மெல்லக் கொல்லும் ரத்த மிகு அழுத்த நோய்

in பொதுவானவை

பி.பி.(Blood pressure- BP) என்ற வார்த்தையைக் கேட்டாலே நமக்கெல்லாம் பி.பி. ஏறுகிறது. அந்த அளவுக்கு நம்மை அச்சுறுத்துகிற பிரச்சனையாக உயர் ரத்த அழுத்தம் இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இளம் வயதினர்கூட இந்தப் பிரச்சனையால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக நம் நாட்டில் ரத்த மிகு அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. நம் நாட்டில் மட்டும் சுமார் ஐந்து கோடி பேர் ரத்த மிகு அழுத்தநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிப் பேருக்கு தங்களுககு ரத்தமிகு அழுத்த நோய் உள்ளது என்ற உண்மை தெரியாது என்பதுதான் மிகப்பெரிய சோகம்.
 

உண்மையில் ரத்த அழுத்தம் என்றால் என்ன?
இதயம் ஒரு வலுவான விசைக்கருவி என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதயம் ஒவ்வொரு முறையும் சுருங்கி விரிந்து ரத்தத்தை உடலின் எல்லா பாகங்களுக்கும் அனுப்புகிறது. இவ்வாறு இதயம் இயங்கும்போது குழாய்களில் உள்ள ரத்தம் அவற்றின் உள்பகுதியில் ஒருவகையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதைத்தான் ரத்த அழுத்தம் என்கிறோம். ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மனிதனின் ரத்த அழுத்தம் 120/80 னீனீபிரீ என்ற அளவில் இருப்பது இயல்பானது.

அது என்ன 120/80 mmHg. இதன் பின்னணியில் உள்ள அர்த்தம் என்ன?
இதயம் ஒவ்வொரு முறையும் சுருங்கி விரியும்போது ரத்தக்குழாய்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த அழுத்தமானது இரண்டு வகைப்படும். அதாவது இதயம் சுருங்கும் போது ஒருவகையான அழுத்தத்தையும் விரியும் போது வகையான அழுத்தத்தையும் ரத்தக் குழாய்களில் ஏற்படுத்துகிறது.

இதயம் சுருங்கும்போது அழுத்தத்தை சுருங்கழுத்தம் (Systolic Pressure) என்றும், இதயம் விரிவடையும்போது ஏற்படும் அழுத்தத்தை விரிவழுத்தம் (Diastalic Pressure) என்றும் இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளனர். 120/80 என்பதில், 120 என்ற அளவு சுருங்கழுத்தத்தையும், 80 என்ற அளவு விரிவழுத்தத்தையும் குறிக்கிறது. ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவுக்கு மேல் இருக்கும் நிலையைத்தான் ரத்த மிகு அழுத்த நிலை (Hypertension) என்று சொல்கிறார்கள்.

மருத்துவத் துறை நன்கு வளர்ச்சி பெற்றாலும் ரத்த மிகு அழுத்த நோய் ஏன் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு நம்மால் முழுமையான விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மொத்தம் உள்ள நோயாளிகளில் 95 சதவீதத்தினருக்கு ரத்தவமிகு அழுத்த நோய்க்கான அடிப்படைக் காரணங்களைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. காரணங்கள் கண்டறிய இயலாத ரத்த மிகு அழுத்த நோயை முதல்தர ரத்த மிகு அழுத்த நோய் என்றும்  காரணமறியா ரத்தமிகு அழுத்த நோய் (Idiopathic Hypertention) என்றும் குறிப்பிடுவார்கள். ரத்த மிகு அழுத்த நோய்க்கு ஆளானவர்களில் 5 சதவீதம் பேருக்கு நோய்க்கான அடிப்படைக் காரணங்களை ஓரளவு கண்டுபிடிக்க முடியும். எனவேதான் இந்த வகையான ரத்த மிகு அழுத்த நோயை இரண்டாம் நிலை ரத்த மிகு அழுத்த நோய் என்று குறிப்பிடுவார்கள். இந்த பிரச்சனையானது சிறுநீரக நோய்களின் காரணமாகவும், உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகள் தொடர்புடைய (ENDOCRINE DISEASES) நோய்களின் காரணமாகவும், சிலவகையான மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்வதாலும் ஏற்படக்கூடும்.

ரத்தமிகு அழுத்த நோயில் உள்ள முக்கியமான சிக்கல் என்னவென்றால் அதன் அறிகுறிகள் அவ்வளவாக வெளியில் தெரியாது. மற்ற நோய்களைப் போல் இந்தப் பிரச்சனைக்கு சிறப்பான கண்டுபிடிக்கும் தன்மையுள்ள அறிகுறிகள் கிடையாது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நீண்ட நாட்கள்வரை நோயின் தன்மையை அறியாமல் சாதாரணமாக இருப்பார்கள். எனவேதான் இதை அமைதியான உயிர்க்கொல்லி நோய் (Silent Killer) என்றும் குறிப்பிடுகிறார்கள்.

பெரும்பாலும் இந்த நோயானது ஏதாவது மருத்துவப் பிரிசோதனையின்போதோ அல்லது வேலைக்கு ஆள் தேர்வு செய்யும்போது நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகளின் போதோதான் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்படுகிறது. இருந்தாலும் சில சமயங்களில் தலைவலி, படபடப்பு, நெற்றிப்பொட்டு, எலும்புப் பகுதியில் உள்ள தமனகள் துடித்தல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். ஆனால் இந்த அறிகுறிகளைக் கொண்டு ரத்தமிகு அழுத்த நிலையை உறுதிசெய்ய முடியாது.

சரி, இந்த நோய் இருக்கிறது என்பதை எப்படி உறுதி செய்வது?
ரத்த மிகு அழுத்த நிலையைக் கண்டுபிடிக்க மிகச்சிறந்த முறை, ரத்த அழுத்தக் கணக்கீடு கருவியைப் பயன்படுத்தி நேரிடையாக ரத்தத்தின் அழுத்தத்தை அளவிடுவதுதான். இது மிகவும் எளிமையான, சிறந்த,நம்பகமான முறையாகும். இந்த முறையால் ரத்தமிகு அழுத்த நோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து தக்க மருத்துவச் சிகிச்சைகளின் மூலமாகக் கட்டுப்படுத்தாவிட்டால் இதயத்தில் மட்டுமின்றி உடலில் உள்ள முக்கியதான உறுப்புகளிலும் பலவகையான சிக்கல்கள் உருவாகக்கூடும். ரத்தமிகு அழுத்தத்தின் காரணமாக இதயத் தமனிகள் தடித்துச் சுருங்குவதால் இதய வலி ஏற்படும். மேலும் இதயத் தசைகள் தங்களுடைய இயற்கையான வலுவை இழப்பதால் உடலுக்குத் தேவையான ரத்தத்தை இதயம் செலுத்த முடியாத நிலையில் இதயச் செயலின்மை நிலை ஏற்படுகிறது.

மேலும் தக்க மருத்துவ முறைகளின் மூலமாக உரிய நேரத்தில் ரத்தமிகு அழுத்த நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் மாரடைப்பு ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது. இன்னொரு கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், ரத்த மிகு அழுத்தத்தை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. தக்க மருந்துகளைச் சாப்பிடுதல், உப்பைக் குறைத்துக் கொள்ளுதல், தக்க உடற்பயிற்சிகளைச் செய்தல், கொழுப்பு நிறைந்த உணவு வகைகளைத் தினசரி உணவில் கட்டுப்படுத்துதல், அடிக்கடி ரத்த அழுத்த அளவைப் பரிசோதித்தல் ஆகிய முயற்சிகளின் மூலமாக ரத்த மிகுஅழுத்த நோய் உடலில் எந்த வகையான சிக்கல்களையும் ஏற்படுத்தாதவாறு, நோயின் தன்மையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

ஆயுள் முழுவதும் மேற்கூறிய ஆலோசனைகளைக் கடைப்பித்து இந்த நோயை நன்கு கட்டுபபாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.
ரத்தமிகு அழுத்த நோய்க்கு ஆளான நோயாளிகள் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளை செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என இருவகைகளாகப் பிரிக்கலாம்.

ரத்த மிகு அழுத்த நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்துகளைத் தவறாமல் வேளா வேளைக்குச் சாப்பிட வேண்டும்.
அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உப்பில் அளவை வெகுவாகக் குறைத்துவிடுங்கள்.
உங்கள் உடலின் எடை அதிகமாக இருந்தால் உடலின் எடையைக் குறையுங்கள். உணவில் கட்டுப்பாட்டாக இருங்கள்.
உங்கள் ரத்தத்தில் உள்ள கொரஸ்ட்ராலின் அளவானது ஆரோக்கியமான அளவுக்கு மேல் அதிகமாக இருந்தால் அதைக் குறையுங்கள்.
உங்கள் உடலின் ஆற்றல், வயது ஆகியவற்றுக்கு ஏற்ற உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அன்றாடம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சிக்காக ஒதுக்குங்கள்.
ஏற்கெனவே நீங்கள் நீரழிவு நோய்க்கு (Diabetes) ஆளாகியிருந்தால் தக்க மருத்துவ முறைகள் உணவுக் வட்டுப்பாட்டின் மூலமாக நீரழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

அன்றாட உணவில் பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் கலந்த உணவு வகைகளைப் போதுமான அளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.
ரத்த மிகு அழுத்த நோய்க்காக மருந்துகள், மாத்திரைகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும்போது அவற்றின் அளவு, செயல்திறன் போன்ற விவரங்களை மிகவும் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

 

ரத்த மிகுஅழுத்த நோயாளிகள் செய்யக்கூடாதவை
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரை மருந்துகளை நீங்களாகவே திடீரென நிறுத்துதல்.
அப்பளம், சிப்ஸ் வகைகள், டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பதப்படுத்திய உணவு வகைகளை அதிக அளவு சாப்பிடுதல்.
அளவுக்கு அதிகமாகப் புகைப்பிடித்தல்,
கொழுப்புச் சத்து மிகுந்த உணவுப் பொருள்களான இறைச்சி, முட்டை, எண்ணெய், நெய், வனஸ்பதி போன்றவற்றை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுதல்.
அளவுக்கு அதிகமாக மன உளைச்சல் அல்லது மன இறுக்கத்துக்கு ஆளாதல்.

தினகரன்

{ 1 comment }

shanthan October 18, 2012 at 8:26 pm

THANKS writing this message.

LOVE U

Comments on this entry are closed.

Previous post:

Next post: