இறைக்கட்டளைகளை நிராகரிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவு

in சமூகம்

ஒழுக்கக் கேடு, அநீதி, துயரம், தோல்வி மனப்பான்மை, தொந்தரவு, தனிமை, பயம், பதற்றம், ஏமாற்றம், அவநம்பிக்கை, பழியஞ்சாமை, கவலை, கடுங்கோபம், பொறாமை, மனக்கசப்பு, போதை மருந்துக்கு அடியாமையாதல், பரத்தமை (விபச்சாரம்), சூதாட்டம், பசி, வறுமை, மரணம் பற்றிய பயம், ஆகிய அனைத்தையும் பற்றிய செய்திளை நாள்தோறும் நாளிதழ்களில் வாசிக்கின்றோம்; தொலைக் காட்சிகளிலும் கேட்கின்றோம். பிரபலமான பத்திரிக்கைகள் இந்தச் செய்திகளுக்கு முழுப்பக்கங்களை ஒதுக்குகின்றன; இவை மனோதத்துவ ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் விளைவிக்கும் பாதிப்புகளைப் பற்றி சில பத்திரிக்கைகள் இடையறாது எழுதி வருகின்றன. ஆனாலும் மேலே கூறியவைப் பற்றி நாம் இந்த ஊடகங்கள் மூலம் மட்டும் அறிந்து கொள்கிறோம் என்று சொல்ல முடியாது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இத்தகையப் பிரச்சனைகளை நாம் எதிர்கொள்கிறோம்; அவற்றை நாம் வாழ்க்கையில் அடிக்கடி அனுபவிக்கிறோம்.

நீண்ட நெடுங்காலமாக உலகெங்கும் பரவி நிலவும் ஒழுங்கீனம், கொடுமை போன்ற பல்வேறு துயரங்களிலிருந்து விடுபடத் தனி மனிதர்களும், சமுதாயங்களும் முயன்று வருகிறார்கள். பண்டைய கிரேக்க நாடு, மகா ரோமப் பேரரசு, ட்ஸார் மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ரஷியா ஆகிய நாடுகளுக்கு ஏற்பட்ட கதியையும், இரண்டு உலகப் போர்கள் நிகழ்ந்ததும் உலகளாவிய அளவில் சமுதாயச் சீர்கேடுகள் பரவலாக நிலவி வந்ததும், ஆகிய “விழிப்புணர்வு அடைந்த யுகம்” என புகழப்பட்ட இருபதாம் நூற்றாண்டை எண்ணிப் பார்த்தாலே எல்லாம் விளங்கும். வேறு எந்த நூற்றாண்டின் சரித்திரத்தை ஆய்ந்தாலும் அல்லது உலகிலுள்ள எந்த நாட்டின் கடந்த காலச் சரித்திரத்தை நோக்கினாலும் சரி உங்கள் மனக்கண் முன் தோன்றும் காட்சிகளில் எந்த வேறுபாட்டையும் காணவியலாது.

நிலமை இவ்வாறு இருக்கும்போது, இந்தப் பிரச்சினைகளுக்கு நிவாரணம் தேடுவதில் மக்கள் வெற்றி பெறாதது ஏன்? சமுதாயத்தில் நிலவும் இத்தகையச் சீர்கேடுகளை நீக்க மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறாதது ஏன்?

இத்தகையத் துயரங்களையும் பிரச்சனைகளையும் மக்கள் எல்லாக் காலங்களிலும் அனுபவித்தே வந்திருக்கிறார்கள். அவற்றிலிருந்து விடுபட மக்கள் முயன்ற ஒவ்வொரு தடவையும் அவர்கள் தோல்வியே அடைந்தனர் ஏன்? அவர்களுடைய அணுகு முறைகள் எல்லாம் பொருத்தமற்றவை என்பதுதான் காரணம். பல்வேறு வழி முறைகளை மேற்கொண்டனர்; வெவ்வேறு அரசியல் வியூகங்களைக் கையாண்டனர்; நடைமுறைக்கு ஒவ்வாத எதேச்சாதிகார நியதிகளையும் சட்டங்களையும் புகுத்தினர்; புரட்சிகள் செய்தனர்; விகற்பமான கருத்துக்களை பரப்பினர். வேறு பலர் இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் சமுதாயத்தோடு ஒத்து வாழ்ந்து வந்தனர்.

நாம் வாழும் இன்றைய கால கட்டத்தில் மக்கள் இந்த வாழ்க்கை முறையை எவ்வித ஆதங்கமுமின்றி ஏற்று நடந்து உணர்ச்சியற்றவர்களாகவே ஆகிவிட்டார்கள். இந்தப் பிரச்சினைகளை எல்லாம் “வாழ்க்கையின் யதார்த்தங்கள்” என எண்ணி மறுப்பும் தயக்கமுமின்றி ஏற்றுக் கொண்டார்கள். இத்தகையப் பிரச்சினைகளிளிருந்து விடுபட்ட ஒரு சமுதாயம் அமைவது சாத்தியமே அல்ல; கனவு உலகில் அல்லது கற்பனை உலகில்தான் அது சாத்தியம் ஆகும் என்பது அவர்களின் வாதம். பிரச்சினைகள் மிகுந்த வாழ்க்கையை வெறுப்பதாக வெளிப்படையாக அவர்கள் கூறாமலில்லை என்றாலும், அந்த வாழ்க்கையையே தழுவிக் கொண்டார்கள்; வேறு வழியே இல்லை என்று சப்பைக் கட்டும் கட்டுகிறார்கள்.

‘உண்மையான மார்க்கம்’ வலியுறுத்தும் கோட்பாடுகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் மாத்திரமே இந்தப் பிரச்சினைகள் நீங்கும். உண்மையான மார்க்கப் பண்பாடுகளை மக்கள் பேணும்போது துயரமும் துன்பமும் நிறைந்த பாதிப்பு மிக்க சூழ்நிலை மாறி அமைதி நிலவும்; மகிழ்ச்சிப் பெருகும். இறைவன் வகுத்தளித்த நெறிமுறைகள் மீறப்படும் காலம் வரை இந்த அவல நிலை நீடிக்கத்தான் செய்யும். குர்ஆன் வலியுறுத்தும் பண்பாடுகளை மக்கள் உதாசீனம் செய்யும் காலமெல்லாம் இந்தப் பிரச்சினைகளிலிருந்து விடுபடவே முடியாது. இறை நிராகரிப்பு – இறைவன் வகுத்தளித்த மார்க்கத்தை உதாசீனம் செய்வது – உருவாக்கும் பயங்கர விளைவுதான் இது.

இறை நிராகரிப்பு உருவாக்கிய இந்த பயங்கரங்கள் எல்லாம், மார்க்கத்திற்கு இறைவன் வழங்கிய குர்ஆன் வலியுறுத்தும் ஒழுக்க நெறிகள் கடைப்பிடிக்கப்படும்போது எப்படி நீங்குகின்றன என்பதை இங்கு விவரிப்போம். தோல்வி மனப்பான்மை, ஊழல், பதற்றம் யாவும் சமுதாயத்திலிருந்து களையப்படுவது எப்படி? குறைவற்ற சிறந்த சூழ்நிலையை எவ்விதம் உருவாக்கலாம்? என்பதையும் காண்போம். மேலும் குர்ஆன் வழங்கும் நெறிமுறையைப் பேணி நடப்பதால் மனிதனுக்கு இம்மையிலும் மறுமையிலும் கிட்டப்பெறும் நன்மை எல்லாம் களைய வல்ல ஒரே வழி குர்ஆன் நல்கும் நெறிமுறையேதான் என்பதை நிரூபிப்போம்.

சமுதாயங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எல்லாம் தீர்க்க எத்தனையோ வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. ஆனால் நாம் இங்கு விவரிக்க முனைவது நல்ல பலனைத் தரக்கூடிய யதார்த்தமான ஒரு தீர்வாகும். இந்தத் தீர்வின்படி நடக்கத் தவறினால் மக்கள் எதிர்கொள்ள நேரிடும் தொல்லைமிக்க எதிர்காலத்தைப் பற்றி எச்சரிக்கின்றோம்.

ஒருவரை ஒருவர் நம்பி தொல்லையில்லாத அமைதியான நல்ல வாழ்க்கை அமைவதற்குரிய ஒரே வழி குர்ஆன் வலியுறுத்தும் பண்பாடுகளை நடைமுறைப்படுத்துவதுதான் என்பதை இதை வாசிக்கும் நல்லுணர்வுள்ள ஒவ்வொருவரும் உணர்ந்து உண்மையான மார்க்கமாகிய இஸ்லாமின் பக்கம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

மேலே குறிப்பிட்ட எந்தப் பிரச்சினையாலும், உடல் அல்லது உளத்தொல்லைகளுக்கு ஆளாகாதவர்களின் கூட்டத்தில், உண்மை இஸ்லாமின் பக்கம் திரும்புபவர்கள் உட்படுவார்கள். நல்லாதரவு, வசதி வாய்ப்பு, அன்பு, மரியாதை, அமைதியும் உறுதியும் ஆகியவற்றுடன் நல்ல ஒழுக்கப் பண்புகளும் மிளிர வாழ்வார்கள். அல்லாஹ் வகுத்தளித்த  விதிகளையும் குர்ஆன் ஏவியவற்றையும் பேணி நடந்து அவனுடைய திருப்திக்குள்ளாவார்கள்; அல்லாஹ்வின் அருளால் சுவர்க்கத்தை அடைவார்கள்.

உண்மை மார்க்கம் (TRUE RELIGION) என்பது எது?

நான் எங்கிருந்து வந்தேன்? எங்கு சென்றடைவேன்? என்னுடைய வாழ்க்கையின் அர்த்தமும் நோக்கமும் என்ன? மரணம் எப்படி இருக்கும்? மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை (மறுமை) உள்ளது என்பது நிச்சயம் தானா? சுவர்க்கமும் நரகமும் உள்ளனவா? வாழ்க்கையின் மூலாதாரம் எது? நம்மைப் படைத்தவன் எங்கு இருக்கிறான்? நம்மைப் படைத்தவன் நம்மிடம் கோருவது என்ன? சரியானவை எவை? தவறானவை எவை? என்று பிரித்தறிவது எப்படி? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் எங்கே கிடைக்கும்?

மிக முக்கியமான இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் தேட மக்கள் காலமெல்லாம் முயன்றிருக்கிறார்கள்; தீவிரமாகச் சிந்திக்கிறார்கள்; ஒருவரோடு ஒருவர் ஒன்றுவிடாமல் கலந்து ஆலோசித்தும் உள்ளார்கள். ஆனாலும் சாதாரணமாக நம்பப்படுவது போன்று, கடந்துபோன காலங்களிலெல்லாம் இந்தக் கேள்விகளுக்குரிய நம்பகத்தகுந்த பதில்கள் தத்துவ ஞானிகள், சித்தாந்தவாதிகளால் தரப்படவில்லை; மாறாக இறைவன் வெளிப்பாடு (வஹி) மூலம் வழங்கிய உண்மையான மார்க்கத்தினாலேயே தரப்பட்டன.

உலகெங்கும் உள்ள மக்களைக் கவர்ந்த பல மதங்கள் உள்ளன; புத்த மதம், ஆவிகளை வணங்கி வழிபடும் மதம் (Shamanism), பல தெய்வ வணக்க வழிபாடுகளை ஊக்குவிக்கும் மதம் (Paganism) ஆகியவை அவற்றுள் சில. இவற்றுள் எதுவுமே இறைவனின் வெளிப்பாடு மூலம் வழங்கப்பட்டதல்ல. எனவே அவை வெறும் சித்தாந்தம் அல்லது தத்துவமே அன்றி வேறொன்றுமில்லை. வெறும் குறியீடாயமைந்த அல்லது கலாச்சாரத்தை ஒத்த சில மதங்கள் பிரச்சினைகளுக்கு மனோதத்துவ ரீதியாகவோ சமூக ரீதியாகவோ எவ்வித நிவாரணமும் தரவில்லை. இந்த – மதங்கள் என கூறப்படும் – தத்துவங்களை அல்லது சித்தாந்தங்களை உருவாக்கியவர்களும் கூட இந்தக் கேள்விகளைப் பற்றி சிந்திக்காமலில்லை; ஆனால் நம்பகத்தகுந்த பதில் எதையும் தரமுடியவில்லை.

“நேர்மையான மதங்கள்” (Righteous religiers) சில உள்ளன; இவை மேலே கூறியப் போலி மதங்களிலிருந்து வேறுபடுத்தப்பட்டு மதிப்பிடப்பட வேண்டும். போலி மதங்களிலிருந்து வேறுபட்டு விளங்கும் இந்த நேர்மையான மதங்களின் மிக முக்கியமான அம்சம், அவை யாவும் இறை வெளிப்பாடுகள் (வஹி) மூலம் வழங்கப்பட்டவை என்பதுதான். மற்ற எல்லா மதங்கள், தத்துவங்கள் மற்றும் சமுதாய முறைமைகளிலிருந்து மேம்பட்டுச் சிறந்து விளங்கும் உண்மை மார்க்கம் குர்ஆனில் அறிவிக்கப்படுகிறது.

(இறைவனாகிய) அவனே தன்னுடையத் தூதரை, மற்ற எல்லா மார்க்கங்களையும் விட மேம்பட்டு விளங்கும் உண்மையான மார்க்கத்தையும் நேர்வழிகாட்டியையும் கொடுத்து அனுப்பினான். அல்லாஹ்வே இதற்குச் சாட்சியம் வகிக்கப் போதுமானவன்.   (48:28)

“இணைவைப்போர் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் விட மேம்பட்டு விளங்கும் உண்மையான மார்க்கத்தையும் நேர்வழிகாட்டியையும் கொடுத்து அவனுடையத் தூதரை (இறைவனாகிய) அவனே அனுப்பினான்.  (61:9)

இறை வெளிப்பாடு மூலம் வழங்கப்பட்ட மார்க்கங்களில் மிகப் பிந்தியவை யூத மதம், கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் ஆகியவை ஆகும். இவை யாவும் மூல முதலில் இறைவனால் வெளிப்பாடுகள் மூலம் வழங்கப்பட்டவை. ஆனாலும் அவற்றை இறைவனிடமிருந்து பெற்று மனிதற்கு வழங்கிய இறைத்தூதர்கள் மறைந்த பின் கிறிஸ்துவமும் யூத மதமும் களங்கப்படுத்தப்பட்டன.

விவிலியத்தின் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் மனிதர்கள் பலவற்றைக் கூட்டியும் குறைத்தும் எண்ணிறந்த மாற்றங்களைச் செய்தனர். மூல முதல் வேதங்கள் மறைந்ததும் புனையப்பட்ட பல பழைய ஏற்பாடுகளும் புதிய ஏற்பாடுளும் தோன்றின. எனவே இந்த மார்க்கங்களைப் பின்பற்றியவர்கள். மூல முதல் இறை மார்க்கத்திலிருந்தும் விலகிச் சென்று புதிய மதங்களையும், சம்பிரதாயச் சடங்குகளையும் வாழ்க்கை முறைகளையும் உருவாக்கினார்கள். இவை யாவும் மதக்குருமார்களும், துறவிகளும் புனைந்த திரிக்கப்பட்ட மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்தவைதாம். இன்னும் இந்த நம்பிக்கைகளும் விளக்கங்களும் மக்களிடையே நிலவி வருகின்றன. திரிக்கப்பட்ட இந்த மதங்கள் எல்லாம் மேலே குறிப்பிடப்பட்டக் கேள்விகளுக்கு விடைகள் தர முடியாதவையே.

இறை வெளிப்பாடாகிய இந்த மார்க்கங்கள் திரிக்கப்பட்டு விட்ட பின் இறைவன் இறுதி வழிகாட்டல் நுலை வெளிப்பாடு மூலம் இறக்கியருளினான். யுகமுடிவு வரை இது நிலைத்து நிற்கும்; எவ்வித மாற்றமும் திரிபும் இதில் நுழைந்து விடாதபடி காக்கும் பொறுப்பை இறைவனே ஏற்றுக்கொண்டான்.

நிச்சயமே நாமே இவ்வேதத்தை இறக்கினோம். நிச்சயமாக நாமே (அதில் எவ்வித மாற்றமும் வராது) பாதுகாப்போம். (15:9)

பதினான்கு நூற்றாண்டுகளாக குர்ஆன் எவ்வித மாற்றமும் இன்றி கறைபடியாது நிலைபெற்றுள்ளது. குர்ஆனின் மூல முதல் கையெழுத்துப் பிரதி இன்று நம்மிடையே உள்ள பிரதிகளோடு வார்த்தைக்கு வார்த்தை ஒத்து இருக்கிறது. உலகில்  மூலை முடுக்குகள் ஒவ்வொன்றிலும் ஒரே விதமான குர்ஆன் தான் படிக்கப்படுகிறது. குர்ஆன் இறைவனால் பிரத்தியேகமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதையே இது காட்டுகிறது.

மனித வரலாறு முழுவதும் இறைவன் தனது நேர்வழியை தன் தூதர்கள் அல்லது நூல்கள் மூலம் அறிவித்து வந்திருக்கின்றான். படைக்கப்பட்டு உலகிற்கு முதன் முதலில் அனுப்பப்பட்ட மனிதனாகிய இறைத்தூதர் ஆதம்(அலை) அவர்களுக்கு இதே பணிதான் ஏவப்பட்டது. உலகில் முதலில் தோன்றிய மனிதர்கள் இறைவன் ஒருவன் உண்டு என்பதை முழுமையாக அறிந்திருந்தார்கள் என்பதை இது காட்டுகிறது. அதன்பின் பல இறைத்தூதர்கள் இறை வழிகாட்டலோடு, மனித வரலாறு முழுவதும் அனுப்பப்பட்டனர்.

இந்த உண்மை குர்ஆனில் நினைவுறுத்தப்படுகிறது :

தொடக்க காலத்தில் மனிதர்கள் அனைவரும் ஒரே சமுதாயமாகவே இருந்தார்கள். அவர்களுக்கு நன்மாராயம் கூறவும் எச்சரிக்கவும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான். மனிதர்களுக்கிடையே உருவாகும் வேற்றுமைகளைத் தீர்க்கும் பொருட்டு அவர்களுடன் உண்மை வழிகாட்டல் நூல்களையும் அனுப்பினான்.  (2:213)

இந்த வசனத்தில் வலியுறுத்தப்படுவது போன்று இறைவன் அவனுடைய நேர்வழியை தூதர்கள் மற்றும் நெறி நூல்கள் மூலமாக அனுப்புகிறான். தூதர்கள் தீர்ப்பு நாள் மற்றும் நிரந்தரமான நரகம் பற்றியும் மக்களை எப்பொழுதும் எச்சரித்து வந்தார்கள். அதே சமயம் நிரந்தாமான பேறு – சுவர்க்கம் பற்றிய நற்செய்தியையும் அறிவித்தார்கள். மனிதனைப் படைத்த அதே இறைவன், மனிதன் இவ்வுலகில் எந்தச் சூழ்நிலையில் நிம்மதியாக வாழ்வான் என்பதையும் அறிவான். இதனால் தான் இறைவன் தன் அடியார்களிடம் கோரும் வாழ்க்கை முறையும், ஒழுக்க நெறிகளும்தாம் இவ்வுலகிலும் மறுமையிலும் அவர்களுக்கு நிம்மதியைத் தரமுடியும் என்று வலியுறுத்தப்படுகிறது. சுருக்கமாக, இறைவனின் அருளால் மார்க்கம் ஒன்றுதான் மனிதனுக்கு மனோதத்துவ ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் சீராக அமைந்த ஒரு வாழ்க்கையை மேற்கொள்ள உதவும்.

வேறுபட்ட சூழ்நிலைகளுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ப வெவ்வேறு காலங்களில், வழங்கப்பட்ட பல இறை மார்க்கங்கள் பல்வேறு கட்டளைகளைப் பிறப்பித்தன என்றாலும் அவை யாவும் ஒரே விதமான நம்பிக்கைகளும் ஒழுக்க முன்மாதிரிகளுமே ஆகும். எல்லா இறைமார்க்கங்களும் இறைவன் ஒருவனைப் பற்றிய அடிப்படை உண்மைகளையே எடுத்துரைக்கின்றன. இறைவனின் தன்மைகள் மனிதனும் மற்ற எல்லா உயிரினங்களும் படைக்கப்பட்டதன் நோக்கம், அல்லாஹ்வின் நேர்மையான அடியானாக எப்படி வாழ்வது? அல்லாஹ் விரும்பும் மனப்பாங்கும் நடத்தையும், சரியானவற்றையும் தவறானவற்றையும் பிரித்தறிவது எப்படி? நல்லவை கெட்டவை எவை? என அறிவது எவ்விதம். அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்று சுவர்க்கத்தில் நுழைய எவ்விதம் வாழ வேண்டும்? என்பதை எல்லாம் அவை விளக்குகின்றன.

இந்த தன்மைகளின் அடிப்படையில் நோக்கும்போது, அல்லாஹ்வின் பார்வையில் உண்மையான மார்க்கம் இஸ்லாம் ஆகத்தான் இருக்க முடியும். ஆதம்(அலை) காலம் முதல் மனிதனுக்கு வழங்கப்பட்டு வந்த மார்க்கங்களின் அடிப்படை, இஸ்லாம் தான். இஸ்லாம் என்பதற்கு “இறைவனுக்கு அடிபணிதல்” என்பது பொருள். இந்த உண்மை கீழ்வருமாறு வலியுறுத்தப்படுகிறது:

அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் நிச்யமாக இஸ்லாம் தான். (3:19)

நேர்மையான மார்க்கங்கள் எல்லாம் அவை யார் மூலம் மனிதர்க்கு வழங்கப்பட்டதோ அந்த இறைத்தூதர்களின் பெயரில் “யூதமதம்” “கிறிஸ்துவம்” என அழைக்கப்பட்டாலும் அவை யாவுமே ஒன்றே ஒன்றுதான். அந்தந்தக் காலங்களில் அவை தாம் ‘இஸ்லாம்’ ஆகத்திகழ்ந்தன.

அவனே உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் உங்களுடைய தந்தையாகிய இப்றாஹீமுடைய உங்களின் இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தவில்லை.      இதில், முந்தைய நெறிநூல்களைப் போலவே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டுள்ளான். (22:78)

குர்ஆனுக்கு முந்திய நெறிநூல்கள் வழங்கப்பட்டவர்கள் (யூதர்களும் கிறிஸ்தவர்களும்) உண்மையில் முஸ்லிம்கள்தாம். கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களில் உண்மையான நம்பிக்கையாளர்களின் வாக்குகள் மூலம் குர்ஆன் இந்த உண்மையை எடுத்துரைக்கிறது.

 இதற்கு முன் நாம் நெறிநூலை வழங்கியவர்களும் கூட இதனை நம்புகிறார்கள் அவர்களிடம் இது ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள், “இதை நாங்கள் நம்புகிறோம், இது எங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மையே ஆகும். இதற்கு முன்பே நாங்கள் நிச்சயமாக முஸ்லிம்களாகவே இருந்தோம்.”  (28:52,53)

குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த விவகாரத்தைப் பற்றி கிறிஸ்தவர்களும் யூதர்களும் கொண்டிருந்த தவறான கருத்துக்களை இறைவன், அவர்களைத் திருத்துவதன் மூலம், போக்குகிறான்.

இப்றாஹீம் யூதருமல்ல, கிறிஸ்தவரும் அல்ல; ஆனால் இறைவனுக்கு  முற்றிலும் வழிபடும் நேரான முஸ்லிமாக இருந்தார். மேலும் அவர் இணைவைப்பவரைச் சார்ந்தவரல்ல. (3:67)

குர்ஆனை நாம் மீண்டும் நோக்கும்போது, எல்லாக் காலங்களிலும் ஒவ்வொரு இறைத்தூதரும் வணக்க வழிபாடு மற்றும் இறை நம்பிக்கையைப் பற்றி ஒரே அடிப்படையைத்தான் எடுத்துரைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நபியும் கூறியதை குர்ஆன் கீழ்வருமாறு கூறுகிறது:

(மிஹிராபில்) மாடத்தில் நின்று அவர் தொழுது கொண்டிருந்த போது….(3:39)

அவர்கள், ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை வணங்குவதை விட்டுவிட வேண்டுமென்றும், நாங்கள் எங்கள் செல்வத்தை எங்கள் விருப்பப்படி செலவிடுவதை விட்டுவிட வேண்டுமென்றும் சொல்லும்படி உம்மை உமது தொழுகை அறிவுறுத்துகிறதா? நிச்சயமாக  நீர் நேர்வழி காட்டப்பெற்ற பொறுமையாளர்தான்” (11:87)

மக்கள் ஷுஐப்(அலை) அவர்களிடம் கூறியது மேலே தரப்பட்டுள்ளது.

இஸ்மாயீல்(அலை) பற்றி இவ்வாறு கூறுகிறது: அவர் தன் குடும்பத்தினரை, தொழுகையை நிறைவேற்றும்படியும், ஜகாத் வழங்கும்படியும் ஏவினார்; அவருடைய இறைவனின் திருப்தியைப் பெற்றிருந்தார்.         (19:55.)

 நபி இஸ்ஹாக்(அலை) மற்றும் நபி யாகூப்(அலை) பற்றிக் கூறுகிறது:

நன்மையான காரியங்களைச் செய்யும்படியும் தொழுகையை நிலைநாட்டும்படியும் ஜகாத் வழங்கும்படியும் இவர்களுக்கு நாம் (வஹி) வெளிப்பாடு மூலம் அறிவித்தோம். இவர்கள் நம்மையே வணங்கி வழிபட்டு வந்தார்கள். (21:73)

நபி மூஸா(அலை) மற்றும் அன்னாருடைய சகோதரர் பற்றி இறைவன் அவர்களுக்கு அவனுடைய நாட்டத்தை கீழ்வருமாறு கூறியதாகக் குறிப்பிடுகிறது:

உங்களுடைய இல்லங்களைத் தொழுமிடங்களாக ஆக்கி தொழுகையை நிலைநாட்டுங்கள் (10:87)

நபி ஈஸா(அலை) அவர்கள் இவ்வாறு கூறியதாக அறிவிக்கிறது.

நான் எங்கிருந்த போதிலும் அவன் எனக்கு அருள் பாலித்துக் கொண்டே இருந்தான்; நான் உயிர் வாழும்வரை தொழுகையை நிலை நாட்டும்படியும் ஜகாத் வழங்கும்படியும் எனக்கு அறிவுறுத்தினான் (19:31)

லுக்மான்(அலை) தன்னுடைய மகனுக்குக் கீழ்வருமாறு அறிவுறுத்தியதாகக் கூறுகிறது:

“நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே! இணைவைப்பது நிச்சயமாக மிகப்பெரும் அக்கிரமம் ஆகும். (31:13)

மகனே! நீ தொழுகையை நிலைநாட்டு; நன்மையை ஏவி, தீமையை விலக்கிக் கொண்டே இரு. (31:17)

மர்யம்(அலை) அவர்களை இறைவன் கீழ்வருமாறு ஏவியதாகக் கூறுகிறது:

மர்யமே! உன்னுடைய இறைவனுக்கு அடிபணிவாயாக இறைவனை சிரம்பணிந்தும் குனிந்தும் வணங்குபவர்களுடன் நீயும் சிரம்பணிந்தும் குனிந்தும் வணங்குவாயாக! (3:43)

இறைவனை வணங்கி வழிபடுவது மற்றும் இறை நம்பிக்கை பற்றிய கோட்பாடுகளை அறிவிக்கும் சில எடுத்துக்காட்டுகள் இவை. இன்னும் விரிவாகக் கூறலாம். எல்லா இறைத்தூதர்களுக்கும் வழங்கப்பட்ட மார்க்கங்களும் ஒன்றேதான். நேரான மார்க்கத்தின் அடிப்படையான (என்றும் மாறாத) நிரந்தரமான கூறுகள் கீழ்வரும் இறைவசனங்களில் மீண்டும் கூறப்படுகின்றன.

(அல்லாஹ் ஒருவனையே வணங்கி வழிபட்டுத்) தொழுகையை நிலைநாட்டி ஜகாத்தும் வழங்குமாறு ஏவப்பட்டார்கள்; இது தான் நேரான மார்க்கம். (99:5)

முடிவாக, இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் தான். மறுக்கவியலாத இந்த உண்மையைக் குர்ஆன் இவ்வாறு எடுத்துரைக்கிறது:

இஸ்லாமையன்றி வேறு மார்க்கத்தை யாரும் விரும்பினால் அது நிச்சயமாக அவனால் அங்கீகரிக்கப்பட மாட்டாது. மறுமையில் அவன் இழப்புக்குள்ளாவோரில்  (3:85)

மூலம்: ஹாருன் யஹ்யா
தமிழாக்கம் : H.அப்துஸ்ஸமத் இன்சினீயர்,  சாத்தான்குளம்

{ 1 comment }

Syed Ibrahim February 7, 2011 at 9:54 am

Alhamdu-Lillah,
it’s best article i’ve read. really good. it will pricks infidel’s and disbeliever’s conscious. we can circulate this article among our non muslims.

Comments on this entry are closed.

Previous post:

Next post: