கவிதைக்கு அனுமதியும், கவிஞர்களுக்கு அங்கீகாரமும்
அல்லாஹ் தன் திருமறையில் கவிஞர்களைக் கண்டித்து விட்டு அதிலிருந்து சிலருக்கு விலக்கமளிக்கிறான். அந்தச் சிலர் கண்டனத்திற்கு உரியவர்கள் அல்லர் என்பதையும் தெளிவுபடுத்துகிறான். நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டிய வசனத்திற்கு அடுத்த வசனங்களில் பின்வருமாறு கூறுகிறான்.
“எவர் விசுவாசம் கொண்டு, நற்கருமங்களைச் செய்து, அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்ந்து, (பிறர் நிந்தனையால்) பாதிக்கப்பட்ட பின்னர் (தம் கவிதையால்) பழி வாங்கினார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் மேற்கூறிய கண்டனத்திற்குரியவர்கள்) (அல்குர்ஆன் 26 :227)
இந்தத் திருவசனத்தில் “பிறரைக் கவிதையால் வசைபாடுவதை முதலில் நாம் துவக்கக் கூடாது. நியாயமில்லாமல் கவிதையால் நாம் அர்ச்சிக்கப்படும் போது, கவிதையால் அவர்களை அர்ச்சிக்கலாம்” என்று வல்ல இறைவன் அனுமதிக்கின்றான்.
இந்த அடிப்படையிலேயே நபி(ஸல்) அவர்கள் பல கவிஞர்களை அங்கீகாரம் செய்தனர்.
நபி(ஸல்) அவர்கள், ஹஸ்ஸான் (ரழி) அவர்களை நோக்கி, (கவிதையால்) “இந்தக் காபிர்கள் மீது வசைபாடு! உன்னுடன் ஜிப்ரில்(அலை) இருக்கிறார்கள்” என்றார்கள்.
அறிவிப்பவர் ” பரா இப்னு ஆஸிப் (ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்
ஹஸ்ஸான் (ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (குரைஷிக் காபிர்களை வசை பாட அனுமதி கேட்ட போது, நபி(ஸல்) அவர்கள் ‘என் குலத்தைப் பற்று எப்படி (வசைபாடுவாய்?) என்று கேட்டார்கள், அதற்கு ஹஸ்ஸான்(ரழி) அவர்கள் “குழைத்த மாவிலிருந்து மயிர் நீக்கப்படுவது போல், (அவ்வளவு பக்குவமாக) உங்கள் குலத்தைச் சேர்ந்த அவர்களை வசைபாடும் போது அவர்களை விட்டும் நான் உங்களை நீக்கி விடுவேன்” என்றார்கள்.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷத(ரழி) நூல் : புகாரி
ஹஸ்ஸான்(ரழி) அவர்கள் பள்ளிவாசலில் கவிதை இயற்றிப் படிக்கும்போது, உமர்(ரழி) அவர்கள் அவரைக் கண்டிக்கும் விதமாகப் பார்த்தார்கள். அப்போது ஹஸ்ஸான் (ரழி) அவர்கள் அருகே இருந்த அபூஹுரைரா(ரழி) அவர்களை நோக்கி, “ஹஸ்ஸான்! அல்லாஹ்வின் தூதர் சார்பாக (இவர்களுக்கு) நீர் பதில் கொடுப்பீராக! யா அல்லாஹ்! இவரை ஜிப்ரீல் மூலம் வலுப்படுத்துவாயாக!” என்று நபி(ஸல்) அவர்கள் (என்னைப்பற்றி புகழ்ந்து) கூறியதை நீ செவியேற்றதுண்டா? என்ற கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா(ரழி) அவர்கள் “ஆம்” என்றனர்.
அறிவிப்பவர் : ஹஸ்ஸான்(ரழி) நூல் : புகாரி
நபி(ஸல்) அவர்கள் ஹஸ்ஸானுக்காக பள்ளிவாசலில் ஒரு மேடையை ஏற்படுத்தி இருந்தனர். அதில் நின்ற வண்ணம் நபி(ஸல்) அவர்கள் மீது எவர் வசை பாடினாரோ, அவரை ஹஸ்ஸான்(ரழி) வசைபாடுவார். அப்போது நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் தூதருக்காக இவர் பதிலடி கொடுக்கும் போது, ஹஸ்ஸானுடன் ஜிப்ரில்(அலை) இருப்பார்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல் : அபூதாவூது.
நபி(ஸல்) அவர்களை மக்கத்துக் காபிர்கள் – கவிஞர்கள் – தரக்குறைவான வார்த்தைகளால் வசை பாடியபோது, இழி மொழிகளால் அவர்களை அர்ச்சனை செய்த போது ஹஸ்ஸான் (ரழி) போன்ற கவிஞர்கள் மூலம் காபிர்களுக்கு பதில் சொல்ல வைத்தார்கள். அவர்கள் மீது கூறப்பட்ட அவதூறுகளையும், அவர்கள் மீது சுமத்தப்பட்ட களங்கத்தையும் துடைத்தெறியச் செய்தார்கள். இது போன்ற சந்தர்ப்பங்களில் களங்கத்தை துடைத்தெறிவதற்காக, கவிதை இயற்றலாம் என்று தெரிவாகின்றது.
கருத்துள்ள கவிதைகள்
சிலரை வசைபாடும் விதத்தில் கவிதை இயற்றுவதென்றால், முதலில் நாம் துவக்கக் கூடாது. எவ்வித நியாயமின்றி நம் மீது களங்கம் சுமத்தப்பட்டால் அதற்கு அதே கவிதையால் பதில் தரலாம் என்பதைக் கண்டோம்.
இன்னும் சில கவிதைகளுக்குப் பொதுவாக அனுமதி உண்டு என்பதையும் ஹதீஸ்கள் நமக்கு உணர்த்துகின்றன. அல்லாஹ்வின் வல்லமையைப் பறைசாற்றும் கவிதைகள் – இஸ்லாமியக் கடமைகளில் ஆர்வமூட்டும் கவிதைகள், இஸ்லாம் தடை செய்துள்ள காரியங்களை தவிர்த்துக் கொள்ளத் தூண்டும் கவிதைகள், இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணில்லாத – கருத்தாழ மிக்க கவிதைகள் ஆகியவற்றுக்கு பொதுவாக அனுமதி உண்டு.
“நாங்கள் இந்த உலகில் வாழும் காலமெல்லாம் (இஸ்லாத்தை நிலை நாட்டிட) போர் புரிவதாக முஹம்மதிடம் உறுதிமொழி கொடுத்தவர்கள்” என்ற பொருள்பட அன்ஸார்கள் ஒரு போர்க் களத்தில் கவிதை பாடினார்கள். (இதைச் செவியுற்ற) நபி(ஸல்) அவர்கள் “இறைவா! மறு உலக வாழ்வைத் தவிர வேறு வாழ்வு கிடையாது. அன்ஸார்களையும், முஹாஜிர்களையும் நீ சங்கைப்படுத்துவாயாக” என்று கூறினார்கள்
அறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல் : புகாரி.
இறைவனுக்காக தியாகம் செய்வதை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ள இந்தக் கவிதையை நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் செய்துள்ளதை நாம் காண்கிறோம்.
ஆமிர் இப்னுல் அக்வஃ என்ற நபித் தோழர் ஒரு கவிஞராக இருந்தார். ஒரு போர்க்களத்தில், அல்லாஹ்விடம் துஆ செய்யும் கருத்துக்களடங்கிய சில கவிதைகளைப் பாடினார். அதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், “இவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக” என்று அவருக்காக துஆ செய்தனர். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர் : சலமா இப்னுனனனல் அக்வஃ(ரழி) நூல் : புகாரி
இந்த ஹதீஸ் இறைவனிடம் துஆ செய்யும் விதமாக அமைந்துள்ளது . இதையும் நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளனர். நல்ல கருத்துள்ள கவிதையையும் நபி(ஸல்) அவர்கள் ரசித்துள்ளனர். இஸ்லாமியர் இயற்றிய கவிதைகளை மட்டுமின்றி, காபிர்கள் இயற்றிய கவிதைகளையும் கூட ரசித்துள்ளனர்.
மாற்றாரின் கவிதைகள்
நான் நபி(ஸல்) அவர்களின் வாகனத்தின் பின்னே அமர்ந்திருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் “உமையா இப்னு அபிஸ்ஸல்த் (இவர் காபிராக இருந்தவர்) என்பவரின் கவிதைகளில் ஏதேனும் உனக்குத் தெரியுமா? என்று கேட்டனர். நான் “ஆம்! தெரியும் என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “எனக்குப் பாடிக்காட்டு!” என்றவுடன் நான் ஒரு கவிதை வரியைக் கூறினேன், “இன்னும் பாடு” என்றனர். மேலும் ஒரு வரியைப்பாடினேன். “இன்னும் பாடு!” என்று அவர்கள் மறுபடியும் கேட்டார்கள். இப்படியே நூறு வரிகளை நான் பாடிக் காட்டினேன்.
அறிவிப்பவர் : அம்ரு இப்னு ஷரீத் (ரழி) நூல் : முஸ்லிம்
இவ்வாறு நான் பாடிக்காட்டிய போது, “(உமையா என்ற) அந்தக் கவிஞர் தனது கவிதையின் கருத்தில் இஸ்லாத்தை நெருங்கி விட்டார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அம்ரு இப்னு ஷரீத்(ரழி) நூல் : முஸ்லிம்
“உமையாவின் கவிதை ஈமான் கொண்டுள்ளது. அவரது கல்பு (இதயம்) காபிராக உள்ளது” என்றும் நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி) நூல் : பத்ஹுல் பாரி, அல்பிதாயா வன்னிஹாயா
இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணில்லாத வகையில் மாற்று மதத்தவர்களால் இயற்றப்பட்ட பாடல்களையும். எடுத்துச் சொல்லலாம்; கேட்கலாம் என்பதை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றன.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களால் இயற்றப்பட்டு, முஸ்லிம்களால் பாடப்பட்டால் அது இஸ்லாமியப் பாட்டு என்று நம்மவர்களில் பலர் தவறாகக் கருதுகின்றனர். இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணாக அமைந்திருந்தாலும் கூட அவை இஸ்லாமிய பாடல்கள் என்று கருதப்படுகின்றன. கவிதையின் கருத்தை அடிப்படையாகக் கொண்டே, இஸ்லாம் கவிதைகளை அங்கீகரிக்கவோ மறுக்கவோ செய்கின்றது. இயற்றுகின்ற, பாடுகின்ற ஆட்களைப் பொறுத்தல்ல. நம்மவரின் கவிதைகள் “நமனை விரட்ட நாகூரில் மருந்து விற்பதாக” கூறினால் “அது இஸ்லாமியக் கவிதை ஆகி விடாது” ஒரு காபிரின் கவிதையில் இஸ்லாமிய போதனைகள் இருக்குமானால், அதை இஸ்லாம் அங்கீகரிக்கின்றது, என்ற உண்மையைத் தான் மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு விளக்குகின்றன. இனி நபி(ஸல்) அவர்கள் கவிபாடி இருக்கிறார்களா என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் பார்ப்போம்.
நபி(ஸல்) அவர்கள் கவி பாடினார்களா?
நபி(ஸல்) அவர்கள் சில கவிதைகள் பாடியதாக ஒரு சில அறிவிப்புகளில் காணப்படுவதை அடிப்படையாகக் கொண்டு நபி(ஸல்) அவர்களுக்குக் கவிதைப் பாடத் தெரியும். கவித்திறமை அவர்களுக்கு உண்டு என்று சிலர் தவறாகக் கருதுகின்றனர். இப்படிக் கருதிக் கொண்டு பல பொய்யான கதைகளையும் உருவாக்கி விட்டனர்.
‘புர்தா’ போன்ற அரபிக் கவிதையையும், ‘சீறா’ போன்ற தமிழ்க் கவிதையையும் அந்தந்தக் கவிஞர்கள் பாடியபோது நபி(ஸல்) அவர்கள் கனவில் தோன்றி அதை அங்கீகரித்ததாகவும், அந்தக் கவிஞர்கள் கவிதை இயற்றும் வேளையில் அடுத்து எப்படிப் பாடுவது என்று தடுமாறிய போதும் நபி(ஸல்) அவர்கள் அடுத்த அடியை எடுத்துக் கொடுத்ததாகவும் கதைகள் பல உண்டு. அந்தக் கவிதைகளில் எவரும் குறை கண்டு விடக்கூடாது என்று திட்டமிட்டு இப்படி ஒரு பொய்யைச் சொல்லி அதற்கு மிகப்பெரும் மதிப்பை ஏற்படுத்தி விட்டனர். காசிம் புலவர் “திருப்புகழ்” பாடும்போது, ஓரிடத்தில் தடுமாறும் போது, நபி(ஸல்) அவர்கள் “நேரடியாகவே தோன்றி அடுத்த அடியை எடுத்துக் கொடுத்தனர்” என்று கூட எழுதி வைத்துள்ளனர். (நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை இயற்றக் கற்றுக் கொடுக்கவில்லை, அது அவருக்குத் தகுமானதுமல்ல. (அல்குர்ஆன் 36 : 69)
திருக்குர்ஆன் மிகத் தெளிவாகவே நபி(ஸல்) அவர்களுக்கு கவிதை தெரியாது என்றும், அவர்களுக்கு அது தகுதியானதுமல்ல என்றும் சொல்கின்றது. அல்லாஹ் அவர்களுக்கு கவிதையைக் கற்றுத்தரவில்லை என்று தெளிவாகச் சொல்லி இருக்கும் போது, நபி(ஸல்) அவர்கள் கவிதைக்குத் திருத்தம் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது குர்ஆனுக்கு முரண்பட்டதாகும்.
நபி(ஸல்) அவர்களுக்கு சொந்தமாகக் கவிதை இயற்றத் தெரியாது என்பது மட்டுமின்றி பிறர் கவிதைகளை உதாரணத்துக்குக் கூறும் நேரங்களில் கூட முறையாகக் கூற மாட்டார்கள். எதுகை, மோனைகளைக் கவனிக்க மாட்டார்கள்.
“பிறர் கவிதையில் எதையாவது நபி(ஸல்) அவர்கள் உவமையாகக் குறிப்பிடுவதுண்டா?” என்று அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டது. “கவிதை அவர்களுக்கு மிகவும் பிடிக்காததாகும். சில சமயங்களில் ஒரு கவிஞரின் கவிதையை எடுத்துச் சொல்லும்போது, அதன் ஆரம்பத்தைக் கடைசியிலும், கடைசியை ஆரம்பத்திலும் ஆக்கிவிடுவார்கள். அப்போது அபூபக்ரு(ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே!” அந்தக் கவிதை அவ்வாறு இல்லை” என்று சுட்டிக் காட்டினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நான் கவிஞனல்ல. அது எனக்குத் தகுதியானதுமல்ல.” என்று குறிப்பிட்டார்கள் என அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: இப்னுஜரீர், இப்னு அபீஹாதம்
அப்பாஸ் என்ற கவிஞரின் கவிதை ஒன்றை முன் பின்னாக மாற்றிச் சொல்லி, “நீர் தான் இந்தக் கவிதையை இயற்றியவரோ?” என்று அந்தக் கவிஞரிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “நான் அப்படி இயற்றவில்லை” என்று கூறி கவிதையை முறையாகச் சொல்லிக் காட்டினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் “எல்லாம் ஒன்று தான்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்பாஸ்(ரழி) நூல்: பைகஹீ (தலாயில)
பிறர் கவிதையை எடுத்துச் சொல்லும்போது கூட, “யாப்பிலக்கண” அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் கூற மாட்டார்கள் என்பதை மேற்கூறிய ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. அப்பாஸ் என்ற கவிஞர் பற்றிய ஹதீஸில் கருத்தை அடிப்படையாகக் கொண்டே “எல்லாம் ஒன்று தான்” என்று கூறினார்கள். ஆனால் யாப்பிலக்கணப்படி அந்தக் கவிஞர் கூறியதே முறையானது. இவைகளெல்லாம், “நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கவிதை இயற்றும் தன்மையை அறிவித்துக் கொடுக்கவில்லை” என்ற குர்ஆன் வசனத்திற்கு நிதர்சனமான எடுத்துக்காட்டாகும்.
ஒரு சில சந்தர்ப்பங்களில் நபி(ஸல்) அவர்கள் ஓரிருவரிகள் பாடியதாக வந்துள்ளவை தற்செயலாக கவிதை அமைப்பில் அமைந்தது என்றே முடிவு செய்ய வேண்டும். திட்டமிட்டு கவிதை இலக்கண விதிகளின்படி இயற்றினார்கள் என்று கருதக் கூடாது.
கிராமப் புறத்தில் உள்ள மொழியிலக்கணம் அறியாத சிலரது பேச்சுக்கள் கூட சில சமயங்களில் கவிதை அமைப்பில் அமைந்துவிடுவதை இன்றும் நாம் காண்கிறோம். அதனால் அவருக்குக் கவிதை ஞானம் உண்டு என்ற முடிவுக்கு வரமுடியாது. இதை நபி(ஸல்) அவர்களே தெளிவு படுத்தியுள்ளனர்.
நான் என் புறத்திலிருந்து அடிப்படையில், நபி(ஸல்) அவர்கள் சில கவிஞர்களுக்குக் கவிதையைச் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது பச்சைப்பொய் என்று அறியலாம்.
இது கனவில் தானே நடந்துள்ளது. கனவில் எது வேண்டுமானாலும் நடக்கலாமே! என்ற ஐயம் சிலருக்கு இங்கே தோன்றலாம். அது உண்மை என்றாலும், கனவில் எது வேண்டுமானாலும் தோன்றலாம். நபி(ஸல்) அவர்கள் இதிலிருந்து விலக்குப் பெற்றவர்கள் என்பதற்கு ஆதாரமுண்டு.
“யார் கனவில் என்னைக் கண்டானோ அவன் என்னையே கண்டான். என் வடிவத்தில் ஷைத்தான் தோன்ற மாட்டான்” (நபிமொழி)
அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரழி) நூல்: புகாரி: முஸ்லிம்
மற்றவர்கள் தோற்றத்தில் ஷைத்தான் விளையாடுவது போல் நபி(ஸல்) அவர்களுடைய தோற்றத்தில் விளையாட முடியாது. நபி(ஸல்) அவர்கள் வாழும் போது எந்த போதனைகளைச் சொன்னார்களோ, அதற்கு மாற்றமாகக் கனவில் சொல்ல மாட்டார்கள் என்று இந்த ஹதீஸிலிருந்து விளங்க முடியும்.
அந்த அப்பா பாடலில் அடியெடுத்துக் கொடுத்தார்கள் என்பதும், இந்த இமாமுடைய கவிதையில் பிழைதிருத்தம் செய்தார்கள் என்பதும் வடிகட்டிய – உண்மை கொஞ்சமும் கலக்காத பச்சைப் பொய்களாகும்.
கவிதைகள் பொதுவாக இஸ்லாத்தில் தடுக்கப்படவில்லை என்பதையும், இஸ்லாத்தின் எந்த போதனைக்கு முரண்படாத கவிதைகளுக்கு அங்கீகாரம் உண்டு என்பதையும் இதுவரை நாம் கண்டோம். அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் இதை இரத்தினச் சுருக்கமாக சொல்லி விடுகிறார்கள்.
கவிதையில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. நல்லதை எடுத்துக் கொள்! கெட்டதை விட்டுவிடு!”
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்: புகாரி இமாமின் அல்அதபுல் முஃபரத்
மேலும் எந்தக் கவிஞர்களின் கனவில் நபி(ஸல்) அவர்கள் தோன்றி அடி எடுத்துக் கொடுத்தார்கள் என்று கூறப்படுகிறதோ அந்தக் கவிஞர்களின் கவிதைகளில் இஸ்லாத்தின் அடிப்படைக்கும் முரணானவை காணப்படுகின்றன. இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரண்பட்ட, இத்தகைய கவிதைகளை நிச்சயம் நபி(ஸல்) அங்கீகரித்திருக்கவே மாட்டார்கள் என்று நாம் உணரலாம்.
“சீறா” என்ற புராணம் பாடிய உமறு என்பவரின் கனவில் நபி(ஸல்) அவர்கள் தோன்றி, அவரது புராணத்திற்கு அங்கீகாரம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரண்பட்ட கருத்துக்களை உள்ளடக்கிய “சீறாவுக்கு” ஒரு போதும் நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் அளித்திருக்க மாட்டார்கள். மாதிரிக்கு “சீறா”வின் சில கருத்துக்களைக் காண்போம்.
புலவர் உமறு, நபி(ஸல்) அவர்களின் அருமைமகள் பாத்திமா(ரழி) அவர்களுக்கும். அலி(ரழி) அவர்களுக்கும் திருமணம் செய்து வைத்ததைப் பின்வருமாறு வர்ணிக்கிறார்.
அந்தத் திருமணச் செய்தி மதீனா நகரெங்கும் முரசறைந்து அறிவிக்கப்படுகிறதாம்! இதைச் செவியுற்ற மதீனா நகரத்து மக்கள்! தங்கள் வீடுகளையும், மாடங்களையும் அலங்கரித்தார்களாம்! தங்கள் வீடுகளின் சுவர்களில் கோலமிட்டார்களாம்! ஒவியம் வரைந்தார்களாம்! தோரணம் கட்டினார்களாம்! பந்தல்கள் போட்டார்களாம்! அந்தப் பந்தல்களில் தொங்கவிடப்படாத பொருட்களே இல்லையாம்! தரை தெரியாத அளவுக்கு மலர்கள் தூவினார்களாம்! தங்கம் வெள்ளிப் பாத்திரங்களில் அறுசுவை உணவுகளைச் சமைத்தார்களாம்!
பெண்கள் புத்தாடை அணிந்து குயில் போல் பாடினார்களாம்! இளைஞர்கள் வீதிதோறும் வாழ்த்துப்பா பாடினார்களாம் முதியவர்கள் தெருத் தெருவாய் குர்ஆனை உரத்த குரலில் ஓதிக்கொண்டு வலம் வந்தனராம்! பின்னர் அலி(ரழி) அவர்கள் குதிரை மீது ஏறி பவனி வந்தார்களாம்! உலகத்தில் உள்ள எல்லா இசைக்கருவிகளும் வரவழைக்கப்பட்டு விண்ணும் மண்ணும் அதிர இசைக்கப்படுகிறதாம்! அலி(ரழி) அவர்களின் பேரழகை கன்னிப் பெண்கள் தம் கடைக்கண்களால் பருகினார்களாம்! அடைந்தால் இவரைப் போன்ற அழகரை அடைய வேண்டும்; இல்லாவிட்டால் செத்து மடிய வேண்டும் என்று எண்ணி ஏங்கினார்களாம்! இவருடைய அழகை பாத்திமா(ரழி) ஒருவர் தானா அடைய வேண்டும் என்று பொறாமைப்பட்டார்களாம்!
இப்படி எல்லாம் கதைவிடுகிறார் உமறுப்புலவர். எந்த வரலாற்று நூலில் இதைப் படித்தாறோ நாமறிவோம். மார்க்கம் அனுமதிக்காத தங்கம், வெள்ளிப் பாத்திரங்களை மதீனா மாநகர மக்கள் (அதாவது சஹாபாக்கள்) பயன்படுத்தியதாக பழி சுமத்துகிறார். கடைக்கண்களால் அன்னிய ஆடவரின் அழகைப் பருகியதாக சஹாபாப் பெண்மணிகள் மீது களங்கம் கற்பிக்கிறார். இசைக் கருவிகளைத் தடை செய்த இஸ்லாத்தில், சஹாபாக்கள் விண்ணும் மண்ணும் அதிர இசைக்கருவிகளை முழங்கச் செய்ததாகக் கூறுகிறார். இந்தக் கருத்துக்களை நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்திருப்பார்களா? தம் வாழ்நாளில் எந்தத் தீமைகளை ஒழிக்க நபி (ஸல்) அவர்கள் பாடுபட்டார்களோ அந்தத் தீமைகளை நபி(ஸல்) அவர்களின் பெயராலேயே அரங்கேற்றம் செய்கிறார்.
“தமிழ்க் கலாசாரத்தைக் தழுவி இப்படிப் பாடிவிட்டார்” என்றெல்லாம் சிலர் சமாதானம் கூறலாம். கற்பனைக் கதைகளில் வரும் கதாநாயகர்களைப் பற்றி அவர் இப்படிப் பாடி இருந்தால் இந்த சமாதானத்தை ஏற்கலாம்! கற்பனை என்று ஒதுக்கி விடலாம், பாதுகாக்கப்பட்டட வரலாறாகத் திகழ்கின்ற அல்லாஹ்வின் திருத் தூதரின் வரலாறு தானா இவரது கற்பனைக்கு வடிகாலாக வேண்டும்? நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தை முஸ்லிம் சமுதாயம் முழுவதும் பின்பற்றி நடக்கக் கடமைப்பட்டு உள்ளனர். அவர்களின் பெயரால் இப்படி எல்லாம் கதைவிடுவதை ஒரு முஸ்லிம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
நல்ல வேளை! அவர் இருபதாம் நூற்றாண்டில் வாழவில்லை. இப்போது இருந்திருந்தால் அந்தத் திருமண நிகழ்ச்சியை வீடியோவில் பதிவு செய்து உலகில் உள்ள எல்லாத் தொலைக்காட்சி நிலையங்களும் ஒரே நேரத்தில் ஒலிபரப்பியதாகவும் பாடி இருப்பார். குதிரையில் பவனி வரச் செய்திருக்க மாட்டார், சொகுசுக் காரில் பவனி வரச் செய்திருப்பார். உலகின் பல பாகங்களிலிருந்தும் மன்னர்கள் விமானம் மூலம் வந்து மதீனாவில் நடைபெற்ற திருமணத்தைக் கண்டு மகிழ்ந்தனர் என்று பாடி இருப்பார். உலகின் எல்லா நாளிதழ்களும் அந்த திருமணச் செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டன என்றும் பாடி இருப்பார்.
இதை விடவும் மோசமான பல கவிதைகள் அதில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தக் கவிதைகளை நபி(ஸல்) அவர்களே அங்கீகரித்துள்ளனர் என்று கூறி இந்தத் தவறுகள் நியாயப்படுத்தப்படுகின்றன. சொன்னதைச் செய்து காட்டிய நபி(ஸல்) இந்தப் பொய் புராணத்தை ஒரு போதும் அங்கீகரித்திருக்க மாட்டார்கள் என்பதே திண்ணம்.
சில தமிழ்க் கவிஞர்கள் இந்த இடத்தில் நம்மீது ஆத்திரப்படலாம். நாம், உமறுப் புலவரின் தமிழறிவையோ, அதன் இலக்கியத் தரத்தையோ விமர்சனம் செய்யவில்லை. அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, அவர்கள் போதித்த போதனைகளுக்கு மாற்றமாக சித்தரித்துக் காட்டியதைத்தான் நாம் விமர்சிக்கிறோம். நபி(ஸல்) அவர்களின் வாழ்வு கூடுதல், குறைவின்றி உள்ளபடி மக்கள் முன் வைக்கப்பட வேண்டும், அவ்வாறு வைக்கப்படவில்லை என்கிறோம்.
உமறுப் புலவரின் சீறாவுக்கு மட்டுமல்ல. இன்னும் பல கவிதைகளுக்கும் கூட நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் வழங்கியதாக கதைகள் பல உண்டு. அவற்றில் உள்ள தவறுகளை நியாயப்படுத்தி உயர்ந்த அந்தஸ்தில் வைத்து மக்கள் போற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இப்படிக் கதைகள் விடப்படுகின்றன.
காசிம் புலவர் என்பவர் நபி(ஸல்) அவர்களின் பெயரில் திருப்புகழ் பாட எண்ணிய போது எப்படித் துவக்குவது என்று அவருக்குத் தோன்றவில்லையாம்! அவரது கனவில் நபி(ஸல்) அவர்கள் தோன்றி “பகரும்” என்று முதலடியைத் துவக்கி கொடுத்தார்களாம்! உடனே அவர் “பகருமுருவிலி அருவிலி வெருவிலி” என்று தன் திருப்புகழைத் துவக்கினாராம்!
இவ்வாறு பாடிக் கொண்டு வரும்போது, ஒரு செய்யுளின் இறுதியடியில் “மக்கப்பதிக்கும்” என்று சொன்னாராம்! அடுத்த வார்த்தை அவரது நாவில் வரவில்லையாம்! திரும்பத் திரும்ப “மக்கப்பதிக்கம் மக்கப்பதிக்கும்” என்று புலம்பிக் கொண்டே ஒரு குளத்தில் இறக்கி விடுகிறாராம்! தண்ணீர் தொண்டை அளவுக்கு வந்துவிட்டதால் இனி ஓரடி எடுத்து வைத்தால் அவர் மூழ்கி விடுவார் என்ற நிலையில் நபி(ஸல்) அவர்கள் திருக்காட்சி நல்கி “மக்கப்பதிக்கும் உணர் சொர்க்கம் பதிக்கும் மா இரசூலே” என்று அதனை முடித்துக் கொடுத்தார்களாம்!
இது உமறுப் புலவரின் பெயரால் கூறப்படும் பொய்யைவிட பயங்கரப் பொய்யாகும். உமறுப் புலவருக்கு கனவில் மட்டும் தான். நபி(ஸல்) அவர்கள் வந்ததாக கதை விடப்பட்டது. இவருக்கு கனவில் தோன்றி ஆரம்பித்துக் கொடுத்ததோடு நேரடியாகவும் நபி(ஸல்) அவர்கள் திருக்காட்சி நல்கினார்கள் என்று பச்சைப் பொய் சொல்லப்படுகிறது.
நபி(ஸல்) அவர்கள் நேரடியாகவே இவருக்குத் திருக்காட்சி நல்கியதாக ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்? நபி(ஸல்) அவர்கள் திருக்காட்சி நல்குவார்கள் என்றால், இந்த சமுதாயத்தில் பல பிளவுகள் போர்க்களங்கள் ஏற்பட்ட போது திருக்காட்சி நல்கி சமுதாய ஒற்றுமைப் படுத்தி இருக்க மாட்டார்களா? (“நபி(ஸல்) அவர்கள் எவருக்கும் நேரடியாக திருக்காட்சி நல்க மாட்டார்கள்” என்பதற்கு விரிவான ஆதாரங்களுடன் இதே தொடரில் முன்னர் நாம் விளக்கினோம்.)
கொஞ்சம் சிந்தித்தாலே இது பச்சைப் பொய் என்பதை எவரும் உணரலாம்! இவர் நபி(ஸல்) அவர்களை “மக்கப்பதிக்கு ரசூல்” என்கிறார். ஆனால் அல்லாஹ், தன் திருமறையில் “உலக மக்கள் அனைவருக்கும் ரசூல் என்கிறான்.
(உலக) மக்கள் அனைவருக்குமே நாம் உமமைத் தூதராக அனுப்பியுள்ளோம். (அல்குர்ஆன் 34 : 28) அகில உலகுக்கும் அருட்கொடையாக உலக மாந்தர் அனைவருக்கும் அல்லாஹ்வின் திருத்தூதராக அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்கள் மக்கப்பதிக்கு மட்டும் தூதர் என்று ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்?
அடுத்து “சொர்க்கம் பதிக்கும் ரசூல்” என்கிறார். சொர்க்கத்தில் ஏவல், விலக்கல் எதுவும் கிடையாது. உள்ளம் விரும்பக் கூடியதெல்லாம் சொர்க்கத்தில் உண்டு (அல்குர்ஆன் 43 :71) அல்லாஹ்வை நேரடியாகவே காணுகின்ற பெரும் பேறு சுவனத்தில் உண்டு (அல்குர்ஆன் 75 : 23) என்பது திருக்குர்ஆன் மூலம் நிருபணமாகின்றது. அங்கே ஏவல், விலக்கலைச் சொல்லித்தர தூதர்கள் இல்லை. விரும்பியபடி நடந்து கொள்ளலாம்! இவரோ “சொர்க்கப் பதிக்கும் இரசூலே” என்கிறார். ‘மக்கப்பதிக்கு ரசூல்’ என்று சொன்னதன் மூலம் நபி(ஸல்) அவர்களைக் குறுகிய வட்டத்துக்குத் தூதராக்குகிறார் “உயர் சொர்க்கப் பதிக்கும் இரசூல்” என்று இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டுகிறார். அந்தப் புலவர், தானே இப்படிப் பாடியதாகக் கூறப்பட்டால், அவரது அறியாமை என்று ஒதுக்கி விடலாம். அல்லாஹ்வின் திருத்தூதர்(ஸல்) அவர்களே இந்த அடியை எடுத்துக் கொடுத்தார்கள் என்றால் எவ்வளவு பெரிய பழியை நபி(ஸல்) அவர்கள் மீது சுமத்துகிறார்.
அதே திருப்புகழில், இவர் செய்த விபச்சாரத்துக்கும், மது அருந்தியதற்கும், கொலை செய்ததற்கும், களவு செய்ததற்கும். அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்ட இவர், அக்குற்றங்களையெல்லாம் மன்னிக்கும்படி அல்லாஹ்வின் தூதரிடம் வேண்டுகிறார்.
வறுமையென்னும் படர் தீயாலே
எனதுடலினுறும் பிணி நோயாலே – பசி
வலியடுமின் சுவை ஊணாலே – இடை
புனையாடை வகையது ஒன்றும் இலாதாலே
கொலை களவு பொய் குண்டுணி கோளாலே -தினம்
வறிதில் நிறைந்திடு தாழ்வாலே – விலை
மடமானார் உறவு செய்தின்புறுமாலாலே
கொடுமறநெறி வஞ்சனை சூதாலே -தனி
உலகில் உழன்று அவமே வாழ்நாளில்
உறைவேனோ உறுபகையின் கொடியேனானாலும்
நின்னடிமையை நின்கைவிடாதோமா மனம்
உருகி இரங்கிவினோர்மேல் வீடினி – அருள்வாயே!
என்று பாடி அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் கருத்தை உதிர்க்கிறார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதை எப்படி அங்கீகரித்திருப்பார்கள்? எந்த ஷிர்கை வேரறுக்க அனுப்பட்டார்களோ அதே ஷிர்கை ஒரு போதும் நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்க மாட்டார்கள்.
இதுபோல் ஆலிப்புலவர் என்பவர் ‘மிராஜ் மாலை’ என்று ஒரு காப்பியம் இயற்றி அதைக் கோட்டாறு என்ற ஊரில் அரங்கேற்றினாராம். பாடிக் கொண்டே பின்வரும் வரிகளைச் சொன்னாராம்!
நாலாம் வானமிலங்கும் ஞானரத்ன மஃமூரில்
வாலாயமாய் வீற்ற வான்பரியை – கோலத்தூண்
தான் துளைத்துக் கட்டியரோ தாஹா
சென்றாரைந்தாம் வானகத்தின் உள்ளே மகிழ்ந்து
என்ற வெண்பாவைப் பாடினாராம்.
(கருத்து :- புராக் வாகனத்தின் மிஃராஜ் செல்லும் போது மஸ்ஜிதுல் மஃமூர் பள்ளியில் உள்ள ஒரு தூணில், தம் விரல்களால் துளையிட்டு அதில் புராக் வாகனத்தைக் கட்டிவிட்டு ஐந்தாம் வானம் சென்றார்கள்.)
இதைப் பாடியபோது நபி(ஸல்) அவர்கள் உடனே விஜயம் செய்து “புலவரே! அந்தச் செய்தி எனக்கும், என்னுடன் வந்த ஜிப்ரீலுக்கும் தானே தெரியும்! உமக்கெப்படித் தெரிந்தது?” என்று கேட்டார்களாம்; அதற்கு அவர் “அண்ணலே! இயல்பாகவே, என்வாயில் அப்படி வந்து விட்டது” என்று சொல்லி உடனே மூர்ச்சையுற்று கீழே விழுந்து விட்டாராம்.
இதற்கு என்ன ஆதாரம்? என்று நம்மில் எவரும் கேட்டு விடக் கூடாது என்பதற்காக முன் ஜாக்கிரதையாக அணை போடுகின்றனர். இந்தப் பொய்யை அல்லாஹ்வின் தூதர் அவர்களே அங்கீகரித்து விட்டதாகச் சொல்லி விட்டால் எல்லோருடைய வாயையும் அடைத்து விடலாம் என்று திட்டமிட்டு இப்படிக் கதை கட்டியிருக்கிறார்கள்.
இன்றவளவும் கோட்டாறு மக்களில் சிலர் “நபி(ஸல்) அவர்கள் கோட்டாறுக்கு விஜயம் செய்ததாக நம்புகின்றனர். மிஃராஜ் மாலையைப் புனிதமாகக் கருதி, அங்கே விழாக்களும் நடத்தி பக்திபரவசமாகப் பாடுகின்றனர்.
ஆக, கடந்த காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த முஸ்லிம் கவிஞர்களில் விரல்விட்டு எண்ணப்படும் சிலரைத்தவிர, பெரும்பாலோர் தங்கள் கற்பனையில் தோன்றியதை எல்லாம் இஸ்லாத்தின் பெயரால் கவிதைகளாகத் தந்துள்ளனர்.
அந்தத் தவறுகளை மக்களும் மார்க்க அறிஞர்களும் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காக, நபி(ஸல்) அவர்களே இவற்றை அங்கீகரித்து விட்டதாகச் சொல்லி வாயடைத்தனர்.
இந்தக் கவிதைகளின் கருத்துக்களைக் காணும்போது, நபி(ஸல்) இவற்றைக் கனவிலோ நேரிலோ அங்கீகரித்திருக்க மாட்டார்கள் என்பது தெளிவு. நபி(ஸல்) அவர்களுக்குக் கவிபாடத் தெரியாது என்று குர்ஆன், ஹதீஸ் மூலம் நாம் ஏற்கனெவே நிரூபித்ததன் அடிப்படையிலும் இவை பொய்யேயன்றி வேறில்லை என்று உணரலாம்.
மவ்லிதுகள், கவிதை என்ற காரணத்துக்காக மறுக்கப்படவில்லை என்பதை இதுவரைக் கண்டோம். இனி மவ்லிது மறுக்கப்படுவதற்கான காரணங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். (வளரும்)
இப்னு மர்யம்
{ 1 comment }
தமிழுக்கு அர்த்தமே உங்களுக்கு தெரியவில்லை இவர்களெல்லாம் மார்க்கம் பேச வந்து விட்டார்களப்பா….
Comments on this entry are closed.