விண்ணுக்குச் செல்லும் வீரர்களின் இதயம் சுருங்கும்! – குர்ஆன் கூறும் உண்மை!!
(In Space, Astronaut Hearts Work Less, Shrink, And Become More Spherical)
எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7. (Mob:9965361068).
அல்லாஹ் எவர்களுக்கு நேர்வழிகாட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகின்றான்.யாரை வழிகெடுக்க நாடுகின்றானோ அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவனின் நெஞ்சைப்போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனை ஏற்படுத்துகிறான். – அல்குர்ஆன். 6:125.
இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத மனிதர்களின் உள்ளமானது… எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாக, வானில் ஏறும் மனிதர்களின் உள்ளம் போன்று சுருங்கி இருக்கும் என்ற ஓர் அறிவியல் உண்மையை அல்லாஹ் கூறுகிறான். இந்த வசனம் இறங்கிய 1400 ஆண்டு காலகட்டத்தில்…மனிதன் வானில் ஏறுவதை கற்பனையிலும் கூட நினைத்திருக்க முடியாது. அதிக பட்சமாக…. உயரமான ஒரு மலையில் ஏறும் ஒரு மனிதனின் இதயம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சு விட சிரமப்பட்டு இதயம் சுருங்குவதையே இவ்வசனம் குறிப்பதாகவே கருதப்பட்டது.
ஆயினும் இன்றைய நவீன அறிவியல் உலகம்….ஏராளமான மனிதர்களைப் பூமிக்கு வெளியில் விண்வெளிக்கும், நிலவுக்கும் அனுப்பி சாதனை செய்து வருகிறது. இப்படி விண்ணைத் தாண்டி வானில் ஏறிய விண்வெளியாளர்களின் இதயமானது… வெற்றிடம், மற்றும் ஈர்ப்பு விசை அழுத்தமின்மை காரணமாக, நீள் வட்ட அமைப்பிலிருந்து சுருங்கி வட்டவடிவமாகிறது (Heart shrink like a spherical shape) என்ற உண்மை முன்பே வெளி வந்து விட்டது.
http://www.space.com/25452-zero-gravity-affects-astronauts-hearts.html.
பூமியில் இருக்கும்போது இதயம் நீள் வட்டத்திலும் (பச்சை) விண்வெளியில் இருக்கும்போது சுருங்கி உருண்டை வடிவத்திலும் (சிவப்பு) மாறுகிறது.
இது குறித்து விரிவான ஆய்வு முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. வானில் ஏறி விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களின் இதயம் மட்டும் சுருங்குவதில்லை.மாறாக, இதயத்தின் தசை செல்களிலும் ஏராளமான மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை சமிபத்திய (JOURNAL STEM CELL REPORTS) 7-நவம்பர்.2019. “ஜர்னல் ஸ்டெம்செல் ரிப்போர்ட்” ஆய்வு இதழ் விளக்கியுள்ளது. அமெரிக்கா ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்..
எந்த ஒரு இதய நோயும் இல்லாத, ஆரோக்கியமான, மூன்று நபர்களின் இதய ஸ்டெம்செல் ரத்த மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்தனர்.
அந்த ரத்த மாதிரியின் ஒரு பகுதியை பூமியில் வைத்தும் மறு பாதியை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு எடுத்துச் சென்று… பூமிக்கு மேலே மிதந்து வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ( ISS-International Space Station.) வைத்து சோதித்தனர்… புவி ஈர்ப்பு விசை இல்லா வெற்றிட சூழலில் (Microgravity) ஐந்தரை வாரங்கள் வைத்து ஆய்வு செய்தனர்.
.இந்தச் சோதனையில் புவி ஈர்ப்பு விசை இல்லா வெற்றிடச் சூழலில் இதய தசை செல்கள் செயல்பாட்டில் பெரிதும் மாறுதல் நிகழ்ந்தன. குறிப்பாக இதய செல்லில் 2635 ஜீன்களின் அமைப்பு மாற்றமடைந்தது.
இந்த ஐந்து வார சோதனை முடிவில் மீண்டும் பூமிக்கு திரும்பக் கொண்டு வரப்பட்ட இதய தசை செல்களின் மாறிய அமைப்பானது… பூமிக்கு வந்த பத்து நாட்களில் மீண்டும் அதன் பழைய அமைப்புக்கு சென்று விட்டது. வானில் செல்லும் விண்வெளி வீரர்களின் இதயமானது சுருங்குகிறது.. இதயத்தின் அமைப்பு சுருங்குவதன் காரணம்… அதன் தசை செல்களில் ஏற்படும் மாற்றம் என்பதை இன்றைய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இருபதாம் நூற்றாண்டு அறிவியல் உண்மைகளை ஏழாம் நூற்றாண்டில் எந்த மனிதராலும் சொல்ல முடியாது. அது படைத்த இறைவனுக்கு மட்டுமே அன்று தெரிந்த ரகசியம்.
https://www.newscientist.com/article/2222698-spaceflight-alters-heart-cells-but-they-quickly-recover-back-on-earth/
அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவனின் நெஞ்சைப்போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான். – அல்குர்ஆன்.6:125
வானில் ஏறி விண்வெளிக்குச் செல்லும் வீரர்களின் இதயத்தின் அமைப்பு சுருங்கியும்,அதன் உள் செயல்பாட்டில் பெறும் மாற்றம் ஏற்படுமென்ற உண்மையை…. அல்லாஹ் அன்றே அல்குர்ஆன் வசனம் மூலம் முன்னறிவித்து விட்டான். சிந்திக்கக்கூடிய மனிதர்களுக்கு இந்த ஒரு வசனமே போதுமானது… சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கு!
இந்த ஆய்வானது அறிவியல் உலகில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதுவரை வானில் ஏறிச்சென்ற மனிதன் சந்திரன் வரையே சென்றுள்ளான். அடுத்து அவனது பயணத் திட்டம் பல லட்சம் மைல்களை கடந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்வதாக உள்ளது. விண்ணை கடந்து செல்ல மனிதனுக்கு அறிவாற்றல் கொடுக்கப்பட்டாலும்… அவனது உடலானது அத்தகைய கடின சூழலுக்கு ஒத்துழைக்க வேண்டியது அதிமுக்கியமான ஒன்று.
மனு,ஜின் கூட்டத்தார்களே! வானங்கள்,பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெருவீர்களாயின் (அவ்வாறே) செல்லுங்கள். ஆனால் (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது, – அல் குர்ஆன்,55:33.
வானில் ஏறிச்செல்லும் ஆற்றல் அன்று குர்ஆன் இறக்கப்பட்ட போது மனிதனுக்கு கொடுக்கப்படவில்லை. ஆனால் இன்று அந்த அறிவியல் ஆற்றலை மனிதன் பெற்று விட்டான். அப்படி ஆற்றலைப் பெற்ற மனிதன்…வானில் உயரச் செல்லும்போது, அவனது உடலிலுறுப்புகளுள் இதயம் மாறுதல் அடையும் என்ற உண்மையையும் அல்லாஹ் அன்றே சொல்லி விட்டான். பூமியிலிருந்து 350 கி.மீ உயரத்தில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வைத்து ஆய்வு செய்யும் நிலையில் இதய அமைப்பு மாறி விடுகிறது.
இதையும் தாண்டி சந்திரனில் கால் வைத்த மனிதன்… இனி 55O லட்சம் கி.மீ பயணம் செய்து செய்வாய் கிரகத்தில் இறங்க (2030 ஆம் ஆண்டு) ஆயத்தமாகிவிட்டான். இந்த வெகு தூர ஆறு மாதப் பயண காலத்தில், அவனது இதயம் எந்த நிலையில் இருக்கும் என்று எவருக்கும் தெரியாது. மனிதன் வானில் உயரச் செல்லச் செல்ல அவனது இதயம் மாறுதல் அடையும். அந்த மாற்றத்திற்கு தகுந்தார்ப் போல் கூடுதல் தயாரிப்பு இன்றி வானத்தைக் கடக்க முடியாது என்பதை குர் ஆனும், ஹதீஸும் கூறுகிறது.
நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் இரவில் அல்லாஹ்வின் அழைப்பின்படி ஏழு வானத்தைக் கடந்து சென்றார்கள். இஸ்ரா என்னும் இப்பயணத்தில், நம் கற்பனைக்கும் எட்டாத கோடான கோடி மடங்கு மைல்களை கடந்து சென்றார்கள். இந்தப் பயணம் வெறும் கற்பனையிலோ, அல்லது கனவிலோ நடந்ததல்ல. தனது ஸ்தூல, நிஜ உடம்போடுதான் அங்கு சென்றார்கள். ஆயினும் இப்பாரிய தூரத்தை கடப்பதற்கு மனித இதயம் சக்தி பெற மாட்டாது என்பதற்காகவே…. நபி (ஸல்) அவர்களின் இதயம் மிஹ்ராஜ் எனும் விண்ணுலகப் பயணத்திற்காக விசேஷமாக தயார் செய்யப்பட்டது..
“ நான் இறையில்லம் கஅபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத்தட்டு ஒன்று என்னிடம் கொண்டுவரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறை எலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம் ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது.
மேலும் கோவேறு கழுதையை விட சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த நீளமான புராக் (மின்னல் வேக) வாகனம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம்….. (பிறகு) நாங்கள் ஏழாவது வானத்திற்கு சென்றோம்…. பிறகு (வான எல்லையிலுள்ள) இலந்தை மரமான “ஸித்ரத்துல் முன்தஹா” எனக்குக்காட்டப்பட்டது……. ( ஹதீஸ் சுருக்கம்) – புஹாரி.3207 முஸ்லிம். 260.
அல்லாஹ்வின் மார்க்கம் சொல்லும் அத்துணை செய்திகளும் அப்பட்டமான உண்மைகள். அதில் நம் அறிவுக்கு எட்டும் செய்தி்களுமிருக்கும் நம் அறிவுக்கு எட்டாத செய்திகளுமிருக்கும் இவை அனைத்தும் அல்லாஹ் ஒருவனிடமிருந்து வந்ததே என்று நம்புவதே ஈமான். என்னும் இறை விசுவாசம். “ஸித்ரதுல் முன்தஹா” என்னும் இலந்தை மரம் இருக்கும் ஏழாம் வானத்தில்….நபி (ஸல்) அவர்கள் தம் கண்ணால் கண்டதை அல்லாஹ் உண்மைப்படுத்துகின்றான்.
அந்த மரத்தை மூடியிருந்தவை அதனை முற்றிலும் மூடிக்கொண்டன. அதிலிருந்து அவர் பார்வை விலகவும் இல்லை; கடக்கவும் இல்லை. அவர் தன் இறைவனின் மிகப் பெறும் அத்தாட்சிகளை எல்லாம் மெய்யாகவே கண்டார். – அல்குர்ஆன். 53:16-18.
இரத்தம்,தசை,எலும்புகளால் ஆனா மனித உடல்… அந்த உடலுக்கு உயிரூட்டும் இதயமானது மாபெரும் தொலை தூர பயணத்தில் சுருங்கி மாற்றமடைய நேரிடும், ஆகவே அந்த பயணத்தை தாங்கக்கூடிய சக்தியை இதயத்திற்கு கொடுப்பதற்காகத்தான் நபி (ஸல்) அவர்களின் இதயம் பிளக்கப்பட்டு அதில் நுண்ணறிவாலும் (High Intelligence Technology) இறை நம்பிக்கையாலும் (Devine Inspirations) நிரப்பப்பட்டு தயார் செய்யப்பட்டது என்பதை மேற்கண்ட ஹதீஸின் மூலம் அறிய முடிகிறது. விண்வெளியில், இதயத்தில் ஏற்படும் மாற்றத்தை இன்றைய நவீன அறிவியலும் ஒப்புக் கொள்கிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணமும் அறிவியலின் அடிப்படையில் தான் நடந்தது. இதுவே அல்லாஹ்வின் சுன்னத்! என்றும் மாறாத ஒன்று! அல்ஹம்துலில்லாஹ்!.
உங்களுக்கு உள்ளாகவும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவைகளை நீங்கள் ஆழ்ந்து கவனித்து பார்க்க வேண்டாமா? – அல் குர்ஆன். 51:21
எச்சரிக்கை! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது.அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும்.அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர் குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்; நுமான் இப்னு பஷீர் (ரலி) நூல்: புஹாரி. 52.