“காபிர்” பத்வா கொடுக்கும் போலி ஆலிம்களுக்கு அல்லாஹ்வின் தூதரின் உபதேசம் பலன் அளிக்குமா?

in பொதுவானவை

“காபிர்” பத்வா கொடுக்கும் போலி ஆலிம்களுக்கு அல்லாஹ்வின் தூதரின் உபதேசம் பலன் அளிக்குமா?

158. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படைப்பிரிவொன்றில் அனுப்பி வைத்தார்கள். ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ”ஹுரக்காத்” கூட்டத்தாரிடம் நாங்கள் காலையில் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில் அவர்களை நாங்கள் தோற்கடித்தோம்.) அப்போது நான் ஒருவரைச் சந்தித்தேன். (அவரை நாங்கள் சுற்றி வளைத்துக்கொண்டபோது) அவர், ”லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொன்னார். நான் (எனது ஈட்டியால்) அவரைத் தாக்கி(க் கொன்று)விட்டேன். ஆனால் அது என் மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. (திரும்பி வந்தபோது) நான் இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”லா இலாஹ இல்லல்லாஹ் என்று அவர் சொன்ன பிறகுமா அவரை நீ கொன்றாய்?” என்று கேட்டார்கள். ”ஆயுதத்தை அஞ்சித்தான் அவர் இவ்வாறு சொன்னார், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினேன். ”அதை அவர் (உளப்பூர்வமாக) சொன்னாரா இல்லையா என்று அறிய அவருடைய இதயத்தை நீ பிளந்து பார்த்தாயா?” என்று (கடிந்து) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், நான் (அதற்கு முன் இஸ்லாத்தை ஏற்றிராமல்) அன்றைய தினத்தில் இஸ்லாத்தை ஏற்றிருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்றுகூட ஆசைப்பட்டேன். எனவேதான் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் மீதாணையாக! எந்த முஸ்லிமுடன் நான் போரிடுவதாக இருந்தாலும் அவருடன் இந்தச் ”சின்ன வயிற்றுக்காரர்” -உசாமா- போரிடாதவரை போரிடமாட்டேன்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் (சஅத் (ரலி) அவர்களிடம்), ”(பூமியிலிருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ்வுக்கென்றே ஆகிவிடும்வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள்” (8:39) என்று அல்லாஹ் கூறவில்லையா? என்று கேட்டார். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், ”(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) குழப்பம் முற்றிலும் நீங்கிவிட வேண்டுமென்பதற்காக நாங்கள் போரிட்டோம். ஆனால், நீரும் உம் தோழர்களும் குழப்பம் உருவாக வேண்டுமென்பதற்காகப் போரை விரும்புகிறீர்கள்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாக வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை

53. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு பயணத்தில்) நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்த முஆத்பின் ஜபல் (ரலி) அவர்களை ”முஆத்!” என்று அழைத்தார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! இதோ! உங்களுக்குக் கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)” என்று முஆத் பதிலளித்தார்கள். (சிறிது தூரம் சென்ற பின்) ”முஆத்!” என்று (மீண்டும்) அழைத்தார்கள். முஆத் (ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! இதோ! உங்களுக்குக் கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)” என்றார்கள். (இன்னும் சிறிது தூரம் சென்ற பின்) ”முஆத்!” என்று (மீண்டும்) அழைத்தார்கள். முஆத் (ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)” என்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், ”அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிகூறுகின்ற எந்த அடியாருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள். முஆத் (ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! இதை நான் மக்களுக்கு அறிவித்துவிடட்டுமா? (இதைக் கேட்டு அவர்கள்) மகிழ்ச்சி அடைவார்களே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”(வேண்டாம்) இவ்வாறு நீர் அறிவித்தால் மக்கள் இதையே நம்பிக் கொண்டு (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்துவிடுவார்கள்” என்று கூறினார்கள். (கல்வியை மறைத்த) குற்றத்திலிருந்து தப்புவதற்காகத் தமது இறப்பின்போதுதான் இதை முஆத் (ரலி) அவர்கள் (மக்களிடையே) அறிவித்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை

54. மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மதீனாவுக்குச் சென்று இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களைச் சந்தித்து, ”தங்களைப் பற்றிய ஒரு செய்தி எனக்கு எட்டியது (அது உண்மையா? கூறுங்கள்!)” என்றேன். அப்போது இத்பான் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் பார்வையில் ஏதோ ஏற்பட்டு (என் கண்பார்வை போய்)விட்டது. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி ”நீங்கள் வந்து என் வீட்டில் தொழ வேண்டும். அதை நான் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ள விரும்புகிறேன்” என்று சொல்லியனுப்பினேன். எனவே, நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களில் அல்லாஹ் நாடிய சிலரும் (மறுநாள் என் வீட்டுக்கு) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) வந்து வீட்டி(ன் ஒரு மூலையி)ல் தொழுது கொண்டிருந்தார்கள். நபித் தோழர்களோ தம்மிடையே (நயவஞ்சகர்களைப் பற்றியும் அவர்களால் தங்களுக்கு ஏற்படும் தொந்தரவு பற்றியும்) பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு அதில் மாலிக் பின் துக்ஷுன் அவர்களுக்குப் பெரும் பங்கிருப்பதாகக் கூறினர். அவருக்கெதிராக நபியவர்கள் பிரார்த்தித்து அவர் அழிந்துபோக வேண்டும் என்று மக்கள் விரும்பினர். அவருக்கு ஏதேனும் கேடு நேரவேண்டும் என்றும் விரும்பினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் ”அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் அவர் (மாலிக் பின் துக்ஷும்) சாட்சியம் கூறவில்லையா?” என்று கேட்டார்கள். மக்கள், ”அவர் அவ்வாறு (சாட்சியம்) கூறுகிறார். ஆனால், அது அவருடைய இதயத்தில் இல்லையே?” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் சாட்சியம் கூறும் ஒருவர் ”நரகத்தில் நுழையமாட்டார்” அல்லது ”நரகம் அவரைத் தீண்டாது” ” என்று கூறினார்கள். இந்த ஹதீஸை (மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்களிடமிருந்து) அறிவிக்கும் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த ஹதீஸ் என்னை வியப்படையச் செய்தது. ஆகவே, நான் என் புதல்வரிடம் ”இதை எழுதி வைத்துக்கொள்” என்று கூறினேன். அவ்வாறே அவர் அதை எழுதி வைத்துக் கொண்டார்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை

“”எவர் நமது தொழுகையைத் தொழுகி றாரோ, நமது கிப்லாவை முன்னோக்குகிறாரோ, நாம் அறுத்ததைச் சாப்பிடுகிறாரோ அவர் முஸ்லிம்; அவர் அல்லாஹ்வினதும், அல்லாஹ்வின் தூதரினதும் பாதுகாப்பில் உள்ளார். எனவே இந்தப் பாதுகாப்பில் இருப்ப வருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வது கொண்டு, அல்லாஹ்வுக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்

இன்னொரு அறிவிப்பு இவ்வாறு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
அப்படியானால் அவர் ஒரு முஸ்லிம், மற்ற முஸ்லிம்களுக்கிருக்கும் அனைத்து உரிமை களும், கடமைகளும் அவருக்கும் உண்டு.
அனஸ்(ரழி), புகாரீ, (ர.அ.391,392,393) அபூ தாவூது, திர்மிதி, இப்னு மாஜ்ஜா, தாரமி, அஹ்மத்.

391. “நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பதைப் புசித்து வருகிறவர்தாம் முஸ்லிம். அப்படிப்பட்டவர் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பொறுப்பில் இருக்கிறார். எனவே அவரின் பொறுப்பு விஷயத்தில் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை முறிக்காதீர்கள்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 8. தொழுகை

392. “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை“ என்று மக்கள் (சான்று) கூறும் வரை அவர்களோடு போராட வேண்டுமென்று நான் ஏவப்பட்டுள்ளேன். அந்த (லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற) கலிமாவை அவர்கள் கூறி, நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பது போல் அறுத்து வருவார்களானால், தக்க காரணமின்றி அவர்களின் உயிர், பொருளுக்குச் சேதம் ஏற்படுத்துவது நமக்கு விலக்கப்பட்டுள்ளது. அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்தாகும்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 8. தொழுகை

393. “ஹம்ஸாவின் தந்தையே! ஓர் அடியானுடைய உயிருக்கும் பொருளுக்கும் சேதம் ஏற்படுத்துவதைத் தடை செய்வது எது?“ எனநான் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை“ என்று சான்று கூறி, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நம்முடைய தொழுகையைத் தொழுது, நாம் அறுத்தவற்றை சாப்பிட்டு வருகிறவர் முஸ்லிம். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிய உரிமைகள் அவருக்கும் உண்டு. ஒவ்வொரு முஸ்லிமுக்கும் (குற்றம் புரிவதால்) என்ன தண்டனை உண்டோ அது அவருக்கும் உண்டு“ என்று அனஸ்(ரலி) கூறினார்” என மைமூன் இப்னு ஸியாஹ் அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 8. தொழுகை

Leave a Comment

Previous post:

Next post: