தலை கீழ் மாற்றம்!

in பொதுவானவை

இவ்வுலகப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றுவதால், அற்பமான இவ்வுலக சுகத்தைத் தான் இழக்க நேரிடும். ஆனால் மறு உலகப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றினால், அழியாத பெரு வாழ்வை, முடிவே இல்லாத பேரின்பத்தை அல்லவா இழக்க நேரிடும்! (அல்லாஹ் காப்பாற்றுவானாக)

இந்த உலகப் பிரச்சனைகளில் கவனக் குறைவாக இருந்து விட்டாலும், மறு உலகப் பிரச்சனைகளில் அல்லவா அதிக கவனம் இருக்க வேண்டும். ஆனால் நாமோ தலைகீழாக வன்றோ பிரச்சனையை மாற்றி விட்டோம்!

இவ்வுலகக் காரியங்களின் விளைவுகள் இவ்வுலகிலேயே உடனுக்குடன் தெரிந்து விடுவதால், தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு உண்டு. உதாரணமாக நாம் முன்னோர்களைப் பின்பற்றி மண்ணென்ணெய் விளக்கைப் பயன்படுத்திப் பார்க்கிறோம். அதில் அதிக சிரமமும், குறைந்த ஒளியும் உள்ளதால், உடனே மின்சாரத்திற்கு மாறிக் கொள்ள இயலும்! ஆனால் மறு உலக நன்மையை நாடி நாம் செய்கின்ற அமல்களின் விளைவுகள் இங்கே தெரியாது. மறுமையில் நம்மை எழுப்பி, விசாரணை செய்து, தீர்ப்பு வழங்கப் படும் போது தான் விளைவுகளைக் காண முடியும். திரும்பவும் இந்த உலகுக்கு வந்து, “நான் எனது செயல்களைத் திருத்தி கொண்டு வருகிறேன், என்று கேட்கவும் முடியாது, கேட்டாலும் அந்த வாய்ப்பு நமக்குத் தரப்படவும் மாட்டாது.

எனவே உலகக் காரியங்களை விடப் பல மடங்கு, மறு உலக நன்மைக்காகச் செய்கின்ற காரியங்களில் நாம் கவனமாக இருந்தாக வேண்டும். இந்த உலகப் பிரச்சனைகளில் குருட்டுத்தனமாக எவரையும் பின்பற்றிவிட்டாலும், மறு உலகப் பிரச்சனைகளில் அவ்வாறு பின்பற்றக் கூடாது என்பதை, நாம் உணர முடிகின்றது.

குஆன், ஹதீஸ் என்ற இரு பேரொளிகள் வெளிச்சத்தில் ஆராய்ந்து, சரியானவை என்று தெரிந்தால் மட்டுமே எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டும். மறுமையில் அல்லாஹ்வின் கடும் தண்டனையிலிருந்து தப்பிக்க இதைத் தவிர வேறுவழி கிடையாது.

முன்னோர்கள் யார்?

“பெரியார்கள், முன்னோர்கள்” என்ற வாதத்தில் உள்ள இன்னொரு போலித்தனத்தையுயம் நாம் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.

“முன்னோர்கள், பெரியார்கள்” என்று கூறுபவர்கள், முன்னோர்கள், பெரியார்கள் என்று குறிப்பிடுவது, நமக்கு 200,300 ஆண்டுகளுக்கு முன் வாழந்தவர்களைத்தான் முன்னோர், பெரியார் என்று நம்புகின்றனர். அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் பாடம் பெற்று, அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்ட “மிகச் சிறந்த சமுதாயம்” என்று நபி(ஸல்) அவர்களால் பாராட்டப் பெற்ற “ஸஹாபாக்கள்” இவர்கள் அகராதியில் முன்னோர்கள் அல்லர். மிகச் சிறந்த ஆட்சியை இந்த உலகுக்குத் தந்த “நாற்பெரும் கலீபாக்கள்” இவர்கள் அகராதியில் பெரியார்கள் அல்லர். ‘ஹஜ்ரத்’ என்று பெயர் பெற்ற சிலரும், ‘அப்பா’க்களும், ‘லெப்பை’மாரும் தான் இவர்கள் கண்ணோட்டத்தில் முன்னோர்கள்! 200,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களை “முன்னோர் பெரியோர்” என்று துதிப்பாடும் இவர்கள் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபி(ஸல்) அவர்களின் நல்லறத் தோழர்களை ‘முன்னோர். பெரியோர்’ என்று ஆதாரம் காட்டத் தயாராக இல்லை. காரணம், இது போன்ற “பித்அத்”களுக்கு ஸஹாபாக்களின் நடைமுறையில் இவர்களால் ஆதாரம் காட்டவே முடியாது.

அந்த நபித் தோழர்களிடையே கருத்து வேறுபாடு தோன்றி இருக்குமேயானால் எவரது கருத்து, குர்ஆன், ஹதீஸைத் தழுவி நிற்கின்றதோ அதனையே நாம் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளோம் என்று இருக்க 200, 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களைக் கண்மூடிப் பின்பற்றுவது எப்படி நியாயமாகும்?

இன்றோ, அந்த ஸஹாபாக்கள் முன்மாதிரியாகக் கொள்ளப்படவில்லை. அதற்கு அடுத்த காலத்தில் வாழ்ந்தவர்கள் கூட முன் மாதிரிகளாகக் கொள்ளப்படவில்லை, எந்தக் காலத்தில் மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றும், மோசடியும், மூட நம்பிக்கைகளும், போலிச் சடங்குகளும், பொய்யான கதைகளும் உருவாக்கப்பட்டனவோ, அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களை – இத்தனைக்கும் காரணகர்த்தர்களை – இவர்கள் பெரியார்கள் என்று முத்திரை குத்திக் கொண்டாடுகின்றனர், அவர்கள் வழியே, மார்க்கம் என்று எண்ணி ஏமாந்து கொண்டிருக்கின்றனர். இதுதான் மிகப் பெரும் வழிகேடாகும். இத்தகைய தவறான போக்கிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றட்டும்!

அந்நஜாத்: செப்டம்பர், 1986

Leave a Comment

Previous post:

Next post: