உலகில் பிறந்த மனிதர் எல்லாருக்கும் இம்மை வாழ்வும் உண்டு. மறுமை வாழ்வும் உண்டு, இம்மையை விட மறுமையே மிக உயர்ந்ததாகும் என எல்லாம் வல்ல அல்லாஹ் பல இடங்களில் திருமறையிலே தெளிவுபடுத்திக் காட்டுகின்றான்.
“(மனிதர்களே!) நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்; உறுதியாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமும்தான். அன்றி (அது) உங்களுக்கிடையில் (வீண்) பொறாமையேற்படுத்துவதாகவும், பொருள்களிலும், சந்ததிகளிலும் போட்டியே ஏற்படுத்துவதாகவும் (இருக்கின்றது; இதன் உதாரணமாவது) ஒரு மழையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது, அதன் (உதவியால் முளைத்த) பயிர்கள் (நன்கு வளர்ந்து) விவசாயிக்குப் களிப்பையுண்டு பண்ணிக் கொண்டிருக்கின்றன. அது காய்ந்த பின்னர், மஞ்சனித்து விடுவதை நீர் காண்கின்றீர். பின்னர் அது சருகுகளாகி விடுகின்றது. (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கின்றது) மறுமையிலோ (அவர்களுள் பலருக்குக்) கொடிய வேதனையும் (சிலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும் திருப்பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் (சொற்ப) இன்பமேயன்றி வேறன்று” (அல்குர்ஆன் 57:20)
நீர்க்குமிழி போன்று தோன்றி மறையும் இவ்வுலக வாழ்வில்தான் மனிதர்களுக்குள் எத்தனைப் போட்டிகள்? பொறாமைகள்? அற்ப ஆசைக்காக, மனிதன் தன்னை மறந்த நிலையில் தன் வரம்பையே மீறியவனாகின்றான்.
அற்ப இவ்வுலக இன்பத்தை நுகர்தற் பொருட்டு, குறுக்கு வழிகளில் பணம் தேடி-மாட மாளிகைகளைக் கட்டி-ஆரணங்குகளின் அணைப்பில் பஞ்சணையில் புரளுவதையே நிலையான இன்பமாகக் கருதுகின்றான். காரணம் பெரும்பாலோர்க்கு நன்றியுணர்வும், சிந்தனை வலிமையும் குறைவு!
தன்னைப் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்ட மனிதன், அவனை மறந்த நிலையில், தான் தோன்றித் தனமாகவும், சிந்தித்துச் செயல்படுகின்ற வலிமை குன்றியும் செயல்படுகின்றான். இந்நிலையில் , அற்ப இன்பமே அவனுக்குப் பெரிதாகப்படுகின்றது. நிலையான பேரின்ப மறுமை வாழ்வைப்பற்றி, அவன் எண்ணிப் பார்க்காதது மட்டுமன்று! மறுமை வாழ்வு உண்டா? என்பதிலும் ஐயம் கொள்கின்றான்.
“வெந்ததைத் தின்று விதி வந்தால் மாள்வோம்” என்னும் அசட்டுத் துணிச்சல் உள்ள மனிதர்களிடத்து, நம்பிக்கையின்மை வியப்பானதன்று!
எவரேனும், இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும்(மட்டும்) விரும்பினால், அவர்கள் செயலுக்குரிய பலனை இ(வ்வுலகத்)திலேயே நாம் முழுமையாக அவர்களுக்குக் கொடுத்திடுவோம், அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.” (அல்குர்ஆன் 11: 15)
“(எனினும்) மறுமையிலோ, இத்தகையோருக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறொன்றுமில்லை; அவர்கள் செய்தவை யாவும் இங்கு அழிந்துவிட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே”.(அல்குர்ஆன் 11: 16)
மேற்கூறிய இறைவசனங்கள் தெளிவாகவே நமக்கு அறிவித்து விட்டன. இம்மையை மட்டும் விரும்புவோர்க்கு விரும்பியவை யாவும் இங்கேயே கொடுக்கப்படும் என்றும், மறுமையில் எப்பயனும் அவர்களுக்கு இல்லை என்றும், இம்மையில் அவர்கள் செய்த – செய்கின்ற செய்யப் போகின்ற காரியங்கள் யாவும் அழிந்து விடக்கூடியவைகளே மேலும் வீணானவைகளே; என்பதும் வெள்ளிடை மலையாக விளங்கி விட்டது.
“எவன் மறுமையின் பயிரை விரும்புகிறானோ, அவனுடைய பயிரை(விளைச்சலை) நாம் அவனுக்காக அதிகப்படுத்துகிறோம்; எவன் இம்மையின் பயிரை (மட்டும்) விரும்புகின்றானோ; நாம் அவனுக்கு அதிலிருந்து ஓரளவு கொடுக்கின்றோம். எனினும், அவனுக்கு மறுமையில் யாதொரு பங்குமில்லை.” (அல்குர்ஆன் 42:20)
“மறுமையின் வாழ்க்கைதான் மிக்க மேலானதும் நிலையானதுமாகும்”. (அல்குர்ஆன் 87:17)
தெள்ளத் தெளிவான இவ்வசனங்களின் மூலம் நாம், மறுமை வாழ்வின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டோம்.
இவண், இன்னொன்றையும் நாம் நோக்க வேண்டும். மறுமையின் சுக வாழ்வைப் பெற, இம்மையில் இறை ஆணைக்குட்பட்டு – நபிவழி பேணி நற்செயல்களை நாம் மிகுதமாகவே புரிய வேண்டும். இம்மை விதைக்கும் இடம்; மறுமை அறுவடை செய்யும் இடம். பொல்லாங்கு தரும் போல் வாழ்க்கையைக் கண்டு இம்மையில் மயக்கம் கொள்ளாது அசலான – நிலையான வாழ்வைப் பெற, இம்மையில் இறைவன் இட்ட கட்டளைக்கிணங்க செயற்பட்டு, அமைதியான – அடக்கமான வாழ்வைப் பேண வேண்டும்.
இவ்வுலகில், நாம் செய்யும் ஆகுமான – ஹலாலான தொழிலால் ஈட்டுகின்ற செல்வங்களை நாம் – நம் குடும்பம் என்று மட்டும் அனுபவிக்காமல், உற்றார்-உறவினர், இல்லையென்று இரப்போர் முதலியோர்க்குரிய பங்கினையும் கொடுத்து இறைவனுக்கு அஞ்சி வாழ்தல் சிறப்புக்குரிய செயலாகும்.
‘மனிதன்’ என்பவன் மாண்புமிக்கவன்! சொல்லுக்கு ஏற்ற பொருளுடன் மனிதன் வாழ விரும்புதல் வேண்டும். இல்லையேல், மனிதஇனம் மாசுபடிந்த – கறை படிந்த இனமாகிவிடும்! மனிதன் பெற்ற பகுத்தறிவு பயனற்றதாகி, விலங்கினங்கள் மேன்மை பெற்றுவிடும்.
ஆம்! ‘சமூகம்” என்னும் சங்கமத்தில் அங்கம் வகிக்கும் மனிதர் ஒவ்வொருவரும் பகுத்தறிவுடன் சிறந்து விளங்க வேண்டாமா? இம்மையை மறுமைக்குரிய விளை நிலமாக்க முயற்சி செய்ய வேண்டாமா? (வளரும்)
புலவர்
செ. ஜஃபர் அலி, பி.லிட்., கும்பகோணம்
{ 1 comment }
Good news for our religion. And I like the Islamic news
Comments on this entry are closed.