பகுத்தறிவு என்றால் என்ன?

in பகுத்தறிவுவாதம்

தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே! அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே! ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளின் கற்பனை என்று கூறி வருகிறார்கள்.

அவர்களின் பிரதான அடிப்படைக் கொள்கை மனிதனும் எண்ணற்ற பிராணிகளைப் போல் ஒரு பிராணி என்பதேயாகும். மனிதப் பிராணி அல்லாத இதர அனைத்துப் பிராணிகளுக்கும் இருப்பது ஐயறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் விசேஷமாக ஆறாவது அறிவான பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஓரிறை மறுப்பாளர்களான பகுத்தறிவு நாத்திகர்களும் மறுக்க மாட்டார்கள்.

முதலில் இந்த பகுத்தறிவு என்றால் என்ன? என்பதை ஆய்வு செய்துவிட்டுப் பின்னர் விசயத்திற்கு வருவோம். இதர பிராணிகளுக்க இருப்பது போல் பார்த்து அறிவது, கேட்டு அறிவது, முகர்ந்து அறிவது, ருசித்து அறிவது, தொட்டு அறிவது என இந்த ஐயறிவுகளும் (ஐம்புலன்களும்) மனிதனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஐயறிவு துணையுடன் ஆய்ந்தறியும் திறனான பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இற்த பகுத்தறிவு மேலே குறிப்பிட்டுள்ள ஐயறிவுகளின் உதவி கொண்டு மட்டுமே செயல் படமுடியும். இந்த ஐயறிவுகள் வராத – கட்டுப்படாத பல பேருண்மைகளை மறுக்கும் நிலையில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் இருக்கின்றனர். அந்த பேருண்மைகளை பின்னர் ஆய்வுக்கு எடுப்போம்.

இப்போது நாம் எடுத்துக் கொண்ட விஷயம் பகுத்தறிவாளர்கள் சொல்வது போல் மனித வாழ்க்கை அற்பமான இவ்வுலகோடு முற்றுப் பெறுவதாக இருந்தால், அப்படிப்பட்ட மனிதப் பிராணிக்கு பகுத்தறிவு தேவையா? என்பது தான். இன்று உலகில் கோடானுகோடி ஐயறிவு பிராணிகளைப் பார்க்கிறோம். அவை ஆறறிவு மனிதனை விட மிகமிக மகிழ்ச்சியாக, சந்தோசமாக, களிப்புடன் வாழ்ந்து வருகின்றன. விரும்பியதை விரும்பிய அளவு உண்டு மகிழ்கின்றன. குடித்து மகிழ்கின்றன. தங்களின் ஜோடிகளோடு இணைந்து சந்ததிகளை தாராளமாகப் பல்கிப் பெருகச் செய்கின்றன. அவற்றிற்கு ஏதாவது இடையூறுகள் வருவதாக இருந்தால் அவை ஆறறிவு படைத்த மனிதனால் மட்டுமே ஏற்படுவதேயாகும். மற்றபடி அவற்றிற்கு கட்டுப்பாடோ விதிமுறைகளோ எதுவுமே இல்லை.

மானத்தை மறைப்பதற்கென்று அவற்றிற்கு விதவிதமான ஆடைகள் தேவையில்லை. ஒண்ட வீடுகள் தேவையில்லை. இன்ன ஆணுடன் தான் இணைய வேண்டும்; இன்ன பெண்ணுடன் தான் இணைய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை; அப்படி மாறி மாறி இணைவதால் எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோயும் அவற்றிற்கு ஏற்படுவதில்லை. இன்னாருடைய மகன் இன்னார் என்ற வாரிசுப் பிரச்சினையும் இல்லை. உண்டு, பழித்து, ஜோடியுடன் கலந்து அனுபவித்து, மாண்டு மண்ணோடு மண்ணாகப் போகும் நிலை. நாளைக்கு நமது நிலை என்ன? சாப்பாட்டு பிரச்சினை என்ன? மனைவிப் பிரச்சினை என்ன? மக்கள் பிரச்சினை என்ன? அந்தப் பிரச்சினை என்ன? இந்தப் பிரச்சினை என்ன? என பல்வேறு பிரச்சினைகளால் அல்லும் பகலும் அவதியுற்று அல்லல்படும் நிலை ஐயறிவு பிராணிகளுக்கு இல்லை. ஆறறிவு மனிதப் பிராணியை விட ஐயறிவு பிராணிகள் மகிழ்ச்சிகரமாக, எவ்வித கெளரவ பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து மடிகின்றன என்பதை பகுத்தறிவாளார்கள் மறுக்க முடியுமா?

சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிராதயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைகள் , குண்டு கலாச்சாரம் இவற்றில் எதனையும் ஐயறிவு பிராணிகளிடையே பார்க்க முடிகிறதா? இல்லையே! நாளை நடப்பதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து மடிகின்றன. சொத்து, சுகங்களையோ, உணவு வகைகளையோ அவை சேர்த்து வைக்காவிட்டாலும் அதனால் அவை துன்பப்பட்டதுண்டா? உணவில்லாமல் பட்டினியால் மடிந்ததுண்டா?

பகுத்தறிவாளர்களே! சிறிது உங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்திப் பாருங்கள். இவ்வுலகோடு மனித வாழ்க்கை முற்றுப் பெறுவதாக இருந்தால், மனிதனுக்கும் மற்ற ஐயறிவு பிராணிகள் போல் பகுத்தறிவு கொடுக்கப்படாமல் இருந்தால், மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக, மகிழ்ச்சிகரமாக, கவலையோ, துக்கமோ இல்லாமல், சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைச் செயல்கள், வெடிகுண்டு, அணுகுண்டு கலாச்சாரங்கள், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் இவை எவையுமே இல்லாமல் மிக, மிக நிம்மதியாக வாழ்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகலாம். அப்படியானால் ஐயறிவு மிருகங்களுக்குக் கொடுக்கப்படாத இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையே இல்லாத பிரத்தியேக பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும் ஏன் கொடுக்கப்ட்டுள்ளது? முறையாக நடுநிலையோடு உங்களின் பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்தினால், இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கை – பரீட்சை வாழ்க்கை என்பதை உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்.

இன்று அனைத்து நாடுகளிலும் நீக்கமறக் காணப்படும் இனவெறி, மதவெறி, மொழி வெறி, ஜாதி வெறி, நிறவெறி என பல்வேறு வெறிகளால் இந்த மனித இனம் கூறு போடப்பட்டு நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதற்கு இந்த ஆறாவது அறிவான பகுத்தறிவுதான் காரணம் என்பதை பகுத்தறிவாளர்களால் மறுக்க முடியுமா? மதங்களின் பெயரால் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து மதப்புரோகிதர்கள் செய்து வரும் அட்டூழியங்கள், ஈவிரகமற்ற கொடூர செயல்கள், கொலை பாதகச் செயல்கள், மதப்புரோகிதர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என மார்தட்டிக் கொண்டு, மதப்புரோகிதர்களின் அனைத்து வகை ஈனச்செயல்கள், அட்டூழியங்கள் , அக்கிரமங்கள், வன்முறைச் செயல்கள் அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து செய்து வரும் அரசியல்வாதிகள் என்ற அரசியல் புரோகிதர்கள் (தொண்டைத் தொழிலாக்கி தொப்பையை நிரப்புகிறவர்கள் அனைவரும் இடைத்தரகர்களே – புரோகிதர்களே), ஏழைகளின் வயிற்றில் அடித்து, அவர்களின் உரிமைகளைப் பறித்து, மதப்புரோகிதர்களையும், ஆட்சியாளர்களையும், அரசியல் வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு குறுக்கு வழிகளில் பல நூறு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துக் குவிக்கும் கோடீஸ்வரர்கள், இப்படி அனைவரின் மனச்சாட்சிக்கும் விரோதமான அநியாய, அக்கிரம, அட்டூழிய செயல்களுக்கு இந்தப் பாழும் பகுத்தறிவு தானே காரணம்? இவ்வுலக வாழ்க்கையில் மனிதனுக்கு பகுத்தறிவு மட்டும் இல்லாவிடில், மற்ற பிராணிகளைப் போல், ஐயறிவுடன் மட்டும் வாழ்ந்தால் இந்தப் படுபாதகச் செயல்கள், அட்டூழியங்கள், அநியாயங்கள் இடம் பெறுமா? மனித அமைதி கெடுமா?

கடவுள்களின் பெயரால் மதங்களை கற்பனை செய்து பலவித அநியாயங்கள் நடக்கின்றன என காரணம் கூறி, மனிதப் பகுத்தறிவைக் கொண்டு கற்பனை செய்யப்பட்ட பொய்க் கடவுள்களோடு, அகில உலகையும் மனிதனையும் படைத்து நிர்வகித்து வரும் ஒரே கடவுளை மறுக்கத் துணிந்த பகுத்தறிவாளர்கள், கடவுளின் பெயரால் வெறியூட்டும் மதங்கள், அரசியலின் பெயரால் அட்டூழியங்கள், கோடீஸ்வர குபேரர்களின் தில்லுமுல்லுகள் என அனைத்திற்கும் காரணமான இந்தப் பகுத்தறிவை அழித்தொழிக்க முற்படுவதில்லையே! ஏன்? மனித வாழ்க்கை இவ்வுலகுடன் முடிவுக்கு வருகிறதென்றால் இவ்வுலக வாழ்க்கைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத பகுத்தறிவு ஏன்? ஏன்?? ஏன்??? தாங்களும் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொள்வதாலா? தாங்களும் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருப்பதலா? பகுத்தறிவை நியாயப்படுத்துகிறீர்கள்? விடை தாருங்கள் பகுத்தறிவாளர்களே!

