கற்றோருக்கிடையே கருத்து வேறுபாடுகள்!

Post image for கற்றோருக்கிடையே கருத்து வேறுபாடுகள்!

in பிரிவும் பிளவும்

“எவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும் பிளவுண்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம்… அவர்களுக்கே தாம் மகத்தான வேதனையுண்டு. (அல்குர்ஆன் 3:105) 

தூய இஸ்லாத்தை கருத்து வேறுபாட்டுத் தீயிலிட்டுப் பொசுக்கும் திருப்பணியைத் தொடர்ந்து வரும் மார்க்கம் கற்றோரே (ஆலிம்களே)! நீங்கள் கற்றது உண்மையான இஸ்லாமிய கல்வியயன்றால் உங்களிடம் ஏனித்தனை வன்மம்? மற்றவர்களுக்குப் பிரச்சனையேற்பட்டால் தீர்த்து வைக்கும் பொறுப்பேற்ற நீங்கள் இன்று சமுதாயத்திற்குப் பெரும் பிரச்சனையாகி விட்டீர்களே…. அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டிய நீங்கள்! இன்று வேற்றுமையையல்லவா விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! 

நீதியின் அரியாசனத்தை அலங்கரிக்க வேண்டியவர்கள் குற்றவாளிக் கூண்டிற்கு விரைந்து கொண்டிருக்கும் கொடுமை உங்களுக்கு இதமாகவா இருக்கிறது? சமுதாயத்தில் ஒருவர் கூடவா இதன் கடமையை இன்னும் உணராமலிக்கிறீர்கள்? உணர்ந்தோர் ஒரு சிலரும்-உணர்த்த முற்படாமல் நமக்கேன் இந்த வீண் வம்பு என்று ஒதுங்கியிருக்கிறீர்கள். 

மார்க்கம் கற்றவர்களே! சற்று சிந்தியுங்கள்-பொறுமையாக….!
நீங்கள் முட்டி மோதி பிளவுபட்டுக் கொண்டிருக்கும் இழுக்கு-உங்களோடு மட்டும் ஒழியவில்லை. மாறாக அந்த அழுக்கு-இஸ்லாத்தை அசுத்தப்படுத்துவதை நீங்கள் அறியவில்லையா?  நீங்கள் கற்றது உண்மையில் தீனுல் இஸ்லாம் ஒன்றேயெனில் நீங்கள் பல்வேறு பிரிவுகளாய் செயல்படுவதேன்? 

உங்களுடைய கருத்து வேறுபாடு-சமுதாயத்தை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருப்பதும் நீங்கள் அறியாததல்ல.
சமுதாயம் சிதறினால்தான் உங்கள் பிழைப்பை வெற்றிகரமாய் தொடர முடியும் என்ற வரட்டு முடிவுக்கு வந்து விட்டீர்களா? அறிஞர்கள் என்ற பட்டயத்திற்கு சொந்தம் கொண்டாடும் நீங்கள் அறிவிலிகளாக மாறிக் கொண்டிருப்பதை அறியவில்லையா? சிறு-சிறு சில்லறை விஷயங்களில் வேறு பட்டாலே சிதறும் சமுதாயத்தை இன்று மூலக் கொள்கைகளில் மோதலையேற்படுத்தி அதிர வைத்துக் கொண்டிருக்கிறீர்களே? நியாயம்தானா? அறியாத மக்கள் உண்மை புரிய உழைக்க வேண்டிய நீங்கள் அந்த மக்களைக் குழப்பத்திலாழ்த்தி அலைக்கழிக்கலாமா? 

நாங்கள் மற்றதெல்லாம் கற்றோம். மார்க்கத்தைக் கற்கவில்லை. எல்லோருக்கும் பொதுவுடமையாக வேண்டிய இஸ்லாமியக் கல்வியை உங்களுக்கு மட்டும் தனியுடமையாக்கியது மட்டுமே நாங்கள் செய்த தவறு…! இமாலயத் தவறு! ஒப்புக் கொள்கிறோம் இப்போது காலம் கடந்தாவது. அதற்காக நீங்கள் அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் அப்பாவி மக்களை உங்கள் மோதலுக்கு பலியாக்கிக் கொண்டிருக்கிறீர்களே! 

ஓ! எத்துணை கொடூர தண்டனை!
அன்று! இறைத் தூதர்(ஸல்) அவர்கள் அந்த காரத்தில் மூழ்கிக் கிடந்த அப்பாவி மக்களுக்கு அறிவொளியல்லவா பாய்ச்சினார்கள். ஆனால் நீங்கள் இன்று! இறை வாக்கிற்கு முரண்பட்டாலும் உங்கள் வாக்கை வேதவாக்கென்றும்… 

நபி வழிக்கு மாற்றமாய் நீங்கள் நடைபோட்டாலும் உங்கள் வழியே நபி வழியென்றும் அப்பட்டமாய் நம்பும் அப்பாவி மக்கள்!
ஓ..! இந்த சமுதாய மக்களுக்கு உங்கள் மேல் எத்தனை நம்பிக்கை! உறுதியான அசைக்க முடியாத நம்பிக்கை!
நீங்கள் தவறிழைக்க மாட்டீர்கள்!
நீங்கள் தவறுரைக்க மாட்டீர்கள்! 

உங்களிடம் அல்லாஹ்மேல் ஆணையிட்டுக் கேட்கிறோம்! நீங்கள் இந்த நம்பிக்கைக்கு உரித்தானவர்கள்தானா…?
உங்கள் நடவடிக்கைகள் இந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிந்து கொண்டிருக்கின்றன; இதை நீங்கள் நன்கறிந்திருந்தும் அறியாதோர் போல் வாளாவிருக் கின்றீர்களே….! 

“”ஏன் திருடினாய் உன் எஜமானர் உன் மேல் பரிபூரண நம்பிக்கை வைத்திருந்த நிலையில்?” என்று குற்றவாளிக் கூண்டிலேற்றப்பட்ட திருடனி டம் நீதிபதி வினவியபோது… 

“அப்படியொரு நம்பிக்கை வைத்ததால் தான் என்னால் திருட முடிந்தது’ என்று திருடன் தன் தவறை நியாயப்படுத்திய சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது. 

உங்கள் மேல் நாங்கள் காட்டும் அபரிமித மரியாதையும், மார்க்கத்தைச் சரியாக உணர்ந்தவர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும்…எங்கள் மீது எதையும் திணித்து விடலாம்! நீங்கள் கூறும், எழுதும் எதையும் எவ்வித மறுப்புமின்றி ஏற்றிடுவோம்! என்ற உறுதி உங்களுக்கு ஏற்பட்டு விட்டது. 

மக்கள் அறியாமையால் ஏமாறுகிறார்கள், எப் படி வேண்டுமானாலும் அவர்களை ஏமாற்றலாம்.காட்டுவோம் கைவரிசையை.. என்று மார்க்கம் குறித்து எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்; எழுதலாம்; விளக்கலாம் என்று மக்களின் நம்பிக்கையைத் துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கிறீர்களே…! நியாயம் தானா? 

மார்க்கம் கற்றவர்கள் அனைவரும்-எல்லா வகை விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்ட-அப்பழுக்கற்றவர்கள், என்ற தப்பான எண்ணத்தை மக்களின் மனதில் பதித்து-நீங்கள் செய்து வரும் தவறுகளை வெகு சாமர்த்தியமாக மறைத்து வெற்றிகரமாய் உங்கள் பிழைப்பைத் திட்டமிட்டு நடத்திக் கொண்டு வருகிறீர்கள். 

நீங்கள் இஸ்லாமியக் கொள்கைக் கோட்டையைத் தகர்க்கும் நேரங்களில்-அதைத் தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினாலும்-எடுத்துக் காட்டிய வரை எதிரியாகப் பாவித்து-அவர்மீது வீண்பழி சுமத்தி மக்கள் முன் குற்றவாளியாக்கி-உங்கள் தவறை நியாயப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்கிறீர்களேயன்றி, தவறை தவறென்றுணர்ந்து திருந்த முன் வருவோர். (அரிதிலும் அரிது) விரல் விட்டெண்ணுமளவே…! 

…நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கவும், சத்தியத்தை அசத்தியத்தைக் கொண்டு கலக்கவும் செய்யாதீர்கள்.” (அல்குர்ஆன் 2:42) 

ஒன்றே தெய்வம்-அல்லாஹ்…!
ஒன்றே நமது நெறிநூல்… அல்குர்ஆன்…!
நமது வழிகாட்டியும் ஒருவரே… இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மட்டுமே…!
இவை உங்கள் பேச்சிலும் எழுத்திலும் முழக்கத்திற்குரிய தத்துவமாய் மாற்றப்பட்டு விட்டனவேயன்றி… இன்று இஸ்லாத்தின் பெயரால் உங்கட்கிடையே எண்ணிலடங்கா கொள்கை வேறுபாடுகள் நாளும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன. ஏனிந்த வேறுபாடுகள்…? எப்படி யாரால் இந்த வேறுபாடுகள் எழுகின்றன? என்று என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா? 

இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளில் … மார்க்கம் கற்றவருக்கு… மார்க்கம் கற்றவர் மாறுபடுவதேன்?
ஒரே விஷயத்திற்குப் பல்வேறு மாறுபட்ட .. ஒன்றிற்கொன்று முற்றிலும் முரண்பட்ட விளக்கங்கள்….!
ஆளுக்கொரு கொள்கை…!
வேளைக்கொரு ஃபத்வா…!
நாளுக்கொரு கருத்து…! 

ஒரே மதரஸாவில் ஒன்றாக ஓதி… ஒன்றாக தஹ்ஸீல் (பட்டம்) ஆகி… அதே மதரஸாவில் ஒன்றாகப் பணி புரியும் இரு பேராசிரியர்கள்…! இஸ்லாமியக் கொள்கை சம்மந்தப்பட்ட எந்த விஷயமானாலும் சரி…ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்ததில்லை. மக்கள் இருவரிடமும் அபிமானம் பூண்டவர்கள்! ஒருவருக்கு இருவரிடம் கேட்டு விஷயத்தை விளங்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு…! ஒரே விஷயத்திற்கு இருவரும் கொடுக்கும் மாறுபட்ட விளக்கங்கள்…! இருவரும் தத்தமது கூற்றே சரியயன வாதித்து விளக்கம் கேட்க வந்தவரை, அப்பாவியைக் குழப்பத்திலாழ்த்திவிடுவர். 

ஏன் விளக்கம் பெற வந்தோம்…! விளக்கத்திற்கு பகரமாய் குழப்பமல்லவா எமக்குப் பரிசாய் கிடைத்திருக்கிறது! ஏமாற்றம். இறுதியில் மிஞ்சுவது வேதனை! எதைத் தெரிய விழைந்தாலும் குழப்பம் தான்! ஏனிப்படி…? இது விளக்குபவர் குறை என்பதை உணராத மக்கள்-இஸ்லாத்தில் எதற்கும் தெளி வில்லை போல் தெரிகிறது! மதரஸாவில் ஓதி பட்டம் பெற்றவர்கள் நிலையே இதுவெனில் ஒன்று மறியாத நாம் எப்படி உண்மையை உணர முடியும்…? குழப்பம் நிறைந்த விஷயங்களில் ஒளிந்திருக்கும் உண்மையை எந்த அளவு கோலைக் கொண்டு பாகுபடுத்தி உண்மையை உணர்வது…? நமக்கேன் இந்த வேண்டாத வேலை…? இறையருளிய எளிய இனிய மார்க்கம், பாமர மக்கள் முன் பூதகரமாய், கடுமையாய், சிக்கல் நிறைந்த தாய் சித்தரிக்கப்படுவதால், மக்கள் மார்க்கத்தை அறிவதிலிருந்து ஒதுங்கிக் கொண்டு வருகிறார்கள் பல இடங்களில்…. 

ஒரு ஊரின் நிலைதானிப்படி…! மற்ற ஊர்களில் இந்த நிலையிருக்காது என்று அங்குள்ளோரை அணுகினாலும் எங்கும் இதே நிலைதான் நீடிக்கிறது என்பது மிகவும் வேதனைக்குரிய கசப்பான உண்மை. நாடெங்கிலும் இதே நிலை தான்… இன்றளவும்.
மதரஸாக்களில் வெளியாகும் ஃபத்வா (மார்க் கத் தீர்ப்புகள்) மவ்லவிகள், மவ்லவிகள் அல்லாதார் வெளியிடும் கருத்துக்கள்: மேடைகளில் முழக்கம் செய்யப்படும் இஸ்லாமியக் கருத்துக்கள் இவையனைத்தும் ஒன்றிற்கொன்று முரணாகவோ அல்லது சில்லறை அபிப்பிராய பேதங்களை உண்டாக்குகிறதேயன்றி ஒருமித்தக் கருத்தை உருவாக்க உதவவில்லை. 

இதனால் இன்று நம் சமுதாயத்தில் பல்வேறு கொள்கைப் பிரிவுகள் பல்வேறு பெயர்களில் உருவாகி வருகிறது. ஒரே கொள்கைப் பிரிவார் மற்றொரு கொள்கைப் பிரிவாரை எதிரியாக-விரோதியாக பாவிக்கும் சூழ்நிலையும் கருக் கொண்டுள்ளது. ஆங்காங்கே தாக்குதல்களும் நிகழ்ந்துள்ளன. இதற்கெல்லாம் ஒட்டுமொத்த மாய் பலியாகிக் கொண்டிருப்பது மார்க்கமறியா மக்கள் கூட்டம்தான். மார்க்கம் கற்றவர்களால் உருவாக்கப்படும் கருத்து வேறுபாடுகள் தான் இதற்கு முக்கியக் காரணம் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. 

இதைத் தடுத்து நிறுத்த சமுதாயம் முழுமையும் ஒட்டுமொத்தமாய்-முழு மூச்சுடன்-போர்க்கால அவசரத்துடன் இயங்க முன்வர வேண்டும். குர்ஆன், ஹதீஸை நேரடியாக விளங்கிச் செயல் பட வேண்டும். மாற்றான் நமது ஷரீஅத்தில் சிறு மாறுதல் செய்ய முனைந்தபோது ஒன்றுபட்டு வெற்றி கண்டதுபோல்… நமது மார்க்கம் கற்றோரே… இஸ்லாத்தின் கொள்கைகளைப் புரட்ட முனைந்திருக்கும் இந்த இக்கட்டான காலகட்டத்தில்… நாம் இன்னும் அதிவேகத்துடனும், விவேகத்துடனும் செயல்பட்டு….
இறையருளிய இஸ்லாமிய வாழ்க்கை நெறி ஒன்றே என்று உலகிற்கு உணர்த்தக் கடமைப் பட்டுள்ளோம். 

“மேலும் நீங்கள் அனைவரும் ஜமாஅத்தாக அல்லாஹ்வின் கயிற்றைக் கெட்டியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடவும் வேண்டாம்.” (அல்குர்ஆன் 3:103) 

முஹிப்புல் இஸ்லாம் 

{ 4 comments }

haja jahabardeen February 18, 2011 at 3:20 am

அஸ்ஸலாமு அழைக்கும் ! இந்த கட்டுரையை எழுதிய அன்பு சகோதர்ரக்கு அல்லாஹ்வின் அருளும் உதவியும் கிடைக்கவேண்டும் ! நெத்தி அடி கேள்விகள்! இதை பார்த்து திருந்தவேண்டும் என்பதுதான் என் ஆசை எல்லோருடைய எதிர்ப்பார்பும் கூட .இதுபோன்ற விஷயங்களை என் ப்லொக்கில் போடா ஆசைபடுகிறேன் .உங்கள் இணையதளத்தில் உள்ள சில விஷங்களை என் ப்லொக்கில் போடுகிறேன் எல்லோரும் பார்ப்பார்கள் என் நோக்கம் அல்லாஹ் வின் மார்க்கமான இந்த இஸ்லாத்தை நல்ல முறையில் மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும் ,அல்லாஹ்க்கும் அவன் தூதர்க்கும் மட்டும் நாம் வழி படவேண்டும் !அல்லாஹ் நமக்கு அருள் செய்வானாக !ஆமீன் … PLEASE VISIT THIS BLOG(ISLAM-BDMHAJA.BLOGSPOT.COM

அலைக்கும் ஸலாம், தாங்கள் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம் அனுமதி தேவையில்லை.

Aurangazeb February 18, 2011 at 10:40 pm

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பார்ந்த சகோதரருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த கால கட்டத்தில் மிகவும் அவசியமான ஒரு விசயத்தை தெளிவாகவும் அழகாகவும் யாரையும் குறிப்பிடாமலும் விளக்கியுள்ளீர்கள். ஒற்றுமை என்ற கயிற்றை என்று நம் மார்க்க அறிஞர்கள் பற்றி பிடிக்கிறார்களோ அன்று இன்ஷாஅல்லாஹ் இந்த சமுதாயம் மிகப்பெரும் சக்தியாக இருக்கும். குறிப்பாக தமிழ் கூறும் மார்க்க அறிஞர்களிடம் தான் இன்று இந்த செய்தி போய் சேரவேண்டுமென்று நான் கருதுகின்றேன். மேலும் சகோதரரிடம் ஒரு அனுமதி வேண்டுகோள் : உங்களுடைய கருத்துகளோடு சில விளக்கங்களையும் சேர்த்து துண்டு பிரசுரம் செய்து விநியோகம் செய்யலாம் என்று நினைகிறேன். அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நல் அருள் புரிவானாக…..
அன்புடன்
உங்கள் சகோதரன்
அவ்ரங்கசீப்

இந்த இணையத்தில் சகோதரர்கள் தங்கள் கருத்துக்களை மிக அழகிய முறையில் தெரிவித்து வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ். ரீட் இஸ்லாம் இணயதளத்தில் எவரும் பதிவு எடுத்து கொள்ளலாம் எங்களின் அனுமதி தேவை இல்லை.
admin

haja jahabardeen February 19, 2011 at 3:16 am

jazakallahu khair for read islam

fathima July 3, 2011 at 1:36 am

assalamu alaikum.jazakallah nice article,i want to know about cartoon pictures in islam.hadees

Comments on this entry are closed.

Previous post:

Next post: