உண்மைக்கு இத்ரீஸ் (அலை)

in மூடநம்பிக்கை

இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘மலக்குல் மவ்த்’க்கு நண்பராக இருந்தார்களாம்! “மரணத்தை அனுபவ ரீதியில் உணர தாம் விரும்புவதாக “மலக்குல் மவ்திடம் கேட்டுக்கொண்டார்களாம்! அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மலக்குல் மவ்த், இத்ரீஸ் நபியை மரணமடையச் செய்து பின்பு உயிர்பித்தார்களாம்!” தான் நரகத்தை கண்கூடாக காணவேண்டும் என்று இரண்டாவது கோரிக்கையை மலக்குல் மவ்திடம் சமர்பித்தார்களாம்! தமது இறக்கையில் இத்ரீஸ் நபியைச் சுமந்து சென்று நரகத்தை மலக்குல் மவ்த் சுற்றிக் காண்பித்தார்களாம்! தாம் சுவர்க்கத்தைக் காண விரும்புவதாக மூன்றாவது கோரிக்கையை முன்னே வைக்க, அதையும் மலக்குல் மவ்த் நிறை வேற்றினார்களாம். சுவர்க்கத்தைச் சுற்றிப் பார்த்தபின், சுவனத்திலிருந்து வெளியே வர மறுத்துவிட்டு இன்று வரை சுவர்க்கத்திலேயே இருக்கிறார்களாம்.

 

    இப்படி ஒரு கதை பரவலாகச் சொல்லப்படுகின்றது. இந்தக் கதை உண்மை தானா? என்று நாம் ஆராய்வோம். இந்தக் கதையில் சொல்லப்படுகின்ற மலக்குல் மவ்த், சுவர்க்கம், நரகம் போன்றவை சம்பந்தப்பட்டுள்ளன. இது போன்ற நிகழ்ச்சி நடந்திருக்குமானால், அல்லாஹ்வும், அவனது திருத்தூதரும் தான் நமக்குச் சொல்லித் தரமுடியும். நம்முடைய அறிவு, அனுமானம் கொண்டோ, இவைகளை நாம் அறிய முடியாது. அல்லாஹ் இது போல் நடந்ததாக திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் சொல்லவில்லை.” அல்லாஹ்வின் தூதராவது இதைச் சொல்லி இருக்கிறார்களா? என்று ஆராய்ந்தால், இப்படி அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களும் சொல்லவில்லை. 

    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறியதாக இப்றாஹீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு காலித் என்பவர் மூலமாக இமாம் தப்ரானி அவர்கள் பதிவு செய்துள்ளனர். மேற்கூறிய இப்றாஹீமைப் பற்றி “பெரும் பொய்யன்” என்று ஹாபிழ் ஹைஸமீ(ரஹ்) அவர்கள் குறீப்பிடுகிறார்கள். இமாம் ஹாகிம் அவர்கள் “இவரது எல்லா ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவையே” என்று கூறுகிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யே தவிர இதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. “அல்லாஹ்வும், அவனது திருத்தூதரும் இதைச் சொல்லவில்லை” என்பதே இந்தக் கதை பொய்யானது என்பதற்கு போதிய ஆதாரம் என்றாலும், திருக்குர்ஆன் வசனங்களுக்கும் எவ்வாறு இந்தக் கதை முரண்படுகின்றது என்பதைப் பார்ப்போம். 

    “இத்ரீஸ் நபியவர்கள் திட்டமிட்டு மலக்குல் மவ்த்தை ஏமாற்றினார்கள்” என்ற கருத்தை இந்தக் கதை வெளிப்படுத்துகின்றது. “சுற்றிப் பார்த்துவிட்டு வருவதாகக்” கூறிவிட்டு, சுவர்க்கத்திலிருந்து வெளியேர மறுத்ததன் மூலம் ஒரு மலக்கையே ஏமாற்றினார்கள் என்பது நபிமார்கள்களின் பண்பாக இருக்க முடியுமா? “(நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் ஸித்தீக்காக (மிக்க சத்தியவானாக) நபியாக இருந்தார்.” என்று இத்ரீஸ் நபியைப் பற்றி அல்லாஹ் புகழ்ந்து கூறி இருக்கும்போது, (அல்குர்ஆன் 19:56) உண்மைக்கு மாற்றமாக அவர்கள் எப்படி பேசி இருக்க முடியும்? அதுவும் அல்லாஹ்வினால் நியமிக்கப்பட்ட ‘மலக்’கிடம் பொய் சொன்னது அல்லாஹ்விடமே பொய் சொன்னதாக ஆகாதா? நபிமார்களின் பண்புகளையும், மலக்குகளின் பண்புகளையும் உணர்ந்தவர்கள் இதை எப்படி உண்மை என்று நம்ப முடியும்? 

    “எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள் என்ற கருத்தைத் திருக்குர்ஆனின் 39:73 வசனம் சொல்கின்றது. இந்தக் குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக தனி நபராக இத்ரீஸ் நபியவர்கள் எப்படி சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்கள்? அவர்களுக்கு மட்டு இந்தப் பொது விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ அல்லவா அதைச் சொல்ல முடியும்! 

    நரகத்திற்கென்று தனியாக அல்லாஹ் சில மலக்குகளை நியமனம் செய்திருக்கிறான், அவர்கள் கடின சித்தமுடையவர்கள். எவருக்காகவும் பரிதாபப்பட மாட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உத்தரவிட்டதில் ஒரு சிறிதும் மாறு செய்ய மாட்டார்கள்! தங்களூக்கு இடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள்என்ற கருத்தைத் திருக்குர்ஆனின் 66:6 வசனம் நமக்குச் சொல்கிறது. 

    நரகத்தின் காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி மலக்குல் மவ்த் அவர்கள் எப்படி நரகத்திற்கு அழைத்துச் சென்றிருக்க இயலும்? உயிரை வாங்குவதற்காக நியமனம் செய்யப்பட்ட மலக்குகள், தங்களுக்கு கட்டளை இடப்படாதவைகளைச் செய்ய மாட்டார்கள். இடப்பட்ட கட்டளைகளையே செய்வார்கள் என்ற கருத்தைக் குர்ஆனின் 21:27 வசனம் சொல்லும் போது மலக்குல் மவ்த் இதைச் செய்திருக்க மாட்டார்கள் என்று தெளிவாக உணரலாம். 

நரகத்தின் காவலர்களாக உள்ள மலக்குகளின் அதிகாரத்தில் மலக்குல் மவ்த் தலையிட்டிருக்க மாட்டார்கள் என்று எவரும் உணரமுடியும். நாம் எடுத்துக் காட்டிய திருக்குர்ஆனின் வசனங்களுடன் முரண்படுவதாலும் இந்தக் கதை பொய்யானது என்று தெளிவாகின்றது. 

சுவன வாழ்வை அடைய இப்படி ஒரு குறுக்கு வழியை அல்லாஹ் ஏற்படுத்தித் தரவில்லை. நல் அமல்கள் செய்து வல்ல ரஹ்மானிடம் சுவன வாழ்வைத் தரும்படி பிரார்த்தனை செய்வது தான் ஒரு முஸ்லிம் செய்ய கடமையாகும். நபிமார்கள் இப்படித்தான் செய்துள்ளனர். குறுக்கு வழிகள் இருப்பதாக நம்பி ஏமாந்துவிடாமல், அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் காட்டிய வழியில் நாம் நடப்போமாக. அல்லாஹ் அதற்குத் துணை செய்வானாகவும். – ஆமீன் – 

P.J 

 

  

  

Comments on this entry are closed.

Previous post:

Next post: