மதகுருமார்கள்!

in அழிவுப் பாதை,மூடநம்பிக்கை

மதகுருமார்கள் பற்றிய மூடநம்பிக்கை!
உலகில் முஸ்லிம் மதம் உட்பட எத்தனை மதங்கள் காணப்படுகின்றனவோ, அத்தனை மதங்களின் மக்களும் கடவுளுக்கு அடுத்த நிலையில் இந்த மதகுருமார்களை மதித்து மரியாதைச் செலுத்துகிறார்கள். அவர்களின் தயவையும், ஆசியையும் கொண்டே அல்லாமல் கடவுளின் திருப்தியையும், அதன் மூலம் மோட்சத்தையும் அடையவே முடியாது என்ற உறுதியான மூட நம்பிக்கையில் மக்களில் மிகப் பெரும்பாலோர் இருக்கின்றனர்.

அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரே இறைவன்!
இது கடைந்தெடுத்த மூட நம்பிக்கைதான் என்று சுய சிந்தனையாளர்கள் சொல்லி விடுவார்கள். கடவுள் தன்னந்தனியனான இணை துணை இல்லாத ஒருவனேதான் என்று கடவுள் நம்பிக்கையுள்ள ஆத்திகர்கள் அனைவருமே ஒப்புக் கொள்கிறார்கள். தமிழில் தண்ணீர் என்று சொல்லப்படும் பொருள் உலகின் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு விதமாக அழைக்கப்பட்டாலும் அவை அனைத்தும் ஒரே பொருளான தண்ணீரையே குறிப்பது போல், கடவுள், இறைவன், அல்லாஹ், காட்,  தேவன், என வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு விதமாக அழைக்கப் பட்டாலும், அவை அனைத்தும் இறுதி வாழ்வியல் வழிகாட்டி நூல் குர்ஆன் “”அல்லாஹ்” என்று அரபியில் அழைக்கச் சொல்லும் ஒரே இறைவனையே குறிப்பிடுகின்றன என்பதை அரைகுறை சிந்தனையுடையவனும் அறிந்து கொள்வான்.

இறைவன் பல மதங்களைக் கொடுத்தானா?
அப்படி அறிந்து கொள்கிறவன் அகிலங்களைப் படைத்துப் பரிபாலிக்கும் “”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று நம் முன்னோர்கள் சொன்னதுபோல் இறைவன் ஒரேயொருவனாக இருக்கும் நிலையில், அந்த ஒரே இறைவன் மனிதகுல ஈடேற்றத்திற்காகப் பல மதங்களை ஒருபோதும் கொடுத்திருக்க முடியவே முடியாது என்று உறுதியாக அறிந்து கொள்வான். ஆக மனிதனைப் படைத்த ஒரே இறைவன் மனிதனின் நல்வாழ்விற்கு ஆதியிலிருந்து ஒரே நேர்வழியைத்தான் தந்துள்ளான். கோணல் வழிகளைக் கற்பிக்கும் பல மதங்களை அந்த இறைவன் தரவே இல்லை என்பது உறுதியாக விளங்குகிறது. அதேபோல் உலகிற்கு இறைவனால் அனுப்பப்பட்ட பல்லாயிரக்கணக்கான இறைத்தூதர்கள் அனைவரும் ஒரே நேர்வழியைத்தான் போதித்தார்கள்; எண்ணற்ற கோணல் வழிகளை அல்ல என்பதும் உறுதியாகத் தெரிகிறது. இந்த உண்மையை இறுதி வாழ்வியல் வழிகாட்டி நூல் குர்ஆனின் 2:213, 3:51,101, 4:68,175, 6:87, 126,153,161, 7:16, 10:25, 11:56, 15:32-44, 19:36, 22:54,67, 23:73, 24:46, 36:3,4,61, 37:114-118, 42:52, 43:43,61,64, 46:30, 48:2,20 67:22 போன்ற இறைவாக்குகள் எண்ணற்ற இடங்களில் உறுதிப்படுத்துகின்றன.

அற்ப உலக ஆதாயமே குறிக்கோள்!
மேலும் இம்மதகுருமார்கள் அற்ப உலக ஆதாயம் கருதியே, மக்கள் சொத்தைத் தவறான முறையில் சாப்பிடுவதற்கே, ஒரே நேர் வழியைப் பல கோணல் வழிகளாக்கி, ஷைத்தானின் ஏஜண்டாகச் செயல்பட்டுப் பெருங்கொண்ட மக்களை நரகில் தள்ளி வருகிறார்கள் என்பதை 9:34, 18:102-106, 33:66-68 இறைவாக்குகள் தெளிவுபடுத்தி எச்சரிக்கின்றன. இதற்கு மாறாக இம்மதகுருமார்கள் 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109,127,145,164,180, 34:47, 38:86, 42:23 இறைவாக்குகள் கூறும் கடமையான மார்க்கப் பணிக்குக் கூலி கண்டிப்பாகக் கூடாது என்று கூறும் அல்லாஹ்வின் கட்டளைகளை நிராகரித்து, 2:41,79,174, 3:77,187, 5:44, 9:9, 16:95 வசனங்கள் கூறுவது போல் அற்பமான உலகியல் ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்டு நேர்வழியை கோணல் வழிகளாக ஆக்குகிறார்கள் இம்மத குருமார்கள், அதனால் 2:75,78,79,109,146, 3:78,188, 4:44,46, 5:41,62,63, 6:21,25,26, 9:10, 34, 11:18,19, 31:6 இறைவாக்குகள் கூறுவது போல் பல தில்லுமுல்லுகள் செய்து மக்களை வழி கெடுக்கிறார்கள்.

கடமையான மார்க்கப் பணிக்கு கூலி வாங்காமல் செயல்படுகிறவர்களே நேர்வழியில் இருப்பதாக அல்லாஹ் 36:21ல் கூறி இருப்பது இம்மதகுருமார்களின் உள்ளத்தைத் தொடாது; அந்த அளவு அவர்களின் உள்ளங்கள் கல்லாக இறுகி விட்டன. 2:146, 6:20 இறைவாக்குகள் கூறுவது போல் நேர்வழியை நன்கு அறிந்த நிலையிலேயே அற்ப உலக ஆதாயத்தைக் குறியாகக் கொண்டு எண்ணற்றக் கோணல் வழிகளை உண்டாக்கி எண்ணற்ற மதங்களைத் தோற்றுவித்து மக்களை நரகில் தள்ளுகிறார்கள்.

அனைத்து மதகுருமார்களின் இயற்கைச் சுபாவம்!
இந்த அனைத்து மதங்களின் மதகுருமார்களின் இயற்கைச் சுபாவம் என்ன தெரியுமா? இறைவன் தேர்ந்தெடுத்த இறைத் தூதர் அந்த இறைவனிடமிருந்து நேரடியாகப் பெற்ற இறைச் செய்தியான நேர்வழியைக் கடுமையாக எதிர்ப்பது. அத்தூதரின் நேர்வழிச் செய்திகளைக் கேட்கவிடாமல் மக்களைத் தடுப்பது. அத்தூதரின் மறைவுக்குப் பிறகு அத்தூதரைப் பின்பற்றுவதாக நயவஞ்சகமாகக் கூறிக் கொண்டு, இறைவன் சொல்லாததை எல்லாம் இறைவன் சொன்னதாகவும், தூதர் சொல்லாததை எல்லாம் தூதர் சொன்னதாகவும் ஜமுக்காளத்தில் வடித்தெடுத்தப் பொய்களைக் கூறி தங்களை முற்றிலும் நம்பும் அப்பாவி மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பதோடு மக்கள் சொத்தை 9:34 கூறுவது போல் அநீதமாக அபகரிப்பவர்கள் இம்மதகுருமார்கள். அடுத்தடுத்து வந்த இறைத் தூதர்களையும் ஏற்காமல் புறக்கணித்தவர்கள்தான் இம்மதகுரு மார்கள். இதையும் இறைவன் 40:34 இறைவாக்கில் அம்பலப்படுத்தியுள்ளான்.

மதகுருமார்களின் இலட்சணம்(?)
இறுதி வாழ்வியல் வழிகாட்டி நெறிநூல் அல்குர்ஆன் நயவஞ்சகர்கள் பற்றி சுமார் 32 இடங்களிலும், பாவிகள் பற்றி சுமார் 37 இடங்களிலும், நிராகரிப்பாளர்கள் பற்றி சுமார் 134 இடங்களிலும், அநியாயக்காரர்கள் என்று சுமார் 14 இடங்களிலும், குழப்பம் செய்கிறவர் என்று சுமார் 20 இடங்களிலும், வரம்பு மீறுகிறவர்கள் என்று சுமார் 9 இடங்களிலும், குற்றவாளிகள் என்று சுமார் 51 இடங்களிலும், பெருமையடிப்பவர்கள் என்று சுமார் 12 இடங்களிலும், பொய்யர்கள் என்று சுமார் 31 இடங்களிலும், சத்தியத்தை வெறுப்பவர்கள் என்று சுமார் 6 இடங்களிலும், நம்பிக்கை இழந்தவர்கள் என்று சுமார் 4 இடங்களிலும், வழிகேட்டில், பகிரங்க வழிகேட்டில், மிக நீண்ட, தூர வழிகேட்டில் இருப்பவர்கள் என்று சுமார் 88 இடங்களிலும், அநியாயக்காரர்கள், அக்கிரமக்காரர்கள், தமக்குத்தாமே அக்கிரமம், அநியாயம் செய்து கொள்வோர் என்று சுமார் 135 இடங்களிலும், இன்னும் இவைபோல் என்னென்ன இழிச்சொற்கள், பழிச் சொற்கள், குற்றச் சொற்கள் குர்ஆனில் சொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆதிநபி ஆதம்(அலை) அவர்களுக்குப்பின் இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு முன்னர் ஒவ்வொரு சமுதாயத்திலும் திருட்டுத்தனமாக,  நுழைந்து தங்களின் வசீகரப் பேச்சால் தங்களை நம்பியவர்களைக் கவர்ந்து நரகில் தள்ளிய மதகுருமார்கள் இன்னும் இம்மதகுருமார்களையும், அவர்களது வயிற்றுப் பிழைப்பையும் மிகமிகக் கடினமாகக் கண்டிக்கும் 2:41,74,75,78,79,109,146, 159-162,174, 3:78,187,188, 4:44,46, 5:13,41, 62,63,6:20,21,25,26,125, 9:9,10,34, 11:18,19, 31:6 போன்ற குர்ஆன் வசனங்கள் கூறுவது மற்ற மதகுருமார்களைப் பொறுத்தமட்டிலும் நூற்றுக்கு நூறு உண்மை என்பதையும் முஸ்லிம் மதகுருமார்களும் அவர்களது கண்மூடி பக்தர்களும் ஒப்புக்கொள்ளவே செய்வார்கள்.

நாத்திகம் வளரக் காரணம்:
இம்மதகுருமார்கள் கடவுளின் பெயரைச் சொல்லியே அநியாயம், அக்கிரமம், அட்டூழியம், செய்வதோடு, மிக மோசமான ஒழுக்கக் கேடுகளில் ஈடுபடுவதுடன் பெருங்கொண்ட மக்களை கடவுளின் பெயராலேயே மூட நம்பிக்கைகளில் மூழ்கடித்து, அவர்களின் செல்வங்களை அநீதமான முறையில் சூரையாடுவதைக் கண்ட ஓரளவு சுய சிந்தனையாளர்கள், கடவுள் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுவதால் அந்தக் கடவுளே இல்லை எனக் கூறத் தொடங்கினர்.

மற்ற மதங்களின் குருமார்களும் பக்தர்களும் ஏற்பார்களா?
ஆனால் மற்ற மதங்களிலுள்ள மதகுருமார்களும், அவர்களது பக்தர்களும் இந்த உண்மையை ஏற்பார்களா? அதாவது இந்து மதகுருமார்களும், அவர்களது பக்தர்களும் ஏற்பார்களா? யூத மதகுருமார்களும், அவர்களது பக்தர்களும் ஏற்பார்களா? கிறித்தவ மதகுருமார்களும் அவர்களது பக்தர்களும் ஏற்பார்களா? இப்படி உலகில் காணப்படும் எண்ணற்ற மதங்களின் மதகுருமார்களும் அவர்களது பக்தர்களும் ஏற்பார்களா? ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். மாறாகத் தங்கள் தங்கள் மதகுருமார்கள் காட்டுவதுதான் நேர்வழி; மோட்சம் செல்லும் வழி என்றே உறுதியாகச் சொல்வார்கள். முடிவு என்ன? மதகுருமார்கள் காட்டுவது கோணல் வழிகளே அல்லாமல் நேர்வழி இல்லை என்பதை இறைவன் இறுதியாக இறக்கியருளியுள்ள வாழ்வியல் வழிகாட்டும் நூல் குர்ஆனை நேரடியாகப் படித்து, சிந்தித்து அறிகிறவர்கள் உறுதியாக அறிவார்கள்.

மதகுருமார்கள் அனைவரும் ஒழுக்கக் கேடர்களே!
மதகுருமார்கள் அனைவரும் ஒழுக்கக் கேடர்களே என்பதை நடிகையுடன் சல்லாபித்து இரகசிய கேமரா மூலம் அம்பலப்பட்ட நித்யானந்தா, மற்ற மதகுருமார்கள் அனைவருக்கும், அவர்களது படுக்கை அறைகளில் இரகசிய கேமரா பொருத்தி தாங்கள் பரிசுத்தவான்கள் என்பதை நிரூபிக்கத் தயாரா? என்று சவால் விட்டுள்ளது அம்பலப்படுத்துகிறது. அதாவது அனைத்து மதகுருமார்களும் ஒழுக்கக் கேடர்களே என்று நித்யானந்தா மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் பழைய சம்பவம் ஒன்று எமது நினைவுக்கு வருகிறது. அதாவது ஒரு மவ்லவி-முஸ்லிம் மதகுரு ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு கையும் களவுமாகப் பிடிபட்டு, அவரை விசாரிக்கும்போது “”நான் என்ன அப்படித் தவறு செய்துவிட்டேன்; வலிமார்கள் எனப் போற்றப்படுபவர்கள் செய்யும் அதே செயலைத்தானே நானும் செய்துள்ளேன்” என்று தனது ஈனச் செயலை நியாயப்படுத்தினார். அதேபோல்தான் மதகுரு நித்யானந்தாவும் எல்லா மதகுருமார்களும் செய்யும் அதே செயலைத்தானே நானும் செய்தேன் என்று இப்படி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த மதகுருமார்களின் கண்மூடி பக்தர்களுக்கு சூடு, சொரணை, சுய சிந்தனை இருந்தால் அல்லவா, அவர்கள் கண்மூடிப் பின்பற்றும் மதகுருமார்களின் இழி நிலையைப் புரியப் போகிறார்கள்.

முஸ்லிம் மதகுருமார்களும் வழிகேடர்களே!
இதோ மதகுருமார்களான ஆலிம்களை மேலே கண்ட இறைவாக்குகளோடு மேலும் அடையாளம் காட்டும் ஆதாரபூர்வமான ஹதீஃத் அபூசயீத் அல்குத்ரீ(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழி முறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் “”அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும், கிறித்தவர்களையுமா?” என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “”வேறு யாரை?” என்று கேட்டார்கள்.
(புகாரீ ர.அ.எண். 7320)

ஆம்! கிறித்தவர்கள் அல்லாஹ்வை விட்டும் தங்கள் மதகுருமார்களை தங்களின் வணக்கத்திற்குரிய ரப்புகளாக ஆக்கிக் கொண்டார்கள் என்று தவ்பா 9:31 இறைவாக்கு கூறுவது போல் முஸ்லிம்களும் தங்கள் மதகுருமார்களான மவ்லவிகளை வணக்கத்திற்குரிய ரப்புகளாக ஆக்கி வணங்கி வருகிறார்கள். இதை விரிவாகவே பார்ப்போம்.

இறைவனால் நபியாகத் தெரிவு செய்யப்பட்ட ஈசா (அலை), “”நான் இறைவனால் தெரிவு செய்யப்பட்ட அவனது அடிமையாகவும், அவனது தூதராகவும் இருக்கிறேன்; நீங்கள் அவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனது கட்டளைகளுக்கு மட்டுமே அடி பணிய வேண்டும்” என்று நேர்வழியைப் போதித்த காலமெல்லாம் அவர்களது நேர்வழி போதனையை ஏற்றவர்கள் வெறும் பன்னிரெண்டே பன்னிரண்டு நபர்கள்தான். யூத மதகுருமார்களின் வசீகப் பிடியில் சிக்கி இருந்த பெருங்கொண்ட கூட்டம் ஈசா(அலை) இறைத் தூதரின் நேர்வழிப் போதனையை ஏற்க மறுத்தது மட்டுமல்லாமல் யூத மதகுருமார்களுடன் சேர்ந்து அவர்களைக் கொல்லவும் முற்பட்டார்கள்.

முக்கடவுள் கொள்கை!
சர்வ வல்லமையும், மிக்க ஞானமும் நிறைந்த இறைவன் ஈசா(அலை) அவர்களைக் கொல்லப்படாத நிலையில் தன் வசத்தில் உயர்த்திக் கொண்டான் என்றும் யூதர்கள் அக்கிரமக்காரர்கள் என்றும் கூறுவதை நிசா: 4:156-160 இறைவாக்குகளை நேரடியாகப் படித்துச் சிந்தித்து விளங்குபவர்கள் அறிய முடியும். ஈசா(அலை) அவர்களை அல்லாஹ் தன் வசத்தில் உயர்த்திக் கொண்டபின் அதுவரை ஈசா(அலை) அவர்களின் ஒரே நேர்வழிப் போதனையை மிகக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்த யூதனான சவுல், ஈசா(அலை) அவர்கள் தனக்குக் காட்சித் தந்ததாகவும் அவர் போதித்த போதனை இதுதான் என்றும் பிதா, மகன், பரிசுத்த ஆவி என்ற முக்கடவுள் (Trinity) கொள்கையைப் போதிக்க ஆரம்பித்தான்.

ஆதத்தின் சந்ததிகளை நரகில் தள்ள சபதம் செய்துள்ள ஷைத்தான் இந்த யூதன் சவுலுக்குப் பெரிதும் உதவி செய்தான். ஒரே கடவுள் நேர்வழி போதனையை ஏற்றவர்கள் 12 நபர்கள் மட்டுமே என்ற நிலை மாறி முக்கடவுள் கொள்கையை யூதன் சவுல் நிலை நாட்டிய மாத்திரத்தில் கிறித்தவர்கள் பல்கிப் பெருக ஆரம்பித்தார்கள். யூத சவுல் புனித பவுல் (Saint Paul) ஆனான். அந்த முக்கடவுள் வழிகெட்டக் கொள்கையை உலகமெல்லாம் பரப்பியவர்கள் புனிதர்கள் (Saint) ஆனார்கள். அவர்களுக்குச் சிலைகள் வடிக்கப்பட்டு மாலை மரியாதை செய்யப்பட்டு, அவர்களது நினைவு நாட்களில் கொடியேற்றம், சப்பரம் (கூடு) பவனி, இத்தியாதி சடங்குகள் நிறைவேற்றப் படுகின்றன. இப்புனிதர்கள்தான்(?) கிறித்தவ மதத்தை உலகமெங்கும் பரப்பியப் புண்ணியவான்கள் எனக் கிறித்தவர்களால் போற்றப்படுகின்றனர். ஆனால் கிறித்தவர்களால் புனிதர்கள் எனப் போற்றப்படும் கிறித்தவ மதகுருமார்கள் ஈசா(அலை) போதித்த ஒரே நேர்வழியான ஏகனான இறைவனை மட்டுமே வணங்கும், அடிபணியும் நேர்வழிப் போதனையை போதிக்கவில்லை. அதற்கு மாறாக ஈசா(அலை) அவர்களது காலத்தில் அவர்களை மிகக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்த யூத மதகுருவான சவுல், ஈஸா(அலை) அவர்களை அல்லாஹ் தன் வசத்தில் உயர்த்திக் கொண்ட பின், தனது பிழைப்புக்காகக் கற்பனை செய்த கோணல் வழியான முக்கடவுள் கொள்கை என்பதை, கிறித்தவ மதகுருமார்களும், கிறித்தவர்களும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், முஸ்லிம் மதகுருமார்களும், கண்டிப்பாக ஒப்புக் கொள்ளவே செய்வார்கள்.

ஆனால், கிறித்தவ மதகுருமார்கள் செய்யும் அதே திருட்டு வேலையைத்தான் முஸ்லிம் மதகுருமார்களும் செய்து வருகிறார்கள் என்பதையே புகாரீ(ர.அ.) 7319,7320 எண்களிட்ட ஹதீஃத்கள் உறுதிப்படுத்துகின்றன. எப்படி என்று பாருங்கள்.

இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் போதித்த நேர்வழி அதாவது அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்; அவனுக்கு மட்டுமே அடிபணிய வேண்டும்; எஜமானனான அல்லாஹ்வுக்கும் அவனது அடிமைகளான அடியார்களுக்குமிடையில் மனிதர்களில் எவரையும் இடைத்தரகர்களாக-புரோகிதர்களாக-மதகுருமார்களாகப் புகுத்தக் கூடாது (பார்க்க 2:186, 7:3, 33:21,36, 59:7) என்ற நேர்வழிப் போதனைப்படி முஸ்லிம்கள் நடந்து வந்த காலமெல்லாம், இஸ்லாம் மார்க்கம் மக்களிடையே பரவ ஷைத்தானும், தாஃகூத்களான ஷைத்தானின் நேரடி முகவர்களான யூத, கிறித்தவ, குறைஷ் மதகுருமார்களும் பெரும் தடைக்கற்களாகவே இருந்தனர்.

எப்போது, அதாவது ஹிஜ்ரி 400க்குப் பின் அதே யூதக் கைக்கூலிகள், நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றும் முஸ்லிம்கள் என நயவஞ்சகமாக, திருட்டுத்தனமாக முஸ்லிம்களிடையே புகுந்து கொண்டு, பலவீனமான, பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்பட்டமான பொய்களைக் கூறி, யூத, கிறித்தவர்களைப் போல் இறைவனுக்கு இணை வைக்கச் செய்யும் கொடிய செயல்களை புகுத்தினார்கள்.

அதே மூடச் சடங்குகள்!
எப்படி முக்கடவுள் கொள்கையை ஈசா (அலை) அவர்களது சமூகத்தில் புகுத்திய யூதனான சவுல் புனிதர் பவுல் என்ற பெயரைப் பெற்றதுடன், அவனும் அவனது வழி வந்தவர்களும் புனிதர்கள் எனப் போற்றப்பட்டு சிலை வடித்து மாலை மரியாதைச் செய்யப்பட்டு கொடி ஏற்றம், சப்பரப் பவனி என மூடச்சடங்குகள் செய்யப்படுகின்றனவோ அதுபோல், முஹம்மது(ஸல்) அவர்களது சமூகத்தில் திருட்டுத்தனமாகப் புகுந்துள்ள யூதக் கைக் கூலிகளும் அவர்களின் கோணல் வழிகளைத் தொடர்ந்தவர்களும் இன்று முஸ்லிம்களால் அவுலியாக்கள்-இறைநேசர்கள்-புனிதர்கள் எனப் போற்றிப் புகழப்பட்டு, அவர்களுக்கு தர்கா என்ற பெயரால் சமாதிகள் (கபுருகள்) கட்டி மாலை மரியாதை செய்து, கொடியேற்றம் கூடு பவனி என மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் அரங்கேறுகின்றன.

அதாவது இறுதித் தூதர்(ஸல்) முன்னறிவிப்புச் செய்தது போல், முஸ்லிம் மதகுருமார்கள் கிறித்தவ மதகுருமார்களை சாணுக்கு சாண், முழத்திற்கு முழம் அணுவளவும் பிசகாது பின்பற்றி வருகின்றனர். எப்படி கிறித்தவ மதகுருமார்கள் இணை துணை இல்லாத ஏகன் இறைவனுக்கு முக்கடவுள் கொள்கை கொண்டு இணை வைக்கச் செய்து கிறித்தவர்களை ஷைத்தானுடன் சேர்ந்து நரகில் தள்ளும் தாஃகூத்களாக-மனித ஷைத்தான்களாக இருக்கிறார்களோ, அதுபோலவே அவர்களை சாணுக்கு சாண், முழத்திற்கு முழம் அணுவளவும் அடிபிசகாது பின்பற்றி பெருங்கொண்ட முஸ்லிம்களை என்ற பெயரால் இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய குற்றத்தைச் செய்ய வைத்து ஷைத்தானுடன் இணைந்து முஸ்லிம்களை நரகில் தள்ளும் தாஃகூத்களாக-மனித ஷைத்தான்களாகச் செயல் படுகின்றனர்.

குர்ஆன், ஹதீஃதை மட்டுமே பின்பற்றுகிறோம் எனும் மதகுருமார்கள்!
சுன்னத் ஜமாஅத் எனப் பீற்றிக் கொண்டு ஹிஜ்ரி 400க்கு பிறகு கற்பனை செய்யப்பட்ட நரகிற்கு இட்டுச் செல்லும் பித்அத்களை மார்க்கமாக்கி இருக்கும் பித்அத் ஜமாஅத்தின் நிலை இதுவென்றால், நாங்கள் மத்ஹபுகள் தரீக்காக்கள் இவற்றிலிருந்து தவ்பா செய்து மீண்டுவிட்டோம் என்று வெளிவேடம் போடும் அஹ்லஹதீஃத், முஜாஹித், ஜாக், ததஜ, போன்ற இயக்கப் பேர்வழிகளான மதகுருமார்கள் கலஃபிகளான பின்னோர்களைத்தான் பின்பற்றக் கூடாது; சலஃபிகளான முன்னோர்களைப் பின்பற்றலாம் என்று ஒரு பிரிவாகவும், சலஃபிகள், கலஃபிகள் யாரையும் பின்பற்றக்கூடாது, அவர்கள் அனைவரையும் விட எங்களுக்கே அதிக ஞானம் இருக்கிறது. இதை நபி(ஸல்) அவர்கள் தம் விடை பெறும் ஹஜ்ஜில் கூறி இருக்கிறார்கள் என்று கூறி ஆணவத்துடன் ஆதாரபூர்வமான ஹதீஃத்களை பலகீனமானவை என்றும், பலகீனமான ஹதீஃத்களை ஆதாரபூர்வமானவை என்றும் மனம் போன போக்கில் சுய விளக்கம் கொடுத்தும் இதுவரை இல்லாத ஒரு புதிய வழிகேட்டைக் கற்பனை செய்தும், தங்களை நம்பியுள்ள சுய சிந்தனையற்ற மக்களை வழி கேட்டில் இழுத்துச் சென்று நரகை நிரப்ப ஷைத்தானுக்குத் துணை புரியும் தாஃகூத்களான மனித ஷைத்தான்களான இன்னொரு பிரிவாகவும் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களும் மதகுருமார்களே!

மதகுருமார்கள் ஒருபோதும் நேர்வழியை ஏற்கமாட்டார்கள்!
ஆக அழிந்து போகும் அற்ப உலக ஆதாயங்களை அசலான குறிக்கோளாகக் கொண்டு எஜமானனான அல்லாஹ்வுக்கும் அடிமைகளான மனிதர்களுக்கும் இடையில் இடைத் தரகர்களாக-புரோகிதர்களாக-மதகுருமார்களாக திருட்டுத்தனமாக நுழைந்துள்ள இறைவனது அடிமைகளான இந்த மதகுருமார்கள் பெரும் வழிகேடர்களே! அல்லாஹ் கொடுத்த ஒரே நேர்வழி மார்க்கத்தை எண்ணற்ற கோணல் வழிகள் மதங்களாக்கி மக்களை நரகில் தள்ளும் இம்மதகுருமார்களை விட கேடுகெட்ட படைப்பு இவ்வானத்தின் கீழ் இல்லவே இல்லை என்பதை இறுதி வாழ்வியல் வழிகாட்டி நூல் குர்ஆனின் அல்அஃராஃப் 7:175-179 வரையுள்ள 5 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.

 மற்ற மத குருமார்களைவிட முஸ்லிம் மதகுருமார்களுக்கு குர்ஆன், ஹதீஃத் ஞானம் கொடுக்கப்படிருந்தும், தங்களுடைய இச்சையைப் பின்பற்றிச் செல்வதால், குர்ஆன் முஹம்மது: 47:25 இறைவாக்கு சொல்வதுபோல் நேர்வழி இன்னதென்று தெளிவான பின்னரும் தம் முதுகுகளைத் திருப்பிக்கொண்டு போவதால், அதை ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிப் பெருக்கி விட்டான்.

மதகுருமார்கள் கோணல் வழிகளை நேர்வழியாகப் போதிக்கக் காரணம்!
மதகுருமார்களின் அடிப்படை நோக்கம் உலகியல் ஆதாயங்களே. மக்களில் மிகப் பெருங் கூட்டம் கோணல் வழிகளில் சென்று நரகை நிரப்புகிறவர்களே. (பார்க்க: 32:13, 11:118,119) அப்பெருங் கூட்டத்தினர் கோணல் வழிகளையே விரும்புவர். நேர்வழி அவர்களுக்கு எட்டிக்காயாகக் கசக்கும். பெருங்கொண்ட மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப கோணல் வழிகளை நேர்வழியாகப் போதித்தால்தான் அவர்களின் ஆதரவும் அதன் மூலம் பெரும் வருமானமும் கிடைக்கும். எனவே மதகுருமார்கள் கோணல் வழிகளையே நேர்வழியாகப் போதிக்கும் கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

ஹதீஃத் தொகுப்புகளில் தலைசிறந்த நூலான புகாரீயின் முதல் ஹதீஃத் கூறுவதைக் கவனமாகப் படித்துப் பாருங்கள்.
“”செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. ஒருவரது ஹிஜ்ரத்(புலம் பெயர்தல்) அவர் அடையவிருக்கும் உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அல்லது அவர் மணக்கவிருக்கும் ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டிருந்தால், அவரது புலம் பெயர்தல் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்.
(உமர்(ரழி), புகாரீ ஹதீஃத் எண் 1)

பெருமைக்காக, பேர் புகழுக்காக, உலகியல் ஆதாயங்களுக்காக, எப்படிப்பட்ட உயர்வான நற்செயல்களையே யார் செய்தாலும், அவரது நோக்கப்படி பெருமை, பேர் புகழ், உலகியல் ஆதாயங்கள் கிடைக்குமே அல்லாமல், நாளை மறுமையில் அல்லாஹ்வின் பொருத்தமோ அதன் மூலம் சுவர்க்கமோ ஒருபோதும் கிடைக்காது என்று இந்த ஹதீஃத் உறுதியாகச் சொல்கிறது.

பேர் புகழ், உலகியல் ஆதாயங்களைக் குறிக் கோளாகக் கொண்டு செயல்பட்ட ஷஹீத், ஆலிம், வள்ளல் இந்த முத்தரப்பினரும் நாளை விசாரணையின் ஆரம்பத்திலேயே விசாரிக்கப்பட்டு முகம் குப்புற இழுபட்டு நரகில் எறியப்படுவார்கள் என்பது மதகுருமார்கள் அனைவரும் அறிந்த ஒரு பிரசித்தி பெற்ற ஹதீஃத். அதுகொண்டு படிப்பினைப் பெறத்தான் அவர்கள் தயாரில்லை.

மேலும் 3:185, 11:15, 13:26, 31:33, 35:5, 39:72, 42:20,36, இறைவாக்குகளைக் கவனமாகப் படித்து விளங்குகிறவர்கள் இப்படிப்பட்ட பெருமை, பேர் புகழ், உலகியல் ஆதாயங்களை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டவர்கள் அற்பமான அழிந்துபடும் இவ்வுலகில் அவர்கள் எதிர்பார்த்த அனைத்தும் நிறைவாகவே அடைவார்கள். ஆனால் மறுமையில் நரகத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. பெருமை அடித்தவர்கள் நாளை மறுமையில் நரகில் புகுந்து மிகமிகக் கடுமையான வேதனைகளை நிரந்தரமாக அனுபவிப்பார்கள் என்பதையும் அறிய முடியும்.

மேலும் சோம்பல் படாமல் சுறுசுறுப்பாகச் சுய சிந்தனையுடன் 2:34,87, 4:173, 6:93, 7:36, 40, 48,75,76,88,133,206, 10:75, 14:21, 16:22,23, 29,49, 21:19, 23:46, 25:21, 28:39, 29:39, 31:7, 32:15, 34:31-33, 35:43, 37:35, 38:74,75, 39:59, 60,72,40:27, 35,47,48,56,60,76, 41:15,38, 45:31, 46:10, 20, 59:23, 63:5, 71:07, 74:23 இந்த இறை வாக்குகள் அனைத்தையும் நேரடியாகப் படித்துச் சிந்தித்து உணர்கிறவர்கள் நிச்சயம் பெருமை கொள்வது எந்த அளவு மெகா குற்றம், பெருமை சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாமல் கொடும் நரகில் புகுத்தும் என்பதை விளங்க முடியும்.

மேலும் பெருமை, கண்ணியம் அனைத்தும் எஜமானனான அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம்; அதில் மனிதர்களில் எவரும் சொந்தம் கொண்டாட முடியாது என்பதை பல குர்ஆன் வசனங்கள் நெற்றிப்பொட்டில் அடிப்பது போல வலியுறுத்திக் கூறுகின்றன.

கொலைகாரனை விடக் கொடியவர்கள்!
ஒருவன் நூறு கொலை செய்துவிட்டான்; நூறு பெண்களை கற்பழித்துக் கொன்று விட்டான். மேலும் குடி, விபச்சாரம், கொலை, கொள்ளை சூது என அனைத்து பஞ்சமா பாவங்களிலும் வாழ்நாள் முழுவதும் மூழ்கியுள்ளான். அவன் எப்படிப்பட்ட பெரும் பாவி என்பதை மக்கள் எளிதாக விளங்கி ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்கு மாறாக இந்த மதகுருமார்கள் அவனை விட பெரும்பாவிகள், சண்டாளர்கள் என்பதை விளங்க முடியவில்லை.

காரணம் மக்களில் மிகப் பெரும்பாலோர் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைப் பெரிதும் நேசிக்கிறார்கள். நாளை கிடைக்கும் பிலாக்காயை விட இன்று கிடைக்கும் கலாக்காய் மேல் என்ற மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கிறார்கள். முறையாகச் சிந்தித்தால் பஞ்சமா பாவங்களைச் செய்யும் அந்தப் பெரும் பாவி தன்னை நரகவாதியாக்கிக் கொள்வதோடு, மற்றவர்களில் சிலரை இவ்வுலகில் பெரும் நட்டவாளிகளாக்குகிறானே அல்லாமல் அவர்களின் மறுமை வாழ்க்கையைப் பாழ்படுத்தி அவர்களை நரகில் தள்ளவில்லை. அதற்கு மாறாக இம்மதகருமார்களோ தங்களை நம்பித் தங்கள் பின்னால் வரும் பெருங்கொண்ட மக்களின் இவ்வுலக வாழ்வில் அவர்களின் பொருளாதாரத்தைப் பெரும் அளவில் பாழாக்கி பெரும் நட்டத்தை ஏற்படுத்துவதோடு, நாளை அவர்களை நரகில் தள்ளுவதோடு, தங்களையும் நரகிலாக்கிக் கொள்கிறார்கள்.

ஏமாறுபவர் யார்?
ஆம்! பஞ்சமா பாவங்களைச் செய்து பணம் குவித்தவனை, பணம் இருக்கும் ஒரே காரணத்தால் அவனைப் பெரிதும் மதித்துக் கூழைக் கும்பிடு போடுகிறவர்களைவிட, சகல ஒழுக்கக் கேடுகளில் மூழ்கி இருக்கும் நடிகர், நடிகைகளை அவர்களின் மயக்கும் நடிப்பில் மயங்கியும், நரகை நிரப்ப இருக்கும் மக்களிடையே அவர்களுக்கிருக்கும் செல்வாக்கைப் பார்த்து மிரண்டும், நடிகர், நடிகைகளுக்கு மதிப்பு மரியாதை செய்கிறவர்களை விட, இந்த மதகுருமார்களின் வசீகர மயக்கு மொழிகளில் மயங்கி அவர்கள் கடவுளை நெருங்கச் செய்யும், மோட்சம் கொண்டு சேர்க்கும் ஆபத்பாந்தவான்கள் என மூடத்தனமாக நம்பி, அவர்களுக்கு எல்லை கடந்த மதிப்பு மரியாதை செய்கிறவர்கள், அறிவில் குறைந்தவர்கள் ஏமாறுகிறவர்கள் என்பதில் ஐயமுண்டா?

சுய சிந்தனையுடைய அறிவாளிகள் இறுதி நெறி நூல் குர்ஆன் இம்மத குருமார்கள் பற்றி எச்சரிக்கும் அனைத்து வசனங்களையும் முழுக் கவனத்துடனும், நடுநிலையுடனும் இறையச்சத்துடனும் படித்து விளங்கினால், இம்மதகுருமார்களை விட கேடுகெட்ட ஒரு படைப்பு, வேறொன்றில்லை என்பதைத் திட்டமாக அறிந்து அவர்களை முற்றிலும் புறக்கணிப்பார்கள் என்பதில் அணுவளவும் ஐயமில்லை.

அந்நஜாத்

{ 2 comments… read them below or add one }

ramees March 24, 2013 at 3:36 pm

azz alai va..vaba
tholuvippathatku masjith kalil sampalam pera mudiyuma

Reply

Shariff shamed. November 8, 2018 at 3:17 pm

Correct.

Reply

Leave a Comment

Previous post:

Next post: