ஜன்னத்தும் ஜாஹிலிய்யத்தும்

in இஸ்லாம்

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُم

நான் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை இன்றைய தினம் பரிபூரணமாக்கி விட்டேன். (5:3)

என்று அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவினால் இறக்கப்பட்ட இந்த வசனத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டாலும் அவ்வசனம் கூறும் மகத்தான செய்தியை மறப்பவர்களாகவும் மறைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். ‘மார்க்கத்தை பூரணப்படுத்தி விட்டேன்’ எனும் இந்த வார்த்தை அல்லாஹ்வின் வல்லமையுடன் தொடர்புபட்ட ஒரு விடயமாகும். ஏனென்றால் மகா கருணையுடைவனான அவன் எந்த வித சந்தேகமுமற்ற வெள்ளை வெளேர் என்ற நிலையில் ஒரு உத்தம தூதரின் மூலம் தெளிவாக இன்னும் சொல்லப்போனால் எமக்கு தேவையான அனைத்து விடயங்களையும் ஒன்று திரட்டி யாராலும் குறை காண முடியாத நிலையில் அனைவராலும் எந்தவித சிரமுமின்றி செயல்படுத்தக் கூடியதாக இந்த இஸ்லாம் மார்க்கத்தை அவன் எமக்களித்ததோடு மட்டுமல்ல அதை உலகம் அழியும் வரை அவனே பாதுகாப்பதாக வாக்களித்துள்ளான்.

நாங்கள் பரிபூரணமாக ஈமான் கொண்டுள்ள இந்த அல்லாஹ்வினால் பூரணப்படுத்தி வைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட ‘இஸ்லாம்’ மார்க்கத்தை ஏற்றுக்கொள்வதில் ஏன் இத்தனை பிரச்னைகள், பிரிவுகள், கருத்து முரன்பாடுகள். நபி(ஸல்) அவர்களுக்கே வஹியைத் தவிர தன் சொந்த யூகத்தை பினபற்றுவதற்கோ பிறருக்கு ஏவுவதற்கோ முடியாது என்று இருக்கும்போது அதை மார்க்கமாக்குவதற்கு முடியாத போது, இந்த உலகத்திலுள்ள எந்த நாட்டுக்கு அல்லது எந்த கல்வி நிறுவனத்துக்கு அல்லது எந்த அறிஞருக்கு அல்லது எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ மார்க்கத்தில் உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்வதை அல்லது பிறருக்கு எத்தி வைப்பதைத் தவிர என்ன அதிகாரம் இருக்கிறது? அல்லது தங்களை வேறுபடுத்தி காட்டிக்கொள்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

இறைவனால் முழுமைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு அதற்கு எந்த வித கூடுதல், குறைத்தல் தேவையற்ற நிலையில் அதில் இருப்பதை இருப்பது போல் ஏற்றுக்கொள்வதற்கும், எடுத்து வைப்பதற்கும் இத்தனைப் பிரிவுகளும், பிளவுகளும், முரண்பாடுகளும், போலி வேஷங்களூம் எதற்காக? இதற்காக உலகலாவிய ரீதியில் உயிர்ப்பலிகள், காலவிரயம், பணவிரயங்கள், மாநாடுகள், விவாதங்கள். முஸ்லிம்களே எப்பொழுது நீங்கள் இந்த போலிகளிடமிருந்து விடுபட்டு நீங்களாகவே குர்ஆன், ஹதீஸை அதில் உள்ளது உள்ளது போலவே விளங்கிப் பின்பற்றப் போகிறீர்கள்?

முதலில் குர்ஆன் ஹதீஸ் என்ன கூறுகிறது என்று விளங்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதற்கு மாற்றமான எந்த அறிஞருடைய கருத்தாக இருந்தாலும் சரி, எத்தனை வால்யூம்கள் எழுதப்பட்ட கிதாபுகளாக இருந்தாலும் சரி, அதை புறக்கணித்து விடுங்கள். அப்பொழுதுதான் மற்றைய மதங்கள், கொள்கைகள், கோட்பாடுகள், சிந்தாந்தங்கள், தத்துவங்கள், பொன்மொழிகள் அனைத்தையும் விட இஸ்லாத்தை உயர்வாக போற்றுவதிலும் மதிப்பதிலும், பின்பற்றுவதிலும் அர்த்தமிருக்கும்.

இதற்கு மாற்றமாக இன்றைய அறிஞர்கள், ஆலிம்கள், ஹஜ்ரத்துகள், உலமாக்கள், ஷேக்குகள், குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமான முன்னோர்கள், சூஃபியாக்கள், அவ்லியாக்கள் ஸலஃபியாக்கள் போன்றவர்களின் மனிதக் கருத்துக்களை மார்க்கமாக முன்வைக்கும் நிலையைப் பார்த்தால், நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை இந்த சந்தர்ப்பத்தில் எவ்வளவு பொருத்தமானதாக இருக்கிறது என்று பாருங்கள்.

P.M.M.Nalim, Srilanka

Comments on this entry are closed.

Previous post:

Next post: