ந்து மறைந்த ஒரு நல்லடியாரை இன்று மக்கள் மறந்து, அல்லாஹ்வை விட்டு அப்துல் காதர் ஜீலானியைப் பிடித்துக் கொண்டது மாபெரும் ஷிர்க் இணைவைத்தலே! இவர்கள் குர்ஆன் – ஹதீஸ் மற்றும் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்களின் போதனைகளை அடியோடு மறந்து மறுத்து அப்பட்டமான வழிகேட்டில் இருக்கும் இந்த நிழலைத் தேடும் நிஜங்களின் திரை விலகட்டும்! அல்லாஹ் போதுமானவன்.
{ 1 comment }
In the reason less education of islam , the education is very important in islam , without it , it is very difficult to do any good amal , so few muslims peoples can fell in this trap (shirk, bidath,ets…) we should be very very careful , shirk and bidath, inshallahu , we can make duva every time while prayer ,jazakallahukhair for u.
Comments on this entry are closed.