“ஹிஜ்ரி கமிட்டியினரின் முன் பின்னான முரண்பாடுகள்” – அந்நஜாத்
இந்த மாத அந் நஜாத் (ஆகஸ்ட் – 2024) இதழில் …மேலே உள்ள தலைப்பில் ஒரு கட்டுரையை இலங்கையைச் சேர்ந்த ” அபூ இஸ்ஸத்” என்பவர் எழுதியிருந்தார்.ஹிஜ்ரி கமிட்டி காலண்டரின் முன் பின் முரண்பாடாக இரண்டு விசயங்களை குறிப்பிடுகிறார்.
ஒன்று…நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட இறுதி ஹஜ்ஜில் (துல் ஹஜ் 9 ஆம் நாள்) அரஃபா தினமானது வெள்ளிக்கிழமை அன்று நடந்ததாக ஸஹீஹான ஹதீஸ்கள் குறிப்பிடுவதற்கு முரணாக ஹிஜ்ரி கமிட்டிக்காரர்களின் பிழையான கணக்கீட்டின்படி அரஃபா நாள் வியாழக்கிழமை நடந்ததாக முன் பின் முரண்படுகிறார்கள்.
ஸஹீஹான ஹதீஸ்கள் சொல்வது என்ன?
ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ்.4606,4407 இன் படி ஹதீஸ் அறிவிப்பாளர்களில் மூன்றாவதாக வரும் அவ் ஸவ்ரீ ( ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், ” திருக்குர் ஆன் 5:3 வசனம் இறங்கிய அரஃபா நாள் வெள்ளிக்கிழமையாக இருந்ததா அல்லது இல்லையா? என்று சந்தேகப்படுகிறேன்.” என்று கூறுகிறார்.
அடுத்த வேறொரு ஹதீஸில் வெள்ளிக்கிழமை அரஃபா தினத்தில்தான் அவ்வசனம் இறங்கியது என்று ஆதாரம் காட்டுகிறார்கள்.
” ….அதற்கு உமர் ( ரலி) அவர்கள், ” அவ்வசனம் ( 5:3) எந்த நாளில்…எந்த இடத்தில் வைத்து நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம்!
அரஃபா பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை மாலை வேளையில் ( வெள்ளி இரவு) நபி (ஸல்) அவர்களுக்கு இவ்வசனம் இறங்கியது.
-அஹ்மத்.183, நஸயீ.2952,4296.
இதே போன்று மற்றொரு ஸஹீஹான ஹதீஸில்…” இந்த வசனம் அருளப்பட்ட “நாளும் இரவும்” எனக்குத் தெரியும்.இந்த வசனமானது, நாங்கள் அரஃபாவில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த போது “வெள்ளிக்கிழமை இரவில்” அருளப்பட்டது.”
அறிவிப்பவர்: தாரிக் இப்னு ஷிஹாப் ( ரலி) , நஸயீ.2452,4926. அஹ்மத்.183.
மேலே உள்ள இரண்டு ஹதீஸ்களும்… அரஃபாவில் மாலை மஃரிப் நேரத்தில் வெள்ளிக்கிழமை இரவு அவ்வசனம் இறங்கியதாக தெளிவாக அறிவிக்கின்றன.
இதைத்தான் ஹிஜ்ரி கமிட்டியும்…அரேபியர்களின் மொழி வழக்கப்படி வியாழக்கிழமை பகல் அரஃபா நாள் முடிந்த மாலை மஃரிபில் வெள்ளிக்கிழமை இரவு 5:3 வசனம் இறங்கியது என்கிறார்கள்.
பொதுவாக இன்றும் நமது முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி வியாழக்கிழமை மஃரிப் வந்து விட்டாலே வெள்ளி கிழமை ராத்திரி பிறந்து விட்டதாக கூறுவது பொதுவாக உள்ளது.
இந்தியாவில்…தமிழகத்தில் உள்ள அனைத்து அவ்லியாக்கள் தர்ஹாக்களும் “வெள்ளிக்கிழமை ராத்திரி” என்று கூறப்படும் வியாழன் மாலை மஃரிப் நேரத்திலேயே ஜியாரத் கூட்டம் அலை மோதும்.
வெள்ளிக்கிழமை இரவு என்பது யூத,அரபி மொழி வழக்கப்படி வியாழக்கிழமை மாலை வந்து விட்டால் வெள்ளிக்கிழமை புதிய நாள் துவங்கி விடும்..
ஆகவே ஹிஜ்ரி கமிட்டியார்கள் முன் பின் முரணாக எதுவும் கூறவில்லை.ஸஹீஹ் ஹதீஸ் கூறும் அரேபியர் மொழி வழக்கப்படியே சரியாகச் சொல்கிறார்கள்.
அடுத்த முன் பின் முரணாக அந் நஜாத் கூறுவது….
“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,” துல் ஹஜ், ரமழான் ஆகிய பெருநாட்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தாற்போல் ( 29:29 நாட்களாக) குறையாது.”
-ஸஹீஹுல் புஹாரி.பாகம்.2,பாடம்-12,பக்கம்.582, 912.
அதாவது ஹிஜ்ரி கமிட்டி காலண்டரில் ஹிஜ்ரி.1444 ஆண்டிலும் துல் ஹஜ் மாதமும்,ரமழான் மாதமும் 29:29 குறைவு நாட்களாக வந்ததாகவும்..இப்படி பெருநாட்களுக்குரிய இரண்டு மாதங்களும் ஹதீஸின் படி 29 நாட்களாக சேர்ந்தார்போல் குறையக்கூடாது..கமிட்டி காலண்டரில் 29 நாட்கள் சேர்ந்தார் போல் குறைவதன் மூலம் கமிட்டி காலண்டர் முன்பின் முரண்படுவதாக அந் நஜாத் கூறுகிறது.
ஒரு ஹதீஸை முறைப்படி விளங்கத் தெரியாமல் மனோ இச்சைப்படி கமிட்டியின் மீது களங்கம் விளைவிப்பதற்க்காக ஹதீஸின் அசல் பொருளை இருட்டடிப்பு செய்கிறார்கள்.
ஹதீஸை மீண்டும் வாசிப்போம்…
” நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.துல் ஹஜ்,ரமழான் ஆகிய பெருநாட்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தாற்ப்போல் குறையாது.”
அறிவிப்பவர்: அபூ பக்கரா ( ரலி) புஹாரி.912.
இதன் விளக்கம்…
இந்த ஹதீஸ் ரமளான் மற்றும் துல்ஹிஜ்ஜா ஆகிய இரண்டு மாதங்களின் மேன்மையைப் பற்றியது. இந்த இரண்டு மாதங்கள் இஸ்லாத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது,
ஏனெனில் அவை அவற்றுடன் தொடர்புடைய பல வணக்க வழிபாடுகள்.. நடவடிக்கைகள் உள்ளன. ரமலான் மாதத்தில், இஸ்லாமியர்கள் ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் இருந்து மாலை வரை நோன்பு நோற்பது அல்லாஹ்வை வணங்கும் செயலாகும்.
இதேபோல், துல்ஹிஜ்ஜா மாதத்தில், இஸ்லாமியர்கள் இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றான ஹஜ் யாத்திரையை மேற்கொள்கின்றனர். எனவே, இந்த இரண்டு மாதங்கள் இஸ்லாத்தில் மத முக்கியத்துவத்தால் மற்ற மாதங்களை விட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
மேலே உள்ள விளக்கம் தான் அசலான ஒன்று அ ந் நஜாத் ஆய்வாளர்கள் ( 29:29 நாட்கள்) என்று சுய விளக்கத்தை அடைப்புக்குறிக்குள் வைத்து…கமிட்டியின் மீது கல்லெறியும் வேலையை கணக்காக செய்கிறார்கள்.
இப்படித்தான் …மக்கா மையக் கொள்கைக்கும் சுய விளக்கம் கொடுத்தும்…ஹதீஸை திரித்து வளைத்து திருச்சி காலண்டருக்கு வலு சேர்த்தார்கள்.
முடிவாக..ஹிஜ்ரி கமிட்டி காலண்டரில் எந்த முன் பின் முரண்பாடும் இல்லை.இருப்பதாக சொல்பவர்கள் ஹதீஸின் பொருளை திரித்து திருகுதாளம் செய்கிறார்கள்.அல்லாஹ் அறிந்தவன்!
எஸ்.ஹலரத் அலி, திருச்சி -7. Mob. + 99 653 610 68.