‘மிஹ்ராஜ்” எனும் விண்னேற்றப்பயணம் : – இன்றைய அறிவியல் கூறுவதென்ன?
– எஸ். ஹலரத் அலி, திருச்சி -7 ( +91 9965361068)
இஸ்லாம் ஓர் அறிவியல் மார்க்கம் என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. அதில் ஒரு சான்றுதான், நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸ் சென்று அங்கிருந்து ஏழு வானங்கள் சென்று மீண்ட “மிஹ்ராஜ்” எனும் விண்ணேற்றப்பயணம். நமது பூமியிலிருந்து கோடிக்கணக்கான மைல் தூரமுள்ள நட்சத்திர மண்டலத்திற்கு சில நிமிடத்தில் சென்று திரும்பலாம் என்று எவரேனும் கூறினால் அது நடைமுறைக்கு சாத்தியமில்லாத நகைச்சுவையாகவே இன்று தெரியும்.
ஆயினும் அறிவியல் பூர்வமாக இப்படி சென்று வருவது சாத்தியமே என்ற கொள்கையை தனது சார்பியல் கொள்கையின்படி (Theory of Relativity) கூறியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஒரு மனிதன் ஒளி வேகத்தை விட விரைவாக பயணம் செய்யும் போது காலம் சுருங்கிவிடும். இப்படிப் பயணம் செய்யக்கூடிய ஆற்றலை, அல்லாஹ் யாருக்கு வழங்குகின்றானோ அவர்களால் விண்ணிலுள்ள பிரபஞ்சங்களுக்கு விரைந்து சென்று மீள முடியும்.
ஆயிரத்து நானுறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களுக்கு பூமியின் எல்லையை தாண்டிச் செல்லக்கூடிய அறிவாற்றலை அல்லாஹ் அன்று வழங்கவில்லை. ஆயினும் ஆற்றல் வழங்கப்பட்ட மனிதர்களால் அப்படிச் செல்ல முடியும் என்பதையும் அல்லாஹ் அன்றே சொல்லி விட்டான்.(அல் குர்ஆன் 55:33) .இன்று இருபதாம் நூற்றாண்டு மனிதர்கள் அவ்வறிவாற்றலைப் பெற்று, பூமியின் எல்லையைக் கடந்து நிலவுக்கு சென்று வந்து விட்டார்கள். ஆனாலும் நட்சத்திர மண்டலங்களுக்குச் செல்லும் ஆற்றலை அவர்கள் பெறவில்லை.
நட்சத்திர மண்டலங்கள் வரை விரைந்து சென்று வரும் ஆற்றலை அல்லாஹ் ஜின்களுக்கு வழங்கியுள்ளான் (அல் குர்ஆன்.15:17,18.) தான் படைத்த ஏழு வானங்களின் கடை கோடி வரை சென்று வரும் ஆற்றலை அல்லாஹ் மலக்குமார்களுக்கு கொடுத்துள்ளான். பூமியின் எல்லையை தாண்டும் அதிகாரம் பெற்ற மனிதனால் தாழ்வான வானத்திலுள்ள நட்சத்திர மண்டலங்களுக்கு செல்ல அதிகாரம் கொடுக்கப்படவில்லை. ஆயினும் அல்லாஹ் நாடிய நபிமார்களுக்கு சில விசேஷ ஆற்றலை அவன் கொடுப்பான்.
இப்பூமியில் தோன்றிய இறுதி நபியான முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ், விண்ணில் பயணம் செய்து ஏழு வானம் வரை சென்று மீண்டு வரும் பாக்கியத்தை அளித்தான். இப்பயணத்திற்கு ஏற்றவாறு அவர்களின் இதயத்தை தூய்மைப்படுத்தி ஞானத்தைக் கொண்டு நிரப்பினான். ( புஹாரி – 3207) இப்படி ஞானம் கொடுக்கப்பட்ட மனிதர்களுக்கு வெகு தூரத்தை கண் இமைக்கும் நேரத்துக்குள் கடக்கும் ஆற்றல் உண்டு என்பதையும் அல் குர்ஆன் கூறுகிறது. உதாரணமாக, ஏமன் நாட்டை ஆண்ட இளவரசியின் சிம்மாசனைத்தை பைத்துல் முகத்தஸிற்கு கண் மூடித்திறப்பதற்குள் கொண்டு வந்த வேகம்..(இவ்விரண்டு நகரங்களுக்கிடையிலான தூரம் 2000 கி.மீ.)
“ எனினும் அவர்களில் வேத ஞானம் பெற்ற ஒருவர் இருந்தார். அவர் ஸுலைமான் நபியை நோக்கி, “ நீங்கள் கண் மூடித்திறப்பதற்குள் அதனை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்” என்று கூறினார். அவ்வாறே கொண்டு வந்து சேர்த்தார். – அல் குர்ஆன்.27:40.
அல்லாஹ்வினால் வேத ஞானம் வழங்கப்பட்டவர்களுக்கு, பல கோடி மைல் தொலைவுகளை சில நொடிகளில் கடக்கும் வல்லமை கொடுக்கப்பட்டுள்ளது. இப்படிக் கடக்கும் பாதைகளுக்கு அல் குர்ஆனில் “மா ஆரிஜ்” உயர் வழிகள் என்று பெயர். அல் குர்ஆனில் ஒரு தனி அத்தியாயமே இப்பெயரில் உள்ளது. விண்ணிலுள்ள இருவேறு தொலைவு பிரபஞ்சங்களை எளிதில் கடக்கும் சுரங்கப்பாதையை “வார்ம் ஹோல்” (WORM HOLE) என்று பெயரில் அறிவியல் ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள். இப்பிரபஞ்சத்தில் ஏராளமான வார்ம் ஹோல் குறுக்குப் பாதைகள் இருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸிற்கு முதலில் சென்று, அங்கிருந்தே விண்வெளிப்பயணம் மேற்கொள்கிறார்கள்.. அல்லாஹ் குறிப்பிடும் “ம ஆரிஜ்’ உயர் வழிகளில் ஒன்றான ‘வார்ம் ஹோல்” எனும் குறுக்குப்பாதை பைத்துல் முகத்திஸ் பள்ளிக்கு மேலாக இருக்கலாம். அல்லாஹ் அறிந்தவன். இந்த “ம ஆரிஜ்” எனும் உயர் வழியில் ஒளி வேகத்தை தாண்டிப் பயணிக்கும் போது காலம் சுருங்கி விடும்.ஒரு நாள் பயண தூரம் என்பது நமது பூமியின் கணக்கின்படி ஐம்பது ஆயிரம் வருடங்கள் பயண தூரத்திற்கு சமமானது என்று அல்லாஹ் கூறுகிறான். (அல் குர்ஆன்.70:4.)
விண்வெளி பிரபஞ்ச தூரங்களை மின்னல் வேகத்தில் அதாவது ஒளி வேகத்தில் கடப்பதற்கு “புராக்” எனும் வாகனம் உதவியது. புராக் எனும் சொல்லானது அரபியில் ‘பர்க்”- மின்னல் என்று பொருள். இப்படி மின்னல் ஒளி வேகத்தில் செல்லும்போது காலம், இடம்,திசை, தூரம் எல்லாம் கடந்து பரவெளி பயணமாக மாறிவிடும். “ம ஆரிஜ்” எனும் உயர் வழி வார்ம் ஹோல் துளை வழியாக புகுந்து செல்ல மிகச்சிறு வாகனமே உதவுகிறது. புராக் என்பது கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான ஒரு வாகனமாகும். இந்த வாகனத்தின் உதவியால்தான் நபி (ஸல்) அவர்கள் ஏழு வானத்தின் கடைக்கோடி வரை சென்று வர முடிந்தது.
பிரபஞ்சத்தின் குறுக்குப்பாதை வார்ம் ஹோல் (WORMHOLE)
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொதுச சார்பியல் தத்துவத்தின்படி நமது பிரபஞ்சத்தின் பரவெளி (SPACE) உயர் பரிமாணத்தில் வளைந்திருந்தால் அந்த வெளியில் இரண்டு புள்ளிகளுக்கிடையில் உயர் பரிணாமம் வழியாகப் பாலம் அமைக்க முடியும் எனும் கருதுகோளைச் சொன்னவர் ரோசென் எனும் விஞ்ஞானி.. உதாரணமாக… மிகவும் உயரமான மலையைச் சுற்றிக் செல்லாமல் மலையைக் குடைந்து மறுபக்கத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கின்றோம். அதைப்போலவே ரோசெனின் ஆய்வுக்கோட் பாட்டின்படி, வளைந்த முப்பரிமாண அண்டவெளியில் இரண்டு புள்ளிகளுக்கிடையே உயர் பரிமாணத்தின் ஊடாக பாலம் போடக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது.
விண்வெளியின் குறுக்குக் சுற்றுப்பாதை போன்ற (HYPER SPACE BYE-PASS ROAD) “வார்ம் ஹோல்” புழுத்துளை வழியாக செல்லும்போது அண்டவெளியில் பிரயாணத்தின் நேரத்தையும் தூரத்தையும் கணிசமாக குறைக்கலாம்.HYPERSPACE ல் உருவாக்கப்படும் இந்த குறுக்கு வழிப்பாதையை “ஐன்ஸ்டீன் – ரோசென் பாலம்’ (EINSTEIN – ROSEN BRIDGE) என்று கோட்பாட்டு இயற்பியல் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இந்த குறுக்குக் சுற்றுப்பாதை (வார்ம் ஹோல்) “ம ஆரிஜ்” உயர் வழியின்” வழியாக மலக்குமார்கள் பூமிக்கு வருவதையும் அல்லாஹ் அல் குர்ஆனில் சுட்டிக் காட்டுகிறான். குறிப்பாக, வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள், நட்சத்திர மண்டலங்கள் இருக்கும் தாழ்வான அடிவானத்திலிருந்து (அல் குர்ஆன்.-37:6.) பூமிக்கு வந்து நபி (ஸல்) அவர்களை சந்தித்தது பற்றி அல்லாஹ் கூறும்போது,
அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில் பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார், (வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார், – அல் குர்ஆன்.53:8-10.
விண்வெளியில் இரு பிரபஞ்சங்களுக்கிடையே உள்ள தொலை தூரமானது (HYPERSPACE) வெளி (CURVATURE OF SPACETIME) வளையும் போது தூரம் குறைந்துவிடும். இதைத்தான் அல்லாஹ், “இரு வில்லின் முனைகளைப் போல் நெருங்கி வந்தார், என்கிறான். ஒரு வில்லின் இரு முனைகளுக்கு இடையில் அதிக இடைவெளி இருப்பினும்.. அவ்வில்லை வளைத்து அவ்விரு முனைகளையும் இணைக்கும்போது இடைவெளி குறைந்து விடும். இதுவே விண்வெளியில் உள்ள “ம ஆரிஜ் உயர்வழி” எனும் “வார்ம் ஹோல்’ குறுக்குப்பாதைக்கு உதாரணம்.
நமது பூமிக்கு சமீபமாக இருக்கும் நட்சத்திர மண்டலத்தின் பெயர் பிராக்சிமா செண்டாரி (Proxima Centauri ) சுமார் 40,208,000,000,000 கி.மீ தூரத்தில் உள்ளது. ஒரு நொடிக்கு மூன்று லட்சம் கிமீ, ஒளி வேகத்தில் தொடர்ந்து ஒரு வருடம் பயணித்தால் அது ஒரு ஒளியாண்டு தூரம் என்று கணக்கிடப்படுகிறது. சமீப நட்சத்திரமாகிய “பிராக்சிமா செண்டாரி”யை சென்றடைய 4.25 ஒளியாண்டு ஆகும். இது மனித கற்பனைக்கே எட்டாத தொலை தூரம்.
சிரியஸ் எனும் நட்சத்திரம், பூமியில் இருந்து 54 டிரில்லியன் மைல் தொலைவில் உள்ளது. (ஒன்பது ஒளியாண்டு தூரத்தில் உள்ளது). இன்று நம்மிடம் உள்ள ராக்கெட் மூலமாக சென்று இதை அடைவதற்கு ஆயிரக்கணக்கான வருடங்களாகும். ஆனால் “மஆரிஜ்” எனும் “வார்ம் ஹோல்” வழியாக சில நிமிடத்தில் சென்று விடலாம். அறிவியல் ரீதியாக இப்படிப் பயணப்பட முடியும் என்பதையே ஐன்ஸ்டீன் அவர்களின் ‘சிறப்பு சார்பியல் கொள்கை” நிரூபிக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் எனும் விண்ணேற்றப் பயணம் ஒரு அற்புதமான அதிசய சம்பவமாக இருப்பினும்….இதுவும் அல்லாஹ்வின் அறிவியல் கட்டமைப்பின் வழிமுறையை பின்பற்றியே நடந்த ஒன்று. அல்லாஹ் யாருக்கு இந்த அறிவியல் கட்டமைப்பை வழங்கியிருக்கின்றானோ…அவர்களால் எளிதாக வார்ம்ஹோல் வழியாக தொலைதூரத்தை நொடியில் கடக்க முடியும். இதுவரை மலக்குமார்கள், ஜின்களுக்கு கொடுக்கப்பட்ட இவ்வாற்றலானது நபி (ஸல்) அவர்களுக்கும் கொடுக்கப்பட்டதன் மூலம் மனித குலத்தை அல்லாஹ் மேன்மைப்படுத்தியிருக்கின்றான்.
நிச்சயமாக நாம், பூமிக்குச் சமீபமாக உள்ள வானத்தைப் பிரகாசிக்கும் நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தி வைத்தோம். – அல் குர்ஆன். 37:6.
நட்சத்திரங்கள் இருக்கும் தாழ்வான வானத்தைக் கடந்தும், அதனைத் தொடர்ந்து அது போலுள்ள ஆறு வானங்களைக் கடந்து சென்றுதான் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்விடம் கட்டளைகளை பெற்று வந்தார்கள். நம்மைப் போன்ற சாதாரண உடலமைப்பு உள்ள மனிதர்களால். கற்பனைக்கெட்டாத தொலைதூரத்தை கடந்து மீள்வது இயலாது. அதுவும் கண்மூடித் திறக்கும் நொடிகளில் பயணப்பட சாத்தியமே இல்லை. அல்லாஹ், தான் நாடிய அடியாரை அப்பயணத்திற்கு தகுந்தவாறு அவரது உடலமைப்பை மாற்றியமைத்து அழைத்துச் சென்றான்..
நபியுடைய இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்கவில்லை, ஆயினும் அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா? அன்றியும், நிச்சயமாக அவர் மற்றோரு முறையும் (ஜிப்ரீல்) இறங்கக்கண்டார். “ஸித்திரத்துல் முன்தஹா” என்னும் (வாநெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே. அதன் சமீபத்தில்தான் “ஜன்னத்துல் மவா” என்னும் சொர்க்கம் இருக்கிறது. “ஸித்திரத்துல் முன்தஹா” என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில், (அவருடைய) பார்வை விலகவும் இல்லை; அதைக்கடந்து (மாறி) விடவுமில்லை. திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப்பெரியதைக் கண்டார். – அல் குர்ஆன். 53:11-18.