”நபி صلى الله عليه وسلم அவர்கள் வீட்டிலிருக்கும்போது, பனூ ஆமீர் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதர் வந்து, நான் உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டார். (அவர் அனுமதி கேட்ட முறை சரியில்லை என்பதற்காக) நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் பணியாளரிடம், நீ சென்று அனுமதி கேட்கும் முறையை அவருக்குச் சொல்லிக்கொடு (அதாவது) ‘அஸ்ஸலாமு அலைக்கும்” நான் உள்ளே வரலாமா என்று கேட்கும்படிச்சொல் என்று கூறினார்கள். இதைச் செவிமடுத்த அம்மனிதர், ‘அஸ்ஸலாமு அலைக்கும்” நான் உள்ளே வரலாமா என்று கேட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் அனுமதி வழங்க, அவர் உள்ளே வந்தார்” என ரிப்யீ இப்னு ஹிராஷ் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத்)
”நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து. ‘ஸலாம்’ கூறாமல், அவர்கள் இருந்த அறையில் நுழைந்துவிட்டேன். நீ திரும்பச் சென்று, ‘அஸ்ஸலாமு அலைக்கும்” நான் உள்ளே வரலாமா என்று கேட்டுவிட்டு, பின்னர் உள்ளே வா என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் என்னிடம் கூறினார்கள்” என கில்தா இப்னு ஹன்பல் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்கள்: அஹ்மது, அபூதாவூத்ு மற்றும் திர்மிதீ)
”அனுமதி பெறுவது (மார்க்கச்) சட்டமாக ஆக்கப்பட்டது பார்வையின் காரணத்தால்தான் என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள்” என ஸஹ்ல் இப்னு ஸஅத் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, திர்மிதீ மற்றும் நஸயீ)
”நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒரு சமுகத்தாரின் (வீட்டு) வாசலுக்கு வந்தால், வாசலுக்கு நேராக நின்று அனுமதி பெறாமல், வாசலுக்கு வலப்புறமோ, இடப்புறமோ ஒதுங்கி நின்று, ‘அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்வார்கள்”” என அப்துல்லாஹ் இப்னு பிஷ்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத்)
”முன் அனுமதி பெறாமல் பிறருடைய வீட்டின் உட்பகுதிகளைப் பார்ப்பது ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. அப்படி ஒரு முஸ்லிம் (பிறருடைய வீட்டின் உட்பகுதிகளை) பார்த்துவிட்டால் (அவர் அனுமதி பெறாமல்) அவ்வீட்டில் புகுந்தவர் போன்று ஆகிவிடுகிறார்” என தவ்பான் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார் .(நூல்: அபூதாவூத்், திர்மிதீ) மேற்கண்ட நபிமொழியை இமாம் புகாரி அவர்கள், தம் ‘அல்அதபுல் முஃப்ரத்” எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
”ஒருவர் தன் பார்வையை ஒரு வீட்டினுள் முறையற்று செலுத்தும்போது அவ்வீட்டுக்காரர் உற்றுப் பார்த்த அவரின் கண்ணைப் பறித்தால்கூட, அதற்காக அவரை நான் குறை கூறமாட்டேன். அடைக்கப்படாத (திரையிடப்படாத) ஒரு வாசலை, யாரேனும் உற்று நோக்கினால், நோக்கியவர் மீது குற்றம் ஏதுமில்லை. வீட்டுக்காரர்களே குற்றவாளிகளாவர் என்றும் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்””என அபூதர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல் : திர்மிதீ)
”வீட்டில் ஓர் ஆண் தொழுது கொண்டிருக்கும்போது அவரின் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்டால், தொழுது கொண்டிருப்பவர் தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் என்று) சொல்வதே அனுமதி அளித்ததாகும். பெண் ஒருத்தி தொழுது கொண்டிருக்கும்போது அவ்வீட்டினுள் நுழைவதற்கு அனுமதி கேட்கப்பட்டால், அப்பெண் தன் புறங்கையைப் புறங்கையில் அடித்து சப்தம் உண்டாக்குவதே அனுமதி அளிப்பதாகும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்” என அபூஹ{ரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: பைஹகீ)
”நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் இரவு மற்றும் பகல் நேரங்களில் வருவேன். நான் இரவில் வரும்போது அவர்கள் கனைத்து எனக்கு அனுமதி அளிப்பார்கள். நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து அனுமதி கேட்கும்போது அவர்கள் தொழுது கொண்டிருந்தால் கனைப்பார்கள்; நான் நுழைந்துவிடுவேன். அவர்கள் தொழாமல் இருந்தால் எனக்கு (வாய்மொழியில்) அனுமதி அளிப்பார்கள்” என அலி இப்னு அபீ தாலிப் رَضِيَ اللَّهُ عَنْهُ (நூல்: நஸயீ)
”நபி(ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அபூபக்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் வந்து அனுமதி கோர, யார் அது என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கேட்டதற்கு, அபூபக்ர் என்று பதில் சொன்னார்கள். அதன்பிறகு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ வந்து அனுமதி கேட்டார்கள். யார் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கேட்க, உமர் என்றார்கள் அதன் பின்பு வந்த உதுமான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களும் தம் பெயர் கூறியே அனுமதி பெற்றார்” என அபூ மூஸா அல் அஷ்அரி رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (ஹதீஸ் சுருக்கம்) (நூல்: புகாரி, முஸ்லிம்)
”என் தந்தைக்கு இருந்த கடன் விஷயமாக, நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து, (அவர்கள் வீட்டுக்) கதவைத் தட்டினேன். (வீட்டிற்குள்) இருந்து நபி صلى الله عليه وسلم அவர்கள் (கதவைத் தட்டுவது) யார் எனக் கேட்டார்கள். நான்தான் என்று குரல் கொடுத்தேன். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள், நான்தான் ”என்றால் யார்” என்று அதிருப்தியோடு கேட்டார்கள்” என ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், மற்றும் திர்மிதீ)
”நபி صلى الله عليه وسلم அவர்களுடன் நான் சென்ற இடத்தில் ஒரு பாத்திரத்தில் பால் இருந்தது. நபி صلى الله عليه وسلم அவர்கள், அபூஹுரைராவே, திண்ணைத் தோழர்களை இங்கே அழைத்து வாருங்கள் என்றார்கள். நான் திண்ணைத் தோழர்களிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து அனுமதி கேட்டனர். அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்” என அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: புகாரி)
”இரவில் நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் வீட்டிற்குத் திரும்பி வரும்போது, தூங்குபவர்கள் எழுந்துவிடாத முறையிலும் விழித்திருப்பவர்களுக்கு (மட்டும்) கேட்கும்படியாகவும் ‘ஸலாம்” கூறுவார்கள்” என மிக்தாத் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம்)
”ஒரு மனிதன் தன் வீட்டிற்குள் நுழையும்போது, யா அல்லாஹ்! நல்ல முறையில் நுழைவதையும் நல்ல முறையில் வெளியேறுவதையும் உன்னிடம் வேண்டுகிறேன். இறைவா! உன் திருப்பெயர் கொண்டே நுழைகிறோம். உன் திருப்பெயர் கொண்டே வெளியேறுகிறோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் மீதே நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம் என்று கூறிவிட்டுப் பிறகு தன் வீட்டில் உள்ளவர்களுக்கு ‘ஸலாம்” கூறட்டும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்” என அபூ மாலிக்கில் அஷ்அரி رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத்)
(அடுத்தவர் வீட்டினுள் செல்ல) அனுமதி கேட்பது மூன்று தடவையே. உனக்கு (மூன்று தடவைகளுக்குள்) அனுமதி அளிக்கப்பட்டுவிட்டால், (அவ்வீட்டில் நுழையலாம்) அவ்வாறு அனுமதி கிடைக்கவில்லையெனில், திரும்பிவிடு என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்” என அபூமூஸா அல் அஷ்அரி رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, முஅத்தா, அபூதாவூத் மற்றும் திர்மிதீ)
{ 2 comments }
Very very useful to every muslims. it would make a peace among the muslim.
Alhamthu lillah GOOD
Comments on this entry are closed.