எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7
மத்ஹப் அன்றும் இன்றும்
மத்ஹப் என்ற சொல்லுக்கு வழி முறை,போக்கு,கருத்து,என பொருள் கொள்ளலாம்.அன்றைய காலங்களில் மார்க்க சந்தேகங்களை அன்றிருந்த பெரும் இமாம்களிடம் கேட்டு தெளிவடைந்தார்கள்.அவர்கள் கூறும் கருத்துக்களை…இது இமாம் அபூ ஹனிபா(ரஹ்) அவர்களின் கருத்து,…இது இமாம் ஷாபியீ (ரஹ்) அவர்களின் கருத்து என்று கூறுவார்கள். இதுவே அவர்களின் வழிமுறையாக நாளடைவில் ” மத்ஹப்” ஆக மாறி விட்டது! இஸ்லாத்தில் இன்று பிரபலமாக ” ஹனபி,ஸாபி,மாலிகி,ஹம்பலி” என நான்கு மத்ஹப் பிரிவுகளாக உள்ளது.
மத்ஹப் مذهب என்ற சொல்லை ஆய்வு செய்தால்…” தஹப” ذهب என்ற பதத்திலிருந்து பிறந்த சொல்லே மத்ஹப்.” தஹப” என்றால் ” போனான்” என்று பொருள்.மத்ஹபு என்றால் ” போகுமிடம்” என்று பொருள்படும்.
ஒரு ஹதீஸில் இவ்வாறு கூறப்படுகிறது…
” நபி (ஸல்) அவர்கள் ” மத்ஹபு” க்கு போக நாடினால் தூரமாவார்கள்!”
அபூ தாவூத் -01
இந்த ஹதீஸில் ” மத்ஹபு” எனும் சொல் ” கழிவறை” ” கழிப்பிடம்” என்னும் கருத்தில் உள்ளது.ஆகவே இஸ்லாத்திற்கும் இன்றைய மத்ஹபுகளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை!
முதல் ஹனபி மத்ஹப் ஆனது இமாம் அபூ ஹனிபா (ரஹ்) அவர்கள் பெயரில் இன்றும் பிரபலமாக இருந்து வருகிறது. இமாம் அபூ ஹனிபா (ரஹ்) அவர்கள் வாழ்ந்த காலம் ஹி.80-180 வரை.நபி (ஸல்) அவர்கள் மறைவிற்கு பிறகு 100 வருடங்களுக்குப்பின் உருவானதே ஹனபி மத்ஹப்.இமாம் அபூ ஹனிபா (ரஹ்) அவர்களே ஒரு தாபியீ என்று சொல்லப்படுகிறது.ஆனாலும் இமாம் அவர்கள் எழுதிய எந்த நூலும் இன்று இல்லை. இவருடைய மாணவர் “முஹம்மது” என்பவர் எழுதிய ” மு அத்தா முஹம்மது” என்ற நூலே இன்றும் இருக்கிறது.
ஆனால் இன்றுள்ள எல்லா ஹனபியாக்கள் ஆதார நூல்கள் எல்லாமே பிற்காலத்தில் எழுதியவைகளே!
குறிப்பாக ஹனபி மத்ஹபின் இரண்டு பிரபல்யமான நூல்களான ” துர்ருல் முக்தார்” 800 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஒன்று.” பதாஃவா ஆலம்கீரி” என்ற நூல் ஒளரங்கசீப் ஆட்சிகாலத்தில் 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒன்று! இவைகளில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கும் நபி (ஸல்) சுன்னாவுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இமாம்களின் பெயரைச் சொல்லி பின்வந்த ஆலிம் பெரு மக்கள் அளந்து விட்ட சுய விளக்கங்களே இன்று மார்க்கமாக மக்களுக்கு போதிக்கப்படுகிறது.
ஒரே ஒரு உதாரணம் …அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
” கடலில் வேட்டையாடுவதும் , புசிப்பதும் உங்களுக்கு ஹலால்!” என்கிறான்.
— அல் குர் ஆன்.5:96.
ஆனால் நம் மத்ஹப் நூல்களில் நண்டு, இறால் போன்றவைகள் உண்பது ஹராம் என்றும் மக்ரூஹ் என்றும் அந்தந்த மத்ஹப் விருப்பப்படி தீர்ப்பு கொடுப்பார்கள்.
மத்ஹப் கொடுமைகளில் மகா கொடுமையாக இந்த மத்ஹப் வழி முறைகள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் 500 ஆண்டுகளுக்குப்பின் 11 ஆம் நூற்றாண்டுகளில் ஆரம்பித்து 1925 ஆம் ஆண்டு வரை…சுமார் 800 ஆண்டுகள் உலக மக்கள் சங்கமிக்கும் மக்காவின் காஃபத்துல்லாஹ்விலேயே நிலை பெற்றிருந்தது.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இப்ன் ஜுபைர் என்னும் பிரயாணி கி.பி.1184 ஆம் ஆண்டு மக்காவுக்கு பயணம் செய்கிறார். அங்கு அவர் பார்த்தவைகளை பிரயாண குறிப்பாக எழுதி வைத்துள்ளார். அதில்…
மக்கா ஹரம் ஷரீப் காஃபத்துல்லாஹ் உள்ளே ஒவ்வொரு வக்த் தொழுகையும் ஒரே நேரத்தில் ஐந்து முறை ஐந்து மத்ஹப் இமாம்களால் அந்தந்த மத்ஹப் முஸ்லிம்களுக்கு நடத்தப்படுமாம்.
காஃபா வை சுற்றி ஐந்து இடங்களில் ஹனபி,ஷாபியீ,மாலிகி,ஹம்பலி மற்றும் ஷீ ஆ பிரிவைச் சேர்ந்த “ஜைதீ” மத்ஹபுக்கும் தனித்தனி தொழும் இடங்கள் மக்காம் மிஹ்ராபுகள் இருக்குமாம்.இந்த மிஹ்ராபுகள் அலங்கரிக்கப்பட்டு மெழுகு திரி ஒளியில் மிளிருமாம்.
இந்த ஐந்து மத்ஹப் ஐந்து இமாம் தொழுகையை..செளதி அரசர் அப்துல் அஜீஸ் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னரே இவைகளை ஒழித்து அனைத்து முஸ்லிம்களும் ஒரே இமாமை பின் தொடர்ந்து தொழும் நடை முறையை கொண்டு வந்தார்.
காஃபாவின் மேற்குப்புறத்தில் ருக்னுல் யமானிக்கும் மஹ்ராபிக்கும் இடையில் நான்கு தூண்கள் நட்டு…மேற்கூரையில் தளமிட்டு இருக்கும் கட்டிடமே மாலிக் மத்ஹப் இமாம் நின்று தொழுகை நடத்தும் இடமே ” (Maqam Imam Malik”) மகாமே இமாம் மாலிக்.
ஹனபி மத்ஹப் சார்பாக தொழுகை நடத்த காஃபாவின் வடக்குப் புறம் ஹிஜ்ர் இஸ்மாயீல் ஹாத்தீம் என்று சொல்லப்படும் இடத்திற்கு எதிரே இரண்டு அடுக்கு கட்டிடமாக இது அமைந்திருந்தது ” “மகாமே இமாம் அபூ ஹனிபா”.
காஃபத்துல்லாஹ்வில் ஜம் ஜம் கிணறுக்கு அருகில் 15 மீட்டர் தொலைவில் ” மகாமே இமாம் ஷாபீயி” மிஹ்ராப் அமைக்கப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் உருவான ஹம்பலி மத்ஹப் மிஹ்ராப் ஆனது காஃபாவின் தெற்குப்பக்கம் அதாவது தற்போதுள்ள மன்னர் அப்துல் அஜீஸ் கேட்டிற்கு எதிரில் இருந்தது “மகாமே ஹம்பலி மிஹ்ராப்”.பின்பு இக்கட்டிடம் 1800 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு ஹஜ்ருல் அஸ்வத் கல்லுக்கு எதிரில் நான்கு தூண்கள் நட்டு மேற் தளம் அமைத்து கட்டிடமாகியது.
இஸ்லாம் என்றாலே மத் ஹப் என்ற மாயை 800 ஆண்டுகாலம் மக்காவிலேயே கொழுவீச்சி ஆட்சி செய்ததை மன்னர் அப்துல் அஜீஸ் அவர்கள் ஒழித்து..ஒரே இமாம் ஒரு தொழுகையாக்கினார்கள்.
ஆனாலும் இன்றும் நம் நாட்டில் நான்கு மத் ஹபுகளையும் ஒழிக்க முடியாமல் நான்கையும் ஒன்று சேர்த்து ” சுன்னத் வல் ஜமாத்” என்ற பெயரில் முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறார்கள்.அசல் சுன்னாக்களை அமல் செய்ய பள்ளி இமாம்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் சுன்னத் அல்லாத பித்அத் ஆன கூட்டு துவா கட்டாயம் அமல் செய்தே ஆக வேண்டும்.அல்ஹம்துக்குப் பிறகு சப்தமாக ஆமீன் சொல்லக்கூடாது. ஆனால் பள்ளிக்குள் மெளலூது ஓதுவது பர்ளான கடமை. இதுதான் இன்றைய மத்ஹபுகளின் நிலை!