
குர்ஆனின் கட்டளையும்… நவீன அறிவியலின் உண்மையும்:- இரண்டு ஆண்டு தாய்பாலின் முக்கியத்துவம்!
முன்னுரை!
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலகளவில் உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. 1990 ஆம் ஆண்டு “இன்னோசென்டி பிரகடனத்தின்” நினைவாக இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டின் கருப்பொருள்..
தாய்ப்பாலூட்டலை ஆதரித்தல், வாழ்க்கையின் தொடக்கப் புள்ளியைப் பாதுகாத்தல்!
என்பதாகும்.
இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே தாய்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. அல்குர்ஆனும் நவீன அறிவியலும் இவ்விஷயத்தில் ஒரே கருத்தை முன்வைப்பது கவனத்திற்குரியதாகும்.
1. அல்குர்ஆன் வழிகாட்டும் தாய்பால் காலம்!
அல்லாஹ் அல்குர்ஆனில் தாய்பாலூட்டும் காலம் குறித்து தெளிவாகக் குறிப்பிடுகின்றான்
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு
ஆண்டுகள் பாலுட்ட
வேண்டும்!
— அல் குர்ஆன்.2:233.
மேலும்,
“*அவனை சுமப்பதும்,பால் மறக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும்!“
-அல் குர்ஆன்.46:15.
இவ்வசனங்களின் அடிப்படையில், கர்ப்ப காலம் 9 மாதங்கள் எனில், பாலூட்டும் காலம் குறைந்தபட்சம் 21 மாதங்கள் என்றும், முழுமையான காலம் 24 மாதங்கள் என்றும் இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இது ஒரு சட்டமாக மட்டுமல்லாமல், குழந்தையின் உடல் மற்றும் உளவியல் வளர்ச்சிக்கான அல்லாஹ்வின் அருளாகும்.
2. நவீன அறிவியல் முன்வைக்கும் ஆதாரங்கள்!
உலக சுகாதார நிறுவனமான WHO மற்றும் UNICEF ஆகியவை “முதல் 6 மாதங்கள் தனிப்பட்ட தாய்பால், பின்னர் திட உணவுடன் சேர்த்து “இரண்டு ஆண்டுகள் வரை தாய்பால்” என பரிந்துரைக்கின்றன.
இது குர்ஆனின் கட்டளையுடன் முற்றிலும் ஒத்துப்போகிறது.
அ. நோய் எதிர்ப்பு சக்தி!
தாய்ப்பாலில் Immunoglobulin A, Lactoferrin போன்ற எதிர்ப்புப் பொருட்கள் உள்ளன. இவை குழந்தையை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. குழந்தை நோய்வாய்ப்படும்போது, தாயின் உடல் அக்கிருமிக்கு எதிரான எதிர்புப் பொருளை தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு அனுப்புகிறது. இந்த தன்மை இரண்டு வயது வரை தொடர்வதால், குழந்தையின் நோய் எதிர்பு மண்டலம் முழுமையாக வளர இது உதவுகிறது.
ஆ. மூளை மற்றும் உளவியல் வளர்ச்சி!
தாய்பாலில் உள்ள DHA மற்றும் Omega-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் வளர்சிக்கு இன்றியமையாதவை. முதல் இரண்டு ஆண்டுகளில் மனித மூளை 80% வளர்ச்சியடைகிறது.
ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வின்படி, தாய்ப்பால் அருந்திய குழந்தைகளின் அறிவுத்திறன் 3 முதல் 5 புள்ளிகள் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், தாய்ப்பாலூட்டும்போது சுரக்கும் Oxytocin ஹார்மோன் தாய்கும் சேய்கும் இடையே உறுதியான பிணைப்பை ஏற்படுத்துகிறது.
இ. செரிமான மண்டலம் மற்றும் நீண்டகால ஆரோக்கியம்!
தாய்பாலில் உள்ள Human Milk Oligosaccharides குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்சிக்கு உதவுகின்றன. இதனால் அலர்ஜி, ஆஸ்துமா, வகை 2 சர்கரை நோய் போன்றவை வரும் அபாயம் குறைகிறது.
ஈ. தாயின் ஆரோக்கியம்!
இரண்டு ஆண்டுகள் தாய்பாலூட்டுவது தாய்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்பப்பை புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.
மேலும், பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன அழுத்தத்தையும் இது குறைக்கிறது.
3. “இரண்டு ஆண்டு” என்ற காலத்தின் அறிவியல் அடிப்படை!
குழந்தையின் வளர்ச்சி நிலைகளை ஆராயும்போது இரண்டு ஆண்டு காலத்தின் முக்கியத்துவம் புலனாகிறது.
முதல் 6 மாதங்கள் முழு ஊட்டமாகவும், 6 முதல் 12 மாதங்கள் நோய் எதிர்பு ஆதரவாகவும், 1 முதல் 2 வயது வரை மூளை மற்றும் உணர்சி வளர்சிக்கான ஆதரவாகவும் தாய்ப்பால் செயல்படுகிறது.
இரண்டு வயதிற்கு பிறகு குழந்தை திட உணவிற்கு முழுமையாக பழகிவிடுவதால், அல்லாஹ் இந்த காலத்தை வரையறுத்துள்ளான்.
4. சமகால சமூகத்திற்கான செய்தி!
தாய்பாலூட்டுவது ஒரு தாயின் கடமை மட்டுமல்ல. அது ஒரு சமூகப் பொறுப்பாகும்.
அல்குர்ஆன் 2:233 ஆம் வசனத்தில், தாய்க்கான உணவு மற்றும் உடையை முறையாக வழங்குவது தந்தையின் பொறுப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே குடும்பமும் சமூகமும் தாய்மார்களுக்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும். தாய்பாலுக்கு மாற்றாக செயற்கை பால் பவுடர்களை ஊக்குவிப்பது இயற்கைக்கு எதிரானதாகும்.
முடிவுரை!
1400 ஆண்டுகளுக்கு முன் அருளப்பட்ட அல்குர்ஆன், எந்தவித அறிவியல் கருவிகளும் இல்லாத காலத்தில்..
“இரண்டு ஆண்டுகள் தாய்ப்பாலூட்டுங்கள்” என கட்டளையிட்டது. இன்று நவீன மருத்துவ அறிவியலும் அதே கருத்தை வலியுறுத்துகிறது. இது அல்குர்ஆனின் அற்புதங்களில் ஒன்றாகும்.
எனவே, உலக தாய்பால் தினத்தில் நாம் அனைவரும் தாய்ப்பாலின் அவசியத்தை உணர்ந்து, தாய்மார்களுக்கு தேவையான ஊக்கத்தையும் ஆதரவையும் வழங்க உறுதியேற்போம்!
“அல்லாஹ் உங்களுக்கு சிரமத்தை நாடவில்லை; எளிமையையே நாடுகிறான்!”
-அல் குர் ஆன். 2:185.