பகுத்தறிவு மனிதனுக்கு இயற்கையிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது; அதனை அழிக்க முடியாது என்பது பகுத்தறிவாளர்களின் பதிலாக இருந்தால், பகுத்தறிவில்லா ஐயறிவு பிராணிகள் போல் மனிதனும் ஒரு பிராணியே! இவ்வுலகில் வாழ்ந்து மடிவதோடு அவனது முடிவு ஏற்பட்டு விடுகிறது என்று எந்தப் பகுத்தறிவின் அடிப்படையில் கூறுகிறீர்கள்? பகுத்தறிவின் மூலம் மனிதப்படைப்பு ஐயறிவு மிருகப் படைப்பிலிருந்து வித்தியாசப்படுகிறது என்பதை உங்களால் பகுத்தறிய முடியவில்லையா?

இவ்வுலக வாழ்ககைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத, அதே சமயம் இவ்வுலக மனித மற்றும் படைப்புகளின் நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கைக்கு பல வகையிலும் இடையூறு விளைவிக்கும் இந்தப் பகுத்தறிவு ஓர் உன்னத நோக்கத்தோடுதான் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உங்களால் உய்த்துணர முடியவில்லையா?

பகுத்தறிவாளர்களே! நீங்கள் பகுத்தறிவு, பகுத்தறிவு என பீற்றிக் கொள்வது உங்களுக்கிருக்கும் ஐயறிவைக் கொண்டு, அவை கொடுக்கும் ஆதாரங்களை மட்டும் வைத்து விளங்கிக் கொள்ளும் அற்ப விஷயங்கள் மட்டுமே. மற்றபடி உங்களது ஐம்புலன்களுக்கு எட்டாத, கட்டுப்படாத நுட்பமான உண்மைகளை கண்டறியும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை; அதாவது மதப்புரோகிதர்கள் கற்பனையில் உருவான கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுக்கும், பகுத்தறிவாளர்களாகிய உங்களையும், என்னையும் அகில உலக மக்களையும், அகிலங்களையும் சோதனைக்காக – பரீட்சைக்காக படைத்து சுதந்திரமாக நம்மை செயல்படவிட்டிருக்கும் ஒரேயொரு உண்மைக் கடவுளுக்குமுள்ள வேறுபாட்டை உங்களால் பகுத்தறிய முடியவில்லை. உண்மைக் கடவுளை உய்த்துணரும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை, சாந்தி மார்க்கத்தின் உறுதி மொழியின் ஆரம்ப பாதியை மட்டும் கூறி, அரைக்கிணறு தாண்டி கிணற்றின் உள்ளே விழும் மிகமிக ஆபத்தான, அபாயகரமான நிலையில் நுண்ணறிவில்லா பகுத்தறிவாளர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என குற்றப் படுத்துகிறோம்; முறையாக நுண்ணறிவுடன் பகுத்தறிய வேண்டுகிறோம்.

அபூ பாத்திமா

{ 6 comments }

Irfan sheriff March 29, 2012 at 11:18 am

Masha allaah
Mind blowing stunning article:) 🙂
Ithai entha naatheeganum marukkave mudiyaathu
Allaahu akbar !

Abubakkar Sidhik. M March 30, 2012 at 10:25 pm

Masha allah.

Real article. allah ungalin kalviyil barakkath seivanaga. Ithai namathu muslim allatha sagotharkal padithal insha allah neraana valikal pera(Iman) vaaipugal undaagum.

Allah mega periyavan.
Allahu akbar.

RUSTHI April 2, 2012 at 1:54 am

masha allah nalla wilakama solli irunthinthinga pakuthariva patri melum melum allah udhawi seiwanaha allahu akbar

Mohammad Safan May 9, 2012 at 9:45 pm

Al Hamdulillah
Its great article
Baarakallaho feek

abdul rahiman haneefa August 4, 2012 at 2:37 am

assalamu alaikkum

kurpani kodupathal manithanukku nanmai ok, namakka uyirai vidum antha piranikku enna nanamai?

abdul azeez August 19, 2012 at 2:20 am

அலைக்கும் சலாம் அன்பு நண்பர் அப்துல் ரஹீம் அவர்களே! சும்மா பாஸ்ட் புட் ஹோட்டலில் சிக்கன் பிறை, மட்டன் பிரியாணி, ஜின்ஜெர் சிக்கன் எல்லாம் பார்த்தது இல்லையா? அங்கே சாப்பிட்டவர்களிடம்
உங்கள் நாக்குக்கு இதனை சாப்பிட்டதனால் ருசி என்ற நன்மை கிடைத்தது. ஆனால் அந்த சிக்கனுக்கும், மட்டனுக்கும் என்ன நன்மை என்று விசாரித்துவிட்டு வந்து எங்களுக்கு சொல்லுங்களேன் ஏன்?
நீங்கள் வாழ் நாளில் இவைகளை சாப்பிட்டதே இல்லையா?
மா சலாம்.
அப்துல் அஜீஸ்

Comments on this entry are closed.

Previous post:

Next post: