குடித்தால் மயக்கம் தருவது மது! நினைத்தாலே மயக்கம் தருவது மாது!
எவரும் மறுக்க முடியாத கூற்று இது.
இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன் சொன்னதை இன்றைய நவீன அமெரிக்க, மற்றும் மேலை நாட்டு ஆய்வாளர்கள் இன்று சொல்கிறார்கள்! தாமதமான செய்தியானாலும் தரமான ஆய்வாகும். இந்த ஆய்வில் அறிவுரைப் பகர்கின்ற நவீன ஆய்வாளர்களால் பொது மக்கள் நலம் காக்கும், மனித இனமே வரவேற்கும், செயல்முறையான தீர்வை இவர்களால் கொடுக்க முடியவில்லை. ஏகனிறைவனால் முழு மனித சமுதாயத்திற்கு அழகிய வாழ்வு நெறியாக அகில உலக மக்களுக்கே அருளப்பட்ட இஸ்லாமிய வழிநெறியில் தீர்வு கூற நாம் கடமைப்பட்டுள்ளோம். இவர்களின் ஆய்வையும், முடிவையும் முதலில் பார்த்தபின் நாம் இஸ்லாம் நவிலும் “ஏகனிறைமறை, நபிவழி தீர்வை” பொது மக்கள் முன் வைப்போம். ஏற்பவர் ஏற்கட்டும்; விமர்சிப்பவர்கள் ஆரோக்கியமாக விமர்சிக்கட்டும்; விளக்கம் தருவோம்.
பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாகவும், அதன் விளைவாக ஆண்கள் எளிதில் வசீகரிக்கப்பட்டு பாலியல் பலாத்காரங்கள், ஒழுக்கமற்ற உடலுறவு பழக்க, வழக்கங்கள், அதன் விளைவாக கொடிய நோய்கள் வருவதாகவும், மேலை நாடுகளில் மேற்கொண்ட ஒரு புதிய ஆய்வு தனது முடிவை வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்கா மற்றும் மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்களால் சுமார் முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவிது. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் (ஆணுறுப்பின் அருகிலுள்ள இரு பெரும் சுரப்பிகள்) புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக் குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், இன்றைய பெண்களின் நவீன ஆடை, உடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக் காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும், பல்வேறு காரணங்களை அடுக்குகிறார். இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச் செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு மனநோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம்.
முஸ்லிம் நாடுகளில் மனநோயாளிகள் குறைவு!
இஸ்லாத்தை தங்கள் வாழ்வு நெறியாகக் கொண்ட அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு. முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்க வழக்கங்களே காரணம் எனக் கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை. இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்த குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது. உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா! எனும் யோசனை முளைத்திருக்கிறது.
அதன் தொடர் ஆய்வின் விளைவு:- பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு தெரிய வந்திருக்கிறது. ஓர் ஆண் மகன் இடுப்பிலிருந்து ஒரு சிறிய ஆடையை அணிந்து சென்றால் அது மனித சமுதாயத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் பெரும்பாலும் ஆண்கள் தங்களின் ஆடைகளை முழுமையாக அணிகிறார்கள். இதற்கு மாறாக, பெண்கள் தாங்கள் முழுமையாக மறைக்க வேண்டிய உடல் பகுதிகளை பாதசாரியிலும், பணியிடங்களிலும், பொது இடங்களிலும் பலர் அறிய வெளிக்காட்டி தங்களைக் காணும் ஆண்களை வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூலக் காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது.
முக்கால்வாசி (75% விழுக்காடு) ஆண்மைக் குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும். பெண்களின் கவர்ச்சிகரமான நடைமுறைகளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப் புதைக்கும் கல்லறைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கிறது. அதே வேளையில் தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை நோக்கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது. இவற்றிற்கு இயற்கையானத் தீர்வு என்ன???
பெண்களின் ஆடை பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு:
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவைத் தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.
தமது கணவர்கள்,
தமது தந்தையர்,
தமது கணவர்களுடைய தந்தையர்,
தமது புதல்வர்கள்,
தமது கணவர்களின் புதல்வர்கள்,
தமது சகோதரர்கள்,
தமது சகோதரர்களின் புதல்வர்கள்,
தமது சகோதரிகளின் புதல்வர்கள்,
பெண்கள் தங்களுக்குச் சொந்தமான அடிமைகள்,
ஆண்களில் (முதிய வயதால் பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள்,
பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர,
மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (அல்-குர்ஆன்: 24:31)
நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், (எதிரிகளால்) தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.” அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையோன். (அல்-குர்ஆன: 33:59)
‘ஜீனத்’ என்றால் பகட்டு அலங்காரம்:
திருக்குர்ஆன் 24:31 வது வசனத்தில் ”பெண்கள் அலங்காரத்தை வெளிப்படையாகத் தெரிபவற்றைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தக் கூடாது” எனக் கூறப்படுகிறது. இங்கு ‘ஜீனத்’ என்ற மூலச் சொல் பயன்படுத்தப்படுகிறது. ‘ஜீனத்’ என்றால் அலங்காரம் என்று பொருள். இது இயற்கையான அழகைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக, நமது உள்ளக்கிடக்கையால், உடல் இச்சையை வெளிப்படுத்த செயற்கை சாதனங்களால் உருவாக்கப்படும் அழகே அலங்காரம் எனப்படும். பலர் பார்வையில் படவேண்டும் என உதட்டுச் சாயம் பூசுவது, கை, கால் பாதங்கள், நகங்களை நிறமிடுதல். தலையில் பூச்சூடல், வாசனை திரவியங்களால் மாற்றாரின் மனதில் கிளர்ச்சியை ஏற்படுத்தல், நகைகளால் ஜோடனை செய்வது, ‘மேக்கப்’ பொருட்களைப் பயன்படுத்துவது, ஆடைகளால் காட்டக் கூடாத உறுப்புகளை வெளிக்காட்டி அழகை அதிகரிப்பது இவை ‘ஜீனத்’ என்ற சொல்லில் அடங்கும். இவையனைத்தும் தங்களின் இல்லங்களில், தங்களின் அழகை ஆராதிக்கும் திருக்குர்ஆன் 24:31 வசனத்தில் மேலே குறிப்பிட்டுள்ளவர்களின் முன் அனுமதிக்கப்படுத்திறது. மற்றவர்களின் முன் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். எனவே இவ்வசனத்தில் கூறப்படுகின்றவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முன் இது போன்ற உபரியான சாதனங்களால் அலங்காரம் செய்த நிலையில் பெண்கள் காட்சி தரவேக்கூடாது. இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள ‘ஜீனத்’ என்பதைச் சிலர் அழகு என விளங்கிக் கொண்டனர். அழகு வேறு, பகட்டு அலங்காரம் வேறு என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. இளம் மகளிர்களுக்கு உணர்த்துவதுமில்லை.
இஸ்லாம் ஓர் அகில உலக இயற்கை மார்க்கம். அது ஒவ்வொரு நாட்டின் கலாச்சரப் பண்பாடுகளை நேசிக்கிறது. கண்ணியம் அளிக்கிறது. அவை இஸ்லாம் கூறும் வரையறைக்குள் இருக்க வேண்டும் என்றே போதிக்கிறது. நபி (ஸல்) அவர்களின் பல தோழர், தோழியர்களில் வெவ்வேறு நாட்டினராக, வெவ்வேறு கலாச்சார பண்பாடுகளை உடையவர்களாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் துருக்கி, யமன் நாட்டு உடைகளை விரும்பி அணிந்திருந்ததாக பற்பல நபிவழி அறிவிப்புகளில் நாம் காண முடிகிறது. அதனடிப்படையில் இந்திய கலாச்சாரப்படி சேலையை பெண்கள் அணியும் வழக்கம் நம் நாட்டில் உள்ளதால் இஸ்லாமிய பெண்களும் சேலையை அணிகிறார்கள். ஆனால் இந்த ஆடை பெண்களின் இடுப்புப்பகுதியையும் முதுகுப் பகுதியையும் மணிக்கட்டிற்கு மேலே உள்ள கைப்பகுதிகளையும் வெளிப்படுத்திக் காட்டும் விதத்தில் அணியப்படுகிறது. மாறாக, முதுகின் பின்புறம், தொப்புள் பகுதி, வெளியே தெரிய இடுப்பு பகுதிகள், மணிக்கட்டிற்கு மேலே உள்ள கைப்பகுதிகள் வெளிக்காட்டி உடை அணிவதை இவர்கள் தவிர்த்தால் சேலை ஓர் இஸ்லாமிய பெண் உடையாக (ஹிஜாப்) ஆகி விடும்.
பின்வரும் செய்தியை கவனத்தில் வைத்துக்கொண்டு ஹிஜாப் (பெண் உடை) விஷயத்தில் பேணுதலாக பெண்கள் நடந்துகொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நரகவாசிகளில் இரு வகையினரை (இன்னும்) நான் பார்க்கவில்லை. (அவர்களில் ஒரு வகையினர்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்து மக்களை அடித்துக் கொண்டிருப்பவர்கள். (மற்றொரு வகையினர்) ஆடையணிந்தும் நிர்வாணிகளாக (காண்போரை) கவர்ந்திழுக்கும் பெண்கள். நீண்ட கழுத்தைக் கொண்ட ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்று தலையை சாய்த்துக் கொண்டு அவர்கள் நடப்பார்கள். இவர்கள் சுவனத்தில் நுழைய முடியாது. அதன் வாடையையும் நுகரமாட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம் 3971)
பெண்டிர் வெளிக்காட்ட அனுமதிக்கப்பட்டப் பகுதிகள் :
பெண்கள் தமது உடல் அழகில் கைகள், முகங்கள் தவிர மற்றவைகளை மறைக்க வேண்டுமென்பதை நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகளிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்தை திறந்து இருந்ததற்கு பல சான்றுகள் உள்ளன.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன் அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழகை நடத்தினார்கள் பாங்கோ இகாமத்தோ இல்லை பிறகு பிலால் (ரழி) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையுணர்வுடன் ஒழுக்க நெறியைக் கடைபிடிக்கும் மாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள் பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்கு சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள் மேலும் பெண்களை நோக்கி தர்மம் செய்யுங்கள், நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவிர்கள் என்று கூறினார்கள் அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து ஏன்? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாக குறை கூறுகின்றீர்கள், நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள் அப்போது அப்பெண்கள் தம் காதணிகள், மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்கனை பிலால் (ரழி) அவர்களின் ஆடையில் போட்டார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: முஸ்லிம் 1612).
(‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபழ்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபழ்ல் மிகவும் அழகானவர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) ‘கஸ்அம்’ குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்ளிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபழ்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஃபழ்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபழ்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல் : புகாரி 6228)
கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். பெண்கள் முழங்காலிலிருந்து ஒரு முழம் வரை உள்ள பகுதிகளை மறைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முழங்காலிலிருந்து ஒரு முழம் என்பது கரண்டை கால் வரைக்கும் வரும். எனவே கரண்டைக்குக் கீழே உள்ள பாதத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
பெருமைகொண்டவனாக தன் ஆடையை எவன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் (கருணை பார்வை) பார்க்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது உம்மு ஸலமா (ரழி) அவர்கள் பெண்கள் தங்களின் கீழாடையை எவ்வாறு தொங்கவிட்டுக் கொள்வார்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (முழங்காலிலிருந்து) ஒரு ஜான் தொங்கவிடுவார்கள் என்று கூறினார்கள். அப்படியானால் பெண்களின் கால் தெரியுமே? என்று உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கேட்டதற்கு ஒரு முழும் தொங்க விடுவார்கள். இதற்கு மேல் (ஆடையை) அதிகப்படுத்தக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் ; இப்னு உமர் (ரழி), நூல் : திர்மிதி 1653)
நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், (எதிரிகளால்) தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது.” அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையோன். (அல்-குர்ஆன: 33:59)
பெண்கள் முகத்தை மறைத்துக் கொள்வதற்கும் மார்க்கத்தில் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. திருக்குர்ஆனின் இறைவசனம்: 33:59படி பெண்மணிகள் தங்களின் அல்லது கணவர் அல்லது குடும்ப விரோதிகளால் தாங்கள் அறியப்பட்டு தங்களுக்கு எவ்வித இடையூறுகள், தொல்லைகள் வராமலிருக்க முகத்தை மூடிக் கொள்வதை அவசியமாகுகிறது. இன்றைய நிலையில் அவசியம் ஏற்படும் சூழ்நிலையில் பெண்கள் முகத்தை மூடுவதே சரியாகும். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் தங்கள் முகங்களை மறைத்துக் கொள்ளும் வழக்கமும் இருந்துள்ளது. அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை.
இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரையை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: புகாரி 1838)
முகத்திரை அணியும் வழக்கம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்ததால் இஹ்ராமின் போது மாத்திரம் அதை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே இஹ்ராம் அணியாத மற்ற பெண்கள் முகத்திரை அணிவதற்கு தடை இல்லை என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்களுடன் ஆயிஷா (ரழி) அவர்கள் ஒரு போருக்குச் சென்று திரும்பி வந்துகொண்டிருந்த போது இயற்கைத் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஒரிடத்தில் ஆயிஷா (ரழி) அவர்கள் ஒட்டகச் சிவிகையில் இருந்து இறங்கினார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் திரும்பி வருவதற்குள் படை சென்றுவிட்டது. ஸஃப்வான் பின் முஅத்தல் (ரழி) என்ற நபித்தோழர் ஆயிஷா (ரழி) அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் ஆயிஷா (ரழி) அவர்கள் தம் முகத்தை மறைத்துக் கொண்டார்கள். ஸஃப்வான் பின் முஅத்தல் என்னை அறிந்து கொண்டு இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன் (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நாம் அவனிடமே திரும்பிச் செல்ல விருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். உடனே என்னுடைய மேலங்கியால் முகத்தை மறைத்துக் கொண்டேன். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூல்: புகாரி 4750)
பெண்கள் முகத்தை மறைப்பது மார்க்க அடிப்படையில் தவறில்லை என்றாலும் முகத்தை மறைப்பதால் நம் வாழ்க்கையில் ஏற்படும் தீமைகளையும் நமது கவனத்தில் கொள்ள வேண்டும். பகுத்தறிவு மார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுள்ள நாம் இடம், பொருள், ஏவல் உணர்ந்து, நாம் செய்யும் செயல்களின் நன்மை, தீமைகள், பக்க விளைவுகளை ஆராய்ந்தறிந்து செயலாற்ற வேண்டுமென்றே இஸ்லாம் போதிக்கிறது.
ஆண்களாயினும் பெண்களாயினும் அவர்களில் இறையுணர்வுடன், சுயமாக ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே! பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்புப் பாதிக்கப்படும் என்பது தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம். ஒரு பெண் முகத்தையும் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். மற்றவர்கள் பார்த்து ரசிப்பார்கள் என்பதற்காக முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.
பெண்கள் தாம் என்று இல்லை. ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையுணர்வு இல்லாவிட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப் பிடிக்கத் தூண்ட வேண்டும். தவறு செய்ய நினைப்பவர்கள் இந்த முகத்திரையை கேடயமாக பயன்படுத்திக் கொண்டு துணிச்சலாக செயல்படுகிறார்கள். எனவே தான் இஸ்லாம் அவசியமின்றி முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.
இஸ்லாமிய ஒழுக்க நெறிகளை உலக பெண்களனைவரும் சரிவர நிறைவேற்றினால் அவர்களுடைய கற்பும் பாதுக்காக்கப்படும். இவர்களை காணும் ஆண்களின் கவனமும் சிதறி சிற்றிண்ப உணர்வுகளை தூண்டாமல் ஆண்களின் ஒழுக்கமும் பேணப்படும். இன்றைய நவீன அறிவியலர்கள் கூறும் உடல்ரீதியான, மனரீதியான குறைபாடுகள் குறைந்து விடும். இன்றைய நவீன உலகம் உணருமா? அல்லது ஏகத்துவ இறைநம்பிக்கைக் கொண்ட முஸ்லிம்களான நாம் இவ்வொழுக்க கோட்பாடுகளை இறையுணர்வுடன் செயலாக்கி மற்ற சமுதாயத்திற்கு உடல்ரீதியாக, மனரீதியாக, ஒழுக்கரீதியாக ஓர் அழகிய முன்மாதிரி சமுதாயமாக வாழ்ந்து காட்டலாமே! முடிவை ஏகனிடம் விட்டு முயற்சிப்போமாக!.
Dr. அம்ரைனி,
{ 1 comment }
nice web
Comments on this entry are closed.