இஸ்லாமிய விரோத.. இந்திய பாஜக ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடுவது முஸ்லிம்களின் மீது கடமையா… மார்க்கம் சொல்வது என்ன?

எஸ். ஹலரத் அலி, Mob.99 653 610 68.திருச்சி- 620007.

இன்று இந்தியாவை ஆளும் இந்துத்வா பாஜக கட்சியினர் ஏராளமான சட்டங்களை முஸ்லிம்களுக்கு எதிராக நிறைவேற்றி வருகிறார்கள். குறிப்பாக ஜம்மு காஷ்மீர் போன்ற பெரும் பான்மை முஸ்லிம்கள் வாழும் மாநிலத்தில் கடும் சட்டங்கள் போட்டும் ராணுவ அடக்கு முறையிலும் ஆள்கிறார்கள்.

இது போன்ற எதேச்சதிகார அரசுகளை எப்படி முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டும்? குர் ஆன் மற்றும் ஹதீஸ் சொல்வதென்ன?

இன்றைய உலகில் ஒரு நாட்டின் ஆட்சியானது, ஜனநாயகம், சர்வாதிகாரம், பரம்பரை மன்னராட்சி முறையில் நடைமுறையில் உள்ளது. எந்தக் கொள்கையில் ஒரு நாடு ஆளப்பட்டாலும்.. அல்லாஹ் நாடுபவர்களுக்கே ஆட்சியை அளிக்கிறான். அவர்கள் அதிபர், ஜனாதிபதி, பிரதமர், சர்வாதிகாரி, சுல்தான், மன்னர் என்று பல பெயரில் இருக்கலாம்.

” நீர் கூறுவீராக! அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே!..நீ யாரை விரும்புகிறாயோ.. அவருக்கு ஆட்சியை கொடுக்கிறாய்; இன்னும் ஆட்சியை விரும்புகின்றவரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்!; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவுபடுத்தவும் செய்கிறாய்;…
— அல் குர் ஆன்.3:26.

அல்லாஹ்தான் ஆட்சியாளர்களை தேர்வு செய்கிறான். அவர்கள் நல்லவர்களோ, தீயவர்களோ, கொடுங்கோலர்களோ, எப்படி இருப்பினும் அவர்களை எதிர்த்து போராட்டம், கிளர்ச்சி,கலகம் செய்தல், ஆர்ப்பாட்டம், பேரணி, ஊர்வலம் செல்லுதல் எதற்கும் இஸ்லாம்… அனுமதி கொடுக்கவில்லை.

அவரவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த தவணை முடியும் வரை ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை!

1.) ” அல்லாஹ்வின் தூதரே! எங்களை நிர்வகிக்கும் ஆட்சித்தலைவர்கள் … அவர்களுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய உரிமையை கோருகின்றவர்களாகவும், எங்களுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய உரிமைகளை மறுப்பவர்களாகவும் அமைந்து விட்டால்…,

அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்? .” என்று சலமா பின் யஸீத் அல் ஜு அஃபி ( ரலி) கேட்டபோது, “

நபி (ஸல்) அவர்கள் சலமா அவர்களை விட்டு தம் முகத்தை திருப்பிக்கொண்டார்கள். பிறகு மீண்டும் சலமா (ரலி) அவர்கள் கேட்ட போதும் நபி (ஸல்) அவரை விட்டும் தம் முகத்தை திருப்பிக் கொண்டார்கள். இரண்டாவது தடவையோ அல்லது மூன்றாவது தடவையோ அவ்வாறு சலமா (ரலி) கேட்ட போது, அவர்களை அல் அஷ் அஸ் பின் கைஸ் (ரலி) இழுத்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ” நீங்கள் உங்கள் தலைமையின் கட்டளையை செவியுற்று அதற்கு கீழ்படியுங்கள்;

ஏனெனில், அவர்கள் மீது சுமத்தப்பட்டது அவர்களைச் சாரும்!… உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சாரும்! ” என்று கூறினார்கள். முஸ்லிம்.3762.

2.)” தம் ஆட்சித்தலைவரிடமிருந்து ( குறை ஏதேனும் கண்டு அதை) எதையேனும் வெறுப்பவர்; பொறுமையாக இருக்கட்டும்! ஏனெனில், ஆட்சியாளருக்கு கட்டுப்படாமல் அவரிடமிருந்து ஒரு சாண் அளவு வெளியேறி, அதே நிலையில் இறந்து போகிறாரோ, அவர் அறியாமை கால மரணத்தையே எய்துவார்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி.7053.

மேற்கண்ட ஹதீஸிற்கு விளக்கம் கொடுத்த இமாம் இப்ன் ஹஜர் (ரஹ்) அவர்கள்,

ஒரு சாண் அளவு ஆட்சியரை விட்டு விலகுதல் என்பதன் பொருள்… ஆட்சியாளரிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறிப்பது போன்றது.இப்படி ஒரு சாண் அளவு வெளியேறுவதன் மூலம் கலகம், கிளர்ச்சி, அடி தடி போன்ற இரத்தம் சிந்துதல் தான் ஏற்படும்” என்கிறார்கள்.
— பத் ஹுல் பாரி.13/7.

இதையே இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

” ஆட்சியாளர்களுக்கு எதிராக சண்டையிடுதலும், எதிர்த்து நிற்பதும், குடி மக்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. எவரேனும் இவ்வாறு போராட்டம்,கலகம் செய்வது என்பது மார்க்கத்தின் அடிப்படையில் ஒரு பித் அத் ஆகும். நபி (ஸல்) அவர்கள் காட்டிய நேரான வழிமுறையில் இதற்கு இடம் இல்லை.” என்கிறார்கள்.

— உஸுலுல் சுன்னா, ஸர்ஹு உஸுலில் திகாது அல்- லாலிக்கீ- 1/161.

3.) ” இன்பத்திலும் துன்பத்திலும்; விருப்பிலும் வெறுப்பிலும் எங்களை விட பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போதும்; தலைமையின் கட்டளையை செவியுற்று, கீழ்ப்படிந்து நடப்போம் என்றும், அதிகாரத்திலிருப்போருடன்.. அவர்களுடைய அதிகாரம் தொடர்பாக சண்டையிட மாட்டோம் என்றும் நபி (ஸல்) அவர்களுடன் உறுதி மொழி கொடுத்தோம்.என்று உபாதா பின் ஸாமித் ( ரலி) அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம்.3754.

4.)” நீங்கள் வெறுக்கின்ற நிகழ்வை ஆட்சியாளர்களிடம் கண்டாலும் , ஆட்சியாளர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்து விடுங்கள்; உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள்! ” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம். 3758.

கடந்த காலங்களில் ஜன நாயகம், சோசலிசத்தின் பெயரால் துவங்கிய ஏராளமான கட்சி, இயக்கங்கள்… உதாரணமாக ” இக்வானுல் முஸ்லிமூன், ஜமாத்தே இஸ்லாமி போன்ற இயக்கங்களும் இதன் தலைவர்களான ஷேக் ஹஸனுல் பன்னா, செய்யித் குதூப், அல் மெளதூதி போன்றவர்களின் மார்க்க விளக்கங்களால் கவரப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் எகிப்து, சிரியா,பாலஸ்தீன்,போன்ற நாடுகளில்… அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக ஜன நாயக போராட்டம், ஊர்வலம், பந்த், போன்ற கிளர்ச்சி கலகத்தின் காரணமாக நாடெங்கும் ரத்த ஆறு ஓடியதுதான் மிச்சம். ஆட்சியாளர்களிடம் அடி உதை,சித்ரவதை, சிறைச்சாலை என்று ஆயிரக்கணக்காணோர் அழிந்ததுதான் கண்ட பலன்.இவர்கள் இஸ்லாமிய வழி முறையை கையில் எடுக்காமல் ஜன நாயகத்தை கையில் எடுத்து முஸ்லிம் சமுதாயத்தை நாசமாக்கியதுதான் மிச்சம்.

அல்லாஹ்வே ஆட்சியாளர்களை தேர்வு செய்து… அவர்களுக்கு ஒரு காலத் தவணையையும் கொடுத்து விடுகிறான். அத்தவணை முடியும் வரை குடி மக்கள் பொறுமை காக்க வேண்டும்.நமக்கு பொறுமையில்லாமல் ஆட்சியாளர்களை எதிர்க்கும் போது… அதிகார பலத்தின் பூட்ஸ்கால்களில் மிதியுண்டு அழிவதுதான் நடக்கும்!

5.) “உங்களது ஆட்சியாளர்களுக்கு கீழ்ப்படியுங்கள், அது உங்களுக்கு கடினமாக இருந்தாலும் சரியே! நீங்கள் விரும்பினாலும் வெறுத்தாலும் சரியே!…
உங்களை விட பிறருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட போதிலும் சரியே! அல்லது உங்கள் சொத்தை பறிமுதல் செய்தாலும் … உங்கள் முதுகில் அடித்தாலும் ஆட்சியாளர்களுக்கு கட்டுப்பட வேண்டும்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
— இப்னு ஹிப்பான்.4062.

1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நபித்தோழர்கள்,தாபியீன்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்கள் சொல்படி பின்னர் வந்த ஆட்சியாளர்களுக்கு கீழ்படிந்து மேன்மையடைந்தார்கள்.

ஆனால் இன்று வாழும் மக்களால் நபி (ஸல்) அவர்களின் வழி காட்டுதல்களை பின்பற்ற மனமில்லாமல் ஜன நாயகம், சோசலிசம், சமதர்மம், என்று சொல்லி .. ஆட்சியாளர்களை எதிர்த்து போராட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் செய்து நபி (ஸல்) அவர்கள் சொன்ன பொறுமையை நம்மால் இன்று கடைப்பிடிக்க முடியவில்லை.

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள்….

” நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த அடிப்படை கொள்கையான அஹ்லுஸ் வல் சுன்னா வுக்கு எதிரான கொள்கையான ஆட்சியாளர்கள் உங்களை ஆட்சி செய்தாலும் …. நீங்கள் அவர்களுக்கு கட்டுப்பட்டு பொறுமையாக இருங்கள்.” என்று கூறுகிறார்கள்.
— மஜ்மூ அல் – பதாஃவா. 28/179.

இதன் அடிப்படை காரணம் என்னவென்றால்…

6.)” அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு பயந்து தஃவாவுடன் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களைப்பற்றி நாங்கள் உங்களிடம் கேட்கவில்லை. ஆனால் மோசமான இன்னின்ன செயல்கள் செய்யும் ஆட்சியாளர்கள் எங்களை ஆளும்போது, நாங்கள் என்ன செய்வது என்பது குறித்தே கேள்வி கேட்கிறோம்” என்று நபித் தோழர் அதி இப்ன் ஹாத்திம் (ரலி) அவர்கள் வினவிய போது,

“அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்! உங்களை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் சொல்லுக்கு கட்டுபடுங்கள்! கீழ்ப்படியுங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

— இப்ன் அபி ஆஸிம். 2/508, – தப்ரானீ.17/101 – ஸஹீஹ் அல்பானீ.

அக்கிரமக்கார… அநியாய ஆட்சியாளர்கள் என்ற காரணத்தை காட்டி ஆள்பவர்களை எதிர்த்து கிளர்ச்சி,போராட்டம், ஊர்வலம்,பேரணி என்று கலகம் செய்வதை இஸ்லாம் அடியோடு மறுக்கிறது. இவை எல்லாம் இஸ்லாம் காட்டித்தராத பித் அத் ஆன செயல்கள்.இந்தியாவில் நம்மை ஆளும் இந்துத்வா பாஜக ஆட்சிக்கு எதிராக ஜனநாயக வழியில் போராடுவதும் இஸ்லாத்தில் பார்வையில் ஒரு பித் அத்தே! இதன் இறுதிக்கூலி நரகமே!

Leave a Reply