எது ஜிஹாத்?

in பொதுவானவை

  ஜிஹாத் இன்று மிக அதிகமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டஇஸ்லாமிய மரபுச்சொல் ஜிஹாதாகத்தான் இருக்க வேண்டும். ஜிஹாத் என்றாலே மற்ற மதத்தவர்களைக் கொல்லுதல்; தாக்கி அழித்தல்; அவர்கள் மீது போர் தொடுத்தல் என்கிற ரீதியில் ஒரு தவறான கருத்தோட்டம் நிலை பெற்றிருக்கிறது.

   இந்த தவறான புரிதலுக்கும், கருத்தாக்கத்துக்கும் பல்வேறு காரணங்களும் பின்னணிகளும் இருக்கின்றன. மேற்கத்திய மீடியாக்களின் சளைக்காத பிரச்சாரமும் ஒரு காரணம். இஸ்லாத்தை முஸ்லிம்களே சரியாக விளங்கிக் கொள்ளாமல்இருப்பதும் ஒரு காரணம்.

    ஜிஹாத் என்கிற அரபுச் சொல்லுக்கு அயராத போராட்டம், விடா முயற்சி, கடின உழைப்பு என்றெல்லாம் பொருள் உண்டு.

ஜிஹாத் என்றாலே மற்ற மதத்தவர்களைக் கொல்லுதல்; தாக்கி அழித்தல்; அவர்கள் மீது போர் தொடுத்தல் என்கிற ரீதியில் பிரச்சாரம் செய்யப்படுகிறது இது சரியா?

    இஸ்லாமிய வாழ்க்கை முறையை இத்தரணியில் மேலோங்கச் செய்து இறை உவப்பைப் பெறுவதற்காக வேண்டி பாடுபடுவதும் அந்த நோக்கத்திற்காக தம்மிடம் உள்ள அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் ஆற்றல்களையும் திறமைகளையும் பயன்படுத்துவதுதான் ஜிஹாத்.

    நமது வாழ்விலும் நாம் வாழும் சமூகத்திலும் நன்மைகளை ஏவுவதற்காகவும், தீமைகளை அழித்தொழிப்பதற்காகவும் ஓயாமல் பாடுபடுவதுதான் ஜிஹாத். இறைத் திருப்தியை பெறுவதே ஜிஹாதின் நோக்கமாக இருக்கவேண்டும். இவ்வுலகில் முதல் கட்டமாக மனிதன் தன் மனத்துடன் போராடி, மனஇச்சைகளை வென்று, உளத்தூய்மையை ஏற்படுத்தப் போராடுவதும் ஜிஹாத் தான். இன்னும் சொல்லப்போனால் எதிரிகளுடன் போரிடுவதைவிட மனதுடன் போரிடுவது தான் உயர்ந்தது. அதுவே பெரிய ஜிஹாத் (ஜிஹாதே அக்பர்) என அண்ணலார் (ஸல்) தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

    ஆக, மனத்துடன் போராடி மன இச்சைகளை வீழ்த்தி நமது உள்ளத்தில் இறையாட்சியை நிறுவுவதுதான் மிகப்பெரிய ஜிஹாத் ஆகும். ஒரு எதிரி நாட்டுடன் போரிட வேண்டுமெனில் அதனை தனி நபரோ, தனிக்குழுக்களோ தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது. ஒரு இஸ்லாமிய அரசுதான் அத்தகைய ஜிஹாதை அறிவிக்கவும் நடத்தவும் அதிகாரம் படைத்ததாகும்.இன்று உலகில் எங்குமே இஸ்லாமிய அரசுஇல்லாத நிலையில் ஜிஹாத் என்கிற பெயரில் செய்யப்படுபவை எதுவும் ஜிஹாதே கிடையாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

    ஒரு இஸ்லாமிய அரசு கூட தன்னிச்சையாக வேறொரு நாட்டின் மீது ஜிஹாத் என அறிவித்து விட முடியாது. அது மட்டுமல்ல இந்த விஷயத்தில் உலகாதய அழைப்பு ரீதியான, ஒழுக்க ரீதியான என எல்லா அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்தே அது முடிவெடுக்கும். அவ்வாறு போரிடும்போது கூட பெண்களை, பொதுமக்களை, குழந்தைகளை, மதகுருக்களைத் தாக்கக்கூடாது. விளை நிலங்களைச் சேதப்படுத்தக்கூடாது. மரங்களை வீடுகளை கொளுத்தக் கூடாது. நிராயுதபாணி வீரர்களை கொல்லக்கூடாது என்றெல்லாம் இஸ்லாம் நிபந்தனைகளை விதிக்கிறது.

    அப்பாவி பொதுமக்களை வேட்டையாடுகிற யூத நடைமுறை இஸ்லாத்துக்கும் இஸ்லாம் காட்டும் அறவழிக்கும் முற்றிலும் மாறுபட்டதாகும். அதே சமயம் தீமைகள் புயலாய் வீசும்போது மூலையில் முடங்கியிருக்கவும் இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை.

    “இனி மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கின்றீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள்” (அல்குர்ஆன் 3:110)

    நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்: “உங்களில் எவர் ஒரு தீய செயலை காண்கிறாரோ அவர் அதனை தனது கைகளால் தடுக்கட்டும். அவரால் முடியவில்லையெனில் அதை நாவால் தடுக்கட்டும். அவரால் அதையும் செய்ய முடியவில்லையெனில் அதை தம் மனத்தால் வெறுக்கட்டும். இது இறை நம்பிக்கையில் மிகவும் பலவீனமான நிலையாகும். (நூல்: முஸ்லிம்)

    கொடுங்கோள் ஆட்சியாளனின் முன் உண்மையை எடுத்துரைப்பது மாபெரும் அறப்போர் ஆகும். (நூல்: முஸ்லிம்)

    ஆக நன்மையை ஏவுவதும், தீமைகளுக்கு எதிராகப் பொங்கி எழுவதும் அறவழியில் போராடுவதும் ஜிஹாத் ஆகும். பொது மக்களுக்குத் தீங்கிழைப்பதும் அப்பாவி மக்களின் உயிரைப் பறிப்பதும் எந்த நிலையிலும் ஜிஹாத் ஆகாது.

தாரிக் அஜீஸ்,    சமரசம்

Comments on this entry are closed.

Previous post:

Next post: