“என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள்” என்று நபி நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: மாலிக்குப்னுல் ஹுவைரிஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூற்கள்: புகாரி, முஸ்லிம்
பிற்காலத்தில் “தராவீஹ்” என்றழைக்கப்படும் ரமழான் இரவுத் தொழுகை
நபி நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவுத்தொழுகை விஷயமாக (மக்களுக்கு) வலியுறுத்திக் கட்டளையிடாமல், “ரமழானில் ஈமானோடும், நன்மைகிட்டும் என்ற நல்லாதரவோடும் நின்று வணக்கம் புரிவோரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்” என்று கூறி ஆர்வமூட்டிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் நபி صلى الله عليه وسلم அவர்கள் காலஞ்சென்று விட்டார்கள். பின்னர் அபூபக்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களின் ஆட்சி காலத்திலும், உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களின் ஆட்சிக் காலத்தின் ஆரம்ப கட்டத்திலும் நிலைமை இவ்வாறே நீடிதிருந்து வந்தது என்று இதன் அறிவிப்பாளரில் ஒருவரான இமாம் ஜுஹ்ரி அவர்கள் அறிவித்துள்ளார்கள். அறிவிப்பாளார்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூற்கள்: புகாரி, முஸ்லிம்
ரமழான் இரவுத்தொழுகை ஒரு சில தினங்கள் மட்டும் ஜமாஅத்தாக நடத்தப்பட்டதேன்?
ஒரு முறை நபி صلى الله عليه وسلم அவர்கள் நடுநிசியின் போது புறப்பட்டு பள்ளியில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர் அவர்களைப் பின்பற்றி தொழுதார்கள். காலையில் மக்கள் (இதுபற்றி) பேச ஆரம்பித்துவிடவே (மறுநாள்) அவர்களைவிட அதிகமானோர் கூடிவிட்டார்கள். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழ, அவர்களைப் பின்பற்றி (மக்களும்) தொழுதார்கள். காலையில் (முன்போல்) மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். மூன்றாம் நாள் இரவு பள்ளிக்கு வந்தவர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அன்றும் நபி صلى الله عليه وسلم அவர்கள் புறப்பட்டு வந்து, அவர்களின் தொழுகையைப் பின்பற்றி தொழப்பட்டது.
நான்காம் நாள் இரவு வந்த மக்களால் பள்ளி கொள்ளாத நிலை ஏற்பட்டுவிட்டது. அன்று நபி صلى الله عليه وسلم அவர்கள் சுப்ஹு தொழுகைக்குத்தான் வந்தார்கள். (இரவுத்தொழுகைக்கு வரவில்லை) சுப்ஹு தொழுகை தொழவைத்து முடித்தவுடன் (எப்போதும் சொற்பொழிவுக்குமுன் ஓதக்கூடிய) “தஷஹ்ஹுது, அம்மாபஃது” ஆகியவற்றை ஓதிவிட்டு மக்களை நோக்கி, உங்கள் நிலை எனக்கு மறையவில்லை, எனினும் நான் உங்கள் மீது இவ்விரவுத் தொழுகை கடமையாக்கப்பட்டு அவற்றை நீங்கள் தொழ இயலாது போய்விடுவீர்கள் என்பதைப் பயந்தே (நான் இரவு வெளியில் வராமல்) இருந்துவிட்டேன் என்று கூறினார்கள். இவ்வாறு ரமழானில் நிகழ்ந்தது. அறிவிப்பாளர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ , புகாரி
மேற்காணும் அறிவிப்புகளில் ரமழான் இரவுத்தொழுகையில் மகத்தான பலன்கள் அறிவிக்கப்பட்டிருப்பதுடன், நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் ஒரு சில தினங்கள் மட்டுமே ரமழானுடைய இரவுகளில் இத்தொழுகை ஜமாத்துடன் நடத்தப்பட்டுள்ளது என்பதை அறிகிறோம்.
நபிصلى الله عليه وسلم அவர்கள் இரவுத்தொழுகை 11ரகஅத்துகள்.
அபூலைமத்திப்னு அப்திர்ரஹ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் ஒருமுறை ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களிடம் ரமழானில் நபி صلى الله عليه وسلم அவர்களின் இரவுத்தொழுகை எவ்வாறிருந்தது? என்று கேட்டதற்கு “ரமழானிலும் அது அல்லாத மற்ற காலங்களிலும் 11 ரகஅத்துகளைவிட அதிகமாக அறவே தொழுததில்லை” என்று கூறிவிட்டு (முதலில்) 4 ரகாஅத்துகள் தொழுதார்கள்; அவற்றின் அழகையும், நீளத்தையும் கேட்காதீர். (என்னால் அதனழகை எடுத்தியம்ப இயலாது) பிறகு 4 ரகஅத்துகள் தொழுதார்கள். அவற்றின் அழகையும், நீளத்தையும் கேட்காதீர். பிறகு 3 ரகஅத்துகள் தொழுதார்கள். அறிவிப்பவர்: அபூலைமத்துப்னு அப்திர்ரஹ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ , புகாரி
நபி صلى الله عليه وسلم அவர்கள் 8+3=11 என்ற அமைப்பில்தான் தொழவைத்துள்ளார்கள்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் எங்களுக்கு ரமழானில் ஓரிரவு 8 ரகஅத்துகளும், வித்ரும் தொழவைத்தார்கள். மறுநாள் நாங்கள் அவர்களின் வருகையை எதிர்பார்த்து பள்ளியில் கூடியிருந்தோம். அவர்கள் அதிகாலை வரை பள்ளிக்கு வரவில்லை. பிறகு நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் புறப்பட்டு வந்து எங்களுக்கு தொழுகை நடத்துவீர்கள் என்று மிக்க ஆவலோடிருந்தோம் என்று கூறினோம். அதற்கு அவர்கள் இந்த (உபரியான) வித்ரு தொழுகை உங்கள்மீது கடமையாக்கப்பட்டு விடும் என்பதைப் பயந்து (இருந்து)விட்டேன் என்றார்கள். அறிவிப்பாளர்: ஜாபிருபின் அப்தில்லாஹ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: இப்னுகுஜைமா
ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களிடம் நபி صلى الله عليه وسلم அவர்களின் இரவுத்தொழுகை ரமழானில் எவ்வாறிருந்தது என்று வினவப்பட்டபோது “ரமழானிலும் அது அல்லாத காலங்களிலும் 11 ரகஅத்துகளுக்கு அதிகமாக அவர்கள் தொழுததில்லை” என்று அவர்கள் பதில் அளித்திருப்பதன் மூலம், ரமழானுக்கென்று அவர்கள் விசேஷமாக எதுவும் தொழாமல், வழக்கமாக தினசரி தினசரி 8+3=11 ரகஅத்துகள் மட்டுமே அவர்கள் தொழுதுள்ளார்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
ரமழான் இரவுத்தொழுகை 11ரகஅத்துகள் என்பதற்கு நபி صلى الله عليه وسلم அவர்களின் அங்கீகாரம்.
ஒருமுறை உபையுப்னுகஃபு رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! ரமாழான் இரவில் நான் ஒரு காரியம் செய்துவிட்டேன் என்றார். அதற்கு அவர்கள் உபையு அவர்களே! அது என்ன? என்றார்கள். அப்போது அவர் என் வீட்டிலுள்ள பெண்கள் நாங்கள் குர்ஆன் (அதிகமாக) ஓத இயலாதவர்கள் ஆகையால் உமது தொழுகையை பின்பற்றி நாங்களும் தொழுது கொள்கிறோம் என்றார்கள். ஆகவே நான் அவர்களுக்கு 8 ரகஅத்துகள் தொழ வைத்துவிட்டு பிறகு வித்ரும் தொழவைத்தேன் என்றார். அதற்கு அவர்கள் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார்கள். ஆகவே அவர்களின் அந்த மெளனமானது அவர்களின் அங்கீகாரம் என்ற வகையில் சுன்னத்தாகி விட்டது. அறிவிப்பாளர்: ஜாபிருபின் அப்தில்லாஹ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூற்கள்: அபூயஃலா, தப்ரானீ
உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் ரமழானுடைய இத்தொழுகை தினசரி ஜமாஅத்துடன் நடைபெற ஏற்பாடு செய்தல்.
நான் ரமழானில் ஓரிரவு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுடன் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றேன் அப்போது மக்கள் பல்வேறு குழுவினராக இருந்து கொண்டிருந்தார்கள். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். மற்றும் சிலர் தொழுக, அவர்களைப் பின்பற்றி பலரும் தொழுது கொண்டிருந்தார்கள். அது சமயம் உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் இம்மக்கள் அனவைரையும் ஒரே இமாமுக்குப்பின் தொழும்படி செய்தால் மிகவும் சிறப்பாயிருக்கும் என்று தாம் முடிவு செய்து, உபையின்கஃபு رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்குப் பின்னால் அவர்கள் அனவைரையும் ஒன்று சேர்த்தார்கள்.
பிறகு மற்றொரு இரவு அவர்களுடன் புறப்பட்டு வந்தேன். மக்கள் அனைவரும் ஒரே இமாமைப் பின்பற்றி தொழுவதைக் கண்டு, “புதிய இவ்வேற்பாடு மிகச்சிறப்பாயுள்ளது” என்று அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் இரவின் பிற்பகுதியின் சிறப்பை மனதில் கொண்டவர்களாக, “இவர்கள் நின்று தொழுதுகொண்டிருக்கும் இந்நேரத்தைவிட, இவர்கள் (தொழுதுவிட்டு) உறங்கும் அந்நேரமே (தொழுவதற்கு) மேலானதாகும் என்று கூறினார்கள். அப்போது மக்கள் முன்நேரத்தில் தொழுது கொண்டிருந்தனர். அறிவிப்பாளர்: அப்துர்ரஹ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ , புகாரி
மற்றொரு அறிவிப்பில் உபையுபின் கஃபு رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களையும், தமீமுமுத்தாரீ رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களையும், உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் 11 ரகஅத்துகள் தொழவைக்கும்படி கட்டளையிட்டார்கள் என்று உள்ளது. அறிவிப்பாளர்: ஸாயிபுபின்யஜீத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஅத்தா மாலிக்
இத்தொழுகையை இரவின் அனைத்துப் பகுதியிலும் தொழுதல்.
நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் நோன்பு நோற்றோம். ரமழானில் 7 நாட்கள் மீதம்மிருக்கும் வரை (22நாட்கள்) எங்களுக்கு அவர்கள் தொழவைக்கவில்லை. அதற்குப்பிறகு (23வதுநாள்) இரவில் மூன்றில் ஒரு பகுதிவரை ((சுமார்10மணி) எங்களுக்கு தொழவைத்தார்கள்.
பிறகு 24வது நாள் இரவில் பாதிவரை (சுமார்12) தொழவைத்தார்கள். பிறகு ரமழானில் மூன்றுநாள் மீதமிருக்கும்வரை அவர்கள் தொழவைக்கவில்லை. 27வதுநாள் ஸஹர் உணவு தவறிவிடும் என்று நாங்கள் அஞ்சும் வரை (சுமார் 4மணி) எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். இத்தொழுகைக்கு தமது மனைவிமார்களையும், குடும்பத்தாரையும் அழைத்துக்கொண்டார்கள். அறிவிப்பாளர்: அபூதர்ரு رَضِيَ اللَّهُ عَنْهُ ,திர்மிதீ (ஹதீஸ் சுருக்கம்)
மேற்காணும் அறிவிப்பில் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒரே தொழுகையைத்தான் பல நேரங்களில் தொழுதுள்ளார்கள். இதை உற்று நோக்கும்போது இஷா தொழுகைக்குப்பின் ஸஹர் நேரம் முடிய சுப்ஹு நேரம் வருவதற்கு முன்னால் வரை தொழப்படும் தொழுகைதான் அது என்பது புலனாகிறது.
இதற்கு ஹதீஸ்களில் கியாமுல்லைல் – இரவுத்தொழுகை, தஹஜ்ஜுத், வித்ரு என்ற பல பெயர்கள் காணப்படுகின்றன. “தராவீஹ் தொழுகை” என்ற பெயரோ, பிற்காலத்தில் ரமழானுடைய மாதத்தில் இரவின் முற்பகுதியில் தாமாக அதிகப்படுத்தி தொழப்படும் 20ரகஅத் இரவுத் தொழுகைக்கு மக்கள் சூட்டிக்கொண்ட பெயராகும்.
“வித்ரு’ என்பதும் இரவுத் தொழுகைக்குரிய பெயர்களில் ஒன்றுதான்
நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவின் முற்பகுதி, நடுப்பகுதி, பிற்பகுதி ஆகியவற்றில் ஸஹர் நேரம் வரை (பஜ்ருக்கு முன்பு) வித்ரு தொழுதுள்ளாகள். அறிவிப்பாளர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ , புகாரி, முஸ்லிம்
மேலும் ஜாபிருபின் அப்தில்லாஹ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களின் வாயிலாக “இப்னுகுஜைமா”வில் பதிவாகியுள்ள இதே தொடரில் மேற்காணும் அறிவிப்பில் “நீங்கள் புறப்பட்டு வந்து எங்களுக்கு தொழுகை நடத்துவீர்கள் என்று நாங்கள் மிக்க ஆவலோடிருந்தோம் என்று கூறினோம். அதற்கு அவர்கள் இந்த “வித்ரு தொழுகை” உங்கள்மீது கடமையாக்கப்பட்டு விடும் என்பதை பயந்து இருந்துவிட்டேன் என்றார்கள்” என்ற வாசகமே நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவுத் தொழுகைக்கு “வித்ரு” என்று கூறியிருப்பதானது “வித்ரு” என்பதும் இரவுத் தொழுகைக்குரிய மற்றொரு பெயர்தான் என்பதை உர்ஜிதம் செய்கிறது. எனவே ரமழான் இரவின் முற்பகுதியில் இரவின் பிற்பகுதியில் தொழுவதும் நபிவழியாக இருப்பதோடு மிகவும் சிறப்புக்குரியதாகவும் இருக்கிறது.
Comments on this entry are closed.