“ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக அமைய ஐந்து நிபந்தனைகள் உள்ளன. ஒரு ஹதீஸில் இந்த நிபந்தனைகள் முழுமையாக இடம் பெற்றுவிட்டால், அதன்பிறகு அந்த ஹதீஸ் ஒரு போதும் குர் ஆனுக்கு முரண்படாது.” என இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
“ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்” என்னும் வாதத்திற்கு பின்னால் தனி மனித சிந்தனைதான் உள்ளது. தவறான மனிதச் சிந்தனை ஒருபோதும் வஹியாக- இறைச்செய்தியாக முடியாது. மனிதச் சிந்தனையை வைத்து இறைச்செய்தியை மறுக்கக்கூடாது. மனிதனுக்கு கொடுக்கப்பட்டது சொற்ப ஞானம் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன்.17;85) ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்பவர்கள் நிச்சயமாக தவ்ஹீதாக இருக்கமுடியாது. வழிகேடர்களாகத்தான் இருக்க முடியும்.
ஆதாரப்பூர்வமான ஹதீஸை குர்ஆனுக்கு முரண் என்று மறுத்த வழிகேடர்களை வரலாறு சந்தித்தே வந்துள்ளது. இவர்கள் தங்கள் தவறான கொள்கையை நியாயப்படுத்த ஹதீஸை மறுப்பார்கள்.
உதாரணமாக,முதலில் தவ்ஹீது பேசிய கவாரிஜ்கள், அறிவு சொல்வதை மார்க்கமாக்கிய ஜஹ்மியாக்கள், முத்தஷீலாக்கள், காதியானிகள் போன்ற கொள்கை குழப்பவாதிகள், இப்படி முரண்பட்டே, முஸ்லிம்களிடமிருந்து பிரிந்து, தனிக்கூட்டம், தனிப்பள்ளி தனித்தலைமை கண்டனர்.
இவர்கள் தங்கள் வழிகேட்டுக் கொள்கைக்கு குர்ஆனையே ஆதாரமாக காட்டுவார்கள். அனைத்து ஹதீஸ்களையும் மறுக்கவேண்டும் என்பது இவர்கள் கொள்கை அல்ல. ஆனால் இவர்களின் கொள்கைக்கு எதிரான ஹதீஸ்களை மட்டும் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று மறுத்து ஒதுக்குவார்கள். நமது தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தின் தானைத்தலைவர் பீஜை அவர்களும் முத்தஷீலாக்கள் வழியில் நடை போடுகின்றார்.
இவரைப் பின்பற்றும் அண்ணனின் தம்பிகள்… அனைவருமே தங்கக் கம்பிகள். அண்ணன் எதை சொன்னாரோ அதை அப்படியே ஏற்பார்கள். அண்ணன் எதை மறுத்தாரோ அதை அப்படியே மறுப்பார்கள். அது ஆதாரபூர்வமான ஹதீஸாக இருந்தாலும் சரியே! இந்த வழிகேட்டில் இருப்பதற்கு அண்ணன் இட்ட பெயர் “கொள்கைப் பிடிப்பு.”
இந்தக் கொள்கைபிடிப்பு கோமாளிகளைப் பற்றிய தீர்ப்பை இமாம்கள் கூறுகிறார்கள்.
“நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை மறுகிறவன் அழிவின் விளிம்பில் இருக்கிறான்.” என்று இமாம் அஹமது இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். — நூல்: ஷரஹூ இக்திஹாதி அஹ்லிஸ் சுன்னா வல் ஜமாஆ.பக்.40.
“தர்க்கம்,மற்றும் சுய சிந்தனை ரீதியில் மார்க்கத்தை அணுகுபவர்களே, நபி வழியையும், நபி மொழிகளையும் குர்ஆனுக்கு முரண்படுகிறது எனக்கூறி மறுப்பார்கள்.”
என இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
கவாரிஜ்ஜுகள் தவறு செய்பவர்களை காபிர்கள் எனக் கூறுவார்கள்.
பாவமாக இல்லாத விஷயத்தை இவர்களாகப் பாவம் என்று எண்ணிக்கொள்வார்கள்.
மேலோட்டமாக குர் ஆனுக்கு முரண்படுவது போன்ற தெரியும் நபிமொழியை புறக்கணித்து குர் ஆனை பின்பற்றுவதாகக் கருதிக் கொள்வார்கள்.
இவர்கள் மறுக்கும் அந்த நபிமொழி முதவாத்திர் என்ற உயர்ந்த நிலையில் இருந்தாலும் சரியே! இதுவே கவாரிஜ்ஜுகள் செய்த பித் அத்தின் அடிப்படையாகும்.” என இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
நூல்; மஜ்மூஉல் பதாவா.பாகம்.3. பக்கம்.355
இன்று பித்னா கொள்கையை தமிழகத்தில் தவ்ஹீது லேபிளில் பரப்பி வரும் P.ஜைனுலாப்தீன் அவர்கள், தன் அறிவுக்கு ஒத்துவரவில்லை என்பதால், சூனியம், மற்றும் கண்ணேறு தொடர்பான நபிமொழிகள் உட்பட பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்து வருவதுடன், நபிமொழிகளை நம்பக்கூடியவர்களை இணைவைப்பார்கள் என்றும் கூறுகிறார்.
இவருக்கு முன் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர் பெருமக்களும் முஸ்லிம்களும் கூறாத கொள்கை குழப்பத்தை தவ்ஹீது பிராண்டில் மார்கெட்டிங் செய்து, ஷிர்க் ஒழிப்பு போர்வையில் முஸ்லிம்களை ஷிர்க்கின் பக்கம் அழைக்கிறார்.