கரிசலாங்கண்ணி
கரிசல் என்றால் தங்கம் என்று ஒரு பொருள் உண்டு. இது உடலைத் தங்கம் போல ஆக்கும் என்னும் கருத்தில் இந்தக் கீரைக்கு கரிசலாங்கண்ணி என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
நெல் வயல்களிலும், வாய்க்கால் வரப்புகளிலும், ஏரிக்கரைகளிலும், ஈரப்பிடியுள்ள வேறு இடங்களிலும் கரிசலாங்கண்ணிக் கீரை வளர்ந்து கிடப்பதைக் காணலாம்.
கரிசலாங்கண்ணியில் பொதுவாக நான்கு வகைகள் உள்ளன. அவற்றுள் மஞ்சள் பூ பூக்கும் வகைதான் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
மற்ற கீரை வகைகளில் உள்ளதைப் போலவே கரிசலாங்கண்ணியிலும் வைட்டமின்களும், தாது உப்புக்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.
கரிசலாங்கண்ணிக் கீரை இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. கண் பார்வையைத் தெளிவு படுத்துகிறது. தசையைக் கடுமையாக விரைக்கச் செய்யும் “தணுக் வாய்வு” என்னும் கொடிய நோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்தில் இது முக்கியப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது.
கரிசலாங்கண்ணிக் கீரை உடலுக்கு உரமூட்டுகிறது. மண்ணீரலில் ஏற்படும் வீக்கம் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. தோல் வியாதிகளுக்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையினால் ஒற்றடம் கொடுத்தால் உடலில் ஏற்படும் வீக்கங்கள் வற்றும்.
இந்தக் கீரையை உண்பதாலும், இதன் சாற்றை தலையில் தேய்ப்பதாலும் முடி கருகருவென்று வளரும். குழந்தைகளைத் தேய்த்துக் குளிப்பாட்டவும் இந்தக் கீரையின் சாற்றைப் பயன்படுத்தலாம்.
கரிசலாங்கண்ணி இலைச் சாறு இரண்டு சொட்டுகளுடன் எட்டு சொட்டு தேனைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளி, நீர்க்கோவை போன்றவை குணமாகும். நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கரிசலாங்கண்ணிச் சாற்றைச் சேர்த்து காய்ச்சித் தயாரிக்கப்பட்ட தைலத்தை தலைவலி முதலியவற்றுக்குத் தேய்க்கலாம். தலையில் தேய்த்தால் தலை முடி கருமையாகும். இந்தத் தைலத்தை உடலில் வலியுள்ள இடத்தில் தய்த்தால் வலி நீங்கும்.
எடையையும், உடல் பருமனையும், தொந்தியையும் கரைக்க விரும்புபவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கரிசலாங்கண்ணிக் கீரையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட கண்மை கண் நோய்களைத் தடுக்கிறது. இதன் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நீங்கும்.
———————————————————————————
குறிஞ்சான் கீரை
சிறுகுறிஞ்சான் மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் இதன் பயன்பாடு அதிகம். இது கொடி வகையைச் சார்ந்தது. மரங்களில் கொடியாகப் படரும். கசப்புச் சுவை கொண்டதால் இதனை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவதில்லை.
இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.
சிறுகுறிஞ்சான் வாதமொடு சீதத்தை நீக்கும்
மறுவுதிரம் இல்லாத மாதர்க்குறுமுலகில்
அத்தி சுரமும் அகலாக் கடி விடமும்
தத்தியக லர்த்தகர்க்குத் தான்
வாதசுரஞ் சன்னிசுரம் மாறாக் கபச்சுரமும்
பூதலம் விட்டோடப் புரியுங்காண்மாதேகேள்
அக்கரங்கள் தீர்க்கும் அதிசுரந்தா கந்தொலைக்குந் தக்க சிறு குறிஞ்சான்தான்
(அகத்தியர் குணபாடம்)
நீரிழிவு நோயின் தாக்கம் குறைய
நீரிழிவு நோயாளிகளின் முக்கிய உணவாக உட்கொள்ள வேண்டிய கீரை குறிஞ்சாக் கீரைதான். இன்று நம் நாட்டில் குறிப்பாக தென்தமிழ்நாட்டில் அதிக மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025ம் ஆண்டில் உலகில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உணவு முறையின் மாறுபாடே நீரிழிவு நோய் வருவதற்கு முக்கியக் காரணம். மேலும் உடல் உழைப்பின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
நீரிழிவு நோயாளிகளின் பாதிப்புகள் குறைய குறிஞ்சாக் கீரை மிகவும் உதவுகிறது. அதிக கசப்புத் தன்மை கொண்ட இந்தக் கீரை உடலின் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சர்க்கரை நோயின் பாதிப்பு ஏற்படாமல் வருமுன் காக்க குறிஞ்சாக் கீரை சிறந்த மருந்தாகும்.
குறிஞ்சாக் கீரையை நன்கு நீர்விட்டு அலசி, அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சிறிது நீர்விட்டு அவித்து சிறிது நேரம் அப்படியே ஊறவைத்து சாப்பிட வேண்டும்.
இவ்வாறு வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் குறையும்.
நாவற் பழக் கொட்டையையும், சிறுகுறிஞ்சான் கீரையையும் நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலையில் 1 குவளை தண்ணீருக்கு 1 தேக்கரண்டி பொடி வீதம் இட்டு காய்ச்சி கஷாயமாக்கி அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்க
உணவு முறை மாறுபாட்டாலும், நேரம் தவறி உணவு உண்பதாலும் வாயு சம்பந்தப்பட்ட உணவுகளை அடிக்கடி உண்பதாலும் சிலரின் வயிற்றில் வாயுவின் சீற்றம் மிகுந்து குடலின் உட்புறச் சுவர்களைப் பாதிக்கிறது. மேலும் மது, புகை, போதை வஸ்துக்களாலும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உண்டாகும்.
இவர்கள் குறிஞ்சாக் கீரையை பாசிப் பருப்புடன் சேர்த்து காரம் சேர்க்காமல் வேகவைத்து கடைந்து நெய் கலந்து உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் விரைவில் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.
உடல் வலுப்பெற
குறிஞ்சாக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோயின் தாக்கம் ஏதுமின்றி நல்ல வலுவுள்ள உடலைப் பெறலாம்.
பசியைத் தூண்ட
சிலர் எப்போது பார்த்தாலும் பசியில்லை என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் தினமும் குறிஞ்சாக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து உணவில் சேர்த்துக்கொண்டால் நன்கு பசியைத் தூண்டும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
உடல் சூட்டைத் தணிக்க
வாரம் இருமுறை குறிஞ்சாக் கீரையை உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடல் சூடு தணியும்.
இருமல், சுரம் நீங்க
கடும் சுரம், இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் குறிஞ்சாக் கீரையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வருவது நல்லது.
ஈரல் பலப்பட
குறிஞ்சாக் கீரையை வேகவைத்து அதனுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஈரலில் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.
மேலும் குறிஞ்சாக் கீரையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி நெறிகட்டிய இடத்தில் வைத்து கட்டினால் வலி குறையும்.
காணாக்கடி
எத்தகைய விஷக்கடியாக இருந்தாலும் குறிஞ்சாக் கீரையை கடிபட்ட இடத்தில் வைத்து கட்டியும், கீரையை கஷாயம் செய்து சாப்பிட்டால் விஷம் விரைவில் முறியும்.
———————————————————————————
அகத்திக் கீரை
செடி இனத்தைச் சேர்ந்த அகத்தி, தோட்டங்களில் குறிப்பாக நீர் தேங்கிய நிலங்களிலும், வெற்றிலைக் கொடிக் கால்களிலும் விளையும். அகத்தியில் சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என்ற சில வகைகள் உண்டு. பொதுவாக அகத்தி வெள்ளை நிறத்தில் பூக்கும். சிவப்பு நிறத்தில் பூக்கும் அகத்தி சிவப்பகத்தி என்று அழைக்கப்படுகிறது. சிறிது உப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட இக்கீரையை வேறு மருந்துகள் உண்ணும் காலங்களில் உண்ணக் கூடாது. ஏனெனில் மருந்துகளின் வீரியத்தை அகத்திக் கீரை குறைக்கவும் அழித்துவிடம் செய்யும். இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் கெட்டுப் போகும் வாய்ப்புண்டு. சொறி, சிரங்கும் தோன்றலாம். இரத்தம் குறைந்து இரத்த சோகை ஏற்படலாம். வயிற்று வலியும் பேதியும் உண்டாகலாம். காய்ச்சல் நேரத்தில் இக்கீரையைப் பிழிந்து அதன் சாற்றில் இரு துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி நீங்கும். சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைய உள்ளது. போதுமான பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. மலச்சிக்கல் நீங்கும். குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்துதலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும். இது வாயுவை உண்டாக்கும் இயல்புடையது. எனவே வாய்வுக் கோளாறு உள்ளவர்கள் இக்கீரையை உண்ணக் கூடாது.
பருப்புக் கீரை
பருப்புக் கீரையின் இலைகள் நீளவட்ட வடிவத்தில் பசுமை நிறமுடையதாகவும், தடிப்பாகவும் இருக்கும். இந்தக் கீரைச் செடி சுமார் 15 செ.மீ. உயரம் வரை வளரும். இந்தச் செடி நன்கு வளரத் தண்ணீர் அதிகம் தேவைப்படும். விதைகள் மூலமும், தண்டுகளை நட்டும் இந்தக் கீரையை இனவிருத்தி செய்யலாம்.
பருப்புக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. இந்தக் கீரையின் இலை, தண்டு அனைத்தையும் உணவாகப் பயன்படுத்தலாம். இதைப் பருப்புடன் சேர்த்து வேக வைத்துக் கடைந்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். பொரியலும் செய்யலாம்.
பருப்புக் கீரையை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் வேனிற்காலத் தலைவலி, சூட்டால் உண்டாகும் தலைவலி ஆகியன குணமாகும். இந்தக் கீரையைச் சாப்பிடுவதால் கல்லீரல் நோய்கள் தீரும். செயல் இழந்துபோன கல்லீரலை மீண்டும் செயல்படச் செய்ய மஞ்சள் கரிசலாங்கண்ணியைப் போலவே பருப்புக் கீரையையும் பயன்படுத்தலாம்.
பருப்புக் கீரையை வேறோடு பிடுங்கி, புளியங்கொட்டை அளவு மஞ்சள் சேர்த்து அரைத்து எலுமிச்சங்காய் அளவு எடுத்துத் தயிரில் கலந்து 40 நாட்கள் காலையில் மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மரத்தல், கல்லீரல் புண், கல்லீரல் பெருத்தல் போன்ற நோய்களும் மண்ணீரல் நோய்களும் நீங்கிவிடும்.
பருப்புக் கீரையின் தண்டை அரைத்து அடிவயிற்றில் பற்று போட்டால் வேர்க்குரு, கைகால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல் ஆகியவை குணமாகும். இந்தக் கீரையின் விதையை அரைத்து இளநீரில் கலக்கி உள்ளுக்குக் கொடுத்தால் சீதபேதியால் ஏற்படும் வயிற்றுளைச்சலும், முக்கலும் விலகும். மூத்திர எரிச்சலும் வெள்ளைப்படுதலும் கட்டுப்படும்.
இந்தக் கீரை குடல் புழுக்களை அகற்றுகிறது. மூல நோய் உள்ளவர்களுக்கு மலம் வலியில்லாமல் எளிதாகக் கழிய பருப்புக் கீரை உதவுகின்றது. இது சிறுநீரைப் பெருக்கும். மூலநோயைக் குறைக்கும்.
பருப்புக் கீரையின் சாற்றைப் பிழிந்து 50 முதல் 100 மி.லி. அளவு வரை தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளும் வெறும் வயிற்றில் பருகி வந்தால் இரத்தபேதி, சீதபேதி, மூத்திரத் தடை, வெப்பம், நீர்ச்சுருக்கு ஆகிய நோய்கள் நீங்கி உடல் சூடு தணியும்.
பருப்புக் கீரை இலையை அரைத்துத் தீப்புண், கொப்புளம், வெந்நீர்க் கொப்புளம் ஆகியவற்றின் மீது பூசினால் எரிச்சல் தணிந்து புண் விரைவில் ஆறும்.
மஞ்சளுடன் இக்கீரையைச் சேர்த்து அரைத்துக் கட்டிகளில் பூசினால் கட்டிகள் உடைந்து சீழ் வெளியேறி புண் ஆறும்.
———————————————————————————
கல்யாண முருங்கை இலை
2. கல்யாண முருங்கை இலையுடன் மூன்று மிளகு சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் சளி மற்றும் கப நோய்கள் குணமாகும்.
3. கல்யாண முருங்கை இலையுடன், ஊற வைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், உடல் சூடு, வெள்ளைப்படுதல், வெட்டைச்சூடு போன்ற குறைபாடுகள் தீரும்.
4. கல்யாண முருங்கை இலையுடன் சிறிது பார்லியைச் சேர்த்து அரைத்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குறையும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
5. கல்யாண முருங்கை இலையுடன் ஓமம், வாய்விளங்கம் இரண்டையும் சேர்த்து அரைத்து இரவில் சாப்பிட்டு வந்தால், அதிகாலையில் மலம் தாராளமாகக் கழியும்.
6. கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து, காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் தாமதித்த மாதவிலக்கு சீராகும்.
7. கல்யாண முருங்கை இலையுடன் சம அளவு அம்மான் பச்சரிசி இலையைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.
8. கல்யாண முருங்கை இலையுடன் கசகசா, உளுந்து இரண்டையும் மாதுளம் பழச்சாறு சேர்த்து அரைத்து தினமும் சாப்பிட்டால் ஆண்மை பெருகும். காமம் அதிகரிக்கும்.
9. கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்துப் பூசினால், படை சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
10. கல்யாண முருங்கை இலை, முருங்கை இலை, மிளகு, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இரத்த சோகை குணமாகும்.
———————————————————————————
முளைக் கீரை
முளைக் கீரை எங்கும் தாராளமாகக் கிடைக்கும். வருடம் முழுவதும் தடையின்றி கிடைக்கும்.
முளைக்கீரையை விதைத்த பின்னர் 45 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். அதற்கு மேல் வளர விட்டால் கீரை முதிர்ந்து தண்டு நார் பாய்ந்துவிடும். உண்ணுவதற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீரைகளில் முளைக்கீரையும் ஒன்று.
முளைக்கீரையில் வைட்டமின்களும், தாது உப்புக்களும் அதிக அளவில் இருக்கின்றன. குறிப்பாக சுண்ணாம்புச் சத்து நிறைய இருக்கிறது.
நல்ல மலமிளக்கியாகவும் அது விளங்குகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
முளைக்கீரையைப் பருப்புடன் நன்கு வேக வைத்து மசித்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
முளைக்கீரை உணவுக்குச் சுவையூட்டுவதுடன் பசியையும் தூண்டுகிறது. முளைக்கீரையை நன்கு கழுவிச் சிறிது வெங்காயம், புளி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவை சேர்த்து வேக வைத்துக் கடைந்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உட்சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் ஆகிய நோய்கள் குணமாகும். அதோடு கண்ணும் குளிர்ச்சியடையும்.
முளைக் கீரையைத் தொரர்ந்து சாப்பிடுவதால், சொறி, சிறங்கு முதலிய நோய்கள் குணமாகின்றன. இந்தக் கீரை வெப்ப சுரத்தைத் தணிக்கிறது.
முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும். முளைக் கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்துக்கள் இரத்தத்தை சுத்தி செய்து உடலுக்கு அழகையும் மெருகையும் ஊட்டுகின்றன.
இக்கீரையில் மட்டுமே எல்லா விதமான தாது உப்புக்களும் உள்ளதால் இதை நாள்தோறும் உணவுடன் சேர்த்துக்கொண்டால் ஒரு பரிபூரண உணவுக்குரிய எல்லாச் சத்துக்களையும் நாம் பெற முடியும்.
முளைக்கீரை காச நோயின் துன்பத்திலிருந்து விடுபட வைக்கும்.
Comments on this entry are closed.