சாமியார்கள்!

in சமூகம்

சாயிபாபாவைப் புகழ்ந்து அறிக்கையிட்ட மமக வுக்கு சிந்தித்து அறிவுப்பூர்வமாக அடையாளம் காட்டி அறிக்கை வெளியிட வேண்டியது முஸ்லிம் அமைப்பு என்று சொல்லிக் கொள்வோரின் கடமையாகும். அவர்களின் அறிக்கை சித்து விளையாட்டுகளையும்  மூட நம்பிக்கைகளை அடையாளம் காட்டாமல்  மடமையாக உள்ளதால் நாத்திகர்களின் அவ்வறிக்கைகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

 சாயிபாபாவுக்கு முன்பு மிகவும் நெருக்கமாக இருந்து தற்போது பிரிந்துவிட்ட ஸ்வீடனைச் சேர்ந்த கானி லார்சன் கூறுகிறார்.

 ”நான் 1976-ஆம் ஆண்டிலிருந்து சாயிபாபாவுடனிருந்தேன். அதற்கு முன்பு டிரான்சிடெண்டல் மெடிட்டிடேஷனில் ஆசிரியராக இருந்தேன். அங்குதான் பாபாவை பற்றிய அறிமுகம் கிடைத்தது. எந்த விளம்பரங்களும் தேவையில்லை, பணம் எதும் கொடுக்கத் தேவையில்லை, வந்து அமர்ந்து கடவுளின் அருளைப் பெற்றுச் சென்றாலே போதுமானது என்று மிகவும் எளிமையாக இருந்தது. புட்டபர்த்திக்கு வந்து சாயிபாபாவின் காலடியில் விழுந்தேன். அவர் காலடியிலேயே 21 ஆண்டுகள் கிடந்தேன். நான் அவருடைய பிரியத்துக்கும் நெருக்கத்துக்குமுரியவனானேன். நான்கு வருட காலம் எங்களுக்கு அந்தரங்க உறவிருந்தது. ஒருமுறை நான் ஒரு பெண்ணை மணந்துக்கொள்ள விரும்பி அவரையும் சாயிபாபாவிடம் அழைத்து வந்தேன். சாயிபாபா, அந்தப் பெண்ணின் முகத்தில் அறைந்ததோடு “அவனை ஒருபோதும் தொடாதே,அவன் என்னுடையன், அவனை நான் மணம் புரிந்திருக்கிறேன்”என்றும் கூறினார். நான் அவரது காலடியில் விழுந்ததோடு பிரியத்துக்குரிய எனது காதலியையும் பிரிந்தேன். ஏனெனில், அவரே கடவுளென்றும் கடவுளுக்காக எதையும் செய்யும் மனநிலையிலும் இருந்தேன்.”

 1993-ஆம் ஆண்டு பிரசாந்தி நிலையத்தின் ஆறு உட்குடியிருப்பாளர்கள் சாயிபாபாவின் படுக்கையறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். தாக்குதலில் இரண்டு பேர் இறந்துவிட்டதாகவும் நான்கு பேர் கைகளில் கத்தி வைத்திருந்ததால் போலிசால் தற்காத்துக்கொள்ள சுட்டபோது இறந்துவிட்டதாகவும் சொன்னார்கள். அனைவரது எதிர்காலத்தையும் அறியும் தெய்வீகச் சக்தி படைத்த சாயிபாபா அப்போது உயிருக்கு பயந்து ஓடிவிட்டார். கொல்லப்பட்ட அனைவரும் சாயிபாபாவுக்கு நெருக்கமானவர்கள்தான்.

 அந்த நிறுவனம் ஒரு கொலைகார நிறுவனம். அது பணத்தை வெளுக்கும் ஒரு நிறுவனம். ஆசிரமத்துக்கு ஒருநாளைக்கு குறைந்தது பத்தாயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேர் வரைக்கும் வருவார்கள். ஒவ்வொரு வருடமும் குறைந்தது 55 மில்லியன் டாலர்கள் பக்தர்களிடமிருந்து மட்டும் சாயிபாபாவின் டிரஸ்டுக்குக் வரும். பல அரசியல்வாதிகளிடமிருந்தும் பணம் டிரஸ்டுக்கு வருவதுண்டு. அதுமட்டுமில்லாமல், பல மந்திரிகள்,அதிகாரிகள், கோர்ட்டு நீதிபதிகள்,சிபிஐ அதிகாரிகள் என்று பலருக்கும் பணம் பட்டுவாடா நடக்கும்.

 அங்கிருக்கும் சூப்பர் ஸ்பெசல் மருத்துவமனையைக் கட்ட 108 மில்லியன் டாலர்கள் நிதிஉதவி செய்தது, ஹார்ட் ராக் கஃபே.

 அந்த மருத்துவமனை பார்க்க ஒரு அரண்மனைபோலவே இருக்கும். அந்த மருத்துவமனையில் ஏழை இந்தியர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் வெளியே வரும்போது எத்தனை சிறுநீரகங்களுடன் முழுமையாக வருகிறார்களா என்பது கேள்விக்குறிதான்.

 2000ஆம் ஆண்டு யுனெஸ்கோவும் ஆஸ்திரேலியாவின் பல்கலைகழகமும் இணைந்து சத்ய சாயி டிரஸ்டின் குழந்தைகளுக்காக ஒரு செயல் திட்டத்தை வகுத்திருந்தது. பின்னர் குழந்தைகளை பாலியல் வக்கிரத்தோடு தவறாக பயன்படுத்தும் நோக்கமிருப்பதாகவும் சத்யசாயி டிரஸ்டுக்கான உதவியை பின்வாங்குவதாகவும் யுனெஸ்கோ அறிவித்துவிட்டு விலகிக்கொண்டது.

 “Behind the Mask of the Clown” என்று நான் எழுதிய புத்தகத்தின் மூலம் குறி வைத்து விரட்டப்படுகிறேன். ஆபத்துகள் என்னை சூழ்ந்திருப்பதால் எனது நாட்டை விட்டு வெளியேறி சைப்ரஸில் வசிக்கிறேன். ஆனால், எது வந்தாலும் நான் அமைதியாக இருக்க மாட்டேன், ஏனெனில் சொல்லப்பட வேண்டியது ஏராளம் இருக்கிறது.”

 இதுவே போதும். இதற்கு மேலும் நாம் எதுவும் சொல்லத்தேவையில்லாமல் விளங்கும். சாயிபாபா மற்றும் ஹோமோசெக்சுவாலிட்டி என்று தேடினால் பலரது கதைகள் வந்து விழுகின்றன. இவை எல்லாம் சாயிபாபாவுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது. இந்தியாவை மையமாக வைத்து உலகெங்கும் எழுப்பப்படும் ஆன்மீகக் கிளைகளில் இதுதான் நடக்கிறது.

 ரவிசங்கரின் வாழும் கலை, அமிர்ந்தானந்தமாயியின் கட்டிபுடி வைத்தியம், கல்கி பகவானின் ஒன்னெஸ் கூட்டங்கள், பால் தினகரனின் ஜெபாலயம் என்று பக்தி இன்று ஒரு முக்கிய வியாபாரப்பொருள். ஆன்மீகமும் பக்தியும் ஒருகாலத்தில் ரிடையர்டான பெருசுகளின் கூடாரமாக இருந்தது போய் இன்று அந்த வியாபாரக் கூடங்களின் வாடிக்கையாளர்கள் இளைஞர்கள்தான். பெரும்பான்மையினர் படித்த நடுத்தர வர்க்கத்தினர்தான்.

 பரபரப்பு மிகுந்த அன்றாட வாழ்க்கையின் இரக்கமற்ற தன்மை, வேலை நிச்சயமற்ற சூழல், பணிச்சுமை, குடும்பப் பிரச்சினைகள், பயமுறுத்தும் எதிர்காலம், குழந்தைகளின் படிப்பு,போட்டி நிறைந்த உலகில் நிலைநிறுத்திக்கொள்வதற்கு ஏற்படும் போராட்டங்கள் மற்றும் மன அழுத்தங்கள் முன்னெப்போதும் இல்லாமல் இளைஞர்களை பாதிக்கின்றன.

 வீட்டுக்கடனிலிருந்து, உயரும் விலைவாசியிலிருந்து,கிரெடிட் கார்டு…இதுபோக உறவுசார் பிரச்சினைகள்..முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குடும்பப் பிரச்சினைகள் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார்கள். தான் இப்படி சுரண்டப்படுவதை உணராத இந்த இளைய சமுதாயம் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல உடனடித் தீர்வுகளை நோக்கி விரைகின்றனர்.

 பெரும்பாலான நிறுவனங்களில் இன்று எட்டு மணிநேர வேலை என்பதே இல்லாமல் போயவிட்டது, எட்டு மணிநேரம் உழைப்பைத் தாண்டி எத்தனை மணிநேரங்கள் உழைத்திருக்கிறோம் என்பதும் இருநாளில் செய்துமுடிக்க வேண்டிய வேலையை ஒரே நாளில் செய்து முடிக்கவேண்டுமென்கிற முதலாளித்துவ நிர்பந்தமும் மக்களை யோசிக்கவே விடாமல் செய்கின்றன. ஏதோ தனக்கு மட்டும்தான் இந்த நிலை என்பதுபோல எண்ணி குமைகிறார்கள்.

 ஒருநாளின் குறைந்தபட்ச ஓய்வு என்பது கூட தற்போது சுருங்கிவிட்டது. ஓடிக்கொண்டேயிருப்பதுதான் நகர வாழ்வு என்பதாக மாறியிருக்கிறது. தனது நிலைக்கான காரணத்தை உணர மறுக்கிறார்கள். கரும்பைப் பிழிவது போல சக்கையாக பிழிந்து நடமாடும் பிணங்களாக வாழ்பவர்கள் ஒன்று இயலாமையாலும் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலையை நோக்கி ஓடுகிறார்கள் அல்லது இந்த சாமியார்களின் மடத்துக்கு வருகிறார்கள்.

 இந்த இன்ஸ்டண்ட் குருமார்களும், சகல பிரச்சினைகளுக்கும் தங்களிடம் தீர்வு இருப்பதாகக் கூறி இவர்களை காந்தமாக ஈர்த்துக் கொள்கின்றனர். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ரிலாக்ஸ் செய்தால் போதும், பிரச்சினைகள் தீர்ந்து போய்விடுமென்று கூறி மயக்குகின்றனர். ஒரு வாரம் தியான வகுப்புக்கு நித்தியானந்தா ஐம்பதாயிரம் வரை வாங்கியதாக கூறுகிறார், அந்த வகுப்புக்குச் சென்று வந்தவரொருவர். ரவிசங்கரோ வாழும் கலையின் ஆரம்ப வகுப்புக்கு ஐந்தாயிரம் வரை வாங்குகிறார்.

 தொலைப்பேசியில் பிரச்சினைக்காக ஜெபிக்க பணத்தை அனுப்பினால் போதுமென்கிறது பிரேயர் டவர்ஸ். அடித்தட்டு மக்களாக இருந்தாலும் 100 ரூபாயாவது கொடுத்தால்தான் உறுப்பினராக முடியுமென்கிறார் மேல்மருவத்தூர் அம்மா. நமது தெருமுனையிலிருக்கும் கல்யாண மண்டபத்தில் நடத்தப்படும் ஈஷா யோகா வகுப்பில் வந்து முடிகிறது,இந்த நீண்ட பட்டியல்.

 இவர்கள் அனைவரும் சொல்வது, நல்லதையே பார்த்துப் பழகுங்கள், கெட்டவற்றை நினைக்காதீர்கள், எந்த செய்தியிலும் நல்ல பக்கத்தையே பாருங்கள், பொறுமையோடிருங்கள், உங்களுக்குள் இருக்கும் அமைதியைத் தேடிக் கண்டடையுங்கள், ” என்று நீளும் இந்த தத்துவம் கடைசியில் உண்டியலில் வந்து முடியும்.

 முதலாளிகள் தேய்த்து அனுப்பும் பழுதான இயந்திரங்களுக்கு மசகு எண்ணெயை வார்த்து திருப்பி அனுப்புவதற்குத்தான் இந்த ஆன்மீக சாமியார்கள் பயன்படுகிறார்கள். ஆளும் வர்க்கத்துக்கு சாமியார்களின் தயவு தேவை. சாமியார்களுக்கு தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்த அரசு தேவை. அதனால்தான், ஆனந்தாக்களும் பாபாக்களும் வாழையடி வாழையாக தோன்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.

 கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நாம் அருந்தும் தண்ணீர் உட்பட படிக்கும் படிப்பு வரை இருக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு ஆன்மீகம் பதிலாகுமா? பிரச்சினைகளை மழுங்கங்கடிப்பதற்கு வேண்டுமானால் ஆன்மீகம் உதவும். கொலைப்பழி இருந்தபோதும் அவாள்கள் சங்கர மடத்துக்கு போகாமல் இருந்தார்களா என்ன? ஜெயேந்திரன் அம்பலமான பிறகும் சங்கர மடத்துக்கு மவுசு குறையாமல்தானே இருக்கிறது!

 அதனால்தான் சாயிபாபாவின் ஆசிரமத்தில் நிகழும் கொலைகளையும், குழந்தைகள் மீதான கொடுமைகளையும் மூடிமறைத்து பாதுகாப்பு கொடுக்கிறது ஆளும் வர்க்கம். சாயிபாபாவின் ஆசிரமத்தில் மன்மோகன் சிங்க்குக்கு என்ன வேலை? இவரது தெய்வீக சக்தி இருக்கும் போது மருத்துவ பல்கலைகழகங்களும் பொறியியலும் எதற்கு? தெய்வீக சக்தியையே பயன்படுத்திக்கொள்ள முடியாதா?பூமியை வானமாகவும் வானத்தை பூமியாகவும் மாற்றக்கூடியவருக்கு, முக்காலமும் அறிந்தவருக்கு ஜப்பானில் நிகழ்ந்த சுனாமியை தடுத்து நிறுத்தியிருக்கலாமே!

 இதோ, இப்போது உலகெங்கும் அவரது பக்தர்கள் அவருக்காக வேண்டியபடி இருக்கிறார்கள். இன்னும் சில பக்தர்கள், இது சாயிபாபாவின் லீலைதானென்றும் அவர் விரைவில் குணமாகி வருவாரென்றும் நம்புகிறார்கள். வேறு சிலரோ, அவர் கடவுள்தான் என்றாலும் சாதாரண மனிதனுக்கு நேரும் முடிவை சந்திப்பதற்காகத்தான் அவரை அவரே காப்பாற்றிகொள்ள வேண்டாமென்று முடிவு செய்திருப்பதாகவும் தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்கிறார்கள்.

 பார்க்கப் பரிதாபமாக இருந்தாலும், ஆன்மீகம் செய்து வைத்திருக்கும் கோளாறு புரிகிறதா?

 மக்களின் போராட்டங்களை அடக்க ராணுவத்தை குவிக்கும் அரசு இந்த சாமியார்களின் ப்ராடுத்தனத்தால் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுத்து நிறுத்த முடியாதா என்ன?

 முடியும். ஆனால் செய்யாது.

 பகுத்தறிவு பேசிய கருணாநிதி சாயிபாபா நலம் பெற்று எழ வேண்டுமென்று செய்தி அனுப்புகிறார். இது ஏதோ மனிதாபிமானத்தின்பாற்பட்டதல்ல. தேர்தல் காலத்தில் தமிழகத்தில் இருக்கும் சாயிபாபா வாக்குகளை கவர் செய்த மாதிரியும் ஆகும். கூடவே கருணாநிதி குடும்பத்தில் இருக்கும் பாப பக்தர்களை திருப்திப்படுத்தியது போலவும் இருக்கும்.

 சாயிபாபாவின் மீதான கருணாநிதியின் அக்கறைக்கு பொருளென்ன? அடிப்படையில் இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களே! மக்களுக்கு தங்களது பிரச்சினைகளுக்குக் காரணமான சமூக அமைப்பின் மீது கோபம் வராமல் பார்த்துக்கொள்வதில் இருவரும் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்

 ஆன்மீகம் தனது பிரச்சினைகளுக்கு ஒருபோதும் மருந்தல்ல என்று மக்கள் உணரும்போதுதான் சாயிபாபாக்கள் மந்திரவித்தை மோசடிகளை நிறுத்துவார்கள். மாறாக அப்போது சாமியார்கள் மக்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கு சாணக்கிய ஆலோசனை செய்யும் வேலைக்கு போய்விடுவார்கள். போக வைப்போம்.

 தகவல்
Muhammed Aboobucker Aal Abdillah

நன்றி: http://fazlulilahi.posterous.com/50884237Comments on this entry are closed.

Previous post:

Next post: