“இகாமதுத்தீன்” (இறையாட்சி) என்றால் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் என்று இவர்களுக்கு தவறாக போதிக்கப்பட்டு விட்டது. இந்த தவறான போதனை காரணமாக இவர்களது சிந்தனையெல்லாம் உலகிலுள்ள நாடுகளின் ஆட்சிகளைப் பிடிப்பதிலேயே சுழன்று வருகிறது. ஆட்சியைக் கைப்பற்றி விட்டால் மார்க்கத்தை எளிதாக நிலை நாட்டிவிட முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை இன்றைய இஸ்லாமிய நாடுகளை இவர்கள் நோட்டமிட்டு பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
உலக நாடுகளில் இஸ்லாமிய நாடுகள் தான் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. ஆயினும் அந்த நாடுகளில் இஸ்லாம் நிலை நாட்டப்பட்டுள்ளதா? இறையாட்சி நடைபெறுகிறதா என்று சிந்தித்து பார்க்க வேண்டும். அவ்வாறு சிந்திப்பார்களேயானால் மனிதன் தன்னில் இறையாட்சியை இகாமத்துத்தீனை நிலை நாட்டாதவரை தனக்கு வெளியில் இறையாட்சியை நிலை நாட்டமுடியாது. இறையாட்சியை தன்னில் நிலைநாட்டும் ஒரு சமுதாயம் அமையாதவரை நாட்டில் இறையாட்சியை நிலைநாட்ட முடியாது. இறையாட்சியை நிலை நாட்டும் சமுதாயம் அமைந்து விட்டால் அடுத்த கணமே ஆட்சி அதிகாரம் அவர்கள் கைக்கு வந்துவிடும் என்பதை எளிதாக விளங்க முடியும்.
பாக்கிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றது முஸ்லிம்களுக்கு கசப்பான சம்பவம். பாக்கிஸ்தான் பிரிவதற்கு ஹிந்து மதவாதிகளே மூலக்காரணமாக இருந்தாலும் அன்றைய முஸ்லிம் தலைவர்கள் நிர்ப்பந்த நிலையிலும் சற்று நிதானமாக நடந்திருந்தால் அது முஸ்லிம்களுக்கு நலமாக அமைந்திருக்கும். நடந்து முடிந்த ஒன்றை அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்தது என்று ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நடந்து முடிந்ததை படிப்பினையாக எடுத்துக் கொள்ளும் நோக்கத்தில் குறிப்பிடுகிறோம். ஆனால் அன்றைய முஸ்லிம் தலைவர்கள் ஹிந்து மதவாதிகளின் பிரிவினை வாதத்திற்கு துணை போனதற்கு காரணம் தங்களுக்கென்று ஒரு தனி முஸ்லிம் நாடு அமைந்து விட்டால் இஸ்லாத்தை இறையாட்சியை நிலை நாட்டிவிட முடியுமென்று தப்புக்கணக்கு போட்டதுதான். இதனை பாக்கிஸ்தான் 55 வருட கால அனுபவம் தெளிவாக உணர்த்துகிறது.
பாகிஸ்தானில் இன்றுவரை இறையாட்சி நிலைநாட்டப் படவில்லை என்பது உலகறிந்த உண்மை. பாகிஸ்தானில் இறையாட்சியை நிலைநாட்டப் போகிறோம் என்று கோஷமிட்டுக் தேர்தலில் போட்டியிட்டவர்களை பாகிஸ்தான் மக்கள் மண்ணைச் கவ்வச் செய்ததும், முஸ்லிம்களே இஸ்லாமிய ஆட்சியை விரும்பவில்லை என்று இஸ்லாமிய விரோத பத்திரிகைகள் உலகம் முழுதும் செய்தி பரப்பியதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இது இஸ்லாத்தின் குறையல்ல. இஸ்லாத்தின் போதனையை விட்டு தங்கள் மனித அபிப்பிராயத்தை புகுத்தி இவர்கள் செயல்பட்டதே காரணமாகும். ஒரு நாட்டின் ஆட்சியை பிடித்து விட்டால் இறையாட்சியை நிலை நாட்டி விடலாம் என்று இவர்கள் தப்புக்கணக்கு போட்டதேயாகும்.
இதனை நமது சொந்தக் கருத்தாகத் தெரிவிக்கவில்லை. நபி(ஸல்) அவர்களின் நடமுறையை வைத்தே சொல்லுகிறோம். நபி(ஸல்) அவர்கள் நபியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது மக்காவின் ஆட்சி அதிகாரம் குறைஷ்கள் வசமே இருந்தது. கஃபத்துல்லாஹ்வை தங்கள் மனோ இச்சையின்படி கோவிலாக்கி 360 விக்கரங்களை வைத்து வணங்கி வந்தனர். நபி(ஸல்) அவர்கள் இந்தச் செயல் இறைவனுக்கு இணை வைக்கும் அல்லாஹ்வினால் மன்னிக்கப்படாத கொடுஞ்செயல் எனவே அதனை விட்டுவிடுங்கள் என்று போதித்தார்கள். அதாவது அந்த மக்களின் உள்ளத்தில் இறையாட்சி ஏற்பட பாடுபட்டார்கள். அதல்லாமல் கஃபதுல்லாஹ்வை கைப்பற்றி அச்சிலைகளை எல்லாம் அகற்றிவிட்டால் இறையாட்சி ஏற்பட்டுவிடும் என்று கணக்கு போடவில்லை. நான் அல்லாஹ்வின் தூதன் கஃபத்துல்லாஹ் அல்லாஹ்வின் வீடு எனவே நீங்கள் கஃபத்துல்லாஹ்வை என்னிடம் ஒப்ப்டைத்துவிட வேண்டும் என்று வாதாடவில்லை. 10பேர் இருந்தாலும் கஃபத்துல்லாஹ்வை கைப்பற்றுவதற்காகப் போராடி மடிவதே ஜிஹாத் என்று சொல்லி குறைஷ்களை எதிர்த்து ஜிஹாதில் குதிக்கவில்லை.
ஏன் ஹுதைபிய்யா உடன்படிக்கை சமயம் நபி(ஸல்) அவர்களுடன் போராடி மடிவதற்கு உறுதி அளித்துத் தயாராக 1400 தோழர்கள் இருந்தும் காஃபத்துல்லாஹ்வை அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் குறைஷ்கள் கையில் விட்டு வைக்கக் கூடாது என்று போராடி அதனை கைப்பற்ற எண்ணவில்லை.ஆயினும் அதற்கு முன்பு மதினா நோக்கி முஸ்லிம்களை அழிப்பதற்கென்று வந்த அதே குறைஷ்களுடன் தற்காப்பு யுத்தங்கள் நடத்தி வெற்றியும் அடைந்தனர். கஃபத்துல்லாஹ்வை கைப்பற்றிவிட முடியும் என்பதற்குறிய நம்பிக்கை இருந்தும் அந்த முயற்சியில் அவர்கள் ஈடுபடவில்லை. நபித்துவத்திற்கு பின்பும் 21 ஆண்டுகள் கஃபத்துல்லாஹ் குறைஷ் காஃபிர்கள் வசமே இருந்தது. அதனுள் இறைவனுக்கு இணை வைக்கும் விக்ரகங்கள் இருந்து வந்தன. அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று காஃபாவை நோக்கி தொழுது கொண்டுமிருந்தனர். ஆயினும் காலம் கனியுமுன் கஃபாவை கைப்பற்ற எண்ணவில்லை.
ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின் பெரும் மாறுதல் ஏற்பட்டது. இறையாட்சியை நிலை நாட்டும் ஒரு சமுதாயம் அமைந்து விட்டது. எவ்வித போராட்டமோ, இரத்தம் சிந்தலோ இல்லாமல் கஃபத்துல்லாஹ் முஸ்லிம்கள் கைக்கு வந்துவிட்டது. அங்கிருந்த இடையில் வைக்கப்பட்ட விக்ரகங்கள் எல்லாம் உடைத்தெறியப்பட்டு இறையாட்சி அங்கு நிலை நாட்டப்பட்டது. அல்லாஹ்வின் தூதருக்கே அல்லாஹ்வின் வீடான கஃபத்துல்லாஹ்விலேயே இறையாட்சியை நிலைநாட்ட 21 வருடங்கள் தேவைப்பட்டன. அதற்குமுன் அதனை கைப்பற்றும் கற்பனையில் நபி(ஸல்) அவர்கள் மூழ்கவில்லை என்பது தெளிவான ஒரு விஷயமாகும்.
அதுமட்டுமல்ல மக்கா வந்து கஃபத்துல்லாஹ்வை முஸ்லிம்கள் தவாஃபு செய்யும் அவர்களது உரிமையை குறைஷ்கள் மறுத்த சமயத்திலும் அதனை கைப்பற்றும் முயற்சியில் இறங்காமல் குறைஷ்கள் கெளரவப் பிரச்சினை காரணமாக விதித்த நியாயமற்ற முட்டாள்தனமான கோரிக்கைகள் மூன்றையும் ஏற்றுக்கொண்டு பிரசித்திப் பெற்ற ஹுதைபிய்யா உடன்படிக்கையைச் செய்து கொண்டு உம்ரா செய்யாமலேயே மதினா திரும்புகிறார்கள். ஆட்சியைப் பிடிக்குமுன் மக்களிடையே இறையாட்சி ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இதைவிட அழகிய முன்மாதிரி வேண்டுமா?
மக்கா வெற்றிக்கு முன் மதீனாவில் நபி(ஸல்) அவர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள் என்று சிலர் வாதிடலாம். மதீனாவின் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியிலும் நபி(ஸல்) அவர்கள் இறங்கவில்லை. மதீனாவாசிகளின் அன்சாரிகளின் உள்ளங்களில் இறையாட்சி ஏற்பட்டு விட்டது. அதனால் நபி(ஸல்) அவர்களை தங்கள் தலைவராக ஏற்று அவர்களுக்கு கீழ் ஒன்றுபட்டு செயல்பட்டார்கள் என்பதே உண்மையாகும். தன்னில் இறையாட்சியை ஏற்படுத்திக் கொண்டவர்களே நபி(ஸல்) அவர்களுக்கு முற்றிலுமாக வழிபட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஒவ்வொரு மனிதனிடமும் இறையாட்சி ஏற்படுகின்றது என்பதற்கு அடையாளமாக தொழுகை, நோன்பு, ஜகாத் ஹஜ் போன்ற கட்டாய கடமைகளிலும் மற்றும் நடைமுறைகளிலும் முழுக்க முழுக்க நபி(ஸல்) அவர்களை பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள்.
அதில் சிறிய விஷயம் பெரிய விஷயம் என தரம் பிரித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். சிறிய விஷயமாக இருந்தாலும் நபி(ஸல்) அவர்களின் நடைமுறையை விட்டு வேறு யாருடைய நடைமுறையை எடுத்துக்கொண்டாலும் அது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்வதாகும்.
அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணையாளர்கள் அவர்களுக்கு இருக்கிறார்களா? (42:21) என்ற வசனத்தின்படி இணைவைக்கும் கொடிய குற்றமாகும். இவற்றை விளங்கிச் செயல்படுபவர்கள் நபி(ஸல்) அவர்களின் நடைமுறை மட்டுமே அல்லாஹ்வின் அங்கீகாரத்தை பெற்றது அல்லாஹ் விதித்ததையே நபி(ஸல்) அவர்கள் செயல்படுத்தியுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்வார்கள். ஒவ்வொரு மனிதனிடமும், குறைந்த பட்சம் ஒரு சமுதாயமாவது இவ்வாறு அமையாதவரை ஆட்சியில் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவது வீண் முயற்சியாகும். அவ்வாறு முயற்சி செய்து ஆட்சியைப் பிடித்தாலும் அது இறையாட்சியாக அமையாது மனித ஆட்சியாகவே அமையும் என்பதற்கு இஸ்லாத்தின் பெயரால் ஆட்சி நடைபெற்று வரும் பல நாடுகள் தக்க சான்றுகளாகும்.
இறைவனைப் பற்றியும் மறுமையைப் பற்றியும் உறுதியான நம்பிக்கை இல்லாதவர்களும் தங்களின் சுய வேட்கை காரணமாக இந்த முயற்சியில் ஆர்வத்துடன் ஈடுபடவே செய்வார்கள். தங்களின் உயிரை பணயம் வைத்தும் பாடுபடுவார்கள். ஆயினும் அவர்கள் பெரும் பலனும் பூஜ்யம்தான். எனவே தன்னில் இறையாட்சியை இகாமத்துத்தீனை நிலை நாட்டாதவர்களைக் கொண்டு நாட்டின் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதைவிட மூடத்தனமான ஒரு முயற்சி இருக்க முடியாது. இப்படிப் பட்டவர்கள் எதையும் சாதிக்கப்போவதில்லை. அப்படியே சாதித்தாலும் அதனால் மக்கள் பலன் அடையப்போவதில்லை என்பதை அறிிஞர்கள் உணர வேண்டும்.
ஆட்சியைப் பிடிக்கும் மோகம் ஏற்பட்டுவிட்டால் மக்களின் ஆதரவைத் திரட்டவேண்டும் என்ற அவாவும் ஏற்பட்டுவிடும். மக்களின் மணங்கோணாதபடி நடக்கா விட்டால் மக்களின் ஆதரவும் கிடைக்காது. மக்களின் ஆதரவை இழந்து விடக்கூடாது என்பதற்காக இறைவனுக்கு இணை வைக்கும் கொடுங்குற்றமான தர்கா சடங்குகளை அவை கொடிய குற்றங்கள்தான் என்பதை நன்கு அறிந்து கொண்டே ஆதரிக்கும் நயவஞ்கர்கள்தான் இன்றைய முஸ்லிம் சமுதாய தலைவர்களாக காட்சி தருகிறார்கள். இப்படிப் பட்டவர்களைக் கொண்டு முஸ்லிம் சமுதாயத்திற்கோ இஸ்லாத்திற்கோ என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது என்பதை மக்கள் உணர வேண்டும்.
அபூபாஃத்திமா
Comments on this entry are closed.