உயிரே ஓடி வா!

in பொதுவானவை

அபூ முஸ்லிம் 

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அவர் சாதரண மனிதனாக இருந்தாலும் அல்லது அவர் அவுலியாவாக இருந்தாலும் இறப்பை தழுவிதான் ஆக வேண்டும். ஆனால் மக்களில் சிலர் அவ்லியாக்கள் வெளி உலகத்துக்குத்தான் இறந்தவர்கள். உண்மையில் அவர்கள் கப்ருக்குள் உயிருடன் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறி சமாதி வழிபாடு செய்கிறார்கள்.

     நபிமார்களோ, அல்லது அவ்லியாக்களோ மரணித்து விட்டார்கள் என்று கூறப்பட்டால் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று தான் பொருள். அவர்கள் மரணித்த பிறகு உயிருடன் இருக்கிறார்கள் என்று சொன்னால் அவர்களைக் கப்ரில் அடக்கம் செய்தவர்கள் அனைவரும் உயிருடன் இருந்த ஒருவரை பூமிக்குள் புதைத்து கொலை செய்து விட்டார்கள் என்ற குற்றத்தை ஏற்கவேண்டிய நிலை ஏற்படும்.

      அப்படி இவர்கள் மரணிக்கவில்லையென்றால் இவர்களின் சொத்துகளுக்கு யாரும் பங்குதாரராக முடியாது. இவர்களின் மனைவிகள் இத்தா இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று இஸ்லாம் தெளிவு படுத்தியிருக்கும்.     وَلاَ تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبيلِ اللّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاء وَلَكِن لاَّ تَشْعُرُونَ  அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள். அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்துகொள்ள மாட்டீர்கள்’. (2:154) என்று ஷஹீதுகளைக் குறித்து மட்டும் குறிப்பாகக் கூறப்பட்டிருக்கிறது.
 

     ஆகவே, மனித இனத்தில் மாபெரும் பதவிகளுடைய நபிமார்கள், ஷஹீத்மார்கள், அவ்லியாக்கள் ஆகியோர் மரணித்து விட்டால், அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று வைத்துதான் அவர்களை கழுவி குளிப்பாட்டி கபன் இட்டு ஜனாஸா தொழவைத்து அடக்கம் செய்தாக வேண்டும் என்பதை முஸ்லிம்கள் மீது இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.

     நிச்சயமாக ஷுஹதாக்கள் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் உயிர் பறவைகளின் உடல் கூட்டில் விடப்பட்டு, சுவர்க்கத்தில் தமது விருப்பத்திற்கேற்ப உலவிக் கொண்டிருக்கின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.) அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்)

     உங்கள் சகோதரர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டபோது அல்லாஹ் அவர்களின் உயிர்களை பச்சைப் பறவையின் உடல் கூட்டில் அமைத்து விட்டான். அவை சுவர்க்கத்துடைய ஆறுகளில் தண்ணீர் அருந்திக் கொண்டும், சுவர்க்கத்தின் (மரங்களின்) பழங்களை புசித்துக் கொண்டுமிருக்கின்றன. (இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அஹ்மத்)

   அல்லாஹ்வின் பாதையில் மரணமடைந்த சஹீத்களைப் பற்றி குர்ஆனின் வசனம் அவர்களை (நல்லடியார்களை) மரணித்து விட்டார்கள் என்று நீங்கள் கூறாதீர்கள் என்று கூறிவிட்டு எனினும் அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். எனினும் நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான். ஆகவே நாம் கற்பனை செய்வதுபோல் அவர்கள் தமது கப்ருகளில் உயிராக இருந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தவறாகும். ஏனெனில் அவர்களின் நிலைப்பற்றி நபி(ஸல்) அவர்களின் ஹதீஸின் வாயிலாக நல்லடியார்கள் சுவர்க்கத்தில் பறவை அமைப்பில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருப்பதால் இதுவே உண்மை என்பது தெளிவாகிறது.

 

Comments on this entry are closed.

Previous post:

Next post: