ஓதுவோம் வாருங்கள்! -5

Post image for ஓதுவோம் வாருங்கள்! -5

in அனாச்சாரங்கள்,மூடநம்பிக்கை

புர்தாவில் நிச்சயமாக இவ்வுலகமும், மறு உலகமும் (நபியே!) உங்களின் நன்கொடைதான் மேலும் லவ்ஹுல் மஹ்பூழில் உள்ள ஞானம் உங்கள் ஞானங்களில் ஒரு சிறுபகுதிதான் என்னும் கவிதை அடியின் முற்பகுதியை குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் அலசிப் பார்க்கும் பொழுது முற்றாக அவ்விரண்டிற்கும் அப்பாற்பட்ட நிலையில் அவர் பாடியுள்ளார் என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது. சுருக்கமாகக் கூறினால் குர்ஆனின் கருத்தையே தலைகீழாகப் புரட்டியிருக்கிறார்.

குர்ஆன் கூறுகிறது, அவன்தான் உங்களுக்கென்றே பூமியிலுள்ளவை அனைத்தையும் படைத்தான். (அல்குர்ஆன் 2:29)

(நபியே!) நாம் உம்மை அகில உலகத்தாருக்கும் அருட்கொடையாகவே அன்றி அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 21:107)

ஆனால் இவரோ (நபியே!) “நிச்சயமாக இவ்வுலகமும் மறு உலகமும் , உங்களின் நன்கொடைதான்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுவதன் மூலம் அல்லாஹ் என்னுடைய நன்கொடை என்று எவற்றைச் சொல்கிறானோ அவை அனைத்தையும் நபி(ஸல்) அவர்களின் நன்கொடை என்பதாகச் சிறிதும் வாய் கூசாமல் கூறுகிறார் இப்புலவர்.

அல்லாஹ் மேற்கண்ட இரு வசனங்களில் மக்களுக்காக இவ்வுலகத்திலுள்ளவை அனைத்தையும் நன்கொடையாகக் கொடுத்திருப்பதோடு இவர் கூறும் அந்த அண்ணல் நபி(ஸல்) அவர்களையும் சேர்த்து அவன் “என்னுடைய அருட்கொடை” என்று கூறுகிறான்.

இனி அவரது அப்பாடலில் உள்ள பிற்பகுதியான “வல்ஹுல் மஹ்பூழில் உள்ள ஞானம், உங்கள் ஞானங்களில் ஒரு பகுதி தான்” என்பதை குர்ஆனின் அடிப்படையில் அலசிப் பார்ப்போம்.

(நபியே!) இவையெல்லாம் (உமக்கு) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும். இவற்றை நாம் உமக்கு வஹிமூலம் அறிவிக்கிறோம். (அல்குர்ஆன் 3:44)

இதில் அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்கு மறைவான பல விஷயங்களிருக்கின்றன என்பதையும் அவற்றில் அவன் வஹி மூலம் அறிவித்தவற்றை மட்டும் தான் அவர்கள் அறிய முடியுமே அன்றி சுயமாக அம்மறைவான விஷயங்களை அறிந்து கொள்ள இயலாது என்பதையும் தெளிவு படுத்துகின்றான்.

(நபியே!) நீர் கூறும் என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியவுமாட்டேன். (அல்குர்ஆன் 6:50)

அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன, அ(ம் மறைவான)வற்றை அவனன்றி எவரும் அறியார். (அல்குர்ஆன் 6:59)

இவ்விரு திருவசனங்களிலும், “மறைவானவை அனைத்தையும் அல்லாஹ்தான் அறிவான். நான் அவற்றை அறிந்தவனாக இல்லை” என்பதை மக்களிடம் தெளிவாக சொல்லிவிடும்படி தனது நபிக்குக் கட்டளையிடுகிறான் என்பதை நாம் புரிந்து கொண்டும், பூஸிரி சொல்கிறார் என்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்கு மறைவானவை அனைத்தும் தெரியும் என்று நம்புவதானது, குர்ஆனின் உண்மையான திருவசனங்களின் கருத்துக்களுக்கு எவ்வளவு தூரம் முரண்படுகிறதென்பதை வாசக நண்பர்கள் புரிநது கொள்ள வேண்டும்.

அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான். அவனே பூரண ஞானமுடையோன், யாவற்றையும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 6:73)

(நபியே!) நீர் கூறும். அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ, தீமையோ செய்து கொள்ளச் சக்தியில்லாதவன், மறைந்திருப்பவற்றை நான் அறிந்தவனாயிருந்தால் (என் வாழ்வில்) நலன்களை அதிகமாக அடைந்திருப்பேன். என்னை எவ்விதத் தீங்கும் தீண்டியிராது. நானோ நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு, அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் 7: 188)

மேற்கண்ட இத்திருவசனங்கள் இரண்டிலும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே அனைத்து மறைவான விஷயங்கள் பற்றிய ஞானம் இருக்கிறதேயன்றி, அவனால் படைக்கப்பட்டிருக்கும் படியானவர்களில் மிக விசேஷமானவர்கள் என்று சொல்லப்படும் நபிமார்கள், மலக்குகள், இறைநேசர்கள் முதலியவர்களில் எவருக்கும் அத்தகைய மறைவானவற்றை அறிந்து கொள்ளும் ஞானம் அறவே கிடையாதென்பதை உணருகிறோம். ஆனால் மலக்குகளும், நபிமார்களும் அல்லாஹ்வினால் அறிவித்துக் கொடுக்கப்பட்ட இரகசியங்களை மட்டும் அறிவார்களேயன்றி, “சுயமாக மறைவானவற்றை எவரும் அறிந்து கொள்ள முடியாது என்று கூறும் திருவசனத்திலிருந்து எவருக்கும் எவ்வித விலக்கும் கிடையாது என்பதை அப்பட்டமாக அறிந்து கொள்கிறோம். இந்நிலையில் புர்தாகாரர் நபி(ஸல்) அவர்கள் அனைத்து இரகசியங்களையும் அறிவது ஒரு புறமிருக்க, அல்லாஹ்வின் பாதுகாப்புப் பலகையாம் லவ்ஹுல் மஹ்பூழில் உள்ள இரகசியங்களையும் அறிவார்கள் என்று கூறுவதன் மூலம் திருக்குர்ஆனின் திருவசனத்திற்கு எந்தளவு முரண்படுகிறார் என்பதைக் கண்கூடாகக் காணுகிறோம்.

வானங்களிலும், பூமியிலுமுள்ள மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது. மேலும் அவன் பக்கமே அனைத்து விஷயங்களும் சென்றடையும். (அல்குர்ஆன் 11:123)

(மேலும் நீர்) கூறுவீராக! அல்லாஹ்வைத் தவிர்த்து வானங்களிலும் பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவானவற்றை அறியமாட்டார், அன்றி மரித்தோர் எப்பொழுது எழுப்பப்படுவார் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் 27:65)

எனினும் நிராகரிப்பவர்கள், (நியாயத்தீர்ப்புக்குரிய) “அந்த சந்தர்ப்பம் நமக்கு வரமாட்டாது” என்று கூறுகிறார்கள். (அப்படியல்ல) என் ரப்பின் மீது சத்தியமாக (அது) உங்களிடம் வந்தே தீரும். அவன் மறைவான(யா)வற்றையும் அறிந்தவன், வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டும் மறையாது, இன்னும் அதைவிடச் சிறந்ததோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான “லவ்ஹுல் மஹபூழ்” என்ற ஏட்டில் பதிவு செய்யப்படாமலில்லை, (அல்குர்ஆன் 34:3)

மறைவானவை அவர்களிடமாயிருக்கின்றன. அவர்கள் (அவற்றை) எழுதுகிறார்களா? (அல்குர்ஆன் 52:41)

(வழிகேட்டிலிருந்தும்) அவனிடம் மறைவானவை பற்றிய அறிவு இருந்து அவன் (அதன் மூலம்) பார்க்கின்றானா? (அல்குர்ஆன் 52:35)

(அவன்தான்) மறைவானவற்றை அறிந்தவன். எனவே, தான் மறைந்திருப்பவற்றை அவன் எவருக்கும் காட்ட மாட்டான். தான் பொருந்திக் கொண்ட தன் தூதருக்குத்தவிர, (அவரும் அவன் அறிவித்துக் காட்டியதைத் தவிர வேறு எதையும் அறியார்) (அல்குர்ஆன் 72: 26,27)

மேலும் அவர் (நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வினால் காட்டப்பட்ட) மறைவான விஷயங்களை (மக்களுக்கு எடுத்து)க் கூறுவதில் உலோபத்தனம் செய்பவர் அல்லர். (அல்குர்ஆன் 81:24)

அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (அந்த) நாளில் அவர்களிடம் (நீங்கள் மக்களுக்கு எனது கட்டளைகளை எடுத்துக் கூறிய போது) “என்ன பதிலளிக்கப்பட்டீர்கள்” என்று கேட்பான். அதற்கு அவர்கள் அது பற்றி எங்களுக்கு எவ்வித ஞானமுமில்லை. நிச்சயமாக நீ தான் மறைவானவற்றையெல்லாம் அறிந்தவன் என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 5: 109)

“அல்லாஹ்வே! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிபவனே! உன்னடியார்கள் வேறுபட்டு(த்தமக்கிடையே தர்க்கித்து)க் கொண்டிருக்கும் விஷயத்தில் நீதான் (மறுமையில்) தீர்ப்புச் செய்வாய்” என்று (நபியே!) நீர் கூறுவீராக? (அல்குர்ஆன் 39:46)

ஆனால் இதற்கு முன்னர் அவர்கள் சத்தியத்தை நிராகரித்துக் கொண்டு, மறைவாய் உள்ள விஷயங்களைப் பற்றி வெகு தூரத்தில் இருந்து கொண்டே (எவ்வித ஆதாரமுமின்றி வெறுமனே யூகங்களை) அள்ளி வீசிக் கொண்டிருந்தார்கள். (அல்குர்ஆன் 34: 53)

பொதுவாக மேற்கண்ட திருவசனங்களின் வாயிலாக, மறைவான விஷயங்களை அறியும் வகையில் அல்லாஹ்விற்கு நிகர் எவருமில்லை. மலக்குகளோ, நபிமார்களோவாயினும் அவனால் அறிவித்துக் காட்டப்பட்டவற்றை அன்றி வேறு எவற்றையும் சுயமே அவர்களால் அறிந்து கொள்ள இயலாது என்றும், மறைவான விஷயங்களை அல்லாஹ் பொதுவாகவன்றி, குறிப்பாகத் தான் விரும்பியவர்களுக்கு மட்டும் அறிவித்துக் கொடுப்பான் என்றும், மறுமையில் அனைத்து நபிமார்களும் (நமது நபி(ஸல்) உள்பட) “நிச்சயமாக நீதான் மறைவானவற்றையெல்லாம் அறிந்தவன்” என்று சொல்வார்கள் என்று கூறுவதோடு, குறிப்பாக நபி(ஸல்) அவர்களைப் பார்த்து “அல்லாஹ்வே! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! இரகசியங்களையும் , பரகசியங்களையும் அறிந்தவனே! என்ற அல்லாஹ்வுக்கே சொந்தமான மேற்கண்ட சிறப்பம்சங்களையும் கூறி தன்னிடம் துஆ (பிரார்த்தனை) செய்யும்படி பணிக்கிறான். இவ்வாறே இரகசியங்கள் அனைத்தும் எம்மிடம் உள்ள பாதுகாப்புப் பலகையான “லவ்ஹுல் மஹ்புழ்” எனும் ஏட்டில் பத்திரமாயிருக்கின்றன என்று கூறி அப்பலகையின் சிறப்பையும் எடுத்துக்காட்டி, அல்லாஹ் தனது வல்லமையை அனைத்துலக மக்களுக்கு பறைசாட்டிக் கொண்டிருக்கும்பொழுது, இந்த பூசிரியோ அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தான “அல்லாமுல் உயூப்” (மறைவானவற்றையெல்லாம் அறிந்தவன்) என்ற சிறப்பம்சத்தையும், இறைவனது “பாதுகாப்புப் பலகை” என்று அவனே சிலாகித்துக் கூறும் சிறப்பம்சங்கள் அனைத்தையும் நபி(ஸல்) அவர்களைப் புகழ்கிறேன் என்ற போர்வையில் முழுமையாக இகழ்ந்திருக்கின்றார்.

நபி(ஸல்) அவர்களது ஞானத்தைச் சிலாகித்துப் புகழ முனைந்தவர் அதைக் கட்டுப்பாட்டோடு , எல்லை மீறாது புகழ்வதை விடுத்து, அவர்களைத் தூக்கியவாரே, அல்லாஹ்வையும் அவன் தன் சிறப்புத்தன்மைகளையும், லவ்ஹுல் மஹ்பூழையும், அதன் சிறப்பம்சங்களையும் தாக்கியிருக்கிறார். என்பதை மிகத் தெளிவாக அறிந்திருப்பார்கள். அதற்காக வக்காலத்து வாங்கிக்கொண்டு சரிசெய்ய முயல்வது அறிவுடைமையாகாது.

1) “நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில், பைதாஃ அல்லது தாத்துல் ஜைஷி என்ற இடத்தை நாங்கள் அடைந்த போது, எனது கழுத்து நகையொன்று அறுந்து விழுந்து விட்டது. அதைப் தேடிப் பார்க்க, நபி(ஸல்) அவர்களும் அவர்கள்தம் தோழர்களும், அவ்விடம் தங்கி விட்டார்கள். (ஒரு அறிவிப்பின்படி, அவர்களில் சிலரை, நபி(ஸல்) அவர்கள் அதைத் தேடுவதற்காக அனுப்பி வைத்தார்கள்.)

“நபி(ஸல்) அவர்கள் தங்கியிருந்த இடத்தில் அறவே தண்ணீர் இல்லை. இதை அறிந்த ஸஹாபா பெருமக்கள், அபூபக்கர்(ரழி) அவர்களை அணுகி, ‘என்ன! அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் இப்படிச் செய்து விட்டார்களே! நம்மிடத்திலும் தண்ணீரில்லை; தங்கியுள்ள இடத்திலும் தண்ணீர் இல்லையே! இதை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கேட்டார்கள்.

“என் மடி மீது நபி(ஸல்) அவர்கள் தலை வைத்து தூங்கியவாறு இருந்தார்கள். அதுசமயம் அபூபக்கர்(ரழி) அவர்களை அணுகி, ‘என்ன! அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் இப்படிச் செய்துவிட்டார்களே! நம்மிடத்திலும் தண்ணீரில்லை; தங்கியுள்ள இடத்திலும் தண்ணீர் இல்லையே! இதை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கேட்டார்கள்.

“என் மடி மீது நபி(ஸல்) அவர்கள் தலை வைத்து தூங்கியவாறு இருந்தார்கள். அதுசமயம் அபூபக்கர்(ரழி) அவர்கள் வந்து, ‘நபிகளாரை இப்படிச் சுணக்கிவிட்டிரே! இருக்கிற நபர்களிடத்திலும் தண்ணீர் இல்லை; இருக்கிற இடத்திலும் தண்ணீர் இல்லையே” என்று என் இடுப்பில் ஒரு இடி இடித்தவாறு கடிந்து கூறினார்கள். என்மடி மீது நபிகளார் தலை வைத்துத் தூங்கி கொண்டிருந்தமையால், நான் நகர வழியில்லை, அதனால் (கடிந்ததையும் இடியையும்) தாங்கிக்கொண்டு, நான் நகராது அமர்ந்திருந்தேன்.

“பின்னர், அதிகாலை ஆயிற்று. (ஓளூச் செய்து கொள்ள) தண்ணீரில்லாத நிலையில், நபி(ஸல்) அவர்கள் கண் விழித்தார்கள். அந்த நேரத்தில் தான், தயம்மும் பற்றிய திருவசனத்தை, அல்லாஹ் இறக்கி வைத்தான். அனைவரும் அப்போது (முதன்முதலாக) தயம்மும் செய்(து தொழு)தார்கள்.

“அப்போது அவர்களில் ஒருவரான உஸைது பின் குழைர்(ரழி) அவர்கள், என்னை ‘ஜஸாக்கில்லாஹு கைரா’ (அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி அளிப்பானாக) என்று வாழ்த்தினார்கள். மேலும் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக, உங்களுக்கு ஏற்படும் சங்கடமான பிரச்சினைகள் அனைத்திற்கும், அந்த வல்ல அல்லாஹ்வே (இறுதியில்) நலமே நிவர்த்தியாக்குவதுடன், அனைத்து முஸ்லிம்களுக்கும் அதனால் (தயம்மும் போன்ற) சலுகைகளையும் வழங்கியிருக்கிறான். இது தங்களின் பரக்கத்தில் முதன்மையானதாகும்” என்று கூறினார்கள்.

“(தங்கிய இடத்திலிருந்து) புறப்படலானோம். ஒட்டகமும் எழுப்பப்பட்டது அப்போது நாங்கள் எதைத் தேடிக் கொண்டிருந்தோமோ, அந்த கழுத்து நகை, ஒட்டகத்தின் அடியிற் கிடக்கவே, அதைக் கண்ட நான் உடனே எடுத்துக் கொண்டேன்.” என்று ஆயிஷா(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல்கள்: (புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா)

புலவர் பூஸரி பாடியிருப்பது போல், நபி(ஸல்) அவர்களுக்கு, மறைவானவற்றை அறிந்து கொள்ளும் ஞானமிருந்தால், அவர்கள் பயணத்தைச் சுணக்கி, தங்கும்படி ஆகியிருக்குமா? அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் ‘கழுத்து நகை அறுந்து விழுந்து விட்டது’ என்று கூறிய மாத்திரத்திலேயே, ‘இதோ இங்கே கிடக்கிறது’ என்று சுட்டிக் காட்டிருயிருக்க மாட்டார்களா? தேடிப் பார்க்க சிலரை எதற்காக அனுப்ப வேண்டும்? தங்களிடமும் தங்கியுள்ள இடத்திலும் தண்ணீர் அறவேயில்லை என்பதை அறிந்திருக்க மாட்டார்களா? ஆயிஷா(ரழி) அவர்கள், அபூபக்கர்(ரழி) அவர்களின் கடிந்துரைக்கும் இடிக்கும் ஆளாகியிருக்க வேண்டி வருமா? என்பதையெல்லாம் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்னும் மேற்கோள்களைப் பார்ப்போம்.

2) “நான் நபி(ஸல்) அவர்களின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினேன். (வீட்டிற்குள்ளிருந்த) நபி(ஸல்) அவர்கள் யார் என்று கேட்க, ‘நான்’ என்று (பதில்) கூறினேன். அதற்கு அவர்கள் (இன்னார் என்று பெயரைச் சொல்லாமல்) ‘நான் நான்’ என்று (வெறுமனே) சொல்லிக் கொண்டிருந்தால்….? (எப்படித் தெரியும்) என்றவாறு, கதவைத் திறந்து வெளியில் வந்தார்கள்.

இவ்வாறு ஜாபிர்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : முஸ்லிம்.

கதவுக்கு வெளியிலிருந்து குரல் கொடுப்பவர்களை இன்னாரெனத் தெரிய முடியாமல், நபி(ஸல்) அவர்கள் யார்? என்று கேட்டிருக்கிறார்கள்.

3) “ஒரு சமயம் நபி(ஸல்) அவர்கள் திரை மறைவில் குளித்துக் கொண்டிருந்தார்கள். மறைப்புத் திரையை அன்னை பாத்திமா(ரழி) அவர்கள் பிடித்த வண்ணமிருந்தனர். அவ்வேளை நான் அங்கு சென்றேன். (இன்னொரு அறிவிப்பின்படி ஸலாம் கூறினேன்) நபி(ஸல்) அவர்கள் (திரைக்குள்ளிருந்து) ‘யார்’ என்று கேட்டதும், “நான் தான் உம்முஹானீ” என்று பதிலளித்தேன்.” என்று உம்முஹானீ(ரழி) அவர்கள் தெரிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)

திரைக்குள்ளிருக்கும் நபி(ஸல்) அவர்களுக்கு, வெளியில் நின்று ஸலாம் கூறுபவர் கூட இன்னாரெனத் தெரியவில்லை என்பதை இந்த ஹதீது உறுதிப்படுத்துகிறது.

மற்றொரு சம்பவம்:

“ஒரு நாளிரவு, நான் வீட்டை விட்டு, வெளிக் கிளம்பினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் தனிமையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். நான் நிலவின் இருளில் (நிழலில்) மறைந்தவனாக (அவர்களைப் பின் தொடர்ந்து) நடக்கலானேன். அப்போது அவர்கள் என் பக்கமாகத் திரும்பி, (நிலவின் நிழலில்) நான் நிற்பதைக் கண்டு. “நீர் யாரெனக் கேட்க, நான் ‘அபூதர்’ என்றேன். (புகாரி, முஸ்லிம்)

நிலவு நிழலில், ஓர் ஆள் நிற்பது தெரிந்தாலும், இன்னாரெனப் புலப்படாமல், “நீர் யார்’ என்று, நபி(ஸல்) கேட்டுத்தான் தெரிந்திருக்கிறார்கள்.

மனித இயல்பினின்றும் ரசூல்(ஸல்) அவர்கள் விதிவிலக்காக இல்லை; அவர்களும் மனித இயல்புக்கேற்ப, எதையும், யாரையும் கேட்டுத் தெரியும் நிலையிற்தான் இருந்திருக்கிறார்கள். புலவர் பூஸரியார் பாடினாற் போல், நபி(ஸல்) அவர்கள், மறைவானவற்றை அறிந்த நிலையில் இருக்கவில்லை, இதையே மேலே நாம் பார்த்த ஹதீதுகள் மெய்ப்பிக்கின்றன.

இன்னும் வேறு கோணங்களிலும் மேற்கோள்களைப் பார்ப்போம்.

5) “ஐந்து விஷயங்களை, அல்லாஹ் ஒருவனையன்றி, மற்றெவரும் அறியார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, இதற்குச் சான்றாக (அல்லாஹ்வின்) திருவசனம் ஒன்றினை ஓதினார்கள்: “நிச்சயமாக அந்த (யுக முடிவு) நேரம் பற்றிய ஞானம், அல்லாஹ்விடமே இருக்கிறது. அவனே மழையையும் இறக்கி வைக்கிறான். அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (முழுமையாக) அறிவான், நாளை நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை எவரும் அறியார். அவ்வாறே நாம் எந்த இடத்தில் இறப்போம் என்பதையும் எவரும் அறியார். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், நுட்பமிக்கவனுமாவான்”. (குர்ஆன் 31: 34)

உமர்(ரழி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கிறார்கள். (புகாரி)

மேற்காணும் ஹதீஸ், மறைவானவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் அறிந்து கொள்ள முடியாது என்பதோடு குறிப்பாக ஐந்து விஷயங்கள் பற்றிய ஞானம் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானதென்பதையும் எடுத்துக்காட்டுகிறது. அவையாவன:

1) யுக முடிவு நேரத்தைப் பற்றிய ஞானம்:

நபி(ஸல்) அவர்கள் யுக முடிவு நேரம் எப்டிபாழுது நிகழும் என்பது குறித்து, ஒரு விஷயம் கூட மக்களுக்கு எடுத்துச் சொல்லவில்லை. அதுபற்றி அவர்களால் சொல்லவும் முடியாது. தெரியவும் செய்யாது. எனினும் அதன் அறிகுறிகளை மட்டுமே அதுவும் அல்லாஹ்வின் அறிவிப்பின்படி எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

2) மழையைப் பற்றிய ஞானம்:

அது எப்பொழுது வரும், எவ்வளவு பெய்யும், எவ்விடங்களிலெல்லாம் பெய்யும், அதனால் மக்களுக்கு நலமா, இடரா முதலியவற்றின் முழுமையான ஞானம்.

3) கர்ப்பத்திலுள்ளவைப் பற்றிய ஞானம்:

முழுமைப் பிரசவமா, அரைகுறைப் பிரசவமா, அது பெற்றொருக்கு இணக்கமானதா, விரோதமானதா, உயிருடன் பிறக்குமா. மரித்துப் பிறக்குமா முதலியவற்றின் ஞானம்.

4) நாளை ஒருவர் தாம் என்ன செய்வார் என்பது பற்றிய ஞானம்:

ஒருவரது நாளையத் திட்டம் நிறைவேறுமா, நிறைவேறாதா, வீட்டிலிருந்து புறப்படுபவர் மீண்டும் அதில் வந்து புகுவாரா, புக மாட்டாரா, நாளையத் தொழில் லாபமா, நஷ்டமா முதலியவைப் பற்றிய ஞானம்.

5) எவருக்கு எவ்விடத்தில் (எவ்விதத்தில்) மரணம் ஏற்படும் என்பது பற்றிய ஞானம்:

ஒருவரின் மரணம் சொந்த ஊரிலா, அல்லது வந்த ஊரிலா, அல்லது எந்த ஊரில் என்பதும், தரையிலா, கடலிலா, ஆகாயத்திலா என்பதும், ஓரிடத்தில் தங்கியிருக்கையிலா, பிரயாணம் செய்கையிலா, நல்ல மரணமா, தீய மரணமா, சாதாரண மரணமா, திடீர் மரணமா என்பன போன்றவைப் பற்றிய ஞானம்.

மேற்காணும் குறிப்பிட்ட ஐந்து விஷயங்கள் பற்றிய ஆய்வு, அந்த ரப்புல் ஆலமீன் ஒருவனைத் தவிர வேறு எந்த மலக்கிற்கோ, நபிக்கோ, இறைநேசச் செல்வருக்கோ அறவே கிடையாது என்று திருக்குர்ஆனும், ஹதீஸ்களும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

உண்மை விஷயம் இவ்வாறிருக்க, இந்த பூஸரியோ மறைவானவைப் பற்றிய ஞானம் நபி(ஸல்) அவர்களுக்கும் உண்டு என்பதை மிகச் சாமார்த்தியமாக சுற்றி வளைத்துக்கொண்டு, ஒட்டு மொத்தமாக அனைத்து ஞானங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள “லவ்ஹுல் மஹ்பூழி”லுள்ள ஞானங்களும் எமது நபிக்கு மறைவில்லை என்ற கருத்தில் பாடி அந்த வல்லவனுக்கே சொந்தமான “அல்லாமுல் ஃகுயூப்” (மறைவானவற்றை அறிகிறவன்) எனும் சிறப்புத்தன்மையை நபி(ஸல்) அவர்களுக்கும் உண்டு என்று கூறியிருக்கிறார்.

நபி(ஸல்) அவர்களே, அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமாக உள்ள சிறப்பம்சங்களைக் கொண்டு எவரும் என்னைப் புகழ வேண்டாம் என எச்சரித்திருக்கிறார்கள்.

மர்யமின் மகனை கிறிஸ்தவர்கள் அளவுகடந்து உயர்த்தியது போன்று, நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள்! நானோ அவனது அடியானாகும். ஆகவே, என்னை அல்லாஹ்வின் அடியார், அவனது தூதர் என்று(மட்டுமே) கூறுங்கள். உமர்(ரழி) (புகாரி, முஸ்லிம்)

எனவே நபி(ஸல்) அவர்களது கடும் எச்சரிக்கைகளை எல்லாம் புலவர் பூஸரி துச்சமாகக் கருதி, அவர்களைப் புகழ்கிறேன் என்ற போர்வையில், புர்தாவென்னும் அவரது புராணத்தில் பல இடங்களில் இதே தவறை மீண்டும், மீண்டும் அல்குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முற்றிலும் விரோதமான வகையில் பாடி வைத்திருப்பது விஷயமறிந்தோருக்கு சிறிதும் மறையவில்லை.

இந்நிலையிலுள்ள திருகுர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் புறம்பான கருத்துக்கள் மலிந்து காணப்படும் இப்புராணத்தைச் சிலர், புனிதமெனக் கருதி, பலரை வீட்டிற்கழைத்துப் பாடவைத்து, பாடியவர்களை பாட்டில் தண்ணீரில் ஊத வைத்து, ஜம் ஜம் தண்ணீரைப் போன்று அதைப் புனிதமாகக் கருதி, காலை, மாலை, நாற்பது வேளை, கண்டிப்பாகக் குடித்து வந்தால், பக்கவாதமெல்லாம் பஞ்சாகப் பறந்து போய்விடும் என்று, யாரோ ஒரு புண்ணியவான் (?) சரடு விட்டிருப்பதை உண்மை என்று நம்பி அதைச் செயல்படுத்தும் வகையில் அநேக விபரமறியாத மக்களின்ன பணங்காசுகள் பாழாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் எத்தகையதோர் முஸ்லிமின் உள்ளமும் வருந்தாமலிருக்க முடியாது.

புலவர் பூஸிரி தனது புர்தாவென்னும் புராணத்தில் நபி(ஸல்) அவர்கள் மீது புகழ்பாடும் பாணியில் மக்கள் தஞ்சம் புகுவதற்குத் தகுந்த வல்லவன் அல்லாஹ்தான், என்றிருக்கும் போது அச்சிறப்புத் தன்மை அவனது அடியாரும் தூதருமாகிய நமது நபி(ஸல்) அவர்களுக்கும் உண்டு என்ற கருத்தில், அல்லாஹ்விடம் முறையிடுவது போன்றே, நபி(ஸல்) அவர்களிடம் அவர் முறையிடும் அவல நிலையைப் பாருங்கள்!

இதோ அவரது முறை கேடான முறையீடு!

யா அக்ரமல் கல்கி மாலீமன் மலூதுபிஹீ, ஸிவாக்க இந்த ஹுலூலில் ஹாதிஸில் அமமீ

* “படைப்புகளில் சங்கை மிகுந்த (நபிய)வர்களே! திரளான கஷ்டங்கள் என்னை வந்து சூழும் பொழுது, தங்களை விட்டால் நான் தஞ்சமடைவதற்கு வேறேவருமில்லை” என்று கூறி நபி(ஸல்) அவர்களைத் தமக்கு தஞ்சமளிக்குமாறு வேண்டி நிற்கிறார்.

பிறருக்கு தஞ்சமளிக்கும் ஆற்றல் அந்த நபி(ஸல்) அவர்களுக்கு உண்மையில் இருக்குமானால், அல்லாஹ் அவர்களை நோக்கி பின்வருமாறு கூறும்படி ஏன் கட்டளையிட வேண்டும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

* (நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ்வின் (வேதனையை) விட்டும் எவரும் என்னை அறவே காப்பாற்ற முடியாது, அவனைத்தவிர (எனக்கு வேறு) தஞ்சம் புகுமிடத்தையும் நான் காணேன். (72:22)

* அவர் (நமது நபி) நம்மீது ஏதேனும் ஓர் வாக்கியத்தைக் கற்பனை செய்து பொய்யாகக் கூறிவிட்டால், அவரது வலக்கரத்தை நாம் (பலமாகப்) பிடித்துக் கொண்டு, அவருடைய உயிர் நாடியை நாம் தரித்து விடுவோம். உங்களில் எவரும் நாம் அவ்வாறு செய்வதை அறவே தடுத்துவிட முடியாது. (69:44,45,46)

* அனைத்து பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? தான் எவராலும் இரட்சிக்கப்படாமல், தானே எல்லோரையும் இரட்சித்துக் கொண்டிருப்பவன் யார்? நீங்கள் அறிந்திருந்தால் (சொல்லுங்கள்) என்று (நபியே! அவர்களிடம்) நீர் கேளும்!

அதற்கவர்கள் (அனைத்து அதிகாரங்களும்) அல்லாஹு(ஒருவனு)க்கே உரியன என்று கூறுவர். அவ்வாறாயின் உங்கள் அறிவை எங்கே இழந்து விட்டீர்கள் என்று (நபியே!) நீர் கேளும்! (23:88,89)

மேற்காணும் திருவசனங்களின் வாயிலாக மக்களை உண்மையில் காப்பாற்றுபவன் யார் என்பதைப் புரிந்து, அதற்கேற்ப நடந்து கொள்ளும்படி உணர்த்துகிறான். அனைவரையும் ரட்சித்துக் காப்பாற்றும் வல்லமை, அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானதாகும். அவன் அன்றி அனைவரும், அவர்கள் மலக்குகளோ, நபிமார்களோ, மற்றும் இறை நேசச் செல்வர்களோ, எவராயிருப்பினும், எல்லாருமே அவன் ஒருவனால் காப்பாற்றப்படக் கூடியவர்களே அன்றி, வேறு யாரையும் காப்பாற்றும் சக்தி படைத்தவர்கள் அல்லர்.

* நம்மில் அநேகர் இது விஷயங்கூட புரிந்து கொள்ளாதவர்களாக, பிறரைக் காப்பாற்றும் சக்தி அல்லாஹ்வுக்கிருப்பது போல், அவனது நபிமார், வலிமார்களுக்கும் இருக்கத்தானே செய்யும் என்று கருதிக் கொண்டு, வல்ல அல்லாஹ்விடம் மன்றாடிக் கேட்க வேண்டியவற்றை எல்லாம், மற்றவரிடத்திலும் அவ்வாறு கேட்பது முறைதானா? என்பதைச் சிறிதும் சிந்திக்காது கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இது அவர்கள் குர்ஆன், ஹதீஸின் பக்கம் சிறிதும் கவனம் செலுத்தவில்லை என்பதையே காட்டுகிறது. ஓரளவேனும் குர்ஆனையும், ஹதீஸையும் புரிந்து நடப்போரிடத்தில், இத்தகைய மிக மோசமான ஷிர்க்கின் பக்கம் கொண்டு போய்ச் சேர்க்கும் தீய பழக்கத்தைக் காண முடியாது.

அன்னை ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார்கள்.

* (திருக்குர்ஆனில்) “இன்னும் உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக” (26:214) எனும் திருவசனம் அருளப்பட்டபோத, நபி(ஸல்) அவர்கள் எழுந்துநின்று, முஹம்மதின் மகள் பாத்திமாவே! என்று (தமது அன்பு மகள் பாத்திமா(ரழி)) அவர்களையும், அப்துல் முத்தலிபின் மகளே! என்று (தமது மாமி – அத்தை ஸஃபிய்யா(ரழி) அவர்களையும், அப்துல் முத்தலிபின் புதல்வர்களே! என்று (தமது சிறிய தந்தை, பெரிய தந்தை) முதலியோரை நோக்கி அழைத்து, “நீங்கள் என்னிடம் எனது பொருளிலிருந்து எதனைக் கேட்பினும் என்னால் இயன்றளவு அவற்றை நான் உங்களுக்கு தந்துவிட முடியும். ஆனால் அல்லாஹ்வின் விஷயத்தில் நான் உங்களுக்கு எதனையும் செய்யக் கூடிய சக்தி எனக்கில்லை” என்று கூறினார்கள். (அஹ்மத், முஸ்லிம்)

* எனவே மேற்காணும் ஹதீஸின் வாயிலாக நபி(ஸல்) அவர்கள் தமது மிக நெருங்கிய உறவினர்களுக்கே, இவ்வளவு கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள் என்றால், மற்றவர்களின் நிலையைச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆகவே நாம் ஐங்காலத் தொழுகைகளிலும் வல்ல அல்லாஹ்வை நோக்கி “இய்யாக்க – நஃபுது – வஇய்யாக்க – நஸ்தயீன்”, “உன்னையே வணங்குகிறோம். மேலும் உன்னிடமே உதவி தேடுகிறோம்” எனும் உண்மையான கருத்தை ஊர்ஜிதம் செய்து காட்டும் வகையில், வல்ல அல்லாஹ்விடமே நமது தேவைகள் அனைத்தையும் கேட்டு, அவற்றை அவனிடமிருந்து அடையும் பேற்றை நம்மனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்.

Comments on this entry are closed.

Previous post:

Next post: