அபகரிக்காதீர்கள்
அண்ணல் நபிகளார்(ஸல்) நவின்றார்: “பொய் சத்தியம் செய்து பிற முஸ்லிமுக்குரியதை அபகரித்துக் கொள்கின்றவருக்கு இறைவன் நரக நெருப்பைக் கட்டாயமாக்கி விடுகின்றான். அவன் மீது சுவனத்தை ஹராமாக்கி விடுகின்றான்.”
இதனைக் கேட்டதும் ஒருவர் கேட்டார் “அற்பமான பொருளாயிருந்தாலுமா?” அண்ணல் நபிகளார்(ஸல்) பதிலுரைத்தார்: “”அது பீலு மரத்தின் ஒரு சின்ன குச்சியாக (மிஸ்வாக் குச்சியாக) இருந்தாலும் சரியே.” அறிவிப்பாளர் : அபூ உமாமா(ரலி) நூல்: முஸ்லிம்
அதாவது மற்றவர்களுக்கு உரியதை அபகரித்துக் கொள்வதில் ஒருவருக்குக் கொஞ்சங்கூட தயக்கமோ அவமானமோ இல்லாமல் போகுமேயானால், அதற்காகப் பொய் சத்தியம் செய்கின்ற அளவுக்குப் போய் விடுவாரேயானால் அவர் இறைவனின் கருணையை விட்டு வெகுதொலைவு போய் விடுகின்றார். இறைவனின் கோபம் அவரைச் சூழ்ந்துகொள்கின்றது. அவருடைய அந்த அருவருப்பான நடத்தையே அவரிடம் அமானிதம் பேணுகின்ற, நாணயமாக நடக்கின்ற நற்குணங்கள் மருந்துக்கும் இல்லை என்பதற்குச் சான்று ஆகிவிடுகின்றது. அந்த நற்குணங்களுக்கு அவரிடம் எந்த மதிப்பும் இல்லை என்பதும் தெரிந்து விடுகின்றது. இவரைப் போன்ற மனிதர்கள் இறைவனின் வேதனைக்காகத்தான் காத்திருக்க வேண்டும்.
“ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்; மேலும் பிற மனிதர்களுடைய பொருள்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதியான முறையில் தின்பதற்காக அது தவறு என நீங்கள் அறிந்திருந்தும் அதற்குரிய வாய்ப்பைப் பெற அதிகாரிகளை அணுகாதீர்கள்’ எனக் குர்ஆன் (2:188) அழுத்தம்திருத்தமாக அறிவித்துள்ளது.
“உங்களில் எவரேனும் ஒருவர் ஓர் அங்குலம் நிலத்தைக்கூட அநியாயமான முறையில் அபகரித்துக் கொள்கின்றார் எனில் மறுமைநாளில் அவருக்கு ஏழு பூமிகளைக் கொண்ட சங்கிலி அணிவிக்கப்படும்’ என இன்னொரு நபிமொழியில் சொல்லப்பட்டுள்ளது.
எந்தவொரு முஸ்லிமுக்குரிய பொருளும் அவருடைய விருப்பமோ இசைவோ கிடைக்காத வரை உங்களுக்கு ஆகுமானதல்ல என தாருல்குத்னி நூலில் பதிவாகியிருக்கின்ற நபிமொழியில் சொல்லப்பட்டுள்ளது.
பணம் சம்பாதிப்பதற்காக உழைப்பதையும் பாடுபடுவதையும் இஸ்லாம் தடுப்பதில்லை. ஆனால் பிறரின் உரிமையைப் பறித்தும், பிறர் மீது அக்கிரமம் இழைத்தும் பொருளீட்டுவதை இஸ்லாம் முற்றாகத் தடை செய்கின்றது. ஆகுமான வழியில் பொருளீட்டுவதைத்தான் இஸ்லாம் ஊக்குவிக்கின்றது.
சமரசம்
Comments on this entry are closed.