அபிவிருத்தியில்லா வியாபாரம்

in பொதுவானவை

உலக மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது வியாபாரம் தான். இந்த வியாபாரத்தை செய்யவேண்டிய முறைப்படி செய்கிறார்களா? என்றால் பெரும்பாலும் இல்லை. மற்றவர்களை ஏமாற்றுதல், மோசடி செய்தல், அபகரித்தல் போன்ற சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய காரியங்கள் நிறைய நடைபெறுகின்றன. எவ்வாறு மோசடிகள் நடைபெறுகின்றன என்பதை கீழ்காணும் திருமறை குர்ஆனின் வசனம் மூலமும், நபிமொழி மூலமும் நன்கு விளங்கிக் கொள்ளலாம்.

    (எடையிலும்,அளவிலும்) குறைவு செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்குவார்கள். (ஆனால்,) அவர்கள் (மற்றவர்களுக்கு) அளந்து கொடுத்தாலோ அல்லது நிறுத்துக் கொடுத்தாலோ குறைவு செய்வார்கள். அல்குர்ஆன் 83:1-3

    நபி (ஸல்) அவர்கள் ஒரு தானியக் குவியலுக்கு அருகில் சென்றார்கள். தமது கையை அந்தக் குவியலுக்குள் விட்ட போது, விரல்களில் ஈரம்பட்டது. அப்போது “உணவு வியாபாரியே! இது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கவர்,” அல்லாஹ்வின் தூதரே! மழையில் நனைந்து விட்டது.” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்கள் பார்க்கும் விதமாக உணவுக்கு மேல் பகுதியில் அதைப் போட்டிருக்கக் கூடாதா?” என்று கூறிவிட்டு, “யார் மோசடி செய்கிறாரோ, அவர் நம்மைச் சார்ந்தவரல்லர்” எனவும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ”ரைரா(ரலி) நூற்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

    மேற்கண்ட குர்ஆன் வசனம் மற்றும் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது போலவே, இப்போது நாம் வசிக்கும் பகுதியிலும் மோசடி, கலப்படம் போன்ற வியாபார நேர்மையற்ற தன்மை அதிகமாக காணப்படுகிறது. தாய் பாலைத்தவிர அனைத்திலும் கலப்படம் என்ற நிலை பரவிக் கிடக்கிறது. பருப்பு, எண்ணெய், அரிசி உட்பட எல்லா உணவுப் பொருட்களிலும் கலப்படம் கொடிகட்டிப் பறக்கிறது. மக்களை ஏமாற்றுவது வணிகத்தின் மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. பொருட்களில் உள்ள குறைகளை மறைத்து நல்ல சரக்கு என்று கூறி விற்பனை செய்யப்படுகிறது. அல்லது ஒருவர் கொள்முதல் செய்யும் போது கொடுக்காத பணத்தை கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து வாங்குபவர்களை கவர்ந்து விற்பனை செய்கிறார். இவ்வாறான தவறான வியாபார நடவடிக்கைகளை ஒருவர் செய்வதற்கு முக்கியமான காரணம் மிகவும் அதிகமான லாபம் அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான். ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் மூலம் அதிக லாபம் அடைவது போல் தோன்றினாலும் உண்மையில் அவன் செல்வத்தில் அபிவிருத்தி அடையமாட்டான். எனவே, விற்பவரும், வாங்குபவரும் வியாபாரப் பொருளை நன்கு பார்த்து, உண்மையிலேயே குறைகள் இருந்தால், அவற்றை தெளிவுப் படுத்தி வியாபாரம் செய்ய வேண்டும். அதன் மூலம் வியாபாரிக்கும், வாங்குபவருக்கும் அபிவிருத்து உண்டு.

    ‘விற்பவரும், வாங்குபவரும் உண்மை கூறி (குறைகளைத்) தெளிவுபடுத்தினால் அவர்களின் வியாபாரம் பரக்கத் செய்யப்படும். அவர்கள் பொய் சொல்லி மறைத்தால், அவர்களுக்கு இலாபம் கிடைக்கலாம். ஆனால், வியாபாரத்தில் பரக்கத் அழிக்கப்பட்டுவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஷான் (ரலி) நூல்:புகாரி

     இது மட்டுமல்லாமல், இத்தகைய தவறான நடவடிக்கைகளை அல்லாஹ் கடுமையாக கண்டிக்கிறான்.

    “மறுமை நாளில் அல்லாஹ் மூன்று நபர்களைப் பார்க்க மாட்டான். அவர்களுக்குக் கடுமையான தண்டனையும் உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “நஷ்டமடைந்த அவர்கள் யார்?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள்” செய்த உதவிகளை சொல்லிக் காட்டுபவன், (பெருமைக்காக) தனது வேஷ்டியைத் தரையில் படுமாறு அணிபவன், தனது சரக்குகளை பொய்ச் சத்தியம் செய்து விற்பவன்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:அபூதர் (ரலி) நூற்கள்: முஸ்லிம், திர்மிதீ

    மேலும், அரபு நாட்டில் செங்கடலுக்கு வடமேற்கு பகுதியில் “மத்யன்” என்ற பகுதி இருந்து வந்தது. இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் அளவிலும், எடையிலும் பயங்கர பொருளாதார மோசடிகளைச் செய்து வந்தார்கள். அம்மக்களைத் திருத்துவதற்காக சுஐபு நபியை அல்லாஹ் அனுப்பி வைத்தான். அவர் உபதேசித்தார். அதை அம்மக்கள் கேட்கவில்லை. அவரைப் புறக்கணித்தனர். அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது. இது பற்றி திருமறை குர்ஆனின் வசனங்களை (7: 85-92 வரை)க் காணலாம்.

    “ஆகவே,அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது.அதனால்,அவர்கள் (காலையில்) தம் வீடுகளில் இறந்தழிந்து கிடந்தனர்.” (அல் குர்ஆன் 7:91)

    சுஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர். சுஐபைப் பொய்ப்பித்தவர்கள் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள். (அல் குர்ஆன் 7:92)

    மேற்கண்ட  குர்ஆன் வசனங்கள் கூறும் வரலாற்றிலிருந்து நாம் படிப்பினை பெற வேண்டும். இந்தியாவில் சமீப காலத்தில் பூகம்பம் நடந்த பகுதி குஜராத் மாநிலமாகும். இந்த மாநிலம் தான் இந்தியாவிலேயே அதிகமாக வர்த்தக நடவடிக்கைகள் நடைபெற்ற பகுதியாகும். என்ன விதமான மோசமான வர்த்தக, வியாபார முறைகேடுகளில் ஈடுபட்டார்களோ, அவர்களையும் பூகம்பம் பிடித்துக் கொண்டது. எனவே, அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தங்களை காப்பாற்றிக்  கொள்ள இன்ஷா அல்லாஹ் நேர்மையான வியாபாரம் செய்வோமாக!

 

S.ஃபாத்திமா தாஹிரா, சென்னை

Comments on this entry are closed.

Previous post:

Next post: