ஏனிந்தப் பேரிடர்கள் பேரழிவுகள்?

Post image for ஏனிந்தப் பேரிடர்கள் பேரழிவுகள்?

in சமூகம்

நிம்மதி இல்லையே ஏன்?
இன்று உலகம் சகலவிதமான பேரிடர்களையும் அடிக்கடி சந்தித்து வருகிறது. மக்களுக்கு நலன் பயக்கும் காற்று, மழை, வெயில் போன்றவை இன்று மக்களுக்கு பெருங்கேட்டை விளைவிக்கின்றன. இவை அல்லாமல் நிலநடுக்கம், சுனாமி, எரிமலை, கொடும்புயல், கடல் சீற்றம் இன்னோரன்ன பேரழிவுகளும் அடிக்கடி நிகழ்கின்றன. இன்றைய சூழ்நிலையைக் கவனித்தால் மனித குலம் அமைதியற்ற, சஞ்சலங்கள் நிரம்பிய நிலையில், விலைவாசியின் கடுமையான ஏற்றத்தால் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள மக்களும், நடுத்தர மக்களும் அன்றாட அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் அன்றாடம் அல்லல்படுவதையே கண்டு வருகிறோம்.

அதனால் கொலை, கொள்ளை, களவு என அன்றாடம் நாளொரு மேனியும், பொழு தொரு வண்ணமுமாக செழித்து வளர்ந்து வருவதையுமே பார்க்கிறோம். ஏழைகள் இல்லாமையால் ஏங்கி அன்றாடம் சாகாமல் செத்துக் கொண்டிருப்பதுபோல், அநியாயம், அட்டூழியங்கள், மோசடிகள் செய்து அளவுக்கு மீறிய சொத்தைக் குவித்து வைத்திருப்பவர்கள், எந்த நேரத்தில் என்ன நடக்குமோ, எப்போது வருமான வரித் துறையினர் ரைட் வருவார்களோ, எந்த வழக்கில் சிக்கி சிறை செல்லுவோமோ, பாதிக்கப்பட்டவர்கள். தம்மைக் கொன்று விடுவார்களோ என்ற அச்சம் ஒரு புறம், மோசடிகள் செய்து சேமித்த சொத்தை, மோசடிப் பேர்வழிகளும், கொள்ளையர்களும் கைப்பற்றி விடுவார்களோ என்ற அச்சம் ஒரு புறம் என சாகாமல் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கொடிய நோய்களில் சிக்கிச் சேமித்த பணத்தைத் தண்ணீராகச் செலவிடும் கட்டாயத்திலும் பலர் மனம் வெந்து சாகாமல் சாகின்றனர். ஆம்! இன்று இவ்வுலகில் செல்வம் குவிந் திருப்பவர்களுக்கும் நிம்மதி இல்லை; இல்லாதவர்களுக்கும் நிம்மதி இல்லை. ஒட்டு மொத்த மனித குலத்திற்கே நிம்மதி இல்லை. என்ன காரணம்?

மனிதன் ஷைத்தானுக்கு அடிமை?
மனித நேயத்தோடு மனிதனை மனிதன் மதித்து வாழவேண்டிய ஆறறிவு மனிதன் ஐயறிவு மிருகங்களை விட கேடுகெட்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதே முக்கிய காரணம். இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் கடவுளை மறுக்கும் நாத்திகர்களும் கடவுள் படைத்த சாத்தானுக்கு அடிமைப்பட்டு மனசாட்சியைக் கொன்று மனோ இச்சை விரும்பும் மிருக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடவுளை ஏற்கும் ஆத்திகர்களும் மனித ஷைத்தான்களான (தாஃகூத்) மதகுருமார்களுக்கு அடிமைப்பட்டு மிருக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

காண்பது கானல் நீர்!
நாத்திகர்களோ அவர்கள் செய்யும் குற்றச் செயல்களுக்கு நாளை மறுமையில் விசாரணையோ தண்டனையோ இல்லை, ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் லஞ்சம் கொடுத்து ஏமாற்றி விடலாம் என்ற மூட நம்பிக்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆத்திகர்களோ தாங்கள் செய்யும் குற்றச் செயல்களுக்கு அவர்கள் மூட நம்பிக்கை வைத்துள்ள மதகுருமார்களுக்கு தட்சணை, காணிக்கை என லஞ்சம் கொடுத்து குற்றச் செயல்களிலிருந்து விடுபட்டு சுவர்க்கம் புகலாம் என்ற மூட நம்பிக்கையில் குற்றச் செயல்களில் துணிந்து ஈடுபடுகின்றனர். ஆத்திகர்களும், நாத்திகர்களும் நாளை மறுமையில்தான் தங்கள் குற்றச் செயல்களுக்குரிய கொடிய தண்டனைகளைப் பெற இருக்கிறார்கள். ஆயினும் அவ்விருசாராரின் குற்றச் செயல்களுக்குரிய ஒரு சிறு பகுதி தண்டனைகளை இவ்வுலகிலும் அனுபவித்தே ஆகவேண்டும். இதையே இணை துணை இல்லா ஏகன் இறைவன் தனது இறுதி வழிகாட்டல் நூல் குர்ஆனில், வரம்பு மீறி நடந்த சில கூட்டத்தார் இவ்வுலகில் எப்படிப்பட்ட தண்டனைகளை அனுபவித்தார்கள் என்று அறிவித்துள்ளான்.

முன்னைய சமூகங்கள் அழிக்கப்பட்ட வரலாறுகள்!
நூஹ் சமுதாயத்தினர் பிரளயத்தால் மூழ் கடிக்கப்பட்டார்கள்.(7:59-64) ஆத் கூட்டத்தார் அழிக்கப்பட்டனர். (7:65-72). ஃதமூது கூட்டத்தார் பூகம்பத்தால் அழிக்கப்பட்டார்கள் (7:73-79) லூத் நபியின் சமூகத்தார் கல்மாரி பொழியப்பட்டு அழிந்தனர் (7:80-84) ஷிஐபு நபியின் சமூகத்தார் பூகம்பத்தால் அழிக்கப்பட்டார்கள் (7:85-93) ஃபிர்அவ்னும் அவனை நம்பிய கூட்டத்தாரும் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டார்கள்.

மேலும் எந்தெந்த சமூகங்கள் வரம்பு மீறி நடந்ததால் எப்படியெல்லாம் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு எப்படியெல்லாம் அழிக்கப்பட்டார்கள்; இவை அல்லாமல் நாளை மறுமையிலும் கொடிய தண்டனைகள் காத்திருக்கின்றன என்பதை அல் அஃராஃப் 7-ம் அத்தியாயத்தின் ஆரம்ப வசனம் 1 முதல் இறுதி வசனம் 206 வரை சுயசிந்தனையுடன் படித்து விளங்குகிறவர்கள் நிச்சயம் அறிய முடியும்.

மனிதன் கைகளால் தேடிக் கொண்டதையே அனுபவிக்கிறான்!
ஆக மனிதகுலம் தங்கள் கைகளால் தேடிக் கொண்டவற்றை இவ்வுலகிலும் அனுபவிக்கிறார்கள். நாளை மறுமையில் மிகக் கடுமையான மெகா தண்டனைகள் அவர்களுக்காகக் காத்திருக்கின்றன. இவ்வுலகில் கொடிய அழிவுகளுக்கு ஆளான முன்னைய சமூகத்தார் எப்படிப்பட்ட வரம்பு மீறல்களை பெருமையுடன் அரங்கேற்றினார்களோ, அதே வரம்பு மீறல்களையே இன்று வாழும் மனித குலத்தினர் பெருமையுடனும், ஆணவத்துடனும் அரங்கேற்றி வருகின்றனர். தெளிவாக அவர்களின் மனசாட்சி அறிவுறுத்தியபோதிலும் மனோ இச்சைக்கு அடி பணிந்து ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், கோடி கோடியாக சொத்து குவித்தவர்கள், ஊடகத்தார்கள், தாதாக்கள், ரவுடிகள், கட்டப் பஞ்சாயத்தார்கள் என ஆதிக்கம் செலுத்தும் அனைத்துத் தரப்பினரும் அனைத்து வகைக் குற்றச் செயல்களிலும் துணிந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பதை அன்றாடம் செய்திகளாக ஊடகங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன.

குற்றங்கள் பெருகி வருகின்றன!
நாளுக்கு நாள் இக்குற்றச் செயல்கள் பெருகி வருகின்றனவே அல்லாமல் குறைந்தபாடில்லை. மேலும் இக்குற்றச் செயல்களிலிருந்து பிரதம மந்திரி, முதன் மந்திரிகள், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பீ.எம்.எல்.ஏ., எம்.எல்.சி. நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், புலனாய்வுத்துறை அதிகாரிகள், முக்கியத் துறைகளின் தலைமை அதிகாரிகள் என யாரும் விதி விலக்குப் பெறுவதாகத் தெரியவில்லை.

நிச்சயம் தண்டனை உண்டு!
தாங்கள் செய்யும் குற்றச் செயல்களுக்கு வெகு நிச்சயமாகத் தண்டனை உண்டு. இவ்வுலகில் ஆட்சியாளர்களையும், மதகுருமார்களையும் லஞ்சம் கொடுத்து ஏமாற்றித் தப்பிவிட்டதாக நப்பாசைக் கொண்டாலும், நாளை மறுமையில் நிச்சயமாக எஜமானனான இறைவன் முன்னால் விசாரணையும் அவற்றிற்குரிய தண்டனைகளையும் நிச்சயம் பெற்றே தீர வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கை யாருக்கு உண்டோ அவர்கள் மட்டுமே இக்குற்றச் செயல்களை விட்டும் பாதுகாப்புப் பெற முடியும்.

இறைவன் வழிகாட்டியுள்ளான்!
ஏகன் இறைவன் இம்மனித குலத்திற்கு ஆரம்பத்திலிருந்தே இறைத்தூதர்கள் மூலம் நேர்வழியைக் காட்டிக் கொண்டே இருக்கிறான். மதகுருமார்களே இடையில் திருட்டுத்தனமாகப் புகுந்து கோணல் வழிகளை மதங்களாகக் கற்பனை செய்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கிறார்கள். முன்னைய இறைத்தூதர்களுக்கு அருளப்பட்டவை இம்மத குருமார்களால் மாசுபடுத்தப்பட்டு வெற்று வேதாந்தங்களாகி வேதங்கள் என்ற பெயரால் நடை முறைச் சாத்தியமற்றவை ஆகிவிட்டன. அவை அருளப்பட்ட மொழிகளும் செத்த மொழிகளாகிவிட்டன. (Dead Languages) ஏகன் இறைவனும் அவற்றை செல்லாதவையாக்கி விட்டு இறுதித் தூதர் மூலம் இறுதி வாழ்க்கை நெறியாக அல்குர்ஆனை அரபி மொழியில் அருளினான். இன்று அரபி மொழியும் பாதுகாக்கப்பட்டு பேச்சு வழக்கில் இருக்கிறது. குர்ஆனும் ஒரு புள்ளி கூட மாற்றாமில்லாமல் இறைவனால் பாதுகாக்கப்படுகிறது. (15:9)

எனவே மனித குலத்தில் உண்மையிலேயே அக்கறை செலுத்தும் அறிவு ஜீவிகள், இறுதி நெறி நூல் அல்குர்ஆனை சுய சிந்தனையுடன், நடுநிலையுடன் படித்து உணர்ந்து, மனித குலத்தை சுயநல, வஞ்சக மதகுருமார்களிடமிருந்தும் சுயசுல அரசியல் குருமார்களிடமிருந்தும் விடுவித்தால் அல்லாமல், மனித குலத்திற்கு இவ்வுலகிலும் அமைதியான வாழ்க்கை கிடைக்காது. பேரிடர்களிலிருந்தும் தப்ப முடியாது. நாளை மறுமையிலும் ஈடேற்றமின்றி நரகம் புகுந்து கொடிய வேதனைகளை அனுபவிக்க வேண்டி வரும். இதுவே உறுதியான செய்தியாகும்! சிந்திப்பீர்! சீர்பெறுவீர்!

அந்நஜாத்

{ 1 comment }

yaseer June 7, 2012 at 6:38 pm

eeman kondavargalai allah paadhukaapanaga.. aameen..

Comments on this entry are closed.

Previous post:

Next post: