தாவா களமும்! பிரச்சார முறைகளும்!

Post image for தாவா களமும்! பிரச்சார முறைகளும்!

in பொதுவானவை


(நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விளக்கிக் கொண்டும் இருக்கவும்; இத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன் 3:104)

கலிமா எனும் உறுதிமொழியைச் சொல்லி இருக்கின்றோம். அதன்படி வாழ முடிந்த வரைக்கும் முயற்சிக்கின்றோம். இந்த வாசகங்கள் அனைவருக்கும் பொருந்தும் அல்லவா? ஆனால் அடுத்த நிலை அதாவது நாம் இஸ்லாத்தைப் பின்பற்றி வாழும் அதேசமயம் நம்மால் முடிந்த அளவுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல வேண்டும் அல்லவா? இந்த இடத்திலே தான் நம்மில் பலர் நழுவுகிறார்கள். இதற்குச் சில காரணங்கள் உள்ளன.

1. மார்க்கத்தை முழுமையாக அறியாமல் வெறும் சில அமல்களை மட்டும் செய்து கொண்டு, வெளித்தோற்றத்தில் முஸ்லிமாக வலம் வருவதாக இருக்கலாம். அல்லது,

2. நமக்கெல்லாம் மார்க்கத்தைச் சொல்லும் தகுதி கிடையாது. அதற்காக நன்கு படித்த அத்துறை சார்ந்தவர்கள் தான் சொல்ல வேண்டும் என தன் மன ரீதியாக நம்புவதால் இருக்கலாம்.

3. நமக்கு ஓரளவு மார்க்கம் தெரியும். இருப்பினும் மார்க்கத்தைப் பற்றிப் பேசினால் நம்மை வஹ்ஹாபி என்று சொல்லி விடுவார்களோ என்ற பயமாக இருக்கலாம்.

வேறு பல காரணங்கள் பலருக்கு இருப்பினும், மேலே உள்ள மூன்றில் ஏதாவது ஒரு விசயத்தில் நம்மில் பலர் இருப்பது உண்மையே. மேலே உள்ள மூன்று கருத்தையும் மாற்றி வேறு வார்த்தையில் சுருக்கமாக இப்படியும் சொல்லலாம். எனக்கு மார்க்கத்தைப் பற்றி அதிகம் தெரியாததால், யாராவது ஆலிம், உலமா, தாயி போன்றவர்களைச் செய்ய வைத்து நாம் ஒதுங்கிக் கொண்டால் சமுதாயத்தில் நமக்கு இருக்கும் மதிப்பை (Maintaining the social status) தக்க வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் நம்மை வஹ்ஹாபி என்றோ நஜாத்காரன் என்றோ சொல்லி விடுவார்கள். வெளிப்படையாக நீங்கள் சொல்லாவிட்டாலும் இவை தான் மனோ ரீதியாக  காரணமாக இருக்கலாம்.  ஆக, மேலே படித்த மூன்று விசயமும் சரியா? தவறா? என்பதை அறிய மேலே படியுங்கள்.

முதலில் தாவா களம் என்றால் அது ஒரு அமைப்பின் மேடை. அல்லது பிரச்சார உத்தி. அல்லது செயல்பாட்டு முறைகள் என்று நாம் நினைக்கிறோம். தனி ஒரு ஆணோ பெண்ணோ, நமது நிகழ்கால வாழ்வுதான் தாவா என நினைத்து அதன்படி வாழ வேண்டும். இதுதான் தாவா களம்; பலர் சேர்ந்து உருவாக்கும் அமைப்பு அல்ல என்பதை உணர வேண்டும்.

நாம் சார்ந்திருக்கும் மஹல்லாவும், நாம் சார்ந்திருக்கும் பள்ளிவாசலும் தான் முன்னுரிமை கொடுக்கப்படவேண்டிய தாவா களங்கள் என்பதை உணர வேண்டும்.

இந்த வாசகங்கள் கேட்பதற்கு நன்றாய் உள்ளது. நடைமுறையில் பல்வேறு பிரச்சினைகளை நாம் எதிர் கொள்வதால் தாவாவுக்கு என தனிக்களம் அமைக்கின்றோம் என்று சிலர் சொல்லலாம். அது மேலோட்டமாக சரியாகவும் தெரியும். இங்கே எது சரி எது தவறு என விவாதிப்பது இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. ஆனால் கீழ்க்கண்ட குர்ஆன் கருத்தின்படி எப்படி தாவா செய்ய நாம் முயற்சிக்கலாம் என்பதையும் அப்படி தாவா செய்ய என்ன தடையாக உள்ளது என்பதையும் சுருக்கமாக இங்கே வைக்கின்றோம். படித்து விட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்.

(நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விளக்கிக் கொண்டும் இருக்கவும், இத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன் 3:104)

பள்ளி வாசலில் இமாம் பயான் சொல்வதைக் கேட்டால் போதும், மற்றபடி தொப்பி வைத்து, தாடி வைத்து, வெள்ளை டிரஸ் போட்டு, ஏதோ கொஞ்சம் மார்க்க விசயங்களைப் பின்பற்றி சமூகத்தில் பாய் எனும் அந்தஸ்தில் வாழ்வது சிறப்பு என நினைக்கின்றார்கள். இது சராசரி முஸ்லிமுடைய பொறுப்பற்றப் போக்காகும். கடமை தவறிய பாதையாகும். இப்படி இருந்தால் பார்ப்பதற்கு முசல்மானாக இருந்தாலும், இப்படிப்பட்ட சகோதரர்களின் வீட்டில் மனைவி மக்களைக் கூட இஸ்லாமிய அடிப்படையில் உருவாக்குவதில் தோல்வி அடையலாம்.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல் எனும் இரு நிலைப்பாடுகளை ஒரே சமயத்தில் நாம் பின்பற்றத் தவறினால், நமது முதல் தோல்வி நம் குடும்பத்தில் ஆரம்பிக்கும். இத்தகைய தோல்வியைத் தவிர்த்து, வாழ என்ன செய்ய வேண்டும் என நினைக்கின்றீர்களா? அப்படி என்றால் அடுத்த கருத்துக்கு வாருங்கள். ஆம் இப்பொழுது இந்த வசனங்களைப் படித்துவிட்டுத் தொடர்வோம். 103:1-3, 9:71 மற்றும் 9:112 ஆகிய ஆயத்துகளில் நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தும் தொழுகை, நோன்பு, ஜகாத்துப் பேணி செய்தல் மற்றும் அல்லாஹ்வுடைய வரம்புகளைப் பேணி நடப்பவர்கள் வெற்றியாளர்கள் என்ற பொருளில் அறிய முடியும். (நீங்களாக குர்ஆனைப் படித்து மேலும் அறிய முயலவும்.)

இனி அடுத்த கட்டத்துக்கு நகர்வோம். அதாவது கலிமாவை விளங்கி, ´ஷிர்க், பித்அத் எல்லாம் ஓரளவுக்கு விளங்கித் தவிர்த்து, முடிந்த வரைக்கும் நபி வழியில் வாழ்க்கைப் பயணம் ஆரம்பிக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது கூட கலப்படமில்லாத இந்த இஸ்லாமிய விசயங்களுக்கு நம்மனம் உள்ளுக்குள் நேசிக்கும் அமைப்பு சார்ந்த ஒரு மார்க்க அறிஞர் பயான் செய்தால் நல்லாயிருக்கும் என்று நினைக்கிறார்கள். நேரடியாக இந்த விசயத்துக்கு வருவோம். சிலர் ஜாக் ஆலிம்களை கூப்பிட்டுப் பயான் செய்யச் சொல்கிறார்கள். சிலர் ஜமாஅத்தே இஸ்லாமி ஆலிம்களைக் கூப்பிட்டு, பயான் செய்யச் சொல்கிறார்கள். சிலர் தவ்ஹீத் ஆலிம்களைக் கூப்பிட்டு பயான் சொல்லச் சொல்கிறார்கள்.

சரி யார் சொன்னால் என்ன? நல்லதை சொன்னால் எடுத்துக் கொள்வோம் இல்லை என்றால் விட்டு விடுவோம். அவ்வளவுதானே என்கிறீர்களா? ஆம்… இது சரியான பார்வை. ஆனால் மேடை ஏறும் தாங்கள் (ஆலிம்-அறிஞர் என்று சமுதாயத்தால் விளங்கப்படுபவர்) நாளுக்கு நாள் எப்படி பரிணாம வளர்ச்சி அடைகிறார்கள் என்றால், எப்படியாவது தமது கருத்தை நிலைநாட்ட வேண்டும். மாற்று அமைப்பினர் செய்வதை விட வேறு மாதிரி பேசிப் பணி செய்து மக்களைக் கவர வேண்டும் என்ற ரீதியில் போகிறார்கள். (Attract the people by using Islamic values) இதுதான் மீண்டும் மீண்டும் இந்த உம்மத் செய்யும் வரலாற்றுப் பிழைகள். அட கடந்த காலத்தில் மார்க்கம் தெரியாத காலத்தில்தான் ஆலிம் உலமாக்களை மதகுரு என நினைத்து மூளையை அடகு வைத்தது நம் முஸ்லிம் சமூகம். இப்பொழுது காட்சி மாற்றம் ஆனாலும் குரு தேவைப்படுகிறது. இது ஷைத்தானின் மாயவலை.

மார்க்கம் தெரிந்தவர்களோடு உரையாடுங்கள். மார்க்கம் தெரிந்தவர்களின் எழுத்துக்களைப் படியுங்கள். அவர்களின் உரைகளைச் செவிமடுங்கள். ஆனால் ஏன் அவர்களை மக்களில் சிறந்தவராகக் கருதுகிறார்கள்? இது பிழை என்பதை உணருங்கள்! மார்க்கம் தெரிந்தவர்களை மதிக்காதீர்கள் என்று நாம் சொல்லவில்லை! அவர்களை அவமரியாதை செய்யச் சொல்லவில்லை. ஆனால் மார்க்கத்தைச் சொல்வதை எப்பொழுது நாம் அடுத்தவரிடம் ஒப்படைகிறோமோ, அப்பொழுதே நாம் மார்க்கத்தை விட்டு விலக ஆரம்பிக்கின்றோம் என்பதை உணருங்கள். மற்றக் காரணங்களும் உள்ளன. அவற்றைப் பிறகு பேசுவோம்.

நிறைவாக ஒரு கேள்வியை இங்கே வைக்கின்றோம். நீங்கள் உங்கள் வாழ்நாளில் எந்த ஆலிம் உலமாவாவது இப்படி சொல்லக் கேட்டதுண்டா? அதாவது நான் சொல்லும் பயானையும் கேளுங்கள். மற்ற ஆலிம் உலமா சொல்வதையும் கேளுங்கள். எது சரியோ அதனை எடுத்துக் கொள்ளுங்கள். நான் சொன்னதில் ஏதுவும் தப்பு இருந்தால் என்னையும் திருத்த வாருங்கள். நாளை மறுமையில் கலிமா சொன்ன நாம் அனைவரும் வெற்றி பெற உதவுங்கள்… இந்த வாசகங்கள் எப்பொழுது நம் பள்ளிகளில் பயான்களாக ஒலிக்கும்?

பஷீர் அகமது, புதுக்கோட்டை.

Comments on this entry are closed.

Previous post:

Next post: