இமாம் ஹஸன் பஸரீ அவர்களின் காலத்தில், அவர்கள் ஹஜ்ஜுச் செய்யச் சென்றபோது, காஃபதுல்லாஹ்வை அதன் இடத்தில் காணவில்லையாம்! எங்கே என்று விசாரித்த போது ராபியாபஸரிய்யா அவர்களை வரவேற்கச் சென்றுவிட்டதாகச் தெரிந்ததாம். இது கதை சுருக்கம். இந்தக் கதை பல வகைகளில் விரிவு படுத்தப்பட்டு பலவிதமக சொல்லப்படுகின்றது. இந்த கதை சரியானது தானா! என்று நாம் ஆராய்வோம்!
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுச் செய்வதற்காக ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு மக்காவுக்குத் தம் தோழர்களுடன் புறப்பட்டனர். ஹுதைபியா என்ற இடத்தில் வைத்து அவர்கள் தடுக்கப்படுகின்றார்கள்! கஃபதுல்லாஹ்வை சந்திக்க வெண்டும் என்ற பேராசையில் நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் வந்திருந்தனர். அந்த நேரத்தில் மக்கத்து காபிர்கள் தடுத்துவிட்டனர். கஃபதுல்லாவை எவருக்காகவும் நடந்து வரக் கூடியதாக இருந்தால், இந்த இக்கட்டான நிலையில் நபி (ஸல்) அவர்களைத் தடுத்தபோது அவர்களை நோக்கி வந்திருக்க வேண்டுமே! அல்லாஹ்வின் திருத் தூதருக்காக நடந்து வராத கஃபதுல்லா ராபிஆபஸரியா(ரஹ்) அவர்களுக்காக, அதுவும் எவ்வித அவசியமும் இல்லாமல் அவர்களை வரவேற்பதற்காக சென்றதென்றால் இதை எவராவது ஏற்க இயலுமா? எண்ணிப் பாருங்கள்.
அதன் பின் இறுதி ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்களும், அவர்களின் ஆருயிர்த் தோழர்களும் மக்காவுக்குச் சென்றபோது மக்காவின் எல்லையில் நபி (ஸல்) அவர்களையும், அவர்களின் தோழர்களையும் வரவேற்க கஃபதுல்லா மக்காவின் எல்லைக்கு இடம் பெயர்ந்து வரவில்லை! ஒருவரை வரவேற்பதற்காக காஃபதுல்லா இடம் பெயர்ந்து வருமென்றால் அல்லாஹ்வின் தூதர் அல்லவா வரவேற்கப்பட மிகவும் தகுதி வாய்ந்தவர்கள்!
அதன்பின் நாற்பெரும் கலீபாக்கள், ஸஹாபாக்கள், தாபியீன்கள், நாற்பெரும் இமாம்களெல்லாம் ஹஜ்ஜுச் செய்ய வந்திருக்கின்றார்கள்! அவர்களை எல்லாம் வரவேற்க கஃபதுல்லா இடம் பெயர்ந்து வரவில்லையே! இதை எப்படி ஏற்க இயலும்? திருக்குர்ஆன் வசனங்களும் இந்தக் கதை பொய்யானது என்பதை மிகவும் தெளிவாக உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
கஃபதுல்லாவை இப்ராஹீம் (அலை), இஸ்மாயில் (அலை) இருவரும் கட்டி முடித்தபோது அவர்களிடம் கஃபதுல்லாவின் நோக்கம் என்ன என்பதை அல்லாஹ் தெளிவாக சொல்கிறான். எவரையும் வரவேற்க இடம் பெயர்ந்து செல்வதை அதன் நோக்கங்களில் ஒன்றாக ஆக்கவில்லை.
(கஃபா என்னும்) வீட்டை மக்களுக்கு ஒதுங்கும் இடமாகவும் நாம் ஆக்கினோம். இன்னும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்.(அல்குர்ஆன் 2:125)
கஃபதுல்லவை நோக்கி மக்கள் வரும்போது மக்களின் ஒதுங்குமிடமாக அதை அல்லாஹ் ஆக்கியுள்ளதாக கூறுகிறான். கஃபதுல்லாவைத் தேடி மக்கள் செல்லும் போது அது அங்கே இல்லையானால் மக்களுக்குச் சிறிது நேரம் அது ஒதுங்குமிடமாக இல்லாமல் போகின்றதே! அல்லாஹ்வின் உத்தரவாதத்தைப் பொய்யாக்கக் கூடிய இந்தக் கதையை யாராவது நம்ப இயலுமா?
இன்னும் என் வீட்டைச்சுற்றி வருபவர்கள், தனியாக அமர்ந்து தியானிப்பவர்கள், ருகூவு செய்பவர்கள், சுஜூது செய்பவர்கள் ஆகியோருக்குத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும் என்று இப்ராஹீமி டமிருந்தும் இஸ்மாயிலிடமிருந்தும் உறுதிமொழி வாங்கினோம் (அல்குர்ஆன் 2:125)
தவாபு செய்பவர்கள், அங்கே தொழ வருபவர்கள், தியானிப்பவர்கள் ஆகியோருக்காகவே கஃபதுல்லாவை நிர்மானிக்கப்பட்டது என்று அதன் நோக்கத்தையும் அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான். ஆனால் இந்த கதையின்படி திக்ரு செய்வதற்காகவும், தவாபு செய்வதற்காகவும், தொழுவதற்காகவும் அங்கே சென்று ஹஸன் பஸரீ (ரழி)அவர்களுக்காகவும், அவர்களைப் போன்ற பல்லாயிரம் மக்களுக்காகவும் கஃபதுல்லா அங்கே இருக்கவில்லை. அதாவது எந்த நோக்கத்திற்காக கஃபாவை அலலாஹ் நிர்மாணிக்கச் செய்தானோ அந்த நோக்கத்திற்காக கஃபா அங்கே இல்லை என்று இந்தக் கதை உணர்த்துகின்றதே! இது எப்படி உண்மையாக இருக்க முடியும்?
பக்கா (என்ற மக்கா)வில் உள்ள அந்த வீடுதான், (இறைவணக்கத்துக்கென) மக்களுக்காக வைக்கப்பட்ட முதல் வீடாகும். (அல்குர்ஆன் 3:96)
இந்தத் திருவசனம் கஃபதுல்லா மனிதர்கள் இறைவனை வணங்குவதற்கென ஒரு இட்த்தில் வைக்கப் பட்டிருப்பதையும், கஃபா மக்கள் அனைவருக்கும் பொதுவனது. எந்த தனி நபருக்கும் விஷேச மரியாதை செய்ய நடந்து வராது என்பதையும் உனர்த்துகின்றது.
அது பரகத்து மிக்கதாகவும், உலக மக்கள் அனைவருக்கும் நேர் வழியாகவும் இருக்கிறது, (அல்குர்ஆன் 3:96)
மக்கள் அனைவருக்கும் நேர்வழியாக இருக்கின்ற மக்கள் அனைவருக்கும் பரக்கத்து நிறைந்ததாகவும் இருக்கின்ற கஃபதுல்லாவைத்தான் மக்கள் தேடிச் செல்லவேண்டும் என்பதை நமக்கு விளக்குகின்றது. இந்தக் கதையின்படி பரக்கத்தைப் பெறுவதற்காக அதை தேடிச் சென்றுள்ள மக்களுக்காக காட்சிதரவில்லை என்றால் குர்ஆனின் உத்தரவாதம் இங்கே பொய்யாக்கப்பட்டுள்ளது.
இன்னும் அதற்குரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கின்ற மக்கள் அவ்வீடு செல்ல வேண்டும் என்பதை அல்லாஹ் கடமையாக ஆக்கிவிட்டு, அந்தக் கடமையை நிறைவேற்ற அவ்வீட்டைத் தேடி வருகின்ற மக்களுக்காக அந்த இடத்தில் அல்லாஹ் வைக்காமலிருப்பானா? என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவ்வீடு எவரையும் தேடி வராது என்பதையும் இந்தத் திரு வசனம் உணர்த்துவதை நாம் காணலாம்.
இந்தக் கதை திருக்குர்ஆனின் வசனங்களுடன் நேரடியாகவே மோதுகின்றன. அல்லாஹ்வின் நோக்கத்தையும், அவனது உத்தரவாதத்தையும் பொய்ப்படுத்துகின்றது.
அல்லாஹ்வின் கூற்றுக்கு முரணாக இருக்கும் இந்தக் கதை எப்படி உண்மையாக இருக்க இயலும்? எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக பின்வரும் இறை இவசனம் மிகவும் தெளிவகவே இந்தக் கதையை பொய்யாக்கி விடுகின்றது.
அல்லாஹ் சங்கை பொருந்திய வீடாகிய கஃபாவை மனிதர்களுக்கு நிலையான தலமாக ஆக்கியிருக்கின்றான். ( அல்குர்ஆன் 5:97)
இந்த திரு வசனத்தில் கியாமன் லின்னாஸ் மக்களுக்கு நிலையான தலமாக ஆக்கிவிட்டதாக அல்லாஹ் ஆணி அடித்தாற்போல் சொல்லி விடுகின்றான். மனிதர்களுக்காக அது ஒரு இடத்தில் நிலையாகவே இருக்கும், இடையில் இடம் பெயர்ந்து செல்லாது என்பதை மிகவும் தெளிவாகவே அல்லாஹ் சொல்லி விடுகின்றான். இந்தக் கதை பொய்யானது. ஒரு முஸ்லிம் இதை நம்பக்கூடாது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
மனிதர்களை உயர்த்துவதற்காக அவர்களின் மரணத்திற்குப்பின் பல கதைகள் கட்டிவிடப்படுவது வாடிக்கையாகவே நடந்து வருவதாகும். ஆனால் ரபியா பஸரிய்யா(ரஹ்) அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் வாழ்ந்திருந்த காலத்திலேயே இது போன்ற கதைகள் கட்டிவிடப்பட்டன. இதை செவியுற்ற ராபிஆ பஸரிய்யா(ரஹ்) அவர்கள் இவற்றைக் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்! இவை ஷைத்தான் மக்களுடன் விளையாடுகிறான் என்று கூறிவிட்டார்கள். இந்தக் கதையின் நாயகியாகிய அவர்களே திட்டவட்டமாக இது போன்ற கதைகளை மறுத்துள்ளது இந்தக் கதை பொய் என்பதற்கு போதுமான சான்றாகத் திகழ்கின்றது.
ராபிஆபஸரிய்யா (ரஹ்) அவர்கள் இப்படி மறுத்துள்ளதை ஸனதுடன் இமாம் இப்னுல் ஜவ்ஸீ(ரஹ்) அவர்கள் தனது தல்பீஸு இப்லீஸ் என்ற நூலில் 383 ஆம் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.
திருகுர்ஆனுடன் மோதும் இதுபோன்ற கதைகளை நம்புவதும், பேசுவதும் குர்ஆனையே மறுப்பதாகும். இதுபோன்ற பொய்களை நம்புவதைவிட்டும் அல்லாஹ் நம்மைக் காத்தருள்வானாக! ஆமீன்
P.ஜெய்னுல் ஆபிதீன்
{ 2 comments }
மாஷா அல்லாஹ் !
There are so many unbelievable fabricated stories spread over among our muslims. Most of our people believe these stories and act accordingly. Because we are not reading and following Quran and Hadeeth(sunna). So we have to try our best to get in touch with Al Quran and sunna, then we can get throw away these kind of non sense stories.
Comments on this entry are closed.