“கூடாது” என்கின்றனர் சிலர் “கூடும்” என்கின்றனர் சிலர். இரண்டு கூட்டத்தினரும் ஆலிம்கள் தான். எதைச் செய்வது? யார் சொல்லைக் கேட்பது? அப்பப்பா… மண்டையை பிச்சிக்கிறனும் போல இருக்கே! இவர்கள் குழப்புகிற குழப்பத்தில் நாம் இருக்கிற கொஞ்சம் அறிவையும் இழந்து விடுவோம் போல இருக்கே… என நம்மைப் போன்ற பாமரர்கள் பலர் குழம்பும் நிலை, பொதுவாக எல்லா இடங்களிலும் இல்லாமல் இல்லை. இறைவனின் அருளைப் பெறுவதே நமது இலட்சியமாக இருப்பதால் இக்குழப்பத்திலேயே கிடந்து உழன்று கொண்டிராமல் சரியான வழியை தெரிவு செய்து, அதன்படி நடக்க வேண்டியது அவசியமாகிறது.
இரு தரப்பினருமே “தாங்களே சரியான வழிகாட்டிகள்” எனக் கூறிக் கொள்வதால், சரியான வழி காட்டிகள் யார் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டிய பொறுப்பும் நமக்கே வந்து விடுகிறது. எப்படிக் கண்டுபிடிப்பது? இதோ ஒரு முன்னுதாரணம். மரியாதைக்குரிய இமாம்கள் ஹதீஸ்களைத் திரட்டும்போது கூறுபவரின் தன்மைகளை ஆராய்ந்தே (அவர் உண்மையாளரா, ஞாபக சக்தி உள்ளவரா… என்பன போன்றவை) சிலர் சொன்னதை ஏற்றனர்: சிலர் சொன்னதைத் தள்ளிவிட்டனர். அதே போல நாமும் இரண்டு தரப்பாரையும் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இருவருக்கும் சில வேறுபாடுகள் தெரியும். அந்த வேறுபாடுகளிலிருந்து எது சரியான கூட்டம்? இறைவனும், நபிகளாரும் காட்டிய வழியைப் பின்பற்றுபவர்கள் யார்? எனத் தெரிந்துவிடும். இப்போது இரு கூட்டத்தினரின் கூற்றுக்களையும் நோக்கி வித்தியாசங்களை விதப்படுத்துவோம்.
ஒரு தரப்பினர் ‘இறைவன் தந்த குர்ஆனும், நபிகளாரின் ஹதீஸ்களும் தடுக்கின்றவற்றைச் செய்யாதீர்கள்’ என்கின்றனர். மறு தரப்பினர், ‘இங்கு வாழ்ந்த பெரிய பெரிய மகான்கள், ஆலிம்கள் எல்லாம் இதைத் தடுக்கவில்லையே! அவர்களுக்குத் தெரியாததா இவர்களுக்குத் தெரிந்துவிட்டது’ என மறுமொழி பகர்கின்றனர்.
முதல் சாரார், அவ்லியாக்களின் அடக்கஸ்தலங்களை, இஸ்லாம் வெறுக்கும் அனாச்சாரங்களின் கூடாரங்களாக்காதீர்; அந்தப் புனிதர்கள் எவற்றை வெறுத்தார்களோ அவற்றையெல்லாம் அவர்களின் பேர்களிலேயே செய்யாதீர்’ என்கின்றனர். மறுசாராரோ, இவர்கள் அவ்லியாக்களே இல்லை என்கிறார்களே. இவர்களை விடலாமா! இன்னும் சில நாட்களில் அல்லாஹ்வையும், ரசூலையுமே இல்லை எனச் சொல்வார்கள்!” என்கின்றனர்; இதில் சிலர் முந்திய சாரார் என்ன சொல்கிறார்கள் என்பதை விளங்காமலேயே கூறுவர். சிலர் விளங்கினாலும் முந்திய சாராரின் மீது பாமரர்களின் கோபத்தை உண்டாக்கிவிட வேண்டும் எனத் தங்களின் கற்பனை மூட்டைகளைக் கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.
முதல் பிரிவினர் “தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக இறைமறை வசனங்களையும், இறுதி நபியின் போதனைகளையும்” தருகின்றனர். இரண்டாம் பிரிவினரோ ஏதாவது மலையாளம், உர்து மொழிகளில் எழுதிய கிதாபுகளை, மஸ்தான்கள் அல்லது அப்பாக்கள் எழுதியதாகக் கூறப்படுபவற்றைத் தூக்கிக் கொண்டு வருகின்றனர்.
ஒரு கூட்டம் மார்க்கப் பணியையே குறிக்கோளாய்க் கொண்டு செயல்படுகின்றது. எனவே இவர்கள் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் கலங்காது தொடர்ந்து தங்களின் கொள்கைகளை முழங்குகின்றனர். மற்றொரு கூட்டமோ காசையே குறிக்கோளாய்க் கொண்டு மார்க்கப்பணி செய்கின்றது. எனவே இவர்கள், “முந்திய தரப்பினர் சொல்வது சரிதான் என்றாலும்…என்றாலும் (என இழுத்து) இப்போது உள்ள மக்களிடம் இதெல்லாம் எடுபட மாட்டேன் என்கிறதே; மெல்ல மெல்லத்தான் சொல்ல வேண்டும்” என்கின்றனர். (இதுவரை மெல்ல மெல்ல சொல்லி உள்ளனரா?) நாயகம், அன்றைய அறியாமைக்கால அரபிகளிடம் தெளிவாகவும், நேரிடையாகவும், சொன்னவற்றை இன்றைய முஸ்லிம்களிடம் கூடச் சொல்லப் பயப்படுகின்றனர் இவர்கள்.
முதல் சாரார், ‘எல்லோரது கருத்தையும் கேளுங்கள். எல்லாவற்றையும் படியுங்கள் அனைத்துக்கும் குர் ஆனிலோ, ஹதீஸிலோ ஆதாரம் கேளுங்கள். ஆதாரப்பூர்வமானவற்றை நாமும் ஏற்றுக்கொள்வோம்; ஏற்றுக் கொள்ளவேண்டும்’ எனக் கூறித் தங்களின் கூற்றுகளுக்கு, இதோ இறைவசனம்! இதோ இறை தூதர் மொழி! என விஷயங்களைத் தந்து கொண்டேயுள்ளனர். இரண்டாம் சாரார்களோ இதைப் படிக்காதீர்கள், ஈமான் பறிபோய்விடும், இவர்கள் கூறுவதைக் கேட்காதீர்கள், குழப்பி விடுவார்கள் என்கிறார்கள்! இந்த வாதத்திலேயே இவர்களின் பலவீனம் பல்லிளிக்கிறது.
இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம் எவர்கள் சரியான கோணத்தில் இஸ்லாத்தை அனுகுபவர்கள் என்பதை! தெரிந்த பின்னர் இனிமேலாவது நாம் யாரையும் கண்மூடிப்பின்பற்றாமல் ஒரு நாளில் ஒரு சில மணி நேரமாவது குர்ஆன் தர்ஜுமா, ஹதீஸ் தமிழாக்கம் படித்து அதன்படி வாழ முயற்சிக்க வேண்டும். இன்ஷாஅல்லாஹ்.
{ 2 comments }
படிப்பவர்கள் தரும் இது போன்ற கருத்துக்கள் எங்கே தந்துள்ளீர்கள்?
unkal katturai arumai ,,,,
islam sutham parti nirya kurukirathi
suthupurathai thumaiyaha vaikka kuruhirathu
neer nilaikalai nalla padiyaha vaika kurukirathu
Annal oru unmai muslim area vill thaan sutham kuraivaha ullathu
Pls makkalidam kondu chairunkal ……….
islam valkai murai endu kurkirom annal ondum nam muslim area vill ellai
Nalla samuthayam kuruhirom annal asuthamahavum irukirom
PLS MAKKILIDAM PARAPUNKAL
Comments on this entry are closed.