“என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: மாலிக்குப்னுல் ஹுவைரிஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூற்கள்: புகாரி, முஸ்லிம்
நபி صلى الله عليه وسلم அவர்களின் தொழுகை முறையை நாம் தெரிந்து கொள்வதற்குமுன் , ஒளு செய்யும் முறை, எந்தத் தண்ணீரை ஒளு செய்வதற்கு பயன்படுத்தலாம் என்ற விளக்கம், மலஜலம் கழிக்கும் முறை அதிலிருந்து சுத்தம் செய்யும் முறை, ஒளுவை முறித்துவிடக்கூடிய செயல்கள், மாதவிடாய், பிரசவத்தின் பின் ஏற்படும் உதிரப்போக்கு, குளிப்பு போன்ற பல சட்டங்களை நாம் விளங்கக் கடமைப்பட்டுள்ளோம்.
தண்ணீரின் சட்டங்கள்
மழை நீர்
அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காக அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான். (அல்குர்ஆன் 8:11)
நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கின்றோம். (அல்குர்ஆன் 25:48)
மேற்கூறிய இரண்டு வசனங்களும் மழைநீர் தூய்மையானது, அதன் மூலம் நம்மை தூய்மைப்படுத்திக் கொள்ளலாம் என்று தெளிவு படுத்துகின்றன. ஆறு, குளம், ஏரிகளில் உள்ள தண்ணீர் மழையினால் கிடைத்தது என்பதால் அவையும் தூய்மையானது என்பது தெளிவு.
கடல் நீர்
“கடல் நீரில் நாங்கள் ஒளு செய்யலாமா?” என்று நபித்தோழர்கள் கேட்டபோது “அதன் தண்ணீர் தூய்மையானது (கடல் பிராணிகளில்) தானே செத்தவைகளும் ஹலாலாகும்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா
கடல் நீரில் ஒளு செய்யலாம் என்பதற்கு இது போதிய சான்றாகும்.
கிணற்று நீர்
“நபி صلى الله عليه وسلم அவர்கள் ‘ஜம் ஜம்’ கிணற்று நீரைக் கொண்டுவரச் செய்து குடித்தார்கள். அதில் ஒளுவும் செய்தார்கள். அறிவிப்பவர்: அலி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அஹ்மத்
இந்த நபிவழி மூலம் கிணற்று நீர், ஊற்று நீர் ஆகியவைகளால் ஒளு செய்யலாம்.
உறைபணி, ஆலங்கட்டி
வானிலிருந்து ஐஸ் கட்டிகளாக விழும் ஆலங்கட்டியினாலும், உறைபனிக் கட்டிகளாலும் ஒளு செய்யலாம் என்பதை பின்வரும் நபிமொழி தெளிவாகிறது.
இறைவா! என் தவறுகளைத் தண்ணீராலும், ஆலங்கட்டியினாலும், பனிக்கட்டியினாலும் நீ கழுவிடு! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் பிரார்த்தித்துள்ளார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜ்ஜா
சுத்தமான பொருள்கள் கலந்துவிட்ட தண்ணீர்
நபி صلى الله عليه وسلم அவர்களின் மகளார் ஜைனபு رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் இறப்பெய்தியபோது, எங்களிடம் அவர்கள் வந்து ‘மூன்று முரை அல்லது ஐந்துமுறை கழுவுங்கள், அல்லது அதைவிட (தேவைப்பட்டால்) தண்ணீரில் இலந்தை இலைக்கொண்டு கழுவுங்கள். கடைசி முறையில் கற்பூரத்தில் அல்லது கற்பூரத்தில் சிறிதளவு அதில் சேர்த்துக்கொள்ளுங்கள்’ எனக்கூறினார்கள். அறிவிப்பவர்: உம்முஅதிய்யா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: ஜமாஅத்
நிச்சயமாக நபி صلى الله عليه وسلم அவர்களும், மைமுனா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களும் குழைத்த மாவின் சுவடு இருந்த ஒரு பாத்திரத்தில் குளித்தனர். அறிவிப்பவர்: உம்முஹானீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், நஸயீ, இப்னுகுஜைமா
ஆகவே தண்ணீரில் சுத்தமான பொருட்கள் கலந்துவிடுவதால் அத்தண்ணீர் சுத்தமானதாகவே இருக்கும்
தொழுகையின் அவசியம்
இஸ்லாமிய மார்க்கம் ஐந்து காரியங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. அவை: வணக்கத்திற்குறியவன் இறைவன் ஒருவனைத் தவிர எவருமில்லை. முகம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் இறைவனின் அடியாரும் தூதருமாவார்கள் என உறுதியாக நம்புவதும், தொழுகையை நிலை நாட்டுவதும், நோன்பு நோற்பதும், ஜகாத் கொடுப்பதும், சக்தி பெற்றவர்கள் ஹஜ் செய்வதுமாகும் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
“தொழுகையை நிலை நிறுத்துங்கள்” (அல்குர்ஆன் 30:31)
“நிச்சயமாக தொழுகை மூஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக விதிக்கப்பட்டுள்ளது” (அல்குர்ஆன் 4:103)
“நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டுத் தடுக்கிறது” (அல்குர்ஆன் 107:45)
“மறுமையில் முதல் விசாரணை தொழுகையைக் குறித்துத்தான் இருக்கும்” என நபி صلى الله عليه وسلم கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்
ஏழு வயதானதும் குழந்தைகளுக்கு தொழ கற்றுக்கொடுக்க வேண்டும்
குழந்தைகள் ஏழு வயதை அடையும்போது தொழும்படி ஏவுங்கள் பத்து வயதை எய்தி விட்டால் அடித்தாவது தொழச் சொல்லுங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஐப் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்
ஏழு வயதையடைந்து விட்டால் குழந்தைக்கு தொழுகையை கற்றுக் கொடுங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸப்ரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத், தாரமி, தாரகுத்னீ
நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது மரண வேளையில் கூடத் தொழுகையைப் பேணுங்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: இப்னுமாஜ்ஜா
தொழாதவர் காஃபிராகி விட்டார்
(அல்லாஹ்வின்) அடியானுக்கும் இணைவைத்தல் குஃப்ர் இவற்றிற்கும் இடையிலுள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதில் உள்ளது என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்
தமக்கும், அவர்களுக்கும் (காஃபிர்களுக்கும்) உடன்படிக்கை தொழுகையாகும். யார் அதை விட்டு விடுவாரோ அவர் காஃபிராகி விட்டார் என நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதாرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதீ, அபூதாவூத்
இத்தகைய முக்கயத்துவம் வாய்ந்த தொழுகையை நிறைவேற்றாமல் அக்கறையின்றி இருக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு தொழுகையின் அவசியத்தை எடுத்துச்சொல்ல வேண்டியது நம்மீது கடமையாகும்.
தொழுகையை முஸ்லிம்கள் பலவாறாகத் தொழுகின்றனர். அவர்கள் தொழும் முறை சரிதானா என்பதை அறியாமலேயே தொழுகின்றார்கள். தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமாயின், அத்தொழுகை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தொழுதது போன்றுதான் அமைய வேண்டும். ஏனெனில்,
“என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி,
உளூவின் அவசியம்
உளூ என்றால் குறிப்பிட்ட சில உறுப்புகளைக் கழுவி தூய்மைப்படுத்துவதாகும்.
“மூஃமின்களே! நீங்கள் தொழச் செல்லும் போது உங்கள் முகங்களையும், முழங்கை வரை இரு கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் தலைக்கு மஸஹ் செய்யுங்கள். இன்னும் உங்கள் கால்களை கரண்டை வரை கழுவிக் கொள்ளுங்கள்” என இறைவன் கட்டளையிடுகிறான். (அல்குர்ஆன் 5:6)
“உளூ நீங்கி விட்டால் மீன்டும் உளூச் செய்யாமல் தொழும் தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُநூல்: முஸ்லிம்
உளூச் செய்யும் முன் நிய்யத் எனும் எண்ணம் வேண்டும்
நிய்யத் எனும் எண்ணமின்றி கழுவப்படவேண்டிய உறுப்புகளைக் கழுவினாலும், உடல் நனையும்படி குளித்தாலும் கூட அது உளுவாகாது. ஏனெனில், “நிச்சயமாக இறைவன் உங்கள் உடல்களையோ, உடமைகளையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையே பார்க்கிறான்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவ்விப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்
நிய்யத் வாயால் மொழிவது இல்லை. வாயால் மொழியும்படி நபி صلى الله عليه وسلم அவர்களும் கற்றுத்தரவில்லை
பிஸ்மில்லாஹ் கூறித் உளூச் செய்யத் துவங்குதல்
بســـم الله நூல்கள்: அபூதாவூத்,இப்னு மாஜ்ஜா, அஹ்மத்.
உளூவை வலப்புறத்திலிருந்து ஆரம்பித்தல்
நீங்கள் உளூச் செய்தால் வலப்புறமிருந்து துவங்குங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதி, இப்னுமாஜ்ஜா
கைககளை மணிக்கட்டு வரை கழுவுதல்
நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்யும்போது தமது இரு கைகளையும் மணிக்கட்டுவரை கழுவினார்கள். அவ்ஸ் பின் அவ்ஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், நஸயீ
பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து உளூச் செய்வோர் முதலில் இரு கைகளையும் கழுவிய பின்பே அப்பாத்திரத்தில் கையை விடவேண்டும்.
“உங்களில் ஒருவர் தூங்கி எழுந்தால் கையை மூன்று முறை கழுவதற்கு முன் தனது கையைப் பாத்திரத்தில் விடக்கூடாது” என صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
பாத்திரத்திலிருந்து ஒளூச் செய்தால்
உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் தண்ணீர் கொண்டு வரச்செய்து (பாத்திரத்திலிருந்து) ஊற்றி மூன்று முறை மணிக்கட்டு வரை கழுவினார்கள். பிறகு தனது வலது கையை பாத்திரத்தில் நுழைத்து வாய் கொப்பளித்தார்கள். நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள். பிறகு மூன்றுமுறை முகத்தைக் கழுவினார்கள். இரண்டு கைகளாலும் மூன்றுமுறை முழங்கை வரை கழுவினார்கள். பின்பு தலைக்கு மஸஹு செய்தார்கள். பின்பு இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்றுமுறை கழுவினார்கள். பிறகு நபி صلى الله عليه وسلم அவர்கள் இப்படித்தான் ஒளூச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன் என்றார்கள். அறிவிப்பவர்: உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
பல் துலக்குதல், வாய் கொப்புளித்தல், மூக்கைச் சுத்தம் செய்தல்
உளூச் செய்யும்போது பல் துலக்குவதை நபி صلى الله عليه وسلم அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
“என சமுதாயத்திற்குச் சிரமாகி விடும் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குவதை கட்டாயமாக்கி இருப்பேன்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத், அஹ்மத்
நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்தபோது வாய் கொப்பளித்து மூக்கிற்கு (வலது கையால்) தண்ணீரை செலுத்தி இடது கையால் சிந்தினார்கள். அறிவிப்பவர்: அப்துல் கைர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
முகம், கைகளை கழுவுதல்
நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்யும்போது மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கைகளால் (தண்ணீர்) எடுத்து, தமது இரு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
தலைக்கும், காதுக்கும் மஸஹ் செய்யும் முறை
நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது இரண்டு கைகளையும் தலையின் முன்பாகத்தில் வைத்து பிடரி வரை தடவி, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கைகளைக் கொண்டு வந்தார்கள். அப்துல்லாஹ் பின் ஸைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத்,, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்
உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் உளூச் செய்தபோது தண்ணீரில் கையை நுழைத்து தண்ணீர் எடுத்து தலைக்கும், காதுக்கும் மஸஹ் செய்தார்கள். மேலும் இப்படித்தான் நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்தார்கள் என்றும் கூறினார்கள். இப்னு அபீ முலைக்கா நூல்: அபூதாவூத்
அலி رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் ஒளுச் செய்யும்போது இரண்டு கைகளையும் மூன்முறை கழுகி, முகத்திஅயும் மூன்றுமுறை கழுகி தலைக்கு ஒரே ஒரு தடவை மட்டும் மஸஹு செய்தார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் இப்னு அபீலைலா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அபூதாவூது
மஸஹ் என்பது ஈரக்கையால் தலையையும் காதுகளையும் தடவுவதாகும் மஸஹ் ஒருமுறை செய்யவேண்டும். சிலர் பிடரியில் மஸஹ் செய்கின்றனர். இதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை.
கால்களை கழுவுதல், குதிகால்களையும் சரியாக கழுவுதல்
உளூவின் இறுதிச் செயலாக கால்களைக் கரண்டை வரை கழுவவேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் கால்களைக் கரண்டைவரை மூன்று முறை கழுவினார்கள். உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத்
கால்களை கழுவும்போது கவனமாகக் கழுவவேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் “குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம்தான்” என்று கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
உளூவை வரம்பு மீறிச் அதிகமாக செய்யலாகாது
நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்யும்போது ஒவ்வொரு தடவை கழுவினார்கள். இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, திர்மிதி, நஸயீ, அபூதாவூத்,, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்
நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டிரண்டு தடவைகள் கழுவி உளூச் செய்துள்ளார்கள். அப்துல்லாஹ் பின் ஸைது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, அஹ்மத்
நபி صلى الله عليه وسلم அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து உளூச் செய்வது பற்றிக் கேட்டார். நபி صلى الله عليه وسلم அவர்கள் மும்மூன்று தடவை கழுவி உளூச் செய்து காட்டிவிட்டு, இதுதான் உளூச் செய்யும் விதமாகும். யார் இதைவிட அதிகப்படுத்துகிறாரோ அவர் வரம்பு மீறி விட்டார்; தீங்கிழைத்து விட்டார்; அநியாயம் செய்து விட்டார்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ரு பின் ஷுஐபு رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், நஸயீ, இப்னுமாஜ்ஜா
காலுறைகள் மீது மஸஹ் செய்தல்
ஒருவர் உளூச் செய்து விட்டு காலுறை அணிந்து பிறகு உளூ முறிந்து விட்டால் திரும்ப உளூச் செய்யும்போது அவர் காலுறையைக் கழற்ற வேண்டிய அவசியமில்லை. காலைக் கழுவவேண்டிய நேரத்தில் காலுறையின் மேல் பகுதியில் மட்டும் மஸஹ் செய்தால் போதுமானது. கடமையான குளிப்பின்போது மட்டும் கட்டாயம் கழற்ற வேண்டும்.
நான் ஒரு பிரயாணத்தின்போது நபி صلى الله عليه وسلم அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (உளூச் செய்யும்போது) அவர்களது இரு கால் உறைகளையும் நான் கழற்றுவதற்குக் குனிந்தேன். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் அதை விட்டுவிடும்; கால்கள் இரண்டும் சுத்தமாக இருக்கும்போதுதான் உறைகளை அணிந்தேன் என்று கூறிவிட்டு அவ்விரு கால் உறைகளின் மீது மஸஹ் செய்தார்கள். அறிவிப்பவர்: முகீரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நாங்கள் பிரயாணத்தில் இருந்தபோது “ஜனாபத் தவிர மலஜலம், தூக்கம் போன்றவற்றிற்காக காலுறையை மூன்று பகல், மூன்று இரவுகள் கழற்றவேண்டிய அவசியமில்லை” என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு அஸ்ஸாவ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதி, திர்மிதி, இப்னுமாஜ்ஜா, இப்னுகுஸைமா
உளூச் செய்தபின் கூறவேண்டியவை
أَشْهَدُ أَنْ لاَّ إلَهَ إِلَهَ إِلاَّالله وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًاعَبْدُهُ وَرَسُولُهُ
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹு லாஷரீகலஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்று கூறினால் சுவனத்தின் எட்டு வாயில்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம்
பொருள்: வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவருமில்லை; அவன் ஏகன்; அவனுக்கு நிகராக எவருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். முஹம்மத் صلى الله عليه وسلم அவர்கள் அவனது அடியாராகவும் தூதராகவும் உள்ளார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
கடமையான குளிப்பு
தொழுகைக்கு உளூ எந்த அளவிற்கு அவசியமோ அந்த அளவிற்கு குளிப்பு கடமையானவர் குளிப்பது அவசியம். உடலுறவின் மூலமோ அல்லது உறக்கத்திலோ அல்லது விழிப்பிலோ ஆணுக்கோ பெண்ணுக்கோ விந்து வெளிப்பட்டால் குளித்தேயாக வேண்டும். குளிக்காமல் தொழக்கூடாது.
ஸ்கலிதம் ஏற்பட்டால்
“இச்சை நீர் வெளிப்பட்டால் உளூச் செய்ய வேண்டும். விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்க்ள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அலீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், தாரமீ
“ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் குளிப்பது அவசியமா?” என்று உம்மு கலைம் (ரலி), நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டபோது “ஆம்” என்று பதிலளித்தார்கள்” அறிவிப்பவர்: உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
மாதவிடாய் ஏற்படுதல்
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்கள் தொழவோ, நோன்பு நோற்கவோ, உடலுறவு கொள்ளவோ கூடாது. மாதவிடாய் நின்ற பிறகு குளித்து தூய்மையானதும் தொழலாம் நோன்பு நோற்கலாம்.
“மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டுவிடு. மாதவிடாய் நின்ற பின்பு குளித்து விட்டுத் தொழுதுகொள்!” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
மாதவிடாய் காலங்களில் விடுபட்ட தொழுகைகளைத் திருப்பித் தொழ வேண்டியதில்லை
“எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது தொழுகை, நோன்பு ஆகியவைகளை விட்டு விடுமாறும், மாதவிடாய் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்குமாறும் விடுபட்ட தொழுகைகளைத் தொழ வேண்டியதில்லை என்றும் நபி صلى الله عليه وسلم அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
பிரசவ இரத்தம் வெளிப்படுதல்
பிரசவ இரத்தப் போக்கு சம்பந்தமாக நேரடியாக ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் கூட மாதவிடாய் இரத்தப் போக்குக்கு என்ன சட்டமோ அதே சட்டம் தான் இதற்கும் பொருந்தும்.
தொடர் இரத்தப் போக்கு ஏற்பட்டால்
பெண்களில் சிலர் மாதவிடாயின் போது மட்டுமின்றி எப்போதும் இரத்தப் போக்கு உள்ளவர்களாக இருப்பர். இது ஒரு வகை நோய். இதன் காரணமாக தொழுகையையும் இதர வணக்கங்களையும் விட்டுவிடக் கூடாது!. அவர்களின் வழமையான மாதவிடாய் நாட்கள் முடிந்து குளித்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியால் கட்டிக்கொண்டு ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச்செய்து தொழ வேண்டும்.
ஃபாத்திமா பிந்த் அபீஹுபைஷ் (ரலி) என்ற பெண்மனி நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து “நான் இரத்தப் போக்குடையவளாக இருக்கிறேன், தூய்மையாவதே இல்லை. எனவே தொழுகையை நான் விட்டு விடலாமா?” எனக் கேட்டார். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் “உனது மாதவிடாய் நாட்களில் மட்டும் தொழுகையை விட்டுவிட்டு, குளித்து தொழுவாயாக! இரத்தம் தொடர்ந்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை!” என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ
நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் ஒரு பெண் இரத்தப் போக்கு நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அவர்களுக்காக நபி صلى الله عليه وسلم அவர்களிடம் நான் சட்ட விளக்கம் கேட்டபோது, இந்த நோய் வருவதற்கு முன் அந்த பெண்ணுக்கு வழக்கமாக மாதவிடாய் வந்து கொண்டிருந்த நாட்களைக் கழித்து அந்த நாட்கள் முடிந்ததும் குளித்துவிட்டுத் துணியால் இறுகக் கட்டிக்கொண்டு அவள் தொழவேண்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல் நஸயீ
அபூதாவூதின் அறிவிப்பில் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்துகொள்! என்று காணப்படுகின்றது.
குளிக்கும் முறை
கடமையான குளிப்பை நிறைவேற்று முன் மர்மஸ்தானத்தைக் கழுவி உளூச் செய்து கொள்ள வேண்டும். உடல் முழுவதும் தண்ணீர் பட்டு நனையுமாறு குளிக்க வேண்டும். குளித்தபின் தொழ வேண்டியிருந்தால் மறுபடியும் உளூச் செய்ய வேண்டியதில்லை. குளிக்கும் போது செய்த உளூவே போதுமானது.
நபி صلى الله عليه وسلم அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தம் இரு கைகளையும் கழுவிவிட்டு தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது கைகளின் மீது (சிறிதளவு தண்ணீர்) ஊற்றி இரண்டு, மூன்று முறை கழுவினார்கள். பின்பு வலக்கரத்தால் சிறிதளவு தண்ணீரை இடக்கரத்தில் ஊற்றி மர்ம ஸ்தானத்தைக் கழுவினார்கள். பின் தம் கைகளைத் தரையில் தேய்த்தார்கள். பின்பு வாய்க் கொப்பளித்து, மூக்கையும் சுத்தம் செய்து முகத்தைக் கழுவினார்கள். இரு கைகளையும் கழுவினார்கள். பின்னர் தலையை மூன்று முறை கழுவி விட்டு தமது மேனியில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள். பின்பு சற்று விலகி நின்று தம் கால்களைக் கழுவிக் கொண்டார்கள். அறிவிப்பவர்: மைமூனா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
நபி صلى الله عليه وسلم அவர்கள் குளித்தபின் உளூச் செய்ய மாட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், திர்மிதீ
பெண்கள் சடை போட்டிருந்தால்
சடை போட்டுள்ள பெண்கள் கடமையான குளிப்பைக் குளிக்கும் போது சடையை அவிழ்த்து விட வேண்டிய அவசியமில்லை.
“இறைத்தூதரே! நான் எனது தலை முடியை சடை பின்னிக்கொண்டு இருக்கிறேன்! கடமையான குளிப்புக்காக அதனை அவிழ்த்துத்தான் விட வேண்டுமா?” என நான் கேட்டேன். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் “வேண்டியதில்லை, உனது தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றிக் கொள்” என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், திர்மிதீ
Comments on this entry are closed.