மென்மையான முஸ்லிம்

in நற்குணம்

உண்மை முஸ்லிம், மனிதர்களிடம் மென்மையாக, நிதானமாக, நளினமாக நடந்து கொள்வார். அவரது மென்மை நேசிக்கப்படும்; அவரது நளினம் போற்றப்படும்; அவரது நிதானம் புகழப்படும். ஏனெனில், இவை புகழத்தக்க நற்பண்புகளாகும். அதன்மூலம் மனிதர்களை நெருங்கி அவர்களது நேசத்திற்குரியவராகத் திகழ முடியும். அல்லாஹ் தனது அடியார்களிடம் அப்பண்புகளை விரும்புகிறான்.

    நன்மையும் தீமையும் சமமாகி விடாது. ஆதலால் தீமையை நீர் நன்மையைக்கொண்டே தடுத்துக்கொள்ளும். அவ்வாறாயின் உம்முடைய கொடிய விரோதியை அதே சமயத்தில் உம்முடைய மெய்யான, மிக்க நெருங்கிய சிநேகிதனைப் போல் காண்பீர். பொறுமையுடையோர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி பெரும்பாக்கியம் உடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். (அல்குர்அன் 41:34,35)

    மென்மையை வலியுறுத்தும் சான்றுகள், முஸ்லிமின் சமுதாய வாழ்வில் பிரதிபலிக்க வேண்டிய உயரிய பண்பு என்பதை உறுதிப் படுத்துகிறது. நளினம் என்பது அல்லாஹ்வின் உயரிய பண்புகளில் ஒன்றாகும். அது தனது அடியார்களிடம் பிரதிபலிப்பதை அல்லாஹ் விரும்புகிறான்.

    நபி(ஸல்) கூறினார்கள்: “அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையையே நேசிக்கிறான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மென்மையானவன். மென்மையையே நேசிக்கிறான். கடினத் தன்மைக்கும், வேறெந்த பண்புகளுக்கும் அளிக்காத நற்கூலியை மென்மைக்கு அளிக்கிறான். (ஸஹீஹ் முஸ்லிம்)

    நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மென்மை ஒரு விஷயத்திலிருந்தால் அதை அலங்கரிக்கவே செய்யும். மென்மை எந்த விஷயத்தில் அகற்றப்பட்டுள்ளதோ அதைக் கோரப்படுத்திவிடும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

    பிறமனிதர்களுடன் பழகும்போது மென்மையை கைக்கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் போதித்தார்கள். அடியார்களிடம் மென்மையை வெளிப்படுத்தும் கிருபையாளனான அல்லாஹ்வின் மார்க்கத்தின்பால் அழைக்கும் முஸ்லிம், மனிதர்களிடம் மலர்ந்த முகத்துடனும் மென்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் எவ்வளவுதான் கோபத்தைத் தூண்டுவதாக இருந்தாலும் மென்மையை விட்டுவிடக்கூடாது.

    அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு கிராமவாசி மஸ்ஜிது (நபவி)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார் அவரைத் தடுப்பதற்கு மக்கள் ஆவேசமடைந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “அவரை விட்டுவிடுங்கள்! அவரது சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். நீங்கள் இலகுபடுத்தவே அனுப்பப்பட்டீர்கள். சிரமப்படுத்த அனுப்பப்படவில்லை” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

    மென்மையும், நளினமும், பெருந்தன்மையும் மூடிக்கிடக்கும் இதயங்களைத் திறக்கும் திறவுகோல்களாகும். முரட்டுத்தனத்தாலும், சிரமப்படுத்துவதாலும், மிரட்டுவதாலும் எதனையும் சாதித்துவிட முடியாது.

    நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நற்செய்தி கூறுங்கள்! வெறுப்படைய செய்யாதீர்கள், எளிதாக நடந்து கொள்ளுங்கள், சிரமப்படுத்தாதீர்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    மென்மையையும், நளினத்தையும், முகமலர்ச்சியையும் மக்கள் நேசிப்பார்கள். கடுமையையும், முரட்டுத்தனத்தையும் மக்கள் வெறுப்பார்கள் என்பதுதான் நபி(ஸல்) அவர்களின் இக்கூற்றுக்குக் காரணமாகும்.

 …. கடுகடுப்பானவராகவும் கடின உள்ளம் கொண்டவராகவும் நீர் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடியிருப்பார்கள்… (அல்குர்அன் 3:159)
    இது ஒரு நிரந்தர உபதேசமாகும். உறுதி செய்யப்பட்ட நிலையான வழிமுறையாகும். நேர்வழியின்பால் மனிதர்களை அழைப்பதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொரு அழைப்பாளருக்குமான அவசியப் பண்பாகும். அப்பண்பின் மூலம் அவர்களது இதயங்களை வெல்ல முடியும். அம்மனிதர்கள் அழிச்சாட்டியம் செய்யும் வம்பர்களாக இருப்பினும் அவர்களிடமும் மென்மையான அணுகுமுறையையே மேற்கொள்ள வேண்டும்.

    இக்கருத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களையும் ஃபிர்அவ்னிடம் அனுப்பிவைத்தபோது கூறினான்.

    “நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் மிக்க வரம்பு கடந்துவிட்டான். நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் பயந்து நல்லுணர்ச்சி பெறலாம்” என்றும் கூறினோம். (அல்குர்அன் 20:43,44)

    இம்மார்க்கத்தின் வழிகாட்டுதலில் மென்மை என்பது நன்மையின் சங்கமமாகும். எவர் அதனை அருளப்பட்டாரோ அவர் நன்மை அனைத்தையும் அருளப்பட்டவராவார்; அதனை அருளப்பெறாதவர் நன்மையிலிருந்து அகற்றப்பட்டவராவார்.

    நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எவர் மென்மையை இழந்தாரோ அவர் நன்மையை இழந்தார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

    தனி மனிதர், குடும்பம், மற்றும் சமுதாயம் இந்த மென்மையை கடைபிடிக்கும்போது நன்மை அவர்களை சூழ்ந்து கொள்ளும். இத்தன்மை கொண்டவர்கள் மக்களில் தனித்தன்மை வாய்ந்தவர்களாக காட்சியளிப்பார்கள்.

    அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஆயிஷாவே! மென்மையாக நடந்துகொள். அல்லாஹ் ஒரு குடும்பத்தினருக்கு நன்மையை நாடினால் அவர்களுக்கு மென்மையின்பால் வழிகாட்டுகிறான்.” மற்றோர் அறிவிப்பில்: “ஒரு  குடும்பத்தினருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவர்களிடம் மென்மையைப் புகுத்துகிறான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

    ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: “ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் நன்மையை நாடினால் அவர்களிடம் மென்மையைப் புகுத்துகிறான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னதுல் பஸ்ஸார்)

    மனிதனிடம் அமைய வேண்டிய பண்புகளில் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் தன்மையுடைய பண்பைவிட வேறெந்த பண்பு மகத்தானது? நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நரகத்திற்கு ஹராமாக்கப்பட்ட ஒருவரைப் பற்றி அல்லது எவர் மீது நரகம் ஹராமாக்கப்படுமோ அவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மக்களை நெருங்கியிருக்கும் மென்மையான, இலகுவான, நளினமான ஒவ்வொருவர் மீதும் நரகம் ஹராமாக்கப்படும்.” (ஸுனனுத் திர்மிதி)

{ 1 comment… read it below or add one }

NISAR AHAMED April 3, 2018 at 1:29 pm

நல்ல பயனுள்ள குறிப்பாக இக்காலத்திற்கு பொருந்தக்கூடிய கட்டுரை.

ஒரு சின்ன வேண்டுகோள் ஹதீஸை குறிப்பிடும் போது அதன் எண்னையும் பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்.

Reply

Leave a Comment

Previous post:

Next post: