ராசி பலனும், தாயத்தும்

Post image for ராசி பலனும், தாயத்தும்

in இணைவைத்தல்

கிரக பலன்களையும் ராசி பலன்களையும் நம்புவது
நட்சத்திரங்கள் மூலமாக ராசி பலன் பார்ப்பதும், கோள்கள், நட்சத்திரங்களால் உலகில் மாற்றங்கள் எற்படுகின்றன என நம்புவதும் குஃப்ராகும்.

ஜைது இப்னு காலித் அல்ஜுஹனி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு முறை நபி அவர்கள் ஹுதைபிய்யாவில் சுப்ஹு தொழுகையை தொழ வைத்தார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுகை முடிந்தவுடன் மக்களை முன்னோக்கி “உங்களது இறைவன் என்ன கூறினான் என்பதை அறிவீர்களா?’ என்று வினவினார்கள்.

“அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்’ என நபித்தோழர்கள் கூறினார்கள். அப்போது நபி அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான் “எனது அடியார்களில் என்னை விசுவாசித்தவரும் என்னை மறுத்தவரும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் கிருபையாலும் அவனது அருளாலும் நமக்கு மழை பொழிந்தது என்று கூறியவர் என்னை விசுவாசித்து கிரகங்களை மறுத்தவராவார். இன்ன கிரகத்தின் காரணமாக மழை பொழிந்தது என்று கூறுபவர் என்னை நிராகரித்து கிரகத்தை விசுவாசித்தவராவார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

நாளிதழ், வார இதழ், மாத இதழ்களில் வெளியிடப்படும் நட்சத்திர ராசி பலன்களை நம்புவது ஷிர்க்காகும். அதை படிப்பதும் பெரும் குற்றமாகும். காரணம், அது ஷிர்க்கிற்கு வழிவகுத்து விடும்.

அல்லாஹ் அனுமதிக்காதவைகளிலிருந்து பயன்களைத் தேடுவது
சிலர் தாயத்துகள், கயிறுகள், வளையங்கள் போன்றவற்றை அணிந்து கொள்கிறார்கள் அல்லது தங்களது பிள்ளைகளுக்கு அணிவிக்கிறார்கள். சிலர் தங்களது கை, கழுத்து, இடுப்பில் அவைகளை கட்டிக் கொள்கிறார்கள். சிலர் சில கற்களை ராசிக்கல் என்று கூறி அதை மோதிரங்களில் பதித்து அணிகிறார்கள். இவ்வகையான அனைத்து செயல்களும் இறை நம்பிக்கைக்கு எதிரானதாகும். இவை மென்மேலும் ஈமானில் பலவீனத்தை எற்படுத்துகின்றன. இவைகளின் மூலம் நிவாரணம் தேடுவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.

பெரும்பாலான தாயத்துகளில் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் வாசகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அல்லது புரிந்துகொள்ள முடியாத சில படங்களும், எழுத்துக்களும், கட்டங்களும் காணப்படுகின்றன. தாயத்து எழுதுபவர்களில் சிலர் குர்ஆன் வசனங்களையும் இணை கற்பிக்கும் வாசகங்களையும் இணைத்து எழுதுகிறார்கள். சிலர் திருக்குர்அன் வசனங்களை நஜீஸ்(அசுத்தங்)களைக் கொண்டோ அல்லது மாதவிடாய் உதிரத்தைக் கொண்டோ எழுதுகிறார்கள். இம்மாதிரியானவைகளை அணிந்து கொள்வதோ, எங்கேனும் தொங்க விடுவதோ தடுக்கப்பட்ட பெருங்குற்றமாகும்.

நபி அவர்கள் கூறினார்கள்: “தாயத்தைத் தொங்க விட்டவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிட்டான். ” (முஸ்னத் அஹமத்)

இக்காரியங்களைச் செய்பவன், இவைகள் தானாகவே நன்மை தீமை செய்யும் ஆற்றல் பெற்றவை என நம்புபவன் பெரிய “ஷிர்க்’கைச் செய்தவனாவான். அனைத்து வகை ஷிர்க்கும் பெரும் பாவத்தைவிட மிகக் கொடியதாகும். அலட்சியமாக கருதப்படும் இந்த ஆபத்தான குற்றங்களிலிருந்து முஸ்லிம்கள் விடுபட வேண்டும்.

Comments on this entry are closed.

Previous post:

Next post: