காலங்கடந்த திருமணம் கவலை.. கண்ணீர்…

Post image for காலங்கடந்த திருமணம் கவலை.. கண்ணீர்…

in பொதுவானவை

திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதற்கு கணவன்- மனைவி ஆகிய இருவரும் ஒத்துப் போக வேண்டும். அதற்குரிய பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் இளந்தம்பதியினர் ஓரளவு ஒத்துப்போகிறார்கள். காலங்கடந்து திருமணம் செய்துகொள்கிறவர்கள், கருத்து ஒத்த தம்பதிகளாக வாழ்வதற்கான வாய்ப்பு குறைந்து வருகிறது.

அதற்கு காரணம், இருவருக்கும் வயது முதிர்ச்சியும்- பிடிவாத முயற்சியும் அதிகரிப்பதுதான். அதனால் ஒருவர் கருத்தை இன்னொருவர் ஏற்க மறுக்கிறார்கள். முற்காலத்தில் பெண்களை சீக்கிரமாக திருமணம் செய்துகொடுக்கும் வழக்கம் இருந்தது. அப்போதுதான் பெண்கள், புகுந்த வீட்டில் சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து வாழ்வார்கள் என்று சொல்லப்பட்டது.

கணவரைவிட மனைவி வயது குறைந்தவராக இருக்கவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதில் ஒரு விஷயத்தை ஆழ்ந்து கவனிக்கவேண்டும். பக்குவமான பருவத்திற்கு முன்பே செய்யப்படும் பால்ய விவாகமும் தவறானது. காலங்கடந்து செய்யப்படும் முதிர் திருமணமும் பிரச்சினைக்குரியது. `பருவத்தே பயிர் செய்’ என்பது விவசாயத்திற்கு மட்டுமல்ல திருமணத்திற்கும் பொருந்தும்.

காலங்கடந்த நாற்று கழனிக்கு உதவாது என்பதுபோல், காலங்கடந்த திருமணமும் வாழ்க்கைக்கு உதவாது. இந்த காலத்தில் ஆண், பெண் இருவரும் படித்து வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள். அது நல்ல விஷயம் தான். அதனால் திருமண வயதை தாண்டிய பின்னும் திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தள்ளித் தள்ளிப் போட்டுவிட்டு திருமணம் செய்து கொள்ள முன்வரும்போது, அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் வாழ்க்கை அமைவதில்லை. காலங்கடந்து திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினர், மீதமுள்ள காலத்தை வளமாக அமைத்துக் கொள்ள அவசரம் காட்டுகிறார்கள். இருவரும் தங்களுடைய வருமானம் முழுவதும் எதிர்கால சேமிப்பாக மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

அப்போது பெற்றோருக்கும், உறவுகளுக்கும் செய்யும் கடமைகளைக் கூட பெரிய பாரமாக நினைத்து விடுகிறார்கள். கணவர் தன் பெற்றோரை பராமரிப்பது மனைவிக்கு வெட்டிச் செலவாகத் தெரியும். மனைவி தன் பெற்றோரை பராமரிப்பது, கணவருக்கு வெட்டிச் செலவாகத் தெரியும். அதுவே தர்க்கம் உருவாக காரணமாகிவிடும்.

காலங்கடந்து திருமணம் செய்துகொள்கிறவர்கள், திருமணத்திற்கு முன்பு வெகுகாலம் சுதந்திரமாக வாழ்ந்து பழகிவிட்ட காரணத்தால் திடீரென்று ஒருவர் வாழ்க்கைக்குள் வந்து, தன்னை கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் தம்பதியினரில் ஒருவர் எடுக்கும் முடிவை மற்றவர் எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை. பெரும்பாலும் அவர்கள் தங்கள் பக்க நியாயத்தை முரட்டுத்தனமாக எடுத்துச் சொல்வார்கள்.

அதனால் மோதல் வெடிக்கும். இருவரின் பெற்றோரும் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்ற சிந்தனை, காலங்கடந்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினருக்கு பெரும்பாலும் ஏற்படுவதில்லை. அதனால் ஒருவரது பெற்றோரை இன்னொருவர் ஏதாவது ஒருவிதத்தில் குறை சொல்லத் தொடங்குவார்கள். அதுவும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

காலங்கடந்து திருமணம் செய்துகொள்ளும் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க முன் வருவதில்லை. தனித்துப் போகவும் முற்படுவதில்லை. தங்களை மற்றவர் வழிநடத்தவும் அனுமதிப்பதில்லை. இப்படிப்பட்ட மனநிலையில் அன்பு என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வாழ்க்கையில் அதிரடியான போராட்டங்களை ஆரம்பித்துவிடுவார்கள்.

வெகுகாலம் திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் எதிர்பாலினர் பலரிடம் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். அந்தப் பழக்கம் மிகவும் சகஜமாகி கொண்டு வரும் நிலையில் இதன் பிரதிபலிப்பு குடும்ப வாழ்க்கையில் விழும்பொழுது பல சிக்கல்கள் தோன்றுகின்றன.

இது ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கைக்கு உலைவைத்துவிடும். அத்தகைய குடும்பங்களில் அடிக்கடி பூகம்பங்கள் வெடிக்கும். அற்பத் தனமான காரணங்களுக்கெல்லாம் சண்டை வரும். ஆனால் அதன் மூலகாரணம் இன்னொன்றாக இருக்கும். காலங்கடந்த திருமணங்களால் குழந்தைப்பேறும் கேள்விக்குறியாகிறது.

இது அவர்களுடைய திருமண வாழ்வை சிதைத்து எதிர்காலத்தை பாதித்து விடும். எப்போதும் புதுமணத் தம்பதிகள் என்றால் மனதில் குதூகலமும் ஆனந்தமும் இருக்கும். ஆனால் காலங்கடந்து திருமணம் செய்து கொண்டால் அந்த குதூகலத்தையோ, நாணத்தையோ காண முடியாது. அதற்கு பதிலாக அகங்காரமும், ஆதிக்கமும் தான் மேலோங்கி நிற்கும்.

இது மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு உதவாது. காலங்கடந்த திருமணங்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மகிழ்ச்சியைத் தராது. வேறுவழியில்லாமல் திருமணம் செய்துக் கொள்ள வேண்டியிருந்தால் பெண், அந்த வாழ்க்கைக்கு தக்கபடி தன்னை பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும்.
அனுசரித்து செல்லவேண்டும். அது நாள் வரை வாழ்ந்த வாழ்க்கைக்கும் இனி வாழப் போகும் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ளவேண்டும். இது ஆணுக்கும் பொருந்தும். திருமணத்தில் காலதாமதம் ஒரு குறைதான். ஆனால் அந்த குறையே வாழ்க்கையை கறையாக்கிவிடாத அளவுக்கு வாழவேண்டும்.

மாலை மலர்

{ 4 comments }

gani January 25, 2013 at 11:27 pm

insha allah i will marrie quickly

rabiya shazad June 12, 2014 at 6:55 pm

its 100% true

NISAR AHAMED September 11, 2015 at 8:21 pm

இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற அருமையான பதிவு.

RAJA MOHAMMED November 15, 2018 at 4:27 am

சிறுவர்கள்,மாணவர்களுக்கான தலைப்புகளிலேயும் பதிவுகள் போடலாமே,,

Comments on this entry are closed.

Previous post:

Next post: