மத வியாபாரம்!

in மூடநம்பிக்கை

இஸ்லாத்தில் ஜோதிடம் இல்லை; அதே நேரத்தில் இஸ்லாமியர்களிடம் இந்த ஜோதிடம் எந்த அளவுக்கு இடம் பெற்றுள்ளது என்பதை நாம் அலசக் கடமைப்பட்டுள்ளோம். 

    இந்திய முஸ்லிம்களிடம் ஜோதிடம் சாதரணமாகப் புழக்கத்தில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதிலும் 50 சதவிகிதம் பேர் இஸ்லாமிய ஜோதிடர்களிடம் மட்டுமே  செல்லக்கூடிய அளவுக்கு ஈமானிய பலம்(!)  உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள், ஜோதிடத்திற்கு எதிரான குர்ஆன் ஆயத்துகளும், ஹதீதுகளும் மாற்று மதத்தாரிடம் ஜோதிடம் கேட்பதைத்தான் தடுக்கின்றன; நம்ம மார்க்க மேதைகளான ஆலிம்களிடம் ஜோதிடம் பார்ப்பதை அல்ல என்றே நம்புகிறார்கள். அதாவது, நம்ம கையைக் கொண்டே நம் கண்ணைத் தோண்டினால் வலிக்காது என்ற மூட நம்பிக்கை.

    அவர்களைச் சொல்லி குற்றமில்லை. காலங்காலமாய் மக்களுக்கு மார்க்கத்தில் இருந்த அறியாமையைப் பயன்படுத்தி, தங்களின் பிழைப்புக்காக அவர்களிடம் மூடநம்பிக்கைத் தீயை அணையவிடாமல் நெய்யூற்றிவரும் இந்தச் சமுதாயத்தின் ஒரு சில ஆலிம்கள் தான் இங்கே குற்றவாளிகள்.

    நம்ம மக்களுக்கு அரபியில் இருப்பதெல்லாம் வேத வாக்கு. அரபி பேசத் தெரிந்தவர்கள் எல்லாம் அல்லாஹ்விற்கு நெருக்கமானவர்கள் என்ற  நம்பிக்கை. அபூஜஹிலுக்கும், அபூலஹபுக்கும்  தெரியாத அரபியா? இன்று இஸ்லாத்தை கருவறுக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்ற யூதர்களுக்கெல்லாம் நம்ம ஆலிம்களைவிட இலக்கணச் சுத்தமாக அரபி தெரியும். அவர்களெல்லாம் அல்லாஹ்வின் நேசர்களா என்பதைச் சிந்தித்து பார்க்கவேண்டும்.

    இந்த தவறான நம்பிக்கையைப் பயன்படுத்திக்கொண்டு ‘பால்கிதாபு’ என்கிற ஜோதிட புத்தகத்தை அரபிதமிழ் என்ற பாசையில் எழுதிவைத்துள்ளனர். உதாரணமாக ‘அவன்’ என்ற வார்த்தையை அலிஃப், வாவ், நூன் என்று எழுதுவது. இதுதான் பால்கிதாபு. நியுமராலஜி என்கின்ற எண் கணித சாஸ்திரமே இது. நம்ம பேரு, அத்தா பேரு, அம்மா பேரு எல்லாருடைய பேரையும் எழுதி கூட்டிவரக்கூடிய நம்பருக்கு ஜோதிடம் சொல்வது. இவை அரபியில் இருப்பதாலும், பார்ப்பவரும் ஏழு வருடம் மதரஸாவில் ஓதி ஸனது பெற்ற ஆலிமாக இருப்பதாலும் இந்த ஜோதிடம் ஹலாலான விஷயம்தான் என்று நம்மவர்கள் நம்பி விடுகிறார்கள்.

    அல்லாஹ் விதித்த விதியை அவன் மறைவாய் வைத்திருக்கும் போது அதைக் கணித்துச் சொல்கிறேன் என்று  சொல்பவர் யாராக இருந்தாலும், அவர் அல்லாஹ்வுக்கு நிகராகத் தன்னைப் பிரகடனப் படுத்திவிட்டார் என்றே அர்த்தம். அவரிடம் சென்று தங்கள் காரியங்களுக்கெல்லாம் நல்ல நாள் பார்ப்பது உள்ளிட்ட எல்லாமே ஷிர்க் (இணைவத்தல்) என்பதை உணரவேண்டும்.

    இது போன்ற ஆலிம்கள் ஜோதிடம் பார்ப்பதையும், மந்திரவாதம் பார்ப்பதையும் தொழிலாகக் கொண்டுள்ளார்கள். இந்த ஆலிம்களிடம் சென்று மறுமைக்கான பாவத்தைச் சேர்ப்பது ஒருபக்கம் இருக்க, இம்மையில் ஏற்படும் நஷ்டமோ சொல்லிமாளாது. இவர்களிடம் நோயென்று போனால் எந்த நோயையுமே நோயென்று பார்ப்பதில்லை. ஒன்று பேயென்று சொல்வார்கள்;  அல்லது செய்வினை என்று சொல்வார்கள். அதற்கு பரிகாரம் என்ற பெயரில் பெரிய லிஸ்ட் போட்டு பணத்தை கறப்பார்கள். அதையெல்லாம் சிறமேற்கொண்டு செய்தும் நோய் தீராமல் ஊரிலே இருக்கின்ற அத்தனை டாக்டர்களிடமும் போய் மாத்திரை வாங்கித் தின்பார்கள். என்னய்யா இப்படி? என்று கேட்டால் “பேய்க்கும் பார்க்கணும், நோய்ய்க்கும் பார்க்கணும்னு சொல்லியிருக்காங்கள்ள” என்பார்கள்.
    நபிமார்களின் வரிசுகளாகிய ஆளிம்களே, ஆலிம்களை உருவாக்கும் மதரஸா முதல்வர்களே, பேராசிரியர்களே, இதுபோன்ற ஜோதிட ஆலிம்சாக்களைப் போலிகள் என்று இனம் காட்ட முன்வாருங்கள்.  முன்வருவார்களா?

அபூ ஆஷிக்  சிந்தனை சரம்

Comments on this entry are closed.

Previous post:

Next post: