ஒரு மூஃமின்… தேனீயிடம் கற்க வேண்டிய ஐந்து நற்பண்புகள்!– ஓர் அறிவியல் பார்வை!

🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝
எஸ்.ஹலரத் அலி
(+91 99653 61068.)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக!
மூஃமினின் உதாரணம் தேனீயைப் போன்றதாகும்.

அது தூய்மையானதையே( பூக்களின் தேனை) உண்கிறது; தூய்மையானதையே (தேனை) தருகிறது!

மேலும் அது ஒரு மலரின் மீது அமரும்போது அந்த மலரை அது உடைப்பதுமில்லை; சேதப்படுத்துவதுமில்லை!

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்ன் அம்ர் (ரலி).

முஸ்னத் அஹ்மத்: 6872.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு சிறு பூச்சியை உதாரணம் காட்டி, ஒரு மூஃமினின் முழுமையான வாழ்வியல் நெறியை நமக்கு விளக்கியுள்ளார்கள்.

நவீன அறிவியல் ஒவ்வொரு நாளும் கண்டறியும் உண்மைகள், அந்த தீர்கதரிசன வாக்கின் மகத்துவத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

1. நல்லதையே தேடும் தன்மை!

ஹதீஸ்: அது நல்லதையே உண்ணும்!

அறிவியல் பார்வை!:

தேனீ, தூய்மையற்ற இடங்களை நாடுவதில்லை. அதன் கண்களில் அமைந்துள்ள புற ஊதா பார்வை திறன் – Ultra Violet Vision காரணமாக, மலர்களில் உள்ள தேன் இருக்கும் இடத்தை மட்டும் துல்லியமாக அடையாளம் கண்டு கொள்கிறது. நஞ்சு கலந்த மலர்களை அது அணுகுவதில்லை.

நமக்கான படிப்பினை!:

மூஃமினும் அவ்வாறே இருக்க வேண்டும். அறிவு, வருமானம், உரையாடல் என அனைத்திலும் ஹலாலானதை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். அசுத்தமானவற்றை அறவே ஒதுக்க வேண்டும்.

நிச்சயமாக அல்லாஹ் பரிசுத்தமானவன். அவன் பரிசுத்தமானதைத் தவிர வேறெதனையும் ஏற்றுக்கொள்ள மாட்டான்!” –

— முஸ்லிம்: 1015.

2. சேதம் விளைவிக்காத தன்மை!

ஹதீஸ்: தேனீ எதன்மீது அமர்ந்தாலும் அதனை உடைப்பதில்லை!

அறிவியல் பார்வை!:

எடை:
ஒரு தேனீயின் எடை 0.1 கிராம் மட்டுமே. ஒரு ரோஜா இதழின் எடை 1 கிராம் ஆகும்.

உடலமைப்பு:

தேனீயின் கால்களில் ஆயிரக்கணக்கான நுண்ணிய மயிர்களும்,(Arolium) ஒட்டும் தன்மையுள்ள பாகங்களும் அமைந்துள்ளன. இதனால் அது அழுத்தாமல், மென்மையாக அமர்கிறது. இந்த அமைப்பே நவீன Velcro மற்றும் Gecko ஒட்டும் தொழில்நுட்பத்திற்கு முன்னோடியாக அமைந்தது.

மகரந்த சேர்க்கை!:

தேனீ அமர்ந்து தன் இறக்கைகளை வினாடிக்கு 230 முறை அதிரச் செய்யும் போது, மலரின் மகரந்தச் சேர்க்கைக்கு அது உதவுகிறது. அதாவது எடுப்பதோடு மட்டுமல்லாமல், மலருக்கு வளர்ச்சியையும் அளிக்கிறது.

நமக்கான படிப்பினை!:

மூஃமின் எந்தச் சபைக்குச் சென்றாலும், எந்த நிறுவனத்தில் பணியாற்றினாலும், அவ்விடத்தில் பிளவையோ, குழப்பத்தையோ ஏற்படுத்தக் கூடாது. மாறாக, அவ்விடத்திற்கு பயனையும் அழகையும் சேர்க்க வேண்டும்.

3. பயன் தரும் தன்மை!

ஹதீஸ்:

நல்லதையே வழங்கும்
அறிவியல் பார்வை!

ஒரு தேனீ தன் வாழ்நாள் முழுவதும் வெறும் 1/12 தேக்கரண்டி தேனை மட்டுமே உற்பத்தி செய்கிறது. ஆயினும் அத்தேன் இயற்கையின் அற்புத மருந்தாகும். அதில் உள்ள ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் குறைந்த அமிலத்தன்மை காரணமாக, அது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கெடாமல் இருக்கும்.

நமக்கான படிப்பினை!:

மூஃமினின் நாவில் இருந்து வெளிவருவது தேனைப் போன்ற இனிய சொல்லாக இருக்க வேண்டும். அவனது செயல் பிறருக்கு நிவாரணமாக அமைய வேண்டும்.

கசப்பான வார்த்தைகளையும், புறம் பேசுதலையும் அவன் தவிர்க்க வேண்டும்.

நல்ல வார்த்தைக்கு மணமிக்க நல்ல மரம் உவமையாகும்!” — அல் குர் ஆன்.14: 24

4. ஒழுங்கான கூட்டு வாழ்வு!

அறிவியல் பார்வை:

தேனீக்கள் 60,000 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ஒழுங்கான சமூகமாக வாழ்கின்றன. அவற்றிற்கு ஒரு தலைமை உண்டு. அவை “நடன மொழி – Waggle Dance” மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன.

ஒவ்வொரு தேனீக்கும் தனித்தனி பொறுப்பு உண்டு.

நமக்கான படிப்பினை!:

மூஃமின்கள் ஒரு உடலைப் போன்றவர்கள். தலைமைக்கு கட்டுப்பட்டு, ஒருவருக்கொருவர் உதவி செய்து, அறிவை பகிர்ந்து வாழ வேண்டும். தனித்து இயங்குதல் இஸ்லாத்தின் போதனை அல்ல.

5. தேவைக்கேற்ற தற்காப்பு!

அறிவியல் பார்வை:

தேனீ தன்னை தற்காத்துக் கொள்ள கொடுக்கை பயன்படுத்தினால், அதுவும் மரணிக்க நேரிடும். ஆகவே அது தேவையின்றி யாரையும் தாக்குவதில்லை.

தன் கூட்டையும், ராணித் தேனீயையும் பாதுகாக்கும் போது மட்டுமே அதனை பயன்படுத்துகிறது.

நமக்கான படிப்பினை!:

மூஃமின் அமைதியை விரும்புபவன். ஆனால் தன் மானம், மார்க்கம், குடும்பம் தாக்கப்படும் போது உறுதியுடன் நிற்பவன்.

முடிவுரை!

அல்லாஹ் தேனீக்கே நேரடியாக வஹீ அறிவித்தான்:

பின்னர், எல்லா கனிகளிலிருந்தும் உண். பின்னர் உன் இறைவனின் எளிதான வழிகளில் செல்

” – அன்-நஹ்ல்: 68,69

இவ்வசனத்திலேயே நமக்கான வாழ்வியல் திட்டம் அடங்கியுள்ளது. அறிவைத் தேடு, சுன்னத்தை பின்பற்று, கூட்டாக வாழ், பிறருக்கு பயனளி.

0.1 கிராம் எடையுள்ள தேனீ, ஒரு மூஃமினுக்கு கற்றுத்தரும் பாடம்:
இலேசாக வாழ்வோம்!. இனிமையாகப் பேசுவோம்! பயனுள்ளவர்களாக இருப்போம்! வ அல்லாஹு அஃலம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *