ருகூவு செய்தல்,ஸஜ்தா செய்யும் முறை

in தொழுகை

 ருகூவு செய்தல்

   சூரத்துல் ஃபாத்திஹா மற்றும் வேறு வசனங்களை ஓதி முடித்தபின் ருகூவு செய்யவேண்டும்.

    ருகூவு செய்யும்போது கைகளை உயர்த்த வேண்டும்

   நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகைக்காக நிற்கும்போது தனது இரு தோள் புஜங்கள்வரை இரு கைகளையும் உயர்த்துவார்கள். ருகூவுக்கு தக்பீர் கூறும்போது இதே போல் செய்வார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, இப்னுமாஜ்ஜா

   நாங்கள் எங்கள் கைகளை (ருகூவின் போது) முழங்கால்கள் மீது வைக்குமாறு கட்டளையிடப்பட்டிருந்தோம். அறிவிப்பவர்: முஸ்அப் இப்னு ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

     நபி صلى الله عليه وسلم அவர்கள் ருகூவுச் செய்யும்போது தம் இரு கைகளால் தமது இரு முழங்கால்களையும் பிடித்துக் கொள்வது போல் வைத்தார்கள். தனது இரு கைகளையும் நாண் போல் தனது விலாப்புறங்களை விட்டு அகற்றி வைத்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: திர்மிதீ, அபூதாவூத்

     முதுகை சமமாக வைக்கவேண்டும்

    நபி صلى الله عليه وسلم அவர்கள் ருகூவுச் செய்யும்போது தம் தலையைத் தாழ்த்தவும் மாட்டார்கள்; உயர்த்தவும் மாட்டார்கள். மாறாக இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட விதமாக வைப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், இப்னுமாஜ்ஜா

    ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யவேண்டும்

    திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன் என்று நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறியபோது, இறைவனின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என நபித்தோழர்கள் கேட்டனர். “தனது ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அஹ்மத்

     தொழுகையில் கோழி கொத்துவதைப் போல் (அவசரமாகக்) குனிந்து நிமிர்வதை நபி صلى الله عليه وسلم அவர்கள் தடுத்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அஹ்மத்

     ருகூவின் போது ஓத வேண்டியவை

     நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது ருகூவில் “சுப்ஹான ரப்பியல் அழீம்” என்றும் தமது ஸஜ்தாவில் “ஸுப்ஹான ரப்பியல் அஃலா” என்றும் ஓதுவார்கள். அறிவிப்பவர்: ஹுதைபாرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், நஸயீ

سُبْحَانَ رَبَّيَ الْعَظِيمِ  “சுப்ஹான ரப்பியல் அழீம்”

    பொருள்: மகத்துவமிக்க என் இரட்சகன் பரிசுத்தமானவன்.

سُبْحاَنَكَ اَللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللَّهُمَّ اغْفِرْ لِيْ  

    ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்ம மஃக்பிர்லீ

    பொருள்: எங்கள் இரட்சகனே! உன்னுடைய புகழால் நீ தூய்மையானவன், இறைவா! எனக்கு மன்னிப்பருள்வாயாக.

سُبُّوحٌ قُدُّوْسٌ رَبُّ الْمَلاَءِكَةِ وَالرُّوْحِ

    “ஸுப்புஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ்” என்றும் ருகூவில் நபி صلى الله عليه وسلم ஓதுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், முஸ்லிம், அபூதாவூத், நஸயீ

    பொருள்: வானவர்களுக்கும், ஜிப்ரீலுக்கும் ஜிப்ரீலுக்கும் எஜமானனாகிய இறைவன் மிகத் தூய்மையானவன், பரிசுத்தமானவன்.

     ருகூவிலிருந்து எழுதல்

     ருகூவிலிருந்து எழும்போது தனது இரண்டு கைகளையும் உயர்த்தி “ஸமிஅல்லாஹூ லிமன் ஹமிதா” என்று கூற வேண்டும்

سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ

பொருள்: புகழ்பவரின் புகழ் வார்த்தைகளை இறைவன் கேட்கிறான்.

ருகூவிலிருந்து நிலைக்கு வந்ததும்

பின்னால் உள்ள எதையேனும் ஒன்றை கூறலாம்.

 رَبَّنَا لَكَ الْحَمْدُ  ரப்பனா லகல் ஹம்து

 رَبَّنَا وَ لَكَ الْحَمْدُ ரப்பனா வலகல் ஹம்து

اللَّهُمَّ رَبَّنَا وَ لَكَ الْحَمْدُ அல்லஹும்ம ரப்பனா வலகல் ஹம்து (புகாரி)

      பொருள்: இறைவா உனக்கே புகழனைத்தும்

اَللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْئَ السَّمَوَاتِ ومِلْئَ اَلآرْضِ ومِلْئَ  مَاشِئْتَ مِنْ شَيْئٍ بَعْدُ

        அல்லஹும்ம ரப்பனா லகல் ஹம்து மில் அஸ்ஸமாவாத்தி வமில் அல் அர்ழி, வமில்அ மாஷிஃத மின்ஷையின் பஃது (நூல்: முஸ்லிம்)

     பொருள்: இறைவா! பரக்கத்தும் தூய்மையும் நிறைந்த ஏராளமான புகழ் உனக்கேயுரியது.

 ஸஜ்தா செய்யும் முறை     

   ஸஜ்தாவுக்காக நபி صلى الله عليه وسلم குனியும்போது அல்லாஹ் அக்பர் என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

    “இரு பாதங்கள், இரு முட்டுக்கால்கள், இரு கைகள், நெற்றி ஆகிய ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு சஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறிய சமயம் நெற்றையைக் குறிப்பிடும்போது தமது கையை மூக்கின் மீது வைத்து சுட்டிக் காட்டினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ  புகாரி, முஸ்லிம்

     முதலாவதாக கையை தரையில் வைத்தல்

    “உங்களில் ஒருவர் சஜ்தாச் செய்யும்போது ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம். தனது முட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ

     கால் விரல்களை கிப்லாவை முன்னோக்கி வைத்தல்

         நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் ஸுஜுது செய்யும்போது தங்கள் கால் விரல்களை கிப்லாவை முன்னோக்கி வைப்பார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைது அஸ்ஸாயிதி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ

     முழங்கையை உயர்த்திக் கொள்ளல்

     “நீ ஸஜ்தா செய்யும்போது உனது உள்ளங்கைகளை (தரையில்) வைத்து முழங்கைகளை உயர்த்திக்கொள்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: பராஃபின் ஆஸிப் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்

      தொடையுடன் வயிற்றை சேர்க்கக் கூடாது

          நபி صلى الله عليه وسلم அவர்கள் சஜ்தா செய்யும்போது தமது தொடைகளின் மீது வயிற்றைத் தாங்கிக் கொள்ளாமலும் தமது இரு தொடைகளையும் விரித்தவர்களாகவும் சஜ்தா செய்வார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைது அஸ்ஸாயிதி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அஹ்மத்

       கைவிரல்களை நடுநிலையாக வைத்தல்

      கைவிரல்களை முழுமையாக விரிக்காமலும், முற்றிலுமாக மூடிவிடாமலும் இரண்டிற்கும் இடைப்பட்ட முறையில் வைக்கவேண்டும்

        ஸஜ்தாவில் நடுநிலையை மேற்கொள்ளுங்கள்! தமது கைகளை நாய் விரிப்பதுபோல் உங்களில் எவரும் விரிக்கலாகது என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா

      ருகூவையும், ஸஜ்தாவையும் பூரணமாகச் செய்தல்

    ருகூவையும், ஸஜ்தாவையும் பூரணமாகச் செய்யாத ஒருவரை நபி صلى الله عليه وسلم கண்டபோது, “முஸ்லிம்களே எவர் ருகூவிலும் ஸஜ்தாவிலும் தம் முதுகத் தண்டை நிலைப்படுத்தவில்லையோ அவருக்குத் தொழுகை இல்லை” என்றார்கள். அறிவிப்பவர்: அலீ இப்னு ஷைபான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், இப்னுமாஜ்ஜா

Comments on this entry are closed.

Previous post:

Next post: