செல்லப்பிராணிகள் வளர்ப்பு குறித்து இஸ்லாம் சொல்வதென்ன?

எஸ்.ஹலரத் அலி
Mob:9965361068

இஸ்லாம் செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் பொதுவாகக் எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை. ஆனாலும், ஒவ்வொரு விலங்குக்கும் தனித்தனியான விதி முறைகள் உள்ளன. அதன்படி அவைகளை பராமரித்து வர வேண்டும்.

நாய்: விவசாயம், கால்நடை பாதுகாப்பு அல்லது வேட்டையாடுதல் ஆகிய தேவைகளுக்காக மட்டும் நாயை வளர்க்க அனுமதி உள்ளது. வேறு தேவையின்றி வீட்டு செல்லப்பிராணியாக நாயை வளர்ப்பது அனுமதிக்கப்படவில்லை. இதனால் நன்மைகளில் குறைவு ஏற்படும் என்று பல ஹதீஸ்கள் தெளிவாக தெரிவிக்கின்றன.

நாய் இருக்கும் வீடுகளுக்கு மலக்குமார்கள் வரமாட்டார்கள்.மேலும்.ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத் நன்மைகள் குறைக்கப்படும்.

— முஸ்லிம்.3202,3203.

பூனை, கிளி, பறவை, மீன்: இவை தொடர்பான தடைகள் இஸ்லாத்தில் இல்லை. அவற்றை துன்புறுத்தாமல், உணவு, நீர், …

செல்லப்பிராணிகள் வளர்ப்பதன் மூலம் சுவனமும்…நரகமும்..!

இஸ்லாத்தில் ஹலாலும் தெளிவானது,ஹராமும் தெளிவானது. இவ்வுலகில் அல்லாஹ் தடை செய்து ஹராமாக்கியவைகளை விரல் விட்டு எண்ணி விடக்கூடிய அளவில் வெகு சொற்பமான ஒன்று.

ஆனால் அல்லாஹ் நமக்கு ஹலால் ஆக்கியவைகள் எல்லாம் கடலளவு ,மலையளவு உள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.அந்த வகையில் செல்லப்பிராணிகளை மன மகிழ்வுக்காக வளர்ப்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை.

அனஸ் இப்ன் மாலிக் (ரலி) அவர்களின் சகோதரர் சிறுவன் அபூ நுமைர் பறவை ஒன்று வளர்த்ததை நபி (ஸல்) அங்கீகரித்துள்ளார்கள்.

. நபி (ஸல்) அவர்கள், “வளர்ப்பு பறவை இறந்து விட்டதைக் கண்டு,“ ஓ அபூ உமைர், அந்தச் சிறிய குருவிக்கு என்ன ஆயிற்று? ” என்று கேட்டார்கள்.

ஆதாரம்: சுனன் அபூ தாவூத். 4969.

இந்த ஹதீஸின் அடிப்படையில் பறவைகளை விலைக்கு வாங்கி குழந்தைகள் விளையாடுவதற்கும், அது பறந்து சென்று விடாமல் பிற விலங்கிடம் சிக்கி விடாமல் அப்பறவையை பாதுகாக்க வேண்டி…அதன் இறக்கையை வெட்டி விடுவதும்…கூண்டில் அடைத்து வைப்பதும் கூடும் என்று இமாம் இப்ன் ஹஜ்ர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் தமது நூலில் குறிப்பிடுகிறார்கள்.

— ஃபத் ஹுல் பாரி.10/548.

யாருக்கும் சொந்தமில்லாத பூனைகளை வளர்ப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று நாம் கூறலாம், ஒருவர் அவற்றுக்கு உணவளித்து… துன்புறுத்தக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பூனை வளர்க்கலாம். ஆனால் அவை ஏதேனும் தீங்கு விளைவிப்பதாக நிரூபிக்கப்பட்டால், அவை நோய்வாய்ப்பட்டிருந்தால் அல்லது அவை நோயைப் பரப்பக்கூடும் என்று ஒருவர் அஞ்சினால், நீங்கள் அவற்றை வளர்க்கக்கூடாது.

எனவே பூனை இருப்பதால் தீங்கு விளைவிக்கப்படுகிறது என்றால் அதை வளர்க்கக்கூடாது. இதேபோல், ஒரு பூனைக்கு உணவளிக்க முடியாத ஒருவர்.. பூமியில் அது திரிந்து உணவு தேடிக்கொள்வதை தடுக்கக்கூடாது. அதைப் கட்டிப்போட்டு பூட்டி வைக்கக்கூடாது

ஏனெனில் அல்-புகாரி (3223) மற்றும் முஸ்லிம் (1507) அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) ஆகியோரால் அறிவிக்கப்பட்ட ஹதீஸின்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு பெண் பூனையை அது இறக்கும் வரை பூட்டி வைத்திருந்ததற்காக தண்டிக்கப்பட்டார், அதன் காரணமாக அவள் நரகத்தில் நுழைந்தாள், ஏனெனில் அவள் அதைப் பூட்டி வைத்திருந்தபோது அதற்கு உணவளிக்கவில்லை அல்லது தண்ணீர் கொடுக்கவில்லை, பூமியில் அது தானே உணவு தேடுவதற்கு அதை விடவில்லை.”

பூனைகள் உணவு உண்பது அல்லது தண்ணீர் குடிப்பது தொடர்பாக, அது உணவையோ அல்லது தண்ணீரையோ நஜிஸ் (தூய்மையற்றது) ஆக்காது. ஏனெனில் சுனன் அபூ தாவூத் மற்றும் பிற ஹதீஸ்களில் விவரிக்கப்பட்டுள்ள செய்தி, ஒரு பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சிறிது ஹரீஸா (ஒரு வகையான உணவு) கொண்டு வந்த போது அவர்கள் தொழுது கொண்டிருந்ததால்… (ஆயிஷா) அதை கீழே வைக்குமாறு அவளிடம் சைகை செய்தார்கள். பின்னர் ஒரு பூனை வந்து அதில் சிறிது சாப்பிட்டது. ஆயிஷா (ரலி) தொழுது முடித்ததும், பூனை சாப்பிட்ட இடத்திலிருந்து சாப்பிட்டுவிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அவர்கள் (பூனைகள்) நஜிஸ்கள் அல்ல, மாறாக அவர்கள் உங்களில் சுற்றித் திரிபவர்களில் (அல்-தவ்வாஃபீனா ‘அலைக்கும்)’ என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பூனை குடித்த தண்ணீரைக் கொண்டு வுடூ’ செய்வதை நான் பார்த்தேன்.

கப்ஷாவைச் சேர்ந்த அபூ தாவூத் (68) இப்னு அபி குதாதாவை மணந்தவர் என்று அறிவிக்கும் மற்றொரு அறிவிப்பின்படி, அபூ குதாதா (ரலி) உள்ளே நுழைந்தார், அவர் வுடூ செய்ய சிறிது தண்ணீரை ஊற்றினார். ஒரு பூனை வந்து தண்ணீரைக் குடித்தது, அது குடிக்கும் வகையில் பாத்திரத்தை சாய்த்து….

கப்ஷா கூறினார்: “நான் அவரைப் பார்ப்பதை அவர் பார்த்தார், ‘என் சகோதரனின் மகளே, உங்களுக்கு இது விசித்திரமாகத் தோன்றுகிறதா?’ என்று கேட்டார். நான், ‘ஆம்’ என்றேன். அவர், ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அவர்கள் (பூனைகள்) நாஜிக்கள் அல்ல (தூய்மையானவை) மாறாக உங்களில் சுற்றித் திரிபவர்களில் (அல்-தவ்வாஃபீனா ‘அலைக்கும்)’ என்று கூறினார்கள்.” இந்த இரண்டு ஹதீஸ்களும் அல்-புகாரி, அல்-தாரகுத்னி மற்றும் பிறரால் சஹீஹ் என வகைப்படுத்தப்பட்டன.

இது இப்னு ஹஜரால் அல்-தல்கீஸில் கூறப்பட்டுள்ளது, 1/15.

“உங்களிடையே சுற்றித் திரிபவர்கள் (அல்-தவ்வாஃபீனா ‘அலைக்கும்)” என்பது அவர்கள் தங்கள் வீடுகளில் மக்களுடன் இருக்கும் வேலைக்காரர்களைப் போன்றவர்கள், அதாவது, பூனைகள் எப்போதும் மக்களுடன், அவர்களின் வீடுகளிலும், அவர்களின் பாத்திரங்கள் மற்றும் தளபாடங்கள் போன்றவற்றிலும் இருக்கும்.

எனவே ஒரு பூனை ஒரு பாத்திரத்தில் இருந்து குடித்தாலோ அல்லது உணவில் சிலவற்றைச் சாப்பிட்டாலோ, அது நஜீஸ் (அசுத்தம்) ஆகாது.அவர் விரும்பினால் (அவ்உணவை) சாப்பிடலாம் அல்லது (தண்ணீர்) குடிக்கலாம், ஏனெனில் அது தாஹிர் (தூய்மையானது),

அது தீங்கு விளைவிக்கும் என்பது தெளிவாகத் தெரியாவிட்டால். சாப்பிடுவது அல்லது குடிப்பது என்ற எண்ணத்தால் அவர் தயங்கினால், அவர் அதை விட்டுவிடலாம்.

நபித்தோழர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் பூனை வளர்த்தலை காரணம் காட்டி நாமும் வளர்க்க வேண்டும் என்பது மார்க்க கட்டாயம் அல்ல.செல்ல பிராணிகள் வளர்ப்பதற்கு இஸ்லாத்தில் தடையில்லை..ஆனால் வளர்த்துத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமும் அல்ல!

இப்படி தானாக திரியும் நாய்,பூனைகளை வளர்த்து அவைகளுக்கு மனிதர்கள் உணவு கொடுப்பதன் மூலம்…இயற்கையாக அப்பிராணிகளுக்கு அல்லாஹ் அளித்த வேட்டையாடும் தன்மையை மாற்றி விடுகிறார்கள்.

நாய், பூனைகள்..அவைகள் சுயமாக தம் உணவை தேடும் திறனை இழந்து விடுவதற்கு பிராணி வளர்ப்பாளர்களே காரணம் என்ற குற்றச் சாட்டும் சொல்லப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டு உண்மையானால்…இனி மேல் மனிதர்கள் யாருமே எந்த உயிர் பிராணிகளுக்கும் உணவு, நீர் கொடுக்கக்கூடாது என்று சொல்ல வேண்டி வரும். ஆனால் இஸ்லாத்தில் இது போன்ற சிந்தனைகளுக்கு இடமில்லை.

பூனை,பறவைகள்,மீன் வளர்ப்பு என்பதெல்லாம் அனுமதிக்கப்பட்டவையே!

ஆனால் இந்த பூனை,பறவை,மீன்கள் போன்ற உயிர்கள் அனைத்தும் வளர்ப்புப் பிராணி என்ற பெயரில் அமானிதமாக கொடுக்கப்படுகிறது.

சாதாரண சிறிய மீன் ஒன்று முறையான பராமரிப்பு இன்றி இறந்து விட்டாலும்..இந்த உயிருக்கும் நாம் நாளை பதில் சொல்ல நேரிடும்…என்ற அச்சத்துடனே மீன், பறவைகளை வளர்க்க வேண்டும்!

ஆனால் செல்லமாக நாய்களை வளர்க்க இஸ்லாம் தடை செய்துள்ளது.

வீடுகளில், வயல் தோட்டங்களில் மற்றும் கால் நடைகள் பாதுகாப்பிற்க்காக மட்டுமே நாயை வளர்க்க இஸ்லாம் அனுமதி கொடுக்கிறது.

எந்தக் காரணமும் இன்றி நாய்களை செல்லமாக வளர்ப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை!

நாய் இருக்கும் வீடுகளுக்குள் மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள்.வீட்டுக்கு வெளிப்புறம் காம்பவுண்டுக்குள் நாயை கட்டிப்போட்டு பாதுகாப்பாக வளர்ப்பதற்கு தடை இல்லை.” நாயை குளிப்பாட்டி நடு வீட்டுக்குள் விடுவதே!” தவறான ஒன்று.

குர் ஆன் 18:18 வசனம் கூறும் ( குகைவாசிகள் சரித்திரத்திலும் நாய் தன் முன்னங்காலை விரித்து வாசற்படியில் படுத்து பாதுகாப்பு கொடுப்பதைத்தான் அல்லாஹ் கூறுகிறான்.

ஆகவே இன்று எந்த முஸ்லிமாவது பாதுகாப்பு நோக்கமின்றி நாயை செல்லப்பிராணியாக வளர்த்து நடு வீட்டில் வைத்து கொஞ்சுபவர்கள் ….உஹது மலையளவு கொண்ட இரண்டு கீராத் நன்மைகளை தினசரி இழந்து வருகிறார்கள். மேலும்.அல்லாஹ்வின் அருளை கொண்டு வரும் மலக்குமார்களின் வருகையையும் தடை செய்கிறார்கள் என்பதே உண்மை!

மேலும் சிலர், தாங்கள் வளர்க்கும் பூனைகளுக்கு அதிக கவனம் செலுத்தி, அவற்றை அழகுபடுத்தி, அவற்றுக்காக அதிக பணம் செலவழித்து, பொது அறிவு இன்றியும், மார்க்கம் கட்டளையிடாததையெல்லாம் மார்க்கமாக்கி பூனையை கொஞ்சி மகிழ்வதும்…அதற்காக ஏராளமான பணத்தை வீண் விரையம் செய்வதையும் ஏற்க முடியாது என்பதை நாம் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான ஏழை முஸ்லிம்கள் இருக்கும்போது, ​​முஸ்லிம்களாகிய நாம் நமது நேரத்தையும் செல்வத்தையும் சிறப்பாகப் பயன்படுத்தி, பயனுள்ள மற்றும் நன்மை பயக்கும் செயல்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

செல்ல பிராணிகள் வளர்ப்பு என்ற பெயரில் வரம்பு மீறிச் செல்லுதலில் நமது செல்வத்தையும் நேரத்தையும் வீணாக்குவது கூடாது.

இது போன்ற மூடத்தனத்திலிருக்கும் சிலர், தங்கள் சொந்த மகன்கள் மற்றும் மகள்களுக்கு செலவிடுவதை விட, ஏழைகள் மற்றும் ஏழைகளுக்கு செலவிடுவதை விட, தங்கள் பூனைகள் மற்றும் நாய்களுக்கு அதிகமாக செலவிடுகிறார்கள்.

அவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை ஆடம்பரமான ஹோட்டல்களில் தங்க வைத்தும் கொண்டு வந்து, அவர்களுக்கு அதிக அளவு பணத்தை செலவிடுவது ஹராமான ஒன்று.நாளை நாம் செலவு செய்யும் ஒவ்வொரு காசுக்கும் பதில் சொல்ல வேண்டும்.”வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் தோழர்கள்” என்ற நபி மொழியை மனதில் கொண்டு அமல் செய்ய வேண்டும்.

அல்லாஹ் மனிதர்களுக்காகவே படைத்தளித்த எல்லா உயிர்களையும் ஆதரித்து,அரவணைத்து சுவனம் செல்லவே முயற்சி செய்ய வேண்டுமேயன்றி…செல்லப்பிராணி வளர்ப்பு என்ற பெயரில் உயிர் ஜீவன்களை வதைத்து கொல்வதன் மூலம் நரகம் சென்று விடக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *