அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத்

in பொதுவானவை

“இப்புவியிலிருப்போரில் அநேகரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து திருப்பி விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத் தவிர (உண்மையை) அவர்கள் பின்பற்றுவதில்லை. அன்றி (வெறும் பொய்யான) கற்பனையில் தான் அவர்கள் மூழ்கியிருக்கிறார்கள். அல்குர்ஆன் 6 : 116

என்று சொல்வது போல் (மெஜாரிட்டி) அதிகமான மக்கள் பொதுவாக வழிகேட்டிலும், சொற்பமான எண்ணிக்கையினர் நேர் வழியிலும் இருந்து வருகின்றனர். ஆனால் அதிகமான மக்கள் அடிக்கடி சொல்லி வருவதே மக்களிடையே எடுபடும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆகவே, வழிகேட்டில் இருக்கும் அதிகமான மக்களாகிய தாங்கள் நேர்வழியிலும், நேர்வழியில் இருக்கும் சொற்பமான மக்கள் வழிகேட்டிலும் இருப்பதாக அடிக்கடி மக்களிடையே பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கும்போது, அந்தத் தவறான எண்ணமே மக்களிடையே பரவும் என்பதில் சந்தேகமே இல்லை.

அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத்:
“அஹ்ல சுன்னத்” என்று அரபியில் சொல்லும்போது “சுன்னத்தை உடையவர்கள்” என்ற பொருளைத் தருகின்றது. இஸ்லாமிய நடைமுறையில் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இந்த மூன்றுக்கும் “சுன்னத்” என்று சொல்லப்படுகின்றது. இதிலிருந்து நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தை மட்டும் பின்பற்றி நடப்பவர்கள் மட்டுமே “அஹ்ல சுன்னத்” அதாவது சுன்னத்தை உடையவர்கள் என்பது விளங்கும்.

நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இந்த மூன்றும் ஹதீதுகளைக் கொண்டு நிலை நாட்டப்படுபவை மட்டுமே. ஹதீதில் வராதது நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தில் வர முடியாது. ஆகவே, ஹதீஸ் ஆதாரமில்லாதவற்றை மார்க்கமாக எடுத்து நடப்பவர்கள் நிச்சயமாக அஹ்ல சுன்னத்தை விட்டு வெளியேறி விடுகிறார்கள். நான்கு மத்ஹபு பிரிவுகளுக்கு குர்ஆனிலும் ஆதாரமில்லை. ஹதீதுகளிலும் ஆதாரமில்லை.

அடுத்து இங்கு “ஜமாஅத்” என்று குறிப்பிடப்படுவர் இஸ்லாமிய நடைமுறையில் நபித்தோழர்களை மட்டுமே. இதற்கு ஆதாரம்.“எனது உம்மத் 73 பிரிவினர்களாகப் பிரிவார்கள். 72 பிரிவினர் வழி தவறியவராவார்கள். ஒரே ஒரு பிரிவே நேர்வழி நடப்பவர்கள்’, என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள், “அவர்கள் யார்”? என்று வினவினர், அதற்கு நபி(ஸல்) அவர்கள் ما أنا عليه اليوم وأصحابي“மாஅனா அலைஹில் யவ்மவ வஅஸ்ஹாபீ” என்று தெளிவாக அறிவித்து விட்டார்கள். அதாவது “இன்றைய தினம் நானும், என் தோழர்களும் எவ்வாறு இருக்கிறோமோ, அவ்வாறு இருக்கிறவர்கள்,” என்று விளக்கம் தந்துள்ளனர்.

இந்த ஹதீதின் மூலம் நபி(ஸல்) அவர்களும், நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்ற நபித்தோழர்களின் ஜமாஅத்தும் “அஹ்ல சுன்னத் – வல் – ஜமாஅத்” என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்றினார்கள். அவர்களில் யாரும் எந்த இமாமையும் பின்பற்றியதாக எந்த ஆதாரமும் இல்லை. “முஸ்லிம்” அல்லாத பெயரால் கொள்கை அளவில் அழைத்துக் கொண்டதற்கும் ஆதாரம் இல்லை. எந்த மத்ஹபுகளின் பேராலும் அழைத்துக் கொண்டதாகவும் இல்லை. அப்படி இருக்கவும் முடியாது. காரணம் இமாம்களின் காலம் ஹிஜ்ரி 80 முதல் 241 வரையாகும். இந்தக் காலகட்டத்தில் எந்த இமாமும் தன் பெயரால் ஒரு மத்ஹபு அமைத்துக் கொண்டதாகவோ, முஸ்லிம்களிடம் தன்னைத் தக்லீது செய்யச் சொன்னதாகவோ, ஆதாரப்பூர்வமாக அவர்களின் எந்தக் கிதாபுகளிலும் காணப்படவில்லை. மாறாக “எங்களைத் தக்லீது செய்யாதீர்கள்: குர்ஆன், ஹதீதையே பின்பற்றுங்கள். நாங்களும் மனிதர்களே, எங்களிலும் தவறுகள் ஏற்படலாம். நாங்கள் சொல்பவற்றை குர்ஆன், ஹதீது ஆதாரம் பார்க்காமல், நீங்கள் எடுத்து நடப்பது ஹராமாகும். என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன.

 ஆக, நான்கு மத்ஹபு பிரிவினர் நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்ற ஜமாஅத்திலிருந்தும் வெளியேறி, வழி தவறிய பிரிவுகளில் ஐக்கியமாகி விட்டார்கள் என்பது தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளக்கூடிய விஷயமாகும். உண்மையான அஹ்ல சுன்னத் வல்ஜமாஅத்தினர் இமாம்களைப் பின்பற்றுவதாகக் கொள்கை கொள்ளாமல் இஸ்லாமிய சமுதாயத்தை நான்கு பிரிவினர்களாகப் பிரிக்காமல், குர்ஆன், ஹதீஸை மட்டும் பின்பற்றி நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்தது போல் சமுதாயத்தை ஒரே ஐக்கியப்பட்ட ஜமாஅத்தாக வைத்திருக்கப் பாடுபடுபவர்களே ஆகும். நபி(ஸல்) அவர்கள் மறைவுக்குப் பிறகு கொள்கை அடிப்படையில் தோன்றிய எந்தப் பிரிவாக இருந்தாலும், அது நபி(ஸல்) அவர்களின் கூற்றுப்படி, வழிகெட்டுச் செல்லும் 72 பிரிவுகளில் ஒரு பிரிவாக மட்டுமே இருக்க முடியும். நேர்வழி நடக்கும் ஒரே பிரிவில் ஒரு போதும் இருக்க முடியாது.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: “நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். அவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம் குர்ஆன்; மற்றொன்று எனது வழிமுறை”.
அறிவிப்பவர் : மாலிக் இப்னு அனஸ்(ரலி) நூல் : முஅத்தா

என்ற நபி(ஸல்) அவர்களின் உத்தரவுப்படி குர்ஆனையும், ஹதீதையும் பின்பற்றுபவர்களாக இருக்க முடியுமே அல்லாது வேறு யாராக இருக்க முடியும் என்பதை முஸ்லிம் சமுதாயம் சிந்திக்கக் கோருகிறோம்.

“அல்லாஹ் (ஜல்) என்னைக் கற்றுக் கொடுப்பவனாகவும், எளிதாக்குபவனாகவும் அனுப்பி இருக்கிறான்”, என்று நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளனர். (அறிவிப்பவர் : ஜாபிர்(ரழி) , நூல் : முஸ்லிம்)

“இன்றைய தினம் நான் உங்களுக்கு, உங்களது மார்க்கத்தை நிறைவு செய்து விட்டேன். எனது அருட்கொடைகளை உங்கள் மீது சம்பூர்ணமாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கு மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன்”. (அல்குர்ஆன் 5 :3)

என்ற அல்லாஹ்வின் சொல்லும்,

“நான் உங்களை வெள்ளை வெளெர் என்ற நிலையில் விட்டுச் செல்கிறேன், அதன் இரவும் பகலைப் போன்றது, அழிந்து நாசமாகக் கூடியவர்களைத் தவிர வேறு யாரும் அதில் வழி தவறவே மாட்டார்கள்.

(அறிவிப்பவர் : இர்பாழ் இப்னு ஸாரியா(ரழி) நூல் : இப்னுமாஜா

என்ற நபி(ஸல்) அவர்களின் தெளிவான அறிவிப்புகளும் இந்த மத்ஹபுவாதிகளிடத்தில் மதிப்புடையவையாகத் தெரியவில்லை. குர்ஆனையும், ஹதீதையும் விட மனித அபிப்பிராயங்களே இவர்களிடத்தில் முக்கிய அந்தஸ்தைப் பெறுகின்றன. இதற்கு மேலும் இவர்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறோம், நபி(ஸல்) அவர்கள் மீது அளவு கடந்த பிரியம் வைத்து, அவர்களைப் பின்பற்றுகிறோம் என்று சொல்வது வெறும் வாய்ப்பந்தலே அல்லாமல் உண்மையாகவே இருக்க முடியாது. இவர்களின் இந்த வழி கேட்டை உணர்ந்துதான் நபி(ஸல்) அவர்கள் தனது விடைபெறும் ஹஜ்ஜில் மக்களை நோக்கி, “அல்லாஹ்விடமிருந்து அறிவிக்க வேண்டியபை அனைத்தையும் நான் அறிவித்து விட்டேனா? என்று மூன்று முறை சொல்ல வைத்து, அது மட்டுமின்றி மூன்று முறை அல்லாஹ்வையும் அதற்குச் சாட்சியாக ஆக்கி இருக்கிறார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

மார்க்கம் என்பது நபி(ஸல்) அவர்களால் கற்பிக்கப்பட்டவை மட்டுந்தான். அதற்குமேல் மார்க்கத்தில் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. கூடாது என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் குர்ஆனிலும், ஹதீதுகளிலும் தெளிவாக உள்ள நிலையிலும்,  வழிகெட்டுச் செல்வது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயமாகும்.

நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் தோன்றிய கொள்கை அடிப்படையிலான நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றி நடப்பவர்கள்  நபி(ஸல்) அவர்களின் தெளிவான அறிவிப்பின்படி அஹ்ல_சுன்னத்-வல்-ஜமாஅத்தை விட்டு அவர்களாகவே வெளியேறி விட்டார்கள்.  அவர்கள் நபி(ஸல்) அவர்கள் மீது உண்மையில் அன்பு வைக்கவும் இல்லை. அவர்களை பின்பற்றவுமில்லை. ஆனால் நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் ஹிஜ்ரி 80 முதல் 241 வரை வாழ்ந்து மறைந்த நான்கு இமாம்களைக் குருட்டுத்தனமாக பின்பற்றுகிறார்கள். இது தெளிவான வழி கேடேயாகும். இவர்கள் கலீபாக்களையும், நபித் தோழர்களையும் இமாம்களையும், அவுலியாக்களையும் முறையாக அவரவர்களின் அந்தஸ்தில் மதிக்கவுமில்லை. மரியாதை செய்யவுமில்லை. மாறாக கூட்டியோ, குறைத்தோ மரியாதை என்ற பெயரால் உண்மையில் அவமரியாதை செய்கிறார்கள் என்ற முடிவிற்கே வரமுடிகின்றது. அல்லாஹ்(ஜல்) இந்த வழிகேடுகளை விட்டும் நம்மைக் காத்தருள்வானாக!

K.M.H

{ 2 comments }

sajahan April 8, 2013 at 6:23 pm

நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இந்த மூன்றும் ஹதீதுகளைக் கொண்டு நிலை நாட்டப்படுபவை மட்டுமே. ஹதீதில் வராதது நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தில் வர முடியாது. ஆகவே, ஹதீஸ் ஆதாரமில்லாதவற்றை மார்க்கமாக எடுத்து நடப்பவர்கள் நிச்சயமாக அஹ்ல சுன்னத்தை விட்டு வெளியேறி விடுகிறார்கள். நான்கு மத்ஹபு பிரிவுகளுக்கு குர்ஆனிலும் ஆதாரமில்லை

அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத்கும், குர்ஆனிலும் . ஹதீதுகளிலும் ஆதாரமில்லை.

“முஸ்லிம்” என்தற்கு மட்டுமே ஆதாரம் உண்டு

sajahan April 8, 2013 at 6:26 pm

நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இந்த மூன்றும் ஹதீதுகளைக் கொண்டு நிலை நாட்டப்படுபவை மட்டுமே. ஹதீதில் வராதது நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தில் வர முடியாது. ஆகவே, ஹதீஸ் ஆதாரமில்லாதவற்றை மார்க்கமாக எடுத்து நடப்பவர்கள் நிச்சயமாக அஹ்ல சுன்னத்தை விட்டு வெளியேறி விடுகிறார்கள். நான்கு மத்ஹபு பிரிவுகளுக்கு குர்ஆனிலும் ஆதாரமில்லை

அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத்கும் கூட , குர்ஆனிலும் . ஹதீதுகளிலும் ஆதாரமில்லை.

“முஸ்லிம்” என்தற்கு மட்டுமே ஆதாரம் உண்டு

Comments on this entry are closed.

Previous post:

Next post: