நபிவழியை பின்பற்றுவதில் நபித்தோழர்கள்

Post image for நபிவழியை பின்பற்றுவதில் நபித்தோழர்கள்

in இஸ்லாம்

நபித்தோழர்கள் நபி அவர்களை எந்த அளவிற்குப் பின்பற்றினார்கள் என்றால், நபி அவர்கள் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அவர்களும் அப்படியே செய்வார்கள். பல சந்தர்ப்பங்களில் இதை ஏன் எதற்காக செய்கிறார்கள் என்ற கேள்வியை அவர்கள் எழுப்புவதே இல்லை.

நபி அவர்கள் ஒரு தங்க மோதிரம் அணிந்திருந்தார்கள். இதைக்கண்ட நபித்தோழர்களில் சிலரும் தங்க மோதிரத்தை அணியலானார்கள். பின்னர் ஒருநாள் நபி அவர்கள் தாம் அணிந்திருந்த மோதிரத்தை கழட்டி எறிந்துவிட்டு, இனிமேல் “இதை நான் ஒருபோதும் அணிவதில்லை” என்று சொன்னார்கள். இதைப்பார்த்த நபித்தோழர்கள் தங்கள் விரல்களில் அணிந்திருந்த மோதிரங்களைக் கழற்றி எறிந்தார்கள். (நபி அவர்கள் செய்ததை அப்படியே செய்தார்கள்.) அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி) நூல்: புகாரி

அபூ சயீதுல் குத்ரி(ரழி) அறிவிக்கிறார்கள்: நபி அவர்கள் ஒரு தடவை தன் தோழர்களுடன் தொழுது கொண்டிருந்த போது தன் பாத அணிகளைக் கழற்றி அப்புறப்படுத்தினார்கள். இதைக்கண்ட நபித்தோழர்கள் தங்கள் பாத அணிகளை அப்புறப்படுத்தினார்கள். நபி தொழுகை முடிந்ததும் “நீங்கள் ஏன் உங்கள் பாத அணிகளைக் கழற்றினீர்கள்” என்று தன் தோழர்களிடத்தில் நபி அவர்கள் கேட்டார்கள். “நீங்கள் உங்கள் பாத அணிகளை கழற்றி அப்புறப்படுத்தக் கண்டோம். உடனே நாங்களும் அவ்வாறு செய்தோம்” என்று கூறினார்கள். அதற்கு “எனது பாத அணிகளில் அசுத்தம் இருப்பதாக ஜிப்ரீல்(அலை) எனக்கு அறிவித்தார்கள். எனவே அதை நான் கழற்றினேன்” என்று நபி அவர்கள் கூறினார்கள். நூல்: அபூதாவூது, தாரமி

சஹாபாக்கள் நபி அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம் இவைகளையே சட்டமாகக் கருதினார்கள். அவர்களில் ஒருவர் கூட இதற்கு மாற்றம் செய்யவில்லை. உலக சம்பந்தமான ஏதாவது சொல், செயலாக இருந்தால் அதற்குறிய காரணத்தை நபி அவர்களிடம் நபித்தோழர்கள் கேட்டார்களே தவிர, மார்க்க சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று தெரிந்து விட்ட பின்னர் அதற்குக் காரணங்கள் கேட்டுக் கொண்டிருப்பதில்லை. உதாரணமாக, பத்ருப் போரின் போது முஸ்லிம்கள் தங்கள் முகாமை எந்த இடத்தில் அமைத்துக் கொள்வது என்ற விஷயத்தில் நபி அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்திற்கு மாற்றமாக வேறு இடத்தை ‘ஹப்பாப் இப்னுல் முந்திர்’ என்ற நபித்தோழர் தேர்ந்தெடுத்து இது ‘முகாம் அமைப்பதற்கு மிகப் பொருத்தமான இடம்’ என்று சொன்னபோது அத நபி அவர்கள் ஏற்று தன் கருத்தை மாற்றிக் கொண்டார்கள். காரணம், நபி அவர்கள் முதலில் தேர்தெடுத்த இடத்தில் தான் முகாம் அமைக்க வேண்டுமென்பது இறைக்கட்டளையல்ல. இதை நபி தன் கருத்தை மாற்றிக் கொண்டதன் மூலம் விளங்க முடிகிறது.

இது போன்ற சில மார்க்க விஷயங்கள் பற்றிய திட்டவட்டமான தீர்ப்பு அல்லாஹ்விடமிருந்து கிடைக்காமலிருக்கும்போது அந்த விஷயங்களில் நபித்தோழர்கள் நபி அவர்களோடு சர்ச்சை செய்துள்ளனர். உதாரணமாக: ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போதும் பத்ருப்போர் கைதிகள் விஷயத்திலும் உமர்(ரழி) அவர்கள் நபி அவர்களோடு சர்ச்சை செய்துள்ளார்கள். அது விஷயங்களில் அல்லாஹ்வுடைய கட்டளை வந்ததும் அதற்கு முற்றிலும் அடிபணிந்தார்கள். நபி அவர்களுக்கு மட்டும் சொந்தமான சட்டங்களாக இருந்தால் அது விஷயங்களில் நபி அவர்களை நபித் தோழர்கள் பின்தொடர்வதில்லை. அல்லது சில விஷயங்களைச் செய்ய நபி அவர்கள் அனுமதித்திருந்தாலும் அது அல்லாத மற்ற விஷயங்கள் அதைவிடச் சிறந்தது என்று நபித்தோழர்கள் கருதும்போது அது குறித்து நபி அவர்களிடம் விளக்கம் கோருவார்கள். இது அல்லாத மற்ற விஷயங்களில் நபித்தோழர்கள் நபி அவர்களைப் பூரணமாகப் பின்பற்றியே வந்தார்கள்.

நபிவழியும் நபித்தோழர்களும்
நபி அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கும், அவர்களின் தோழர்களுக்குமிடையில் எவ்வித திரையும் இருக்கவில்லை. நபி அவர்களும், நபித்தோழர்களும் பள்ளியிலும் கடை வீதியிலும், வீட்டிலும், பிரயாணத்திலும் கலந்தே வாழ்ந்தார்கள். எந்த சந்தர்ப்பத்திலும் நபி அவர்களை நேரடியாகவே சந்தித்து உரையாடும் வாய்ப்பை நபித்தோழர்கள் பெற்றிருந்தனர்.

நபி அவர்களுடைய ஒவ்வொரு சொல்லையும் செயலையும் மிக உன்னிப்பாகவும், மிகக் கவனமாகவும் பேணிவந்தார்கள். அறியாமை என்னும் காரிருளில் கிடந்த அவர்களுக்கு எந்த நபியின் மூலமாக அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அந்த நபியைத் தங்களின் இவ்வுலக மறுவுலக வாழ்க்கையின் வழிகாட்டியாய் பெற்றதினால் தான் அவர்களின் சொல், செயலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். எந்த அளவிற்கு நபித் தோழர்கள் நபி அவர்களின் சொல், செயல்களைக் கண்காணித்து வந்தார்கள் என்றால், நபி அவர்களின் அருகாமையில் இருக்கும் சந்தர்ப்பம் கிடைக்காதபோது வேறு தோழர்களைத் தங்களுக்குப் பகரமாக ஆக்கி நபி அவர்களிடமிருந்து என்னென்ன சொல், செயல்கள் நிகழ்கின்றன என்பதைக் கண்காணித்து அவற்றைப் பின்னர் தமக்குக் சொல்லுமாறு கூறுவார்கள்.

உமர்(ரழி) கூறுவார்கள், “நானும் எனது அண்டை வீட்டில் வசித்து வந்த ஒரு அன்சாரி தோழரும், ஒவொருவரும் ஒரு நாள் வீதம் நபி அவர்களுடைய அவைக்குச் சென்று அன்றைய தினம் நபி அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற செய்தியை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வோம்” காரணம், நபி அவர்களின் அவையிலுள்ள நிகழ்சிகள் பூரணமாகத் தமக்குக் கிடைக்க வேண்டுமென்பதற்காகவே அவ்வாறு உமர்(ரழி) அவர்கள் செய்து வந்தார்கள் என்று அறிவிக்கப்படுகிறது. நூல்: புகாரி

நபி அவர்களின் வழிமுறையைப் பின்பற்றுவதின் அவசியத்தையும் அவர்களின் கட்டளைகளை எடுத்து, அவர்கள் விலக்கியதை விட்டு விலகி நடந்து கொள்வதில் நபித்தோழர்களுக்கிருந்த அளவிட முடியாத ஆர்வத்தையும்தான் இது எடுத்துக்காட்டுகிறது. எனவே மதீனாவிலிருந்து மிக தூரத்திலுள்ள கிராம முஸ்லிம்கள் தங்கள் கிராமங்களிலிருந்து சிலரை நபி அவர்களிடம் அனுப்பி, இஸ்லாமிய மார்க்கச் சட்டங்களைக் கற்றுத் திரும்பி வந்து மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்வார்கள்.

நபி அவர்களிடமிருந்து சில மார்க்கச் சட்டங்களைக் கேட்பதற்காக சஹாபாக்கள் நீண்ட தொலை தூரத்திலிருந்து பிரயாணம் செய்து நபி அவர்களிடம் வருவார்கள். உக்பத் இப்னுல் ஹாரித் என்ற நபித்தோழர் ஓரு பெண்னை திருமணம் செய்திருந்தார். பல நாட்கள் சென்ற பின்னர் தானும் தனது மனைவியும் பால்குடி சகோதரர்கள் என்ற செய்தியை தெரிவித்தார். இதனுடைய சட்டம் என்னவென்று தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மக்காவிலிருந்து மதீனாவிற்கு பிரயாணம் செய்து வந்து நபி அவர்களிடம் நடந்த சம்பவத்தை விளக்கிக் கூறினார். உடனே அந்த இடத்திலேயே நபி அவர்கள் அவ்விருவரையும் பிரித்து வைத்தார்கள். அவரும் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். நூல்: புகாரி

இவ்வாறு தங்களுக்கு எழும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுவதற்காக நபி அவர்களைத் தேடிவருவது சஹாபாக்களுக்கிடையே வழக்கமாக இருந்தது. கணவன் மனைவிக்கிடையிலுள்ள உறவு சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றிய மார்க்கச் சட்டங்களைத் தெரிந்து கொள்வதற்காக நபி அவர்களிடத்தில் சென்று நபித்தோழர்களின் மனைவிமார்கள் விளக்கம் கேட்பது அவர்களது வழக்கமாக இருந்தது. சில சந்தர்ப்பங்களில் பெண்கள் சம்பந்தப்பட்ட சில நுணுக்கமான விஷயங்களைப் பற்றி ஷஹாபிப் பெண்கள் கேட்கும்போது, அதுபோன்ற விஷயங்களை தங்கள் மனைவியர் மூலம் விளக்கச் சொல்வார்கள்.

ஒரு தடவை ஒரு பெண் நபி அவர்களிடம் வந்து ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விடுமானால் அவள் எப்படி சுத்தம் செய்யவேண்டும் என்று கேட்டார். அப்போது “கஸ்தூரி கலந்த பஞ்சை அந்த இடத்தில் வைத்து கழுக வேண்டும்” என்று நபி அவர்கள் கூறினார்கள். அப்போது அந்தப் பெண், அதை எப்படி கழுவது? என்று கேட்டாள். முன்பு சொன்னது போன்றே திரும்பவும் நபி அவர்கள் கூறினார்கள். ஆனால் அந்தப் பெண் அதை புரிந்து கொள்ளவில்லை. உடனே நபி அவர்கள் தனது மனைவி அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடத்தில் அதை விளக்கிக் கொடுக்குமாறு சொன்னார்கள். அப்போது அப்பெண் விளங்கிக்கொள்ளும் முறையில் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் விளக்கினார்கள். நூல்: புகாரி, முஸ்லிம்

இவ்வாறு நபித்தோழர்கள் தங்களின் ஒவ்வொரு பிரச்னைக்குரிய தீர்வையும் நபி அவர்களிடமிருந்தே நேரடியாகக் கேட்டு தெரிந்து கொண்டார்கள்.
தொடரும்…


S.கமாலுத்தீன் மதனி

Comments on this entry are closed.

Previous post:

Next post